• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆமலாகீ ஏகாதசி

80,000 ரிஷி முனிவர்கள் சூத‌ முனிவரின் உபன்யாசத்தைக் கேட்பதற்காக கூடியிருந்த பொழுது சூதர் "முனிவர்களே, முன்பொரு முறை நடந்த சம்பவம் இது. மஹான் ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம் கேட்டார்," பிரம்மரிஷி வசிஷ்டரே, தாங்கள் என்னை ஆசீர்வதிக்க நினைத்தால், மங்களமான நன்மை அளிக்கும் விரதம் ஏதாவது உண்டென்றால், அந்த விரதத்தைப் பற்றிய கதை, அதன் மஹிமை இவற்றைப் பற்றி கூறி அருளுங்கள்." என்றார்.

மஹரிஷி வசிஷ்டர்," ராஜன், உத்தமமானதும், மோட்சப்பிராப்தியை அளிக்கக் கூடியதும் ஆன ஆமலாகீ ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களிலும் மேலானது ஆகும்." என்றார்.

ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம், "வேதங்களில் பாண்டித்யம் பெற்ற முனி சிரேஷ்டரே, அமலாகீ விரதம் உருவான கதை, விரதம் அனுஷ்டிக்கும் விதிமுறை இவற்றைப் பற்றி கருணையுடன் விஸ்தாரமாக எடுத்துரைக்க வேண்டும்" என்றார்.

ரிஷி வசிஷ்டர் பதிலளிக்கையில்," ஹே உத்தமமான ராஜனே, நீ கேட்டபடி இந்த விரதத்தைப் பற்றி விவரமாகக் கூறுகிறேன், இவ்விரத புண்ணிய பலனானது, சர்வ பாபங்களையும் நீக்கி நிவர்த்தியை அளிக்கும். ஓராயிரம் பசுக்களை தானம் அளிப்பதால் கிட்டும் புண்ணியத்திற்கு இணையானது ' ஆமலாகீ ஏகாதசி' விரத புண்ணிய பலன்.

ஆமலாகீ (நெல்லிக்கனி) யின் மகத்துவம், அதன் நற்குண நலன்கள் இவை தவிர அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் அது பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஸ்ரீமுகத்திலிருந்து தோன்றியது ஆகும். ஒரு புராணக் கதையைக் கூறுகிறேன். கதையை கவனத்துடன் கேள்." என்றார்.

பழங்காலத்தில் வைதிக் என்று ஒரு நகர் இருந்தது. அந்நகரில் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். நகரில் எப்போதும் வேதகோஷம் ஒலித்துக் கொண்டு இருந்தது. பாவம் புரிந்தோர், துஷ்கர்மம் செய்வோர், தெய்வ நம்பிக்கை இல்லாதோர் (நாஸ்திகர்) இவர்கள் இல்லா நகராக இருந்தது அது. அந்நகரை சைத்ர ரத் என்னும் பெயர் கொண்ட சந்திரவம்சத்து அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் மஹா வித்வானாகவும், கருணை உள்ளம் கொண்டவனாகவும் மற்றும் தார்மீகவாதியாகவும் இருந்தான். அவன் ஆட்சியில் எவரும் ஏழையாகவும், கருமியாகவும் இல்லாமல் இருந்தனர். அந்நகரில் வசிக்கும் அனைத்து குடிமக்களும் விஷ்ணு பக்தர்களாக விளங்கினர். விஷ்ணுவின் மீது பக்தி கொண்ட நகரில் பிறந்ததால் குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் ஏகாதசி விரதத்தை சிரத்தையுடனும், பக்தியுடனும் விரத வழி முறைப்படி அனுஷ்டித்து வந்தனர்.

ஒரு சமயம் ஆமலாகீ ஏகாதசி திதி வந்தது. அன்றைய தினம் அரசனிலிருந்து ஆண்டி வரை, குழந்தை முதல் முதியவர் வரை அனைத்து தரப்பினரும் பயபக்தியுடன் அந்த‌ ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தனர். ராஜா தனது குடிமக்களுடன் ஆலயத்திற்கு வந்து வந்து, விமரிசையாக பூஜை செய்தான். அனைவரும் நெல்லிக்கனியை (धात्री) துதிக்க ஆரம்பித்தனர்.

