• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இயக்குநர் ஷங்கருக்கு பகிரங்கக் கடிதம்!

Status
Not open for further replies.
இயக்குநர் ஷங்கருக்கு பகிரங்கக் கடிதம்!

இயக்குநர் ஷங்கருக்கு பகிரங்கக் கடிதம்!



இயக்குநர் ஷங்கருக்கு...

தங்களின் ‘ஐ’ படம் கண்டேன். தாய்நாட்டு அகதிகளான திருநங்கைகளைப் பாலியல் வெறியர்களாக, அருவருப்பான சமூக விரோதிகளாகத் தங்கள் மனம் போன போக்கில் எப்படியும் சித்தரிக்கக்கூடிய தகுதி கொண்ட தங்களைப் போன்ற ‘மகா கலைஞர்’களின் ‘படைப்புத் திற’னுக்கு இங்கு யாரும் எந்தத் தடையும் விதிக்கப்போவதில்லை.


‘சிவாஜி’ படத்தில் போகிற போக்கில் திருநங்கைகள் மீது காறி உமிழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் “இப்பத்தான் ஆப்பரேஷன் பண்ணிட்டு வந்திருக்கு’’ என்று ஏளனமாகக் கூறியதும் “சீ..சீ…’’ என்று அருவருப்புடன் எங்கள் சூப்பர் ஸ்டார் விலகிச் சென்றதைத் தூசி தட்டி, தற்போது “அதற்கும் மேல” என்று பிரம்மாண்டமாய்க் காறி உமிழ்ந்திருப்பதைத்தான் பேச விரும்புகிறேன்.


படத்தின் நாயகன் விக்ரம் வில்லனைப் பார்த்து, முதல் பத்து நிமிடங்களிலேயே “டே… பொட்ட…” என்கிறார். நான் அதிர்ச்சியடையவில்லை, நானும் என்னைப் போன்ற பொட்டைப் பிறவிகளும் தமிழ் சினிமாவின் இத்தகைய தொடர் பதிவுகளால் இவற்றுக்கு நன்கு பழகியிருக்கிறோம்.


விக்ரமுக்கும்கூட இந்த வசனம் ஒன்றும் புதிதல்ல, தமிழ் சினிமாவின் நவீன பிதாமகன் என்று பாராட்டப்பட்ட பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த “சேது’’ படத்தில்கூட “ டே.. இப்பிடி பண்ணிப் பண்ணியே ஒருநாள் நீ அஜக்காவே மாறப்போற…” என்று சொன்னவர்தான்.


‘சதுரங்க வேட்டை’ என்னும் சமூக அக்கறை கொண்ட படத்தை இயக்கிய வினோத் ‘பொட்ட’ என்ற சொல்லை எளிதாகப் பயன்படுத்தி, அதைத் திரை விமர்சகர் கேபிள் சங்கர் போன்றவர்கள் சப்பைக்கட்டு கட்டும்போது, உங்களிடம் மட்டும் அந்தக் கரிசனத்தை நாங்கள் எதிர்பார்க்கவா முடியும்?


‘பொட்டை’ என்று உங்களால் ஏளனமாக அறியப்படும் நாங்கள் உங்களது ஆண்மை பராக்கிரமத்துக்கு முன் அப்படி என்னதான் குறைந்துவிட்டோம்? உள்ளம் முழுவதும் பெண்மை குடியிருப்பதை அறிந்து எம் பாலினத்துக்கு நேர்மையாக இருக்கிறோம். திருநங்கையாகக் குடும்பத்தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவரத் துணிகிறோம்.


பெற்றோர்களின் சொத்து, சுகம் எதுவுமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை எவரையும் சாராமல் வாழ்கிறோம். தெருவிலும், வெள்ளித் திரையிலும் ஆண் பராக்கிரமசாலிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள்மீது நிகழ்த்தும் வன்முறைகளைத் துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் பராக்கிரமம் சிறந்ததா? அல்லது ‘பொட்டைகள்’ சோற்றில் உப்பு போட்டுத் தின்பதில்லை என்பது உங்களின் எண்ணமா?


வித்தியாசமான வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாகத் திருநங்கையை வைத்ததையும், அதுவும் உலக அழகியையே மேலும் அழகாகக் காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜானியையே (கதாபாத்திரப் பெயர் ஓஸ்மா ஜாஸ்மின்) நடிக்கவைத்ததையும் பாராட்டலாம்.


ஆனால், தான் வியக்கும், விரும்பும் விளம்பர அழகியின் வாயாலேயே ‘இந்தியாவிலேயே முன்னணி ஸ்டைலிஸ்ட்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டபோதும், முதல் பார்வையிலேயே ஓஜாஸ் மீது நாயகன் விக்ரமுக்கும், நண்பர் சந்தானத்துக்கும் அவ்வளவு கீழ்த்தரமான பார்வை ஏன் வருகிறது?


எல்லா இன்னல்களையும் கடந்து திருநங்கைகள் பலர் பல துறைகளில் சாதித்துவருகிறார்கள். ஆனாலும், அவர்கள் ஏளனத்துக்குரியவர்கள், என்பதைப் பார்வையாளர்கள் மனதில் இன்னும் ஆழமாக விதைக்கத்தானே? தமிழ் ரசிகர்களே தற்போது திருநங்கைகளைக் கலாய்க்க, ‘காஞ்சனா’ என்று அழைக்கத் தங்களை மேம்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் ‘ஊரோரம் புளிய மரம்…’ என்று பாடுவது எதனால்?


‘பருத்தி வீரன்’ படம் வந்த புதிதில் ஒரு காலை வேளையில், எனது அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் சற்றும் எதிர்பாராத விதமாக 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பாதி குடித்த வாட்டர் பாக்கெட்டை எனது முகத்தில் வீசிட்டு அன்று இதே பாடலைத்தான் பாடினான். ஒரு தெருவே வேடிக்கை பார்க்க, இல்லை சிரிக்க நடுத்தெருவில் குறுகி நின்றேன். பத்தே வயது நிரம்பிய ஒரு சிறுவனுக்கு இப்படிச் செய்யச் சொல்லிக் கொடுத்தது யார்?


இன்று அதே நிலைமையில்தான் ‘ஓஜா’ஸை நினைத்துப் பார்க் கிறேன். இந்தியாவின் முன்னணி ஸ்டைலிஸ்டான தனது மதிப்பை அறியாமல் இவ்வளவு அற்பமாக முகத்துக்கு நேராகத் தன்னை அவமானப்படுத்தும் ஒருவனை ஒரு திருநங்கை விடாமல் மோகம் கொள்வாள் என எப்படி நினைத்தீர்கள்? ‘பிச்சையெடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் நேர்ந்துவிடப்பட்ட பிறவிகள் இவர்கள்..

இவர்களுக்குத் தன்மானமே இருக்காது’ என முடிவெடுத்துவிட்டீர்களா? அற்பமான இந்த தர்க்கங்கள் உங்கள் பிரம்மாண்டச் சிந்தனைக்கு வரவேயில்லை இல்லையா?


திரையிலும், சுவரொட்டிகளிலும் மட்டுமே கண்ட ஒரு அழகியை, அவள் அழகி என்பதால் மட்டுமே ஒரு ஆணழகன் காதலிக்கிறார். அது உண்மையான, நியாயமான, கல்மிஷம் இல்லாத காதலாகிறது.

குற்றவுணர்வாலும், பரிதாபத்தாலும் அந்த அழகியும், ