• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எனது கிறுக்கல்கள்.

Status
Not open for further replies.
எனது கிறுக்கல்கள்.

நான் பலவருடங்கள் முன்பு எழுதிய "கவிதை" களை "கொழிந்த பீலிகள்" என்று பெயரிட்டு ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறேன். எப்பொழுதாவது எழுதும் இந்தக்கிறுக்கல்களும் அப்படி நோட்டுப்புத்தகத்தோடு நிற்கவேண்டாம் என்று எண்ணி இங்கு வெளியிடுகிறேன். பொறுமை உள்ளவர்கள் மட்டும் படித்துப்பார்த்து அபிப்பிராயங்களை எழுதுங்கள்.Attention span குறுகிப்போனவர்கள் skip செய்து போவது நலம்.

கிறுக்கல் 1.

இந்த வாரத்தொடக்கத்தில் நான் என் ஊருக்கு சென்றிருந்தேன். என் ஊர் நெல்லை மாவட்டத்தில் ரயில்வழி, ஹைவே இவற்றிலிருந்தெல்லாம் தள்ளி மிகக்கவனமாக ஒளித்துவைக்கப்பட்ட ஒரு மிகச் சிறிய ஆனால் அழகிய ஊர். ஊருக்கு மேற்கேயும் கிழக்கேயும் மூன்று குளங்கள் (நீர்ப்பாசனக்குளங்கள்). அந்தக்குளங்களையும் நெல் வயல்களையும் இணைக்கும் கால்வாய்கள். ஊருக்கு மேற்கே ஒரு பெருமாள் கோயில். கிழக்கே ஒரு சிவன் கோயில். வடக்கே ஒரு காளி கோயில். இன்னும் எத்தனையோ தேவதைகளின் கோயில்கள். நான் சென்றது அந்தப் பெருமாள் கோயிலில் நடந்த ஒரு திருவிழாவுக்குத்தான். முன்பு துவக்கப்பள்ளியாக இருந்தது வளர்ந்து இப்பொழுது நடுநிலைப்பள்ளியாக மாறியுள்ளது. அது நான் ஐந்து வகுப்புக்கள் வரை படித்த பள்ளி. ஊரைப்பற்றி எழுதுவதானால் நிறையவே எழுதலாம். அதை விட்டுவிட்டு சீக்கிரமே கிறுக்கத்தொடங்குகிறேன்.

நான் திருநெல்வேலியில் ஜானகிராம் ஹோட்டலில் ரூமை காலிசெய்துவிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து மாலை டிரெயினைப் பிடித்து ஏறி அமர்ந்தேன். வேறு டிக்கட் ஒன்றும் கிடைக்காததால் ஸ்லீப்பர் கிளாசில் பெர்த் ரிசர்வ் செய்திருந்தேன். ட்ரெயினில் அமர்ந்தபின் தான் ஒரு முக்கிய விஷயம் நினைவுக்கு வந்தது. அந்த ட்ரெயின் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் வழி சுற்றிச்செல்லும் வண்டி என்பது தான் அது. திருச்சியிலிருந்து கார்டு லைன் வழிச்செல்லும் வண்டிகளைவிட 3-4 மணி நேரம் ரன்னிங்க் டைம் அதிகம். இரண்டு மூன்று வாரப்பத்திரிகைகளையும் தினப்பத்திரிகைகளையும் வாங்கி என்னைத் தயார் படுத்திக்கொண்டேன். முதல் ஒருமணி நேரம் வண்டிக்குள் ஏறியிருந்த இரண்டு குடும்பங்களுக்கிடையே நடந்த இடச்சண்டையில் பார்வையாளனாக இருந்து கழிந்துவிட்டது. நாட்டுப்புறத் தமிழில் அவர்கள் போட்டுக்கொண்ட சண்டை தமிழ் மொழிக்காகவே ஒரு விருந்தாக இருந்தது. ஒருவழியாக இரண்டு கட்சிகளும் சமாதானத்துக்கு வந்து சத்தம் ஒய்ந்த போது இரவு மணி 9. தூக்கம் கண்ணைச்சுழற்ற பெர்த்தில் ஏறிப்படுத்து உறங்கிவிட்டேன்.

காலையில் எழுந்து பல்துலக்கிவிட்டு ஜன்னல் வழி வெளியே பார்த்தபோது வண்டிமயிலாடுதுறையைநெருங்கிக்கொண்டிருந்தது.
மயிலாடுதுறையில் வண்டி நின்றவுடன் ஒரு குடும்பம் ஏறியது. இங்குத்தான் எனது இந்தக்கிறுக்கலின் முக்கிய நிகழ்வு தொடங்குகிறது. அந்தக்குடும்பத்தில் 5 பேர் மொத்தம் ஏறினர். ஒரு நடுத்தரவயது தம்பதி, ஒரு திருமணமான பெண், அவளுடைய குழந்தை, ஒரு திருமணமாகாத பெண்(கல்லூரியில் படிப்பவளாக இருக்கலாம்) ஆக ஐந்து பேர். இந்த ஐந்து பேரில் அந்த குழந்தை-சிறுவன் தான் இனி நமது இந்தக்கிறுக்கலில் கதாநாயகன்.

