• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆற்றுப் பாய்ச்சலில் அழகிய புஷ்கரம்

praveen

Life is a dream
Staff member
ஆற்றுப் பாய்ச்சலில் அழகிய புஷ்கரம்

பிரம்மாவை எண்ணி தியானம் செய்து கொண்டிருக்கிறார் பிரஹஸ்பதி என்றழைக்கப்படும் வியாழகுரு பகவான். தியானம் நல்லமுறையில் பூர்த்தியானதால் அவர் எதிரில் போய் பிரம்மா நிற்க, பிரம்ம கமண்டலம் தனக்கு வேண்டும்என்று யாசித்தார் அந்தப் பெருங்கிரஹத்தார். தியானம், தவம் ஆகியவற்றை முறையாகச் செய்து முறையாக யாசித்தால், கேட்டதைக் கொடுப்பதில் என்ன தடை? அதுவும் மண்ணால் ஆன கமண்டலம்தானே, கொடுத்துவிட்டால் போயிற்று! வியாழ குருவோ, கோள்களில் மிக நல்லவர் என்று பெயர் வாங்கியவரும் கூட; ஆகவே அவருக்குத் தருவதில் தவறில்லை என்று கருதிய பிரம்மா, கமண்டலத்தைக் கொடுத்து விட்டார். தம் கையில் கமண்டலத்தைப் பிடித்து பிரம்மா நீட்ட, பெற்றுக் கொள்வதற்கு வியாழன் முயல... கமண்டலமோ கைவிட்டு அகல மறுத்தது.


மண் கமண்டலம் ஏன் மறுக்கிறது? கமண்டலத்திற்கு உள்ளே... ஒருவர் அமர்ந்திருக்கிறார். தன்னையே சுருக்கிக்கொண்டு, கமண்டலத்தின் வளைவு நெளிவுகளுக்குள் சுருண்டுபுரண்டு ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர்தாம், தாமும் நகர மறுத்துகமண்டலத்தையும் கட்டிவிட்டார். யார் அவர்???? வருணதேவனுக்கு மகன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் "புஷ்கரன்" என்று பெயர். ("புஷ்கரன்' - புஷ்= புஷ்டி, கரன்= செய்பவன்; அதாவது, புஷ்டியை, போஷாக்கைத் தருபவன் என்று பொருள். மழைக் கடவுளான வருணன் தானே, தன்னுடைய பலனாக, ஊட்டத்தை, சக்தியை, புஷ்டியைத்தரவேண்டும்! அதைக் காட்டத்தான், அவனுடைய மகனுக்கு இப்படியொருபெயர் போலும்!) இளமைப் பருவம் எய்தியதும், தவ வாழ்க்கைமேற்கொண்டான் புஷ்கரன்.


அவன் தவத்தை மெச்சி பிரம்மா எதிர்நின்றதும், "நதிகளையும் நீர்ப்பரப்புகளையும் எப்போதும் தூய்மை செய்பவனாகத் தான்இருக்கவேண்டும் என்றும், அதுவே தன்னுடைய நிரந்தர அவா' என்றும்வேண்டினான். பிறர் மீது தன் அழுக்கைச் சுமத்த நினைக்காமல், பிறர் அழுக்கைத் தான்ஏற்றுத் துடைக்கவேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு உத்தமம்! புஷ்கரன்நதிகளில் பிரவேசிக்கும் போதெல்லாம், அந்தந்த நதிகள் கூடுதல் புனிதம்பெறும் என்ற வரத்தை நல்கிய பிரம்மா, சிருஷ்டியின் தூய்மைகாக்கப்படவேண்டும் என்பதற்காகப் புஷ்கரனைத் தம்முடையகமண்டலத்திலேயே தங்கியிருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.


இப்போது வந்தது சிக்கல்! பிரம்ம கமண்டலத்தில் வீற்றிருந்த புஷ்கரன், வியாழனோடு போக மறுத்தார். காரணம்? கமண்டலத்தை வியாழன்விழைந்த சுயநலம். ஆமாம், வியாழகுரு நல்லவர் தாம்; கோள்களிலேயேசுபகிரஹம் என்று பெயர் வாங்கியவர்; குரு பார்வை கோடி நன்மை என்றுபோற்றப்படுபவர். ஆனாலும், அவருக்குச் சற்றே பேராசை. புஷ்கரனைஉள்ளடக்கிய பிரம்ம கமண்டலம் தன்னிடத்தில் இருந்தால், எல்லா நன்மைகளுக்கும் தாமே அதிபதியாகி, அசுபங்களைத் துடைக்கும்பெருமிதத்தையும் தாமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை; இதைவைத்து தமக்கே முதல் நிலை கிடைத்து, எல்லோரும் தம்மையே பாராட்டவேண்டும் என்கிற பேராசை.... அழுக்குகளை நீக்கும் ஆற்றலைப் பெற்றவராயிற்றே புஷ்கரன், வியாழ குருவின் அகந்தை அழுக்கை அறியமாட்டாரா என்ன??