அந்த தேவாலயத்தில் அன்று இரவு அனைவரும் கண்விழித்து பகவத் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். அச்சமயம், அவ்விடத்திற்கு ஒரு வேடுவன் வந்தான். அவன் மஹாபாபியாகவும், துஷ்டனாகவும் விளங்கினான். அவன் தன் குடும்பத்தை, மற்ற ஜீவன்க‌ளை வதைப்பதன் மூலம் பராமரித்து வந்தான். பசியாலும், தாகத்தாலும் மிகவும் தவித்துக் கொண்டு இருந்தான்.

சாப்பிடுவதற்கு ஏதாவது கிட்டும் என்று எண்ணி ஆலயத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டான். அப்போது அங்கு பெளராணிகர் விஷ்ணு கதை மற்றும் ஏகாதசி மஹாத்மிய கதைகளை விவரித்துக் கொண்டிருக்க, அதை கேட்டபடி அமர்ந்திருந்தான். இப்படியாக அந்த வேடுவன், முழு இரவையும், மற்ற குடி ஜனங்களுடன் சேர்ந்து கண் விழித்தபடி கழித்தான். அதிகாலை புலர்ந்ததும் அனைத்து மக்களும் தங்கள் இல்லங்கள் நோக்கிச் சென்றனர். வேடுவனும் தனது இல்லத்திற்கு சென்று அங்கு உணவு உட்கொண்டான்.

சில வருடங்கள் கழித்து, அந்த வேடுவன் மரணம் அடைந்தான். அவன் ஜீவ ஹிம்சை புரிந்த காரணத்தால் நரகத்திற்குச் சென்று அங்கு தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது நியதியாக இருந்தாலும், ஆமலாகீ ஏகாதசி அன்று தான் அறியாமல் பசியுடன் உபவாசம் இருந்து, இரவு முழுவதும் தூங்காமல் பாகவத கதைகளுடன், ஏகாதசி மஹாத்மியத்தையும் கேட்டு கண் விழிப்புடன் விரதத்தை நிறைவு செய்த புண்ணிய பலத்தால், மறு பிறவியில் ராஜா விதுரத் அரண்மனையில் பிறந்தான். அவனுக்கு வசுரத் என்று நாமகரணம் ஆயிற்று. வளர்ந்து பெரியவன் ஆனதும் நான்வித சேனையுடன், தன, தான்யங்கள் நிறைந்து வழிய 10,000 கிராமங்களை நல்ல‌ விதமாக பராமரித்து வந்தான்.

அவன், தேஜஸ்ஸையும், அழகையும், வீரபராக்கிரமத்தியும் , பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையும் கொண்டு விளங்கினான். ஆழ்ந்த தெய்வ பக்தியும், சத்தியத்தின் வழி நடப்பவனாகவும், கர்மவீரனாகவும் மற்றும் சிரேஷ்டமான விஷ்ணு பக்தனாகவும் இருந்தான். குடிமக்களை சமமாக மதித்து பராமரித்து வந்தான். தானம் செய்வது அவனின் நித்ய கர்மாவாக இருந்தது.

ஒரு நாள் ராஜா வசுரத் வேட்டையாடுவதற்கு காட்டிற்குச் சென்றான். தெய்வாதீனமாக அவன் வனத்தில் வழி தவறி திசை அறியாமல் அலைந்து திரிந்து அயர்ச்சியில் ஒரு மரத்தின் கீழே உறக்கத்தில் ஆழ்ந்தான். அச்சமயம், மலைக் கொள்ளைக்காரர்கள் அங்கு வந்து தனியாக உறங்கும் ராஜாவைக் கண்டதும், ராஜா வசுரத் இருக்குமிடத்தை நோக்கி விரைந்து வந்தனர்.

கொள்ளைக்காரர்கள் அவர்களுக்குள், ராஜாவை இப்போது கொன்று நமக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி தீர்க்கலாம்" என்று கூறிக் கொண்டனர்.

இப்படி தங்களுக்குள் கூறிக் கொண்டு அவர்கள் ராஜாவை அடிக்க ஆரம்பித்தனர். ராஜாவின் மீது அஸ்திர சஸ்திரங்களை ஏவினர். அவை யாவும் ராஜாவின் உடம்பின் மீது பட்டதும் நாசமாயிற்று. ராஜா தன்னை யாரோ புஷ்பத்தால் தாக்கியது போல் உணர்ந்தான். சிறிது நேரத்தில் பரமாத்மாவின் திருவிளையாட்டில் கொள்ளைக்காரர்களின் அஸ்திரங்களே அவர்களை நோக்கி திரும்பிப் பாய ஆரம்பித்தன. அதனால் அவர்கள் யாவரும் மூர்ச்சையடைந்து விழுந்தனர். அவ்வேளையில் ராஜா வசுரத்தின் தேகத்திலிருந்து, அதி அற்புத அழகுடன் அழகிய ஆடை, அணிகலன்கள் அணிந்து அலங்கரிக்கப்பட்ட திவ்ய சொரூபத்துடன் ஒரு தேவி உதித்தாள். அச்சமயத்தில் அவள் காலதேவனைப் போன்று இருந்தாள். அவள் தன் பார்வையால் கொள்ளைக்காரர்கள் அனைவரையும் காலனிடம் சேர்த்து விட்டாள்.

ராஜா தன் தூக்கம் தடை பெற்று கண் விழித்ததும் தன்னைச் சுற்றிலும் மரணமடைந்து கிடக்கும் கொள்ளைக்காரர்களைக் கண்டு வியப்படைந்தான். யார் இவர்கள் அனைவரையும் கொன்றிருக்க முடியும்? மேலும் இவ்வனத்தில் எனக்கு உதவியாக இருந்து காத்தவர் யாராக இருக்க முடியும்?!! என்று யோசித்தான்.

இப்படியாக ராஜா யோசனையில் ஆழ்ந்திருந்த போது, வானத்திலிருந்து அசீரீரி," ஹே ராஜன், இவ்வுலகில் பகவான் மஹாவிஷ்ணுவை தவிர வேறு யார் உன்னை காத்திருக்க முடியும்?!" என்றது.

அசீரீரி சொன்னதைக் கேட்டதும் ராஜா மஹாவிஷ்ணுவிற்கு, தனது நமஸ்காரங்களை பணிவுடன் சமர்ப்பித்தான். பிறகு நாட்டிற்கு திரும்பி சுகத்துடனும், ஆனந்தத்துடனும் ஆட்சி புரிந்து வந்தான்.

மஹரிஷி வசிஷ்டர் ராஜா மாந்தாதாவிடம்," ஹே ராஜன், இது அனைத்தும் ஆமலாகீ ஏகாதசி விரதத்தின் புண்ணிய பிரபாவத்தால் விளைந்தது. எவர் ஒருவர் ஏதேனும் ஒரு ஆமலாகீ ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கிறாரோ, அவர் தனது ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதுடன், வாழ்நாள் முடிவில் விஷ்ணுலோகப் பிராப்தியும் பெறுவர்" என்று கூறினார்.

பகவான் மஹாவிஷ்ணுவின் அருட்சக்தி, நமது அனைத்து சங்கடங்களையும் நீக்க வல்லது. மஹாவிஷ்ணுவின் சக்தியானது மனிதர் மட்டுமல்லாமல், தேவர்களையும் ரட்சித்து காக்கும் பூரண சக்தி பெற்றது. இச்சக்தியின் பலத்தினால் தான் பகவான் மஹாவிஷ்ணு, மது - கைடபன் என்னும் இரு அரக்கர்களையும் சம்ஹரித்தார். இதே சக்தியானது உத்பன்ன ஏகாதசி தேவியாக உதித்து மூர் என்னும் அரக்கனை வதம் செய்து தேவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மஹாபாபியான வேடுவன், அறியாமல் ஒரு தடவை செய்த ஆமலாகீ விரதத்தின் பலன், அவனை ஜென்ம ஜென்மத்திற்கும் பகவான் விஷ்ணுவின் க்ருபா கடாக்ஷத்திற்கு பாத்திரமாக்கியது. ஆகையால் நாமும் வாழ்நாளில் முடிந்தவரை ஆமலாகீ ஏகாதசி விரதம் மட்டும் அல்லாது அனைத்து ஏகாதசி விரதங்களையும் சிரத்தையுடனும், பக்தியுடனும் அனுஷ்டித்து பகவான் மஹாவிஷ்ணுவின் அருட்கடாக்ஷத்தை வேண்டி நிற்போம்.

1647244402593.png
 
Last edited:

Latest ads

Back
Top