வண்டியில் ஏறி அமர்ந்த ஐந்து நிமிடத்துக்கெல்லாம் அவன் என்னை முழுதுமாக ஆட்கொண்டுவிட்டான். அதிகம் போனால் மூன்று அல்லது மூன்றரை வயதிருக்கும். முகத்தில் எப்போதும் ஒரு புன்முறுவல். ஒரே இடத்தில் தொடர்ந்து ஐந்துநிமிடம் கூட இருக்க முடியாத துறுதுறுப்பு. தானாக வலிந்து என்னிடம் அங்கிள் என்று அழைத்துப் பேசினான். பெயரென்ன என்று கேட்டேன். சிவநேசன் என்று பதில் கூறினான். அவனுடைய ஸ்கூல் பெயரைச்சொன்னான். அவன் எல்கேஜி படிப்பதாக பெருமையுடன் சொன்னான். அவனுடைய கிளாசில் அவன் பக்கத்தில் அமர்ந்திருப்பது யார் என்பது தொடங்கி, அவனுக்கு நெருங்கிய நண்பன்/நண்பி யார் யார், அவர்களிடம் அவனுக்குப்பிடித்த விஷயமென்ன, அவனுடைய டீச்சர் பெயரென்ன, பிடித்த டீச்சர் யார், அவன் என்னென்ன பாடங்கள் படிக்கிறான் என்று எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கண்ணை உருட்டி விழித்து கைகளால் அபிநயம் பிடித்துச் சொல்லித்தீர்த்தான். இடையிடையே நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் கீழே ஒளிந்துகொண்டு என்னுடன் கண்ணாமூச்சியாடினான்.

சிறிது நேரத்தில் வெளியே மழை பெய்யத்தொடங்கிற்று. மழையைப்பார்த்தவுடன் அவனுக்கு மகிழ்ச்சி இரண்டுமடங்காகிவிட்டது.
அங்கிள் எங்க வீட்டுக்குள்ள கூட மழை பெய்யுமே-இது அவன்.
அது எப்படி வீட்டுக்குள் பெய்யும்?-இது நான்.
பாத் ரூம்ல ஷவர்லெருந்து மழை பெய்யுமே.-இது அவன்.
ஆனா எனக்கு இந்த மழை தான் ரொம்பவே புடிக்கும். ஷவர் மழைய விட-இது அவன் கொஞ்சம் யோசித்து அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னது.
ஏன்பா அப்படி?-இது நான்.
இதில தான் மின்னல் இருக்குது. இடி இருக்குது. எனக்குப்புடிச்சிருக்குது. ஷவர் மழை நான் திறந்துவிட்டாப்பெய்யும். ஆனா இது கடவுள் திறந்துவிட்டாத்தான் பெய்யும்.(அவன் அம்மா சொல்லிக்கொடுத்திருக்கவேண்டும் இதை). எனக்கு கடவுள் ரொம்பப்புடிக்கும்.—இது அவன்.

என் மனதில் புகுந்து என்னை முழுதுமாக ஆட்கொண்டுவிட்ட அந்தச்சிறுவனைப்பார்த்து நான் வியந்து மகிழ்ந்து போனேன். இதற்குப்பின் அவன் உறங்கிவிட்டான். வண்டி தாம்பரம் வந்த போது முழித்துக்கொண்டவன் நான் இறங்குமிடம் வந்தவுடன் பை அங்கிள் என்று பெரிய மனுஷன் மாதிரிக்கூறிவிட்டான்.

அந்தக்குழந்தையை நன்றாக வைத்திரு என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்.

இன்னும் கிறுக்குவேன்.
 
Last edited:

Respected Sir,

T L D R! உங்கள் முதல் 'கவிதை'யைப் படிக்கவில்லை.


icon3.png
P.S: T L D R means Too Long; Didn't Read!
 
YaaYaroயாரோ ஒரு குழந்தைக்காக இறைவனிடம் வேண்டும் உங்கள் நல்ல் இதயம்...இப்போதெல்லாம் ம்ற்றவர்கள் மீது அன்பு செலுத்தும், அன்பை பரிமாறிக்கொள்ளும் விஷயங்களை படிக்கும்போது மனம் நெகிழ்ந்து போகிற்து.. ராஜு சார் கிறுக்கல்கள் நன்றாக இருக்கிறது
 
நண்பர் ராஜுவுக்கு.

’கிறுக்கல்’ என்று நீங்களே கூறிவிட்டதால் அதில் கவிதையைத் தேட முனையவில்லை. இருந்தாலும் மணற்பரப்பில் சிலசமயம் பளிச்சிடும் வஸ்து போல--அது காக்கைப்பொன்னோ, கூழாங்கல்லோ, கிளிஞ்சலோ, ஏதோவொன்று--கவிதைத் துகள்களை அங்கங்கே காண முடிகிறது. சொற்களும் எண்ணமும் ஒரு மலர்மாலையாகி அந்தத் துகள்கள் அதை ஒரு ஜரிகை இழையாகிப் பின்னிக்கொண்டிருந்தால் இன்னும் சிறந்திருக்கும்.

மொத்தத்தில் உங்கள் பயண அனுபவத்தில் நீங்கள் உணர்ந்த பயனைக் கட்டுரை நன்கு பிரதிபலித்துள்ளது. கிறுக்கல் தொடரட்டும், குறுக்கல் வடிவம் பெற்று!
 
Dear Friend Saidevo,

Thank you for the feedback. I will keep them in view while writing further. Any way I did not intend it to be a kavithai. It was prose - plain and simple. So no wonder you did not find a kavithai there.
 
கிறுக்கல்-2.

