• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆனி திருவோணம் திருக்கண்ணமங்கை ஆண்டான் திருநட்சத்திரம்

அவதாரம்/வைபவம்:

ஸ்ரீமந் நாதமுனிகளின் பதினோரு சீடர்களில் புகழ் பெற்ற ஐந்து சீடர்கள்
புண்டரீகாக்ஷர் என்னும் உய்யக் கொண்டார்,அஷ்டாங்க யோகத்தில் ஈடுபட்ட குருகைக் காவலப்பன்,நாதமுனி
களின் மருமக்களான மேலையகத்தாழ் வான்,கீழையாகத்தாழ்வான்,மற்றும்
"திருக்கண்ணமங்கைஆண்டான்"(நாத
முனிகளின் சகோதரி குமாரர்) ஆகியோர்.

திருக்கண்ணமங்கையில்(திருவாரூர்-கும்பகோணம் வழியில் திருவாரூரிலி ருந்து 6 கி.மீ.), ஆனி மாதம் க்ருஷ்ண பட்ச ஸ்ராவண (திருவோண) நட்சத்திரத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்த இவரது இயற்பெயர் 'கிருஷ்ணலக்ஷ்மி நாதன்'. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி
ஸ்ரீமந்நாதமுனிகளால் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்விக்கப்பட்டு, துளசி மாலைகளை
ஸ்ரீ பக்தவத்சல பெருமாளுக்கும்,
திருக்கண்ணமங்கைநாயகிக்கும், அபிஷேகவல்லித் தாயாருக்கும், சமர்பித்துவந்தார்.தினமும் கோவிலைப் பெருக்கி சுத்தம் செய்யும் கைங்கர்யம் செய்து வந்தார்!
திருக்கண்ணமங்கை என்னும் கிராமத்தின் தலைவராக இருந்து ஆண்டதால்,திருக்கண்ண மங்கை ஆண்டான்.

ஒருநாள் பெருமாளைச் சேவிக்க
வேட்டையாடுபவர்கள் இருவர், தமது நாய்களுடன்,கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு வெளியே தமது நாய்களை விட்டு விட்டு, கோவிலுக்கு உள்ளே
சென்றனர்.ஒரு வேடனின் நாய், மற்றொரு வேடனின் செருப்பைக் கடிக்க, அதைக் கண்ட மற்றொரு நாய் தனது எஜமானனின் செருப்பை நாய் கடிப்பதைப் பொறுக்காது, அந்த நாயுடன் பலமாக சண்டையிட்டது.சண்டையின் முடிவில் ஒரு நாய் இறந்து போக,இதனை அப்போது வெளியில் வந்த வேடர்கள் கண்டனர்.

தனது நாயினைக் கொன்ற மற்றொரு நாயை தன் வாளால் வேடன் வெட்டி க்கொல்ல,தமது நாய்களின் பொருட்டு இருவேடுவர்களுக்கும் இடையே, கத்திச் சண்டை துவங்கி, உச்ச கட்ட சண்டையின் முடிவில் இரு வேடுவர்களும் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்தனர்.

பல்லக்கில் அங்கு வந்த ஆண்டான்,நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு அறிந்தார். யோசித்துப் பார்த்த ஆண்டான் 'பிறருக்கு வேலை செய்து பிழைப்பவர்களும், தாழ்ந்த ஒழுக்கமுள்ளவர்களுமான இவ்விருவரது மனித இயற்கைக்கு மீறிய,இந்த கருணை வியக்கத்தக்கது.

இவர்களுக்கே இப்படிப்பட கருணை இருக்குமானால் இந்த உலகைப் படைத்து, இயற்கையிலேயே உறவினனாய் எல்லாம் அறிந்தவனாய், உலகனைத்துக்கும் தலைவனாய், உயிர்கள் அனைத்துக்கும் தாயாய்; தந்தையாய் உள்ள ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாளுக்கும், அபிஷேகவல்லித் தாயாருக்கும் பக்தர்களிடம் இருக்கும் கருணை பற்றி கேட்கவும் வேண்டுமோ?

பெருமாள் தன் பக்தனை ரக்ஷிப்பானா? மாட்டானா?என்னும் சந்தேகமே தேவை
யற்றது என எண்ணி,பக்தியால் உறுதி பூண்டு, தன்னை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், தாயாரிடம் ஒப்படைத்தவராய் எல்லா நித்ய, நைமித்திக கர்ம அனுஷ்டானத்தினையும் அடியோடு விலக்கி, நாயைப்போல இரண்டு கைகளையும் கால்களாக்கி நான்கு கால்களை ஊன்றி நாய் போன்று நடந்து கோவிலுக்குச்சென்றார்.பல்லக்கை விட்டார்; பட்டத்தை/செல்வத்தை/பற்றை விட்டார்!!

அன்று முதல் கோவிலிலேயே தங்கி பெருக்குதல்/புஷ்பமாலை கட்டுதல்
ஆகியவற்றைச் செய்து வந்தார்.தினமும் காலையில் ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் குளித்து வஸ்திரமில்லாமல், கைகளிரண்டையும் கால்களாக்கி நடந்து வேகமாக வந்து ஸ்ரீ பத்வத்சலப்
பெருமாள் சந்நிதியில் மகிழ மரத்தின் அடியில் பெருமாளைத் துதித்தபடி மௌனியாய்க் கிடந்து, கிடைக்கும் பிரசாதத்தினை உண்டு வாழந்து வந்தார்.

தன் பக்தனின் பக்தியில் மகிழ்வுற்ற ஸ்ரீ பத்தராவிப் பெருமாள் ஓரிரவில் ஊர்மக்கள் அனைவர் கனவிலும் தோன்றி, எனது பக்தனான திருக்கண்ணமங்கை ஆண்டானுக்கு நாளை,அனைவரும் காணும் பொழுதில் மோட்சமளிக்கப் போகிறேன் என்று அருளினார்.

மறுநாள் காலை,ஊர்மக்கள் அனைவரும் கோவிலில் திரண்டிருந்தனர். எப்போதும் போல் நான்கு கால்களால் நடந்து வந்த ஆண்டான் கூட்டம் ஏன் என்று, கூடத் தோன்றாமல் கோவிலைப் பிரதட்சணம் செய்து வந்து,துவார பாலகர்கள் அருகில் கோவிலுக்குள் நுழைந்த போது,
பெருமாளின் திருவடிகளிலிருந்து, மின்னல் கூட்டம் போன்ற ஒரு பெரிய ஒளி தோன்றி வந்து,ஆண்டானை ஆட்கொள்ள, திருகண்ணமங்கை யாண்டான் பெருமாள் திருவடிகளை அடைந்தார். ஆண்டாள்,திருப்பாணாழ்வார் போல ஆண்டானும் தம் திருமேனியோடு பரமபதம் அடைந்தார்!!!

ஆண்டானைக் கொண்டாடும் பிள்ளை லோகாசார்யர்:

"உபாயத்துக்கு (சீதா)பிராட்டியையும், திரெளபதியையும்,திருக்கண்ண மங்கை ஆண்டானையும், உபேயத்துக்கு இளைய பெருமாளையும் பெரிய உடையாரையும்
,பிள்ளைத் திருநரையூர்அரையரையும், சித்தயந்தியையும் போலே இருக்கவேணும்
--ஸ்ரீவசனபூஷணம் -சூத்திரம் 80

"பிராட்டி ஸ்வசக்தியை விட்டாள்;
திரெளபதி லஜ்ஜையை விட்டாள்;
திருக்கண்ணமங்கை ஆண்டான்
ஸ்வ வியாபாரத்தை விட்டார்"-சூத்திரம் 82

உபாயம் என்றால் (பெருமாளை) அடையும்வழி. உபேயம் என்றால் குறிக்கோள்;--பெருமாளை அடைவது; அவருக்குக் கைங்கர்யங்கள் செய்வதே வாழ்க்கையாக இருப்பது.
திருக்கண்ணமங்கைஆண்டான்,சீதாபிராட்டி,திரெளபதி ஆகியோர்
எம்பெருமானைஅடைவதற்கான வழி/உபாயம் ஆகவும் எம்பெருமானையே பற்றினர்.தாங்கள் வாழ/தங்களைக் காப்பாற்றிக்கொள்ள,தாங்களாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

சீதாப்பிராட்டி தம் சங்கல்பத்தாலேயே
தம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்.ஆனால் தம் சக்தியால் காப்பாற்றாமல்,அத்யந்த பாரதந்தர்யை யாய் தமது நாயகன் ராமபிரான் வந்து காப்பாற்றுவார் என்று இருந்தார்.

திரெளபதி துரியோதனாதிகள் சபை
யிலே,துச்சாதனன் தன் வஸ்திரத்தை அவிழ்த்த போது,தன் கணவர்களும்,
பீஷ்மர் முதலான பெரியோரும் காப்பாற்ற முன் வராததால்,
எம்பெருமானைப் பிரார்த்தித்து ஆடையைப் பிடித்திருந்த இரண்டு கைகளையும் விட்டு மேலே தூக்கி அஞ்சலி செய்தாள்;அங்கே ஆடை நழுவுகிறதே என்னும் வெட்கத்தை விட்டு,பகவானிடம் சரணடைந்தாள்.

திருக்கண்ணமங்கை ஆண்டான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் செயல் அனைத்தையும் விட்டு,(உணவு,உடை,இருப்பிடம் ஆகிய ஆதாரத் தேவைகளுக்காகவும் எதையும் செய்யாமல்)எம்பெருமான் கோயில் வாசலில் கைங்கர்யம் செய்து கிடந்தார்.

திருக்கண்ணமங்கை ஆண்டானைப் போற்றும் நம்பிள்ளை:

திருவாய்மொழி 9.2.1 "பண்டை நாளாலே நின் திருவருளும்" பாசுரத்தில் வரும்,
"நின் கோயில் சீய்த்து"என்னும் வார்த்தைக்கு வியாக்யானம் செய்த நம்பிள்ளை திருக்கண்ணமங்கை ஆண்டான் வைபவத்தைச் கொண்டாடிப் பேசுகிறார்.
திருவாய்மொழி 10-2-7ல் உரைக்கப்பட்ட “கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே”
(ஒருவன் எம்பெருமானுடைய கோயிலை சுத்தம் செய்து கைங்கர்யம் செய்தாலே அவனுடைய பாபங்கள் கழிந்துவிடும்)
என்னும் இறுதி அடியையும் இதற்கு மேற்கோள் காட்டி,ஆண்டான் வைபவத் தைச் சொல்கிறார்.

திருக்கண்ணமங்கை ஆண்டான் சந்நிதி
யை சுத்தம் செய்யும் கைங்கர்யத்தை ஒரு நாள் தவறாமல் மிகவும் பிரேமை
யோடு செய்து வந்தார்.ஒரு நாள் ஆண்டானுடன் வாசித்த சக மாணவர் (பிற்காலத்தில் நாஸ்திகராய் மாறியவர்) ஆண்டானிடம் “தனக்காக என்று எந்த சுய முயற்சியிலும் ஈடுபாடு இல்லாத பொழுது, எதற்காக நீ கோயிலைச் சுத்தம் செய்து உன்னை கஷ்டப்படுத்திக் கொள்கிறாய்” என்று கேட்டார். இதற்கு ஆண்டான் புழுதி படிந்த இடத்தை மற்றும் சுத்தமான இடத்தையும் காட்டி"இவ்விட
மும்,அவ்விடமும் இருந்தபடி கண்டாய்க்கு,
ஒரு பலமும் இல்லை என்று தோற்றி இருந்ததோ?"(புழுதி படிந்த இடத்தை துடைப்பதன் மூலம் அந்த இடம் சுத்தமாகுமே தவிர வேறோன்றும் இல்லை. உமக்கு சுத்தமான இடத்திற்கும், புழுதி படிந்த இடத்திற்கும் வித்யாசம் கண்டுபிடிக்கத் தெரியாதோ?)என்று கேட்டார்.

எம்பெருமானை மட்டுமே உபாயம் என்று முழுமையாக ஒப்புக்கொள்ளும் பிரபன்னர்கள், தங்களுக்காக என்று எந்த தனிப்பட்ட விஷயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்– எதற்காக கைங்கர்யம் செய்ய வேண்டும்?என்னும் கேள்விக்கு நம்பிள்ளை இந்த வைபவத்திலிருந்து விளக்குகிறார். "கைங்கர்யம் என்பது ஒரு சேஷ பூதனுடைய (சேவகனுடைய) இயற்கை யான சொரூபமான செயலாகும். அந்த கைங்கர்யமே உபாயமாக ஆகாது"
என்பதாம்.

ஆண்டானைக் கொண்டாடும் மணவாள மாமுனிகள்:

ஆண்டான் எந்த உபாயத்தையும் மேற்கொள்ளாமல் பெருமாளே எல்லாம் பார்த்துக்கொள்வார் என்னும் நிஷ்டையில்இருந்ததை, மாமுனிகள்,
"ஸ்வ ரக்ஷ்ண ஹேதுவான ஸ்வ வ்யாபாரங்களை விட்டான் என்றபடி"என்று போற்றுகிறார்.தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உதவும் சொந்த முயற்சிகள்/வேலைகள் எல்லாவற்றையும் விட்டார்.

"வாழும் சோம்பர்":

தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய 'திருமாலை'38 ஆம் பாசுரத்தில் "உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்" என்பதற்கு, வியாக்யானம் செய்த பெரியவாச்சான் பிள்ளை, இதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் திருக்கண்ணமங்கை ஆண்டான் என்கிறார்.(தான் வாழ்வதற்காகக் கூட எதையும் செய்ய/தேடிக்கொள்ள நினைக்காமல்,எம்பெருமானே பிரதானம் என்று அவர் கைங்கர்யங்களையே செய்தார்).

திருக்கண்ணமங்கை ஆண்டானுக்கும்,
ஸ்ரீராமாநுஜருக்கும் உள்ள விசேஷ சாம்யம்:


1.ராமாநுஜர் அவதரிப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே ஆண்டானின் ஆசார்யரான, ஸ்ரீமந் நாதமுனிகள்
நம்மாழ்வார் மூலம் ராமாநுஜரைச் சேவிக்கும் பேறு பெற்றார்.-பவிஷ்யத ஆசார்யவிக்ரகம்.நாதமுனிகள் மூலம் அந்த பவிஷ்யத ஆசார்யரை ஆண்டான் சேவித்தார்.நம்மாழ்வார் 'பொலிக! பொலிக!! பொலிக!' என்று தாம் பாடிய பாசுரத்தில் பவிஷ்யதாசார்யர் உடையவரைக் கொண்டாடியதாகக் கூறி, உடையவர் விக்ரகத்தையும் தந்தருளிய நாதமுனிகளைத் தாம் ஆசார்யராகப் பெற்றது, பெரும்பாக்கியம் என்றார் ஆண்டான்.சரமோபாய நிர்ணயத்துக்கு இந்த வைபவம் எடுத்துக்காட்டாகச் சொல்லப் படுகிறது.

2.ஆண்டான்,திருக்கண்ணமங்கை கோவிலைப் பெருக்கிச் சுத்தம் செய்தார்.(நாச்சியார் திருமொழி முதல் பாசுரமான 'தையொரு திங்களும் தரை விளக்கி' என்பதற்கு ஆண்டானின் இந்த வைபவம் போற்றப்படுகிறது).உடையவர் ஸ்ரீரங்கம் பெரியகோவில் மடப்பள்ளியைப் பெருக்கிச் சுத்தம் செய்தார்.

3.ஆண்டான் கண்ணமங்கை பத்தராவிப் பெருமாளிடம் தம்மை அர்ப்பணித்தார்.
ராமாநுஜர்,"பெரும்புறக்கடலை(பக்தவத்சலப்பெருமாள்) அற்புதமாகப் பாடிய திருமங்கை ஆழ்வாரின் தமிழுக்குத் தம்மை அர்ப்பணித்தார்.திருமங்கை ஆழ்வாரின் பெரியதிருமொழி 7-10ஆம் பதிகத்தில் உள்ள பாசுரங்களை வாசித்துப் பாருங்கள்;தமிழ் கொஞ்சி விளையாடும்.

"முனியார் துயரங்கள் முந்திலும்,இன்பங்கள் மொயத்திடினும்
கனியார்மனம் கண்ணமங்கை நின்றானைக்,கலைபரவும்
தனியானையைத் தண்டமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்,
இனியானை,எங்கள் இராமானுசனை வந்து எயதினரே"(இரா.நூ.17)

4.ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக்கு
'தனியன்' இட்ட ஆண்டான்; ஆண்டாளுக்கு 'அண்ணன்' ஆன உடையவர்:

ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியைப் போற்றி இந்தத் தனியனைப் பாடினார் திருக்கண்ண மங்கை ஆண்டான்:

"அல்லிநாள் தாமரை மேல் ஆரணங்கனின் துணைவி
மல்லிநாடாண்ட மடமயில் —–மெல்லியலாள்,ஆயர்குல வேந்தனாகத் தாள் தென்புதுவை வேயர் பயந்த விளக்கு !!"

ஆண்டாள் "நூறு நறும்பொழில்" பாசுரத்தில்,வாய் நேர்ந்து வைத்த நூறுதடா வெண்ணெயும்,நூறுதடா அக்கார வடிசலும் செய்து வைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றிய ராமாநுஜர் ஆண்டாளின் அண்ணனாக
"கோயில் அண்ணா"என்று கொண்டாடப் பட்டார்.ஆண்டாளின் திருப்பாவையில் ஆழ்ந்து அந்வயித்த அவர் "திருப்பாவை ஜீயர்" என்று போற்றப்பட்டார்.

5.மோட்சத்தை அடைந்த திருக்கண்ண மங்கை ஆண்டானது,திருவரசு சந்நிதி இன்றும் திருகண்ண மங்கை திவ்யதேச த்தில் கோவில் பிரகாரத்துக்குள்ளேயே
,வலதுபுறம் மகிழ மரத்தின் (ஆண்டான் இந்த மரத்தின் கீழ் தான் படுத்திருப்பார்) கீழ் செண்பக பிரகாரத்தில் அமைந்து உள்ளது.ஆண்டானைப் போல் ராமாநுஜரின் திருவரசு சந்நிதியும், 'அரங்கர் நியமனப்படி', ஸ்ரீரங்கம் பெரியகோயில் வெளிப்பிரகாரத்தில்
,உடையவர் சந்நிதியாக அமைந்துள்ளது
இந்த இரண்டு ஆசார்யர்களுக்கும், திவ்யதேசக் திருக்கோயில் பிரகாரத்துக்குள் திருவரசு அமைந்துள்ளது சிறப்பாகும்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்).
1624774474841.png
 

Latest ads

Back
Top