புஷ்கரனின் புனிதச் சிந்தனையை உணர்ந்த பிரம்மா, புஷ்கரனுக்கும் வியாழனுக்கும் மட்டுமல்லாமல், மானுடம் அனைத்துக்கும் பயன் தரும் அற்புத வழியைக் கண்டு பிடித்தார்.... அதன்படி, வியாழகுரு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குள் புகுகிறகாலகட்டத்தில் மட்டும், கமண்டலம் அவர் கையில் இருக்கும் என்று வரம் கொடுத்து விட்டார். அதன்படி, ஒரு ராசிக்குள் வியாழகுரு பிரவேசிக்கிற முதல் 12 நாட்களும், அந்த ராசியை விட்டு வெளியேறுகிற (அடுத்த ராசிக்குள்பிரவேசிப்பதற்கு முன்னதாக) கடைசி 12 நாட்களும், பிரம்மக மண்டலம் வியாழகுருவின் கையில் இருக்கும். ராசிக்குள் பிரவேசித்து சஞ்சரிக்கும் வியாழன், அந்தந்த ராசிக்கு உரித்தானபுனித நதியிலேயும் அந்தந்தக் காலகட்டத்தில் தங்குகிறார்.


புனித நீராடித் திருக்கோயிலுக்குள் நுழைகிறோம் இல்லையா? அதுபோல, குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட நதியில், பிரம்ம கமண்டலத்தைக் கையில் ஏந்தியபடியே புனித தீர்த்தமாடி, அந்தக்குறிப்பிட்ட ராசிக்குள் வியாழகுரு பிரவேசிக்கிறார். அந்த சமயத்தில், கமண்டலத்தைவிட்டு வெளி வந்து, வியாழனுடையகையைப் பற்றிக் கொண்டுத் தாமும் நதியில் இறங்குகிறார் "புஷ்கரன்". இதனால், அந்த நதியானது, பலமடங்கு புனிதம் அடைவதோடு, அந்தசமயத்தில் அதில் நீராடும் ஜீவர்களின் மாசுகளும் பாவங்களும்அகற்றப்படுகின்றன. இந்தக் கோலாகலத்தைக் காண்பதோடு,தாங்களும் புனிதம் சேர்த்துக் கொள்வதற்காக, தேவர்களும்ரிஷிகளும்கூட அந்த நதியில் நீராடி, அதன் கரைகளில் தங்குகிறார்கள்.
இவ்வாறு, குருவாலும் புஷ்கரனாலும் புனிதம் கூட்டப்பெறுகின்றநிகழ்வே, "ஆற்றுப் புஷ்கரம்' (நதிப் புஷ்கரம்) ஆகின்றது.


தாம்ரபர்ணீ மஹாபுஷ்கரம் எப்பொழுது ? தாம்ரபர்ணீ மஹாபுஷ்கரம் 2018 நிகழும் ஸ்ரீவிளம்பி ஆண்டு, புரட்டாசி 25ஆம்நாள், அதாவது அக்டோபர் மாதம் 11ஆம் தேதி (திருக்கணிதப்பஞ்சாங்கப்படி), வியாழகுரு (துலா ராசியில் இருந்து) விருச்சிக ராசிக்குள்பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி (ஆத்ய) புஷ்கரம் ஆரம்பம். ஸ்ரீ ஸ்ரிங்கேரி சங்கராசார்யர் அவர்களது பூர்ண அனுக்ரஹத்தோடு துவங்குகிறது.

விருச்சிக ராசிக்கான நதி தேவதை, "தாம்ரபர்ணீ" ஆவாள். (தாம்ரபர்ணீ விசாக நட்சத்திரத்தில், விருச்சிக ராசியில் தோன்றியவள் அல்லவா ? ) அக்டோபர் 11 பூர்வாங்க பூஜைகள் "பாபநாசத்தில்" ஆரம்பித்து 12 முதல்23 வரை "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" அனைத்து தீர்த்த கட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று 24 அன்று தீர்த்தவாரி பூஜைகளோடு "முறப்ப நாடு" குரு ஸ்தலத்தில் நிறைவு பெற இருக்கின்றது...


ஆகவே 2018 அக்டோபர் 11ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும் "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" மிக சிறப்பாக கொண்டாடப்பட இருக்கின்றது... குறிப்பிட்ட ராசியில் குரு சஞ்சரிக்கும் ஓராண்டுக் காலம் முழுவதுமே, குறிப்பிட்ட நதியிலும் தங்குகிறார். இந்த வகையில், 2019ம் ஆண்டு நவம்பர்4ஆம் தேதிவரை தாம்ரபர்ணீத் தாய் சிறப்படைகிறாள் என்றாலும், குருபிரவேசிக்கும் முதல் பத்து நாட்கள் "ஆதி புஷ்கரம்' என்றும், குரு அகலும் பத்துநாட்கள் "அந்த்ய புஷ்கரம்' என்றும் பெருமை கொள்கின்றன. இந்த புஷ்கரம் மட்டும் ஏன் "மஹா புஷ்கரம்" என்று அழைக்கப்படுகிறது ?


வியாழகுருவானவர், குறிப்பிட்ட ஒரு ராசிக்குள் பிரவேசித்து சஞ்சாரம்செய்வது, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்.. இப்போது விருச்சிகராசிக்குள்ளும் தாம்ரபர்ணீக்குள்ளும் சஞ்சரிக்கப் புகுகிற வியாழன், இன்னும்12 ஆண்டுகளுக்குப் பின்னரே, மீண்டும் இங்கு வருவார்... புஷ்கர் என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. மஹா புஷ்கர் , 12 புஷ்கரங்களுக்கு ஒரு முறை = 12 x 12 வருடங்கள் = 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. இவ்வகையில் இப்போது நிகழ இருப்பது மஹா புஷ்கர் ஆகும். எனவே, உண்மையிலேயே இது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு அல்லவா ?...


நமது மற்றும் அடுத்த மூன்று தலைமுறைகளுக்கும் காணக்கிடைக்காத ஒரு மாபெரும் வாய்ப்பு இது ... மீண்டும் இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்குமா ? இந்த ஜென்மாவில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் அல்லவா இது ? எனவே, உங்கள் மஹா புஷ்கர் பயணத்தை இன்றே உறுதி செய்து கொள்ளுங்கள்....


இப்பேற்பட்ட மஹா புஷ்கர் நிகழ்வில் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்பதையும் நதி தீர்த்த கட்டங்கள் எவ்வாறு பிரிக்க பட்டுள்ளது என்பதையும் காண்போம்....


நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள் 12 ராசிகளுக்கு உரியவைகளாகச் சொல்லப் பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
மேஷம் - கங்கை நதி …..ரிஷபம் - நர்மதை….மிதுனம் - சரஸ்வதி…..கடகம் - யமுனை
சிம்மம் - கோதாவரி……கன்னி - கிருஷ்ணா…….துலாம் - காவிரி…..விருச்சிகம் - தாமிரபரணி
தனுசு - சிந்து…..மகரம் - துங்கபத்ரா….கும்பம் - பிரம்மநதி…..மீனம் - பிரணீதா


குருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும்.அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர் என்று மேலே பார்த்தோம்.


நதிகளெல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவைகள் என்று கருதுவது நம் நாட்டு ஐதீகம் ஆகும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர் அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி. தாமிரபரணி நதிக்கான சிறப்பு என்னவென்றால் இது தமிழ் நாட்டின் நெல்லை (அன்றைய பிரிக்கப்படாத) மாவட்டத்தில் உற்பத்தியாகி இந்த மாவட்டத்திற்குள்ளேயே பாய்ந்து இம்மாவட்ட முகத்துவாரத்திலேயே கடலில் கலக்கிறது. இந்தியாவின் வேறெந்த நதிக்கும் இப்பெருமை கிடையாது.


ஈசனால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி::::
சிவபெருமான் அகத்தியரை ‘‘தென் நாடு செல்க’’ எனக் கட்டளையிட்ட போது அகத்தியர், ‘‘அது தமிழ்நாடு. தமிழ் பாஷை தனக்குத் தெரியாது. ஆதலின், அதை தமக்கு உணர்த்துக’’ என சிவபெருமானிடம் கேட்டார். உடனே, தம் அருகே அவரை அமரவைத்து, தமிழைக் கற்றுக் கொடுத்தார் ஈசன். (தமிழ் மொழி அகத்தியர் காலத்துக்கு முன்னரே இருந்தது என்பது இதனால் தெள்ளத் தெளிவாய் தெரிய வருகிறது).


ஈசனிடம் தமிழைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். அவர் முன் சூரிய பகவான் தோன்றி, தமிழ் இலக்கணங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பின்னர், முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராயிருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். அகத்தியர் ஸ்நானம் செய்யும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார்.
தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு ‘‘தாம்பிர வர்ணி’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டது. காலப் போக்கில் அது தாமிரபரணி என்றாயிற்று.


அகத்தியருக்காக ஈசனால் உருவாக் கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன. பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத்துவாரம்) வரை இந்நதிக் கரையில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன.
இந்நிகழ்விற்காகவே பிரத்தியேகமாக, தாமிரபரணி தாய்க்காக புதிய சிலை ஒன்று உருவாக்கப்பட்டு ஸ்ரீருங்கேரி சங்கராச்சார்யர்கள் அவர்கள் திருக்கரங்களால் முதல் அபிஷேகம் செய்யப்பட்டு பாபநாசத்திலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின் சில பல முக்ய நகரங்கள் வழியாக ரதயாத்திரை யாகச் சென்று திரும்பி பாபநாசம் வந்தடைந்துள்ளது. அதுசமயம் அன்பர்கள் நிறைய கலந்து கொண்டு அன்னையின் ஆசியைப் பெற்றார்கள்.


22-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.
இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாகும். 12/10.2018 விருச்சிகத்தில் ஆரம்பித்து தனுசு, மகரம் என்று கடந்து இறுதி நாளான 23/10.2018 அன்று துலா ராசியில் முடிகின்றது.
ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும் என்று புராணங்கள் வாயிலாக அறியப்படுகின்றது. 12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமமாகவும் கருதப்படுகிறது.


தானம் கொடுத்தல், மற்றும் முன்னோருக்கு திதி கொடுத்தல் போன்ற செயல்களாலும் நமது பாவங்கள் குறைந்து அல்லது முற்றிலும் களைந்து புண்ணியம் சேரும் என்று ஐதீகம்…
பாபநாசம் முதல் புன்னைக் காயல் வரை உள்ள எந்த படித்துறையிலும் புனித நீராடலாம். தானம் செய்யலாம். சிரார்த்தம் கொடுக்கலாம். அதற்கான சிறப்பு வசதிகள் எல்லா படித்துறை களிலும் செய்யப்பட்டு வருகின்றன. நிகழ்வு ஆரம்பிக்கும் சமயத்தில் இவ்வேலைகள் அனைத்தும் பூர்ணத்துவம் பெற்று விடும். இதற்கென்று தாமிரபர்ணி மஹா புஷ்கர் கமிட்டி ஒன்று அகில இந்திய துறவிகள் சங்கத்தலைவர் ஸ்வாமி ராமானந்தர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு இந்நிகழ்வை நிர்வாகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.


சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். (இதுவே ப்ரம்ம முஹுர்த்த காலம் எனவும் அறியப்படும்). இந்த அருணோதய காலத்தில் நதியில் தீர்த்தமாடுவது மிகச் சிறப்பு பலன்களை அளிக்க வல்லது என்பதும் ஐதீகம்.
புண்ய நதிகளில் நீரிடுதலுக்கென்று சில விதிமுறைகள் விதிக்கப் பட்டிருக்கின்றன. அவற்றைப் பின்பற்றி புண்ய நதியில் புண்ய காலத்தில் நீராடிய முழுப் பலன்களையும் பெறுவோமாக.


புஷ்கர நீராடலால் புது வாழ்வு புஷ்பிக்கும். அதற்கு இப்போதே ஆயத்தமாவீர்!


எங்களது சொந்த கிராமமான தேசமாணிக்கத்திலும் தாமிரபர்ணி பாய்வதால் நாங்களும் எங்கள் கோவில் மற்றும் அண்டை கோவில்கள் சார்பாக இந்த அபூர்வ நிகழ்வான மஹா புஷ்கரத்தில் பங்கு கொள்ள இருக்கிறோம்.
முழு 12 நாட்களிலும் கலந்து கொள்ளுமாறு கமிட்டியால் அழைப்பு விடப்பட்டிருந்தாலும் சில விஷயங்களைக் கருத்தில் கொண்டு ஒரே நாள் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 21ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பங்கு கொள்வதாக இருக்கிறோம். ஆனால் கிராம மக்கள் தங்களளவில் 12 நாட்களும் கொண்டாட தங்களைத் தயார் படுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக இன்று தயாரிக்கப் பட்ட இந்நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரலை இத்துடன் இணைக்கிறேன்.


என்னென்ன படித்துறைகளில் நீராடி, திதிகள் கொடுக்க வசதி இருக்கிறதென்று இத்துடன் இணைக்கப்பட்ட அட்டவணையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
 

Latest posts

Latest ads

Back
Top