நண்பர் சாய்தேவுக்கு,

நீங்கள் யாப்பு பற்றி எழுதிவரும் இழையில் இதை ஒரு அபஸ்வரமாக இடைச்செருக வேண்டாமெனக்கருதி இந்த இழையில் கிறுக்கலோடு கிறுக்கலாக பதிகிறேன். படித்துவிட்டு இந்த இழையிலேயே பதிலளிககவும். இந்த உரையாடலிலிருந்து ப்யனுள்ளது எதாவது வெளிப்படுமாயின் அதை நீங்கள் உங்கள் மின் நூலில் பின்னர் சேர்த்துக்கொள்ளலாம்.

இவை என் மனதில் எழுந்த கேள்விகள். communication எனும் கலையில் தங்களது நிலையை/வளர்ச்சிப்பரிணாமநிலையை கருத்தில் கொண்டு வார்த்தைகளைச் சிக்கனம் பிடித்து சுறுக்கமாக என் கருத்தை இங்கு கூறுகிறேன். மண்ணும் மணமும் வண்ணமும் சேர்த்துக்கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.

1. எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்பர் வாழும் உயிர்க்கு. -- இது சான்றோர் வாக்கு.

2. “கவிதை என்பது கவினுற விதைத்தல்”—கவினுற விதைக்க எண்
விதை யாகாதா?

3. “யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்”—சரி. எண் எண்ணுருவில் பிணித்தால் கவிதையின் பிணையில் அடங்காதா?

4. மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், மரபும், தூக்கும்,
தொடையும், நோக்கும், பாவும், அளவும்,
திணையும், கைகோள், கூற்றும், கேட்போர்,
களனும், காலம், பயனும், மெய்ப்பாடு,
எச்சம், முன்னம், பொருளும், துறையும்,
மாட்டு, வண்ணம், அம்மை, அழகு,
தொன்மை, தோலும், விருந்து, இயைபு,
புலனும், இழைபும் என்றிவ் வாறு.
செய்யுள்இயற்றஉறுப்புகள்ஏழு:



ஏன் இங்கு எண் பற்றிப்பேசவில்லை? எண்ணை எழுத்தாக்கிப்(1ஐ ஒன்றாக்கி, 2ஐ இரண்டாக்கி......) பின்னர்தான் கவிதையில் கொண்டு வரவேண்டும் என்றாவது ஒரு விதி சமைத்திருக்கலாமே. இல்லை என்றால் எண்ணையும் ஒரு non-consequential appendage ஆக்கி (ஒன்றுக்கு மேல் தொடர்ந்து வரும் ஒற்றுக்கள் போல) ஒரு தீர்வு கண்டிருக்கலாமே. ஏன் செய்யவில்லை?

5. கவிதை என்பது கவினுறும் கருத்துப்பரிமாற்றத்துக்கான ஒரு ஊடக வடிவம் தான் எனில்எண்களை எழுத்தாக்கித்தான் அந்தக்கருத்துப்பரிமாற்றம் நடக்கவேண்டும் என்பது வளைந்து நீண்ட வழியல்லவா? நேர் வழியல்லவே?

6. u r gr8. என்று அலைபேசியில் SMS செய்யும் காலத்தில். 5லே 1பெற்றான் 5லே ஒன்றைத்தாவி............என்று கவிதை எழுதும் வாய்ப்பை நாம் இழந்துவிட்டோமே? அப்படி எழுதினாலும் கருத்துப்பரிமாற்றம் பழுது படுவதில்லையே?

7. “வாசலில் யாரெனப் பாரடி மகளே!
வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!

6ம் ஃளாட்டின் அறுவை நண்பரே” என்று எழுதினால் கருத்துப்பரிமாற்றம் குறைபடாவிட்டாலும் இலக்கண வரம்பு மீறப்படுகிறதா?


8. கணக்குப்பாடத்தில் நிறையக்குட்டு வாங்கியவர்கள் தான் கவிதை எழுதும் கவிஞர்கள் ஆகி, இலக்கணமும் எழுதப்புகுந்து, எண்கள் மீதுள்ள வெறுப்பால் கவிதைக்கணக்கில் எண்களையே சேர்க்காமல் விட்டு விட்டார்களா?

9. நன்னூல் இதைப்பற்றி எதுவும் சொன்னதாகத்தெரியவில்லை. தொல்காப்பியம் கூறுவது பற்றி நான் அறியேன்.

10. உங்கள் கருத்து என்ன? ஒரு வேளை இதுபற்றி நம் முன்னோர்கள் தெளிவாகவே சிந்தித்து எதேனும் வரையறை செய்திருந்தால் அறிந்துகொள்ள ஆவலுடனிருக்கிறேன். அப்படி அவர்கள் ஏதேனும் செய்திருப்பர் என்ற நம்பிக்கை காரணமாகவே இது ஒரு கிறுக்கலாகப்பதியப்பட்டுள்ளது. அதுதான் கிறுக்கல் தரும் சுதந்திரம்.
 
Last edited:
நண்பர் ராஜுவுக்கு.

என்னை நன்றாக வலைதளப் பக்கங்களில் அலையவிட்டீர் ஐயா!

’எண்னென்ப ஏனை எழுத்தென்ப’ என்று வள்ளுவர் சொன்னபோதும், ’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்று பழமொழி எழுந்தாலும் (இதைச் சொன்னது யார் எனக் கண்டறிய முயலவும்), ’ஏன் யாப்பிலக்கணத்தில் எண் பற்றிப் பேசவில்லை? என்பது சரியானதொரு கேள்விதான்.

1. இந்தக் கேள்விக்கு விடை என் கடந்த ஒரு மணி நேரத் தேடலில் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, நீரும் கொஞ்சம் தேடலாம். முதலில் கீழுள்ள இணைப்பில் உள்ள ஓலைச்சுவடிகளைப் பெரிதாக்கித் தேடவும், எங்காவது செய்யுட்களில் தமிழ் எண்களை எண்ணிடப் பயன்படுத்தி உள்ளார்களா என்று (இன்றும் நாம் அச்சில் அவற்றை எண்ணிடுவதுபோல). (நான் கொஞ்சம் தேடினேன், பயனில்லை):
TVU - Sitemap

2. இதுபோல வடமொழி ஓலைச் சுவடிகளிலும் தேடலாம், எண்களில் எண்ணிடும் வழக்கம் இருந்ததா என்று அறிய.

3. Also check this:
The names for the numbers one to nine found in Rig Veda are eka, dvi, tri, chatur, pancha, shat, sapta, asta, nava. The names for ten, twenty, ....., ninety occur in RV (2.18.5-6). The intermediate numbers have appropriate names. For instance ninety-four is termed four plus ninety. Nineteen is expressed one less than twenty etc. The RV (3.9.9) has a number 3339 spelled as three thousand, three hundred and thirty nine. The RV (2.14.6) uses the word hundred thousand, the modern lakh. Many lakhs are described as hundreds of thousands in RV (1.14.7). Rig Veda has more than a hundred references to numbers.

4. தமிழ் அகராதியைத் தேடியபோது கிடத்தவை (செய்யுளின் விவரங்கள் தெரியவில்ல, கண்டுபிடிக்கவும்):

Symbol for the number 2, usually written without the loop (); அ உ வறியா வறிவி லிடைமகனே (யாப். வி. 37).
Tamil lexicon

ஒன்று
1. The number one; க என் னும் எண். (திவ். திருச்சந். 7.)
Tamil lexicon

5. என்னைப் பொறுத்தவரையில் எண்களை நேராகப் பயன்படுத்தும் போது--
6ம் ஃளாட்டின் அறுவை நண்பரே
(6-ஆம் ஃளாட்டின் அறுவை நண்பரே என்பதே சரி.)

அவற்றை வார்த்தைகளாப் பாவித்து, தக்க அசைகள் சேர்த்து அலகிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

இக்காலத்தில் இப்படிக் கவிதை எழுதுவது சரியே என்று தோன்றுகிறது. நம் புதுக்கவிதை யாளர்கள் எவரேனும் முயன்றார்களா தெரியவில்லை.

முளைத்து 3 இலைவிடு வதற்குள்
4-ம் தெரிந்தவன் போலப் பேசி
எல்லாம் 1 என்கிறான் கிறுக்கன்!

தொலைபேசி எண்ணா கேட்கிறாய்?
4 3 2 1 1 2 3 4 (இது எண்சீர்க் கழிநெடிலடி!)
தொலைபேசு நன்றாக, மகிழ்ச்சி,
தொல்லை பேசி ஆக்காத வரையில்!

6. அதுசரீ... இது இப்படியே போனால் அடுத்து abbreviations (சுருக்கெழுத்துகள்? சுருக்கெழுத்து என்பது shorthand இல்லையோ?) கவிதையில் வரவேண்டுமென்பீர்!

ஏற்கனவே நம் நண்பர் திரு விக்ரமா அவர்கள் தொலைக்காட்சி என்பதை தொ.கா. என்று சுருக்கித் ’தொக்கா’ என்று அவர் கவிதையில் எழுதுகிறார்!

ஐநா சபையில் நமது நைனாவுக்கு வேலை.
தொக்காவில் அவரங்கு பேசியதைப் பார்க்க
தொப்பேயில் தொடர்பு கொண்டார்.

7. அப்புறம் அந்த சலனக்குறிகள்! ஏற்கனவே அவை இங்கு தாண்டவமாடுகின்றன!

எண்கவிதை, குறிக்கவிதை, குழூக்கவிதை என்று பல வகைகள் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறதே, பேஷ், பேஷ்!

*****
 
Last edited:
நண்பர் ராஜுவுக்கு.

என் அஞ்சல் எண் 8-ஐத் தொடர்ந்து யோசித்ததில் நம் முன்னோர்கள் யாப்பிலக்கணத்தில் ஏன் எண்களை நேரடியாகச் செய்யுளில் கையாள வகை செய்யவில்லை என்பதற்குச் சில தகுந்த காரணங்கள் தோன்றின.

1 முதலில் நீங்கள் விரும்பும்
5லே 1 பெற்றான் 5லே ஒன்றைத்தாவி..
என்று எழுவதுகூட சரியில்லை. காரணம், எழுத்துக்கள் பேச்சு வழக்கில் வரும்போது அவற்றை அப்படியே எழுதிவிடலாம். எண்களை நேரடியாக எழுதினால் அவற்றை எப்படிப் படிப்பது: செந்தமிழிலா, பேச்சு வழக்கிலா?

5லே 1 பெற்றான் 5லே ஒன்றைத்தாவி.. என்ற வரியில் ’அஞ்சு’ எனப் படிப்பது பேச்சுவழக்காகவும் இந்த இடத்தில் சரியாகவும் உள்ளது. அப்படியானால் ’ஒன்று’ என்பதை ’ஒண்ணு’ என்றல்லவா படிக்கவேண்டும்?! இரண்டு எண்களையும் செந்தமிழில் படித்தாலும் சரிவராது.

2 இது தவிர, இன்னொரு குழப்பம் உள்ளது:
’அஞ்சுவது அஞ்சாமை பேதைமை...’ என்பதை எண்ணில் எழுதுவது எவ்வளவு அபத்தம்?

5-வது 5-ஆமை பேதைமை...
இப்படி எழுதுவதே வள்ளுவரைக் கிண்டல் செய்வது போலாகும்போது, இதை
’ஐந்துவது ஐந்தாமை பேதமை...’ என்று படித்தால் என்னாவது?

3 இப்படிப்பட்ட குழப்பங்கள் தவிர்க்கவே நம் முன்னோர்கள் எண்களை நேரடியாகச் செய்யுளில் எழுதுவதை ஆதரிக்கவில்லை என்று தோன்றுகிறது. சங்க காலத்திலும் எண்கள் குறித்த பேச்சு வழக்குகள் இருந்திருக்கக் கூடும். மேலும் இன்று நாம் பயன்படுத்தும், இந்தியா கண்டுபிடித்து அராபிக் எண்கள் என்று பிரபலமான எண் குறிகள் அன்று இல்லை. தமிழில் இருந்த எண் குறிகளை (க, உ போன்றவை) எப்படி உச்சரிப்பது, அலகிடுவது?

இப்படியெல்லாம் பார்க்கும்போது எண்கள் கவிதையில் தேவைப் பட்டால் அவற்றின் சொல்வடிவங்களைப் பயன்படுத்துவதுதான் சரியெனப் படுகிறது. ஆங்கிலக் கவிதைகளில் கூட எண்களை நேரே பயன்படுத்துவதில்லை என்று நினைக்கிறேன். அதுவும் அவர்கள் அறிந்த ரோமானிய வடிவங்களைப் பயன்படுத்தினால் தமாஷ்தான்!

I, II, buckle my shoe,
III, IV, shut the door
V, VI pick up sticks,
VII, VIII, lay them straight,
IX, X, a big fat hen!

இதை தமிழில் transliterate செய்தால் இன்னும் தமாஷ்!

ஐ, ஐஐ, பக்கிள் மை ஷூ,
ஐஐஐ, ஐவி, ஷட் தி டோர்
வி, விஐ பிக் அப் ஸ்டிக்ஸ்,
விஐஐ, விஐஐஐ, லே தெம் ஸ்ட்ரைட்,
ஐஎக்ஸ், எக்ஸ், எ பிக் ஃபாட் ஹென்!

*****
 
நண்பர் சாய்தேவுக்கு,

நானும் இது பற்றி நிறையவே யோசித்திருக்கிறேன். ஒரு நியாயமான காரணம் கிடைக்காததால் விட்டுவிட்டேன். நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் காரணங்கள் எல்லாமே ஒரு தீர்வுக்கு அடங்குபவை தான். என் மனதுக்குள் இருக்கும் devil's advocate இதுவும் இன்னும் பல காரணங்களும் கொடுத்து வாதாடினாலும் என் உள்மனது என்னவோ ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிலைக்கூறி அந்தக்காரணங்களை போதும் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறது. எண் என்றும் எழுத்தென்றும் பிரித்த பின் ஏன் இரண்டையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டும் என்று அன்றைய வாழ்க்கை முறைக்கும் நிகழ்களத்துக்கும் ஏற்றவாறு அவர்கள் தீர்மானித்திருக்க வேண்டும். இன்று வாழ்க்கை முறை வேறு உலகமும் வேறு. எனவே நாம் வேண்டுமானால் நமது வசதிக்கு இலக்கண வரையரைகளை மாற்றி எழுதிக்கொள்ளலாம். தவறில்லை என்று தோன்றுகிறது. இலக்கணமே வேண்டாம் என்று எழுதுவதைவிட அது மொழிக்கும் நமக்கும் நல்லதாக அமையும் என்பது என் கருத்து. நன்றி.
 
கிறுக்கல்-3.

சென்னையில் என் வீட்டுக்கு அடுத்த மனையை ஒரு நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது. அங்கிருந்த பழைய வீட்டை முற்றுமாக இடித்து தரை மட்டமாக்கிவிட்டு ஒரு புதிய அடுக்குமாடிக்கட்டிடம் எழுப்பும் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. எனக்குப்பரிச்சயமுள்ள துறை என்பதாலும் என் மனதுக்கு இயற்கையாகவே சிந்தனையில் ஒருமுனைப்படுதல் என்பது பிடிக்கும் என்பதாலும் நான் அந்தக்கட்டடம் வளர்ந்து வருவதை தினம் கூர்ந்து கவனித்து பலவிஷயங்களைப்பற்றியும் மகிழ்கிறேன், கவலைப்படுகிறேன் ஏன் வருத்தம் கூடப்படுகிறேன். அந்தக்கட்டிடம் கட்டும் வேலையாட்கள் பெரும்பாலும் சிறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடி வந்து நாடோடிகளாகிவிட்டவர்கள். பெண்கள் எல்லாருமே எப்போதுமே சித்தாட்கள் தான். இது ஏன் இப்படி என்று பலமுறை எண்ணி என்னை வருந்தவைத்த ஒரு எழுதாச்சட்டம் இது. ஆண்களில் சிறுவன் சித்தாள். அவன் வளர்ந்துவிட்டால் பெரியாள். சித்தாளுக்கு பெரியாளைவிட ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பளம் குறைவு. கல் தச்சன், மேஸ்த்திரி, ப்ளம்பர், கொத்தனார் என்று இந்தத்துறையின் தினக்கூலிகளுக்கான Totem Pole இல் இன்னும் பலர் உண்டு. இந்தச்சிறு கூட்டத்தின் வாழ்க்கையில் வந்து போகின்ற சண்டைகள், சமரசங்கள், தர்க்கங்கள், அடி தடி யுத்தங்கள், கொண்டாட்டங்கள், கடவுள்கள், இடையிடையே முகிழ்க்கின்ற காதல்கள், கல்யாணங்கள், மண முறிவுகள், மரணங்கள், இவை அனைத்திலும் இழையோடும் நிரந்தரமான சோகம் இவையெல்லாம் என் மனதில் பெரியதொரு தாக்கத்தினை ஏற்படுத்திவிட்டன. அவற்றுள் சில ஈன்று புறந்தந்தாலல்லாது தீராத பிரசவ வேதனையாய்ப் போனதால் இந்த இழையில் கிறுக்கல்களாக எழுதலாமென எண்ணியிருக்கிறேன். மற்றக்கிறுக்கல்களோடு இவையும் வரும். முடிந்தவரை சுறுக்கமாக எழுத முயல்வேன் (ஒரு linear mode of expression of thought இல் இது எப்போதும் சாத்திய்மில்லை எனினும்).
 
Last edited:
கிறுக்கல் 4.


நான் கடந்த வாரம் பத்து நாட்கள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் சென்றிருந்தேன். திருவனந்தபுரம் செல்வது என்பது எங்களுக்கு எப்போதுமே ஒரு இனிய அனுபவம் தான். எங்கள் என்ற பன்மை என் மனைவியையும் உள்ளடக்கியதால் வந்தது. என் மனைவி பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் திருவனந்தபுரத்தில் தான். எனவே அவளுக்கு திருவனந்தபுரம் செல்வது என்பது ஒரு டைம் மெஷினில் ஏறி கடந்தகாலத்துக்கு செல்வது போல. எல்லாமே மலரும் நினைவுகளின் ஊர்வலம் தான்.

சென்னை சென்ட்ரலில் தி-புரம் மெயிலில் ஏறி அமர்ந்தவுடனேயே ஒரு எதிர்பார்ப்பு வந்து ஒட்டிக்கொண்டது. கேரளத்துக்குள் சென்றபின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் எங்களோடு கூடவே வருவதும் பின் சற்று நேரம் காணாமல் போவதும் பின் மீண்டும் வந்து எட்டிப்பிடிக்க முயலுவதுமாக கண்ணாமூச்சி விளையாடியது பரதப்புழை ஆறு. அதன் கரையிலிருந்த பரந்த மண்ல்வெளியும் பசுமையின் பச்சையும் எல்லாமே அழகுதான் போங்கள். பாலக்காடு ஸ்டேஷனில் ஏறிய இரு நண்பர்கள் பேசிக்கொண்டே வந்தனர். அவர்கள் பேசிய ஏற்ற இறக்கத்துடன் கூடிய அந்த sing-song மலயாளம் ஒரு விருந்தாக இருந்தது.

தி-புரம் சென்று இறங்கி வீட்டுக்குப்போய்ச்சேர்ந்து நண்பர்கள் வீடுகளுக்கு சென்றுவந்து, கோவில்களுக்கு சென்றுவந்து, உற்சவத்தில் வாகனம் தூக்கி, தீவட்டிப்பந்தமெடுத்து, பங்கெடுத்து, உறவினர் வீட்டுக்குழந்தைகளுடன் மிருகக்காட்சி சாலை(zoo வை இப்படித்தான் அங்கே குறிப்பிடுகிறார்கள்)க்கு சென்று வந்து அடப்ரதமன், சக்கைப்ரதமனுடன்(இவையெல்லாம் பாயஸ வகைகள்) சாப்பாட்டை ஒரு பிடிபிடித்து என்று இப்படியே பலவாறாக பத்துநாட்களும் போனது தெரியாமலே போய்த்தீர்ந்தன. நினைத்தாலே இனிக்கும் நினைவுகளுடன் சென்னைக்குத்திரும்பினோம். மனிதர்களை அதிலும் குறிப்பாகக்குழந்தைகளை அவர்களுடைய behavior pattern களை கூர்ந்து கவனிக்கும் எனக்கு இந்ததடவையும் இனிய அனுபவங்களுக்குக்குறைவில்லை. அவற்றில் ஒன்று இதோ:

உறவினர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது நான்கைந்து குழந்தைகள் விளையாடி லூட்டி அடித்துக்கொண்டிருந்தன. எல்லாரும் ஐந்தாறு வயதுப்பருவத்தினர். அவர்களுடைய திறமைகளை எங்களுக்கு தெரியப்படுத்தவேண்டுமென்பதற்காக ஒரு பாட்டி அந்தக்குழந்தைகளைக்கூப்பிட்டு ஒரு இடத்தில் அமர்த்தி அவர்களை பாடச்சொல்லி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். குழந்தைகள் எல்லாரும் ஒவ்வொரு போஸில் நின்றுகொண்டும், உட்கார்ந்துகொண்டும், ஆடிக்கொண்டும் கோரஸாக அவர்களுடைய English rhymes களை சொல்லி முடித்தனர். பின் மழலைகளின் மலயாளத்தில் rhymes களை ப்பாடினார்கள் (நம்முடைய கை வீசம்மா கை வீசு போல). பாட்டியோ prompt செய்துகொண்டே இருந்தார். கடைசியாக பாட்டியின் suggestion படி அவர்கள் தேசீய கீதம் பாடினார்கள். பள்ளியில் சொல்லிக்கொடுத்தபடி எழுந்து ஸ்டெடியாக நின்றுகொண்டு ஜன கண மன என்று தொடங்கிப் பாடி ஜய ஜய ஹே என்று முடித்தவுடன் ஒரு குறும்புக்காரப்பையன் மட்டும் டாண்......டாண்......டாண் என்று உறக்கக்கூறிமுடித்துவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடியேபோய்விட்டான். கவனமாகக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்த எங்களுக்கு அந்த டாண்......டாண்.........டாண்.......இன் பொருளும் அதன் significance உம் ஒரு வினாடித்துகள் பொறுத்துத்தான் புரிந்தது. அது மனதில் பளிச்சென்று உறைத்து அதன் பொருள் உட்சென்றிறங்கியபோது நாங்கள் எல்லாருமே வாய்விட்டுச்சிரித்துவிட்டோம். பள்ளி முடிந்து வீட்டுக்குச்செல்ல ஆவலுடன் இருக்கும் இளம் சிறாரின் மனதில் ஜன கண மன...ஜய ஜய ஹே வைவிட பள்ளி முடிந்து விட்டது என்று அறிவிக்கும் அந்த மணியோசை முத்தாய்ப்பாக அமைந்து அதுவும் அந்தப்பாடலின் முற்றுப்புள்ளி போல ஒரு அங்கமாகவே மாறிவிட்டது நினைத்து நினைத்து ரசிக்கும் படி அன்று அமைந்தது.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!
 
Last edited:
அவற்றுள் சில ஈன்று புறந்தந்தாலல்லாது தீராத பிரசவ வேதனையாய்ப் போனதால் இந்த இழையில் கிறுக்கல்களாக எழுதலாமென எண்ணியிருக்கிறேன். மற்றக்கிறுக்கல்களோடு இவையும் வரும். முடிந்தவரை சுறுக்கமாக எழுத முயல்வேன் (ஒரு linear mode of expression of thought இல் இது எப்போதும் சாத்திய்மில்லை எனினும்).
Dear Suraju Sir, that was written a month back and i was eagerly waiting for something very good in your own wonderful style but, it seems you had gone out on a break. When would the birth of the child (your pregnant thoughts) happen... hope that would be another classic like Devan"s " Rajathin Manoradham" .

Cheers.
 
Dear Manoharkumar,

Since it involves understanding the life and value system of a group of people who are very different from me and my class, it takes time. I am still in the process of understanding their value system. So the labour pain is long and sustained. Hope to deliver in the near future.

Cheers.
 
Dear Suraju Sir,

Yes i understand that...it is not a easy task to get oneself transformed to another totally different lifestlye and then project them as a story of self... given this i immidiately marvel at the story of Shri.Jeyakanthan " cinemavukku pona siththalu" where in the chennai slum language would have been so brilliantly used by him... amazing writer. Sorry i got carried over by.. will wait for your beautiful "kirukkalgal".

cheers.
 
Dear Sri. Raju, Greetings.

I enjoyed 'கிறுக்கல் 4'. I never had such an opportunity in my life; leave alone Kerala, but anywhere else. I almost lived those experiences from your narrations. I loved this narration the most "தி-புரம் சென்று இறங்கி வீட்டுக்குப்போய்ச்சேர்ந்து நண்பர்கள் வீடுகளுக்கு சென்றுவந்து, கோவில்களுக்கு சென்றுவந்து, உற்சவத்தில் வாகனம் தூக்கி, தீவட்டிப்பந்தமெடுத்து, பங்கெடுத்து, உறவினர் வீட்டுக்குழந்தைகளுடன் மிருகக்காட்சி சாலை(zoo வை இப்படித்தான் அங்கே குறிப்பிடுகிறார்கள்)க்கு சென்று வந்து அடப்ரதமன், சக்கைப்ரதமனுடன்(இவையெல்லாம் பாயஸ வகைகள்) சாப்பாட்டை ஒரு பிடிபிடித்து என்று இப்படியே பலவாறாக பத்துநாட்களும் போனது தெரியாமலே போய்த்தீர்ந்தன.". Thank you for sharing them.

Cheers!
 
Dear Sri. Raju, Greetings.

...இந்தச்சிறு கூட்டத்தின் வாழ்க்கையில் வந்து போகின்ற சண்டைகள், சமரசங்கள், தர்க்கங்கள், அடி தடி யுத்தங்கள், கொண்டாட்டங்கள், கடவுள்கள், இடையிடையே முகிழ்க்கின்ற காதல்கள், கல்யாணங்கள், மண முறிவுகள், மரணங்கள், இவை அனைத்திலும் இழையோடும் நிரந்தரமான சோகம் இவையெல்லாம் என் மனதில் பெரியதொரு தாக்கத்தினை ஏற்படுத்திவிட்டன.

I refer to your கிறுக்கல் 3. I was very tempted to write one from my own life.. but controlled myself since I did not want to interfere. Also, my observation was very sad though; happened in my village.
 
கிறுக்கல் 5 :


இன்றைய கிறுக்கல் சற்றே கனமான ஒரு விஷயம் பற்றியது. நான் இன்று கைரளி மலையாளம் tv சானலில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். கேரளத்தின் ஒருநகரத்தில் பேரூர்க்கட என்னும் ஒரு பகுதியில் கடைத்தெருவின் நடைபாதையையே வசிக்குமிடமாகக்கொண்டு கடந்த 20 வருடங்களாக வாழ்ந்து வரும் ஒரு 85 வயதுக் கிழவியைப் பேட்டி கண்ட நிகழ்ச்சி அது. சிறு வயதிலேயே தனியாகிவிட்ட தான் அந்தக்கடைத்தெருவில் அத்தனை வருடங்களுக்கு முன் எப்படி ஒரு காய்கறிக்கடையைத்தொடங்கினார் என்பது தொடங்கி, அந்தக்கடைத்தெருவிலேயே ஒரு வண்டிக்காரரை மணந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து அது இறந்துபோக, நாளடைவில் கணவனும் சிறு வயதிலேயே இறந்துவிட, தனியாளாக கடை நடத்தி வாழ்ந்து வரும் கதையை சற்றும் மனக்கசப்பின்றி, கண்ணீரின்றி, யாரையும் குற்றம் கூறாமல் கூறிமுடித்த அந்தக்கிழவியின் வாழ்க்கை சரிதம் என்னை மிக ஆழமாகப்பாதித்தது. தான் வசித்துவந்த ஒரு சிறு குடிசையை அரசு ரோடை விரிவாக்கவேண்டி எடுத்துக்கொண்டதையும் அதற்கு நஷ்ட்ட ஈடு எதுவும் தரவில்லை என்பதையும் சொன்னபோதுகூட , மழை வந்துவிட்டால் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு ஒதுங்குமிடம் தேடி ஓடவேண்டிய தன் நிலையைப்பற்றிச்சொன்னபோது கூட, அந்தச்சுறுக்கம் நிறைந்த முகத்தில் வெறுப்பின், கோபத்தின் ரேகை சற்றும் படரவில்லை. நெற்றியில் இட்டிருந்த சந்தனக்குறியைக்காட்டி தெய்வ நம்பிக்கைபற்றிக்கேட்டபோது கடவுள் இல்லை என்று தன்னால் நம்ப முடியவில்லை என்று சுருக்கமாகக்கூறி முடித்துக்கொண்டார் அந்தப்பெண்மணி. தனக்கு வேண்டிய உணவு நேரம் தவறாமல் அந்தக்கடைத்தெருவிலுள்ள வணிகர்களால் தரப்படுவதாகவும் தனது வயோதிக தசை பற்றிக்கவலை இல்லை என்றும் அந்தப்பெண் கூறியபோது நான் அவரில் ஒரு மஹரிஷியை, ஞானியைக்கண்டேன். என்றாலும் மனதுக்குள் தைத்துவிட்ட முள்ளால் மிகவும் வலித்துக்கொண்டிருக்கிறது. இப்படி எத்தனை பேர் வாழ்கிறார்களோ என்ற எண்ணம் வந்து மனதை வாட்டுகிறது. அந்த முகம் மீண்டும் மீண்டும் கண்முன் வந்து நிற்கிறது. சுறுக்கமாக சொல்வதானால் நான் மீண்டும் நானாக இன்னும் பல நாட்களாகும்.
 
Last edited:
எல்லோருக்கும் வணக்கம்.

நண்பர் ராஜுவின் வரிகளைப் படிப்பதே மனதில் தைக்கிறது. வசதிகள் இருந்தால் வயதானாலும் விவேகம் வராது என்பது உண்மை என்பது தோன்றுகிறது. ’ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்? நோ பீஸ் அஃப் மைன்ட்!’ என்றுதான் நம்மில் பலரால் (நான் உட்பட) சொல்ல முடியும் என்று நினக்கிறேன். நம்மில் பலர் இந்த விவேகம் பெற்றும் இருக்கலாம்; நான் அவர்களைக் குறித்துச் சொல்லவில்லை.

விதிவசத்தாலோ வேறு விளைவாலோ அந்த நடைபாதைக் கிழவி போன்று வாழும் மனிதர்களின் மனது எவ்வளவு தூரம் அலையடிக்க முடியும் என்று நானும் நினைத்து வியந்ததுண்டு. உணவுக்காக தினமும் அலைய நேரிடும் ஒரு பிச்சைக்காரர், குஷ்டரோகி போன்றோர் மனம் ஆசாபாசங்கள் அலையடிக்கும் நம் சாதாரண மனங்களில் இருந்து எவ்வளவு தூரம் விவேகத்தில் வேறுபட்டிக்க வேண்டும்! என்னால் ஒரு நிமிஷம் மனதில் எதையும் நினைக்காமல் சும்மா இருக்கமுடிவது இல்லையே, ஒரு கார் டிரைவர் தனியே தன் காரிலேயே காத்திருக்க நேரும் நீண்ட பொழுதுகளை எப்படி எதிர்கொள்கிறார், அவர் மனதில் என்ன மாதிரி நினைவுகள் ஓடும் (அவருக்குப் படிக்கவோ பாட்டுக்கேட்கவோ பிடிக்காது என்றால்) என்றெல்லாம் நான் வியப்பதுண்டு.

சித்த விருத்தியே தொழிலாக நாம் நம் மனதில் இருக்கும்போது, இவர்களால் எப்படி பதஞ்சலி மஹரிஷியின் ’யோகம் சித்த விருத்தி நிரோதம்’ என்பதை நடைமுறையில் கடைப்பிடிக்க முடிகிறது?

இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு ராஜுவுக்கு நன்றிகள்.
 
Dear Suraju Sir,

Your Post no .5, made a amazing reading and the reply post by Saidevo added the required flavour to it. Reading the incident as described by you made me wonder what a lady, and this seems reading a life story of a Ramana Maharishi or such Gjani... not a iota of anger or regret at her state of life or on the govt, society ...& still carrying on ..Thats why we get few rain drops..

Cheers.
 
திரு ராஜு அவர்களும் திரு சைதேவோ அவர்களும் மனதை தைத்த சேதி என் மனதையும் தைத்து விட்டது அந்த கிழவி (மகரிஷி ) நடந்தவற்றை சோகம் சிறிதுமில்லாமல் கூறியது ,சாதரணமான நம்மால் முடியாது
guruvayurappan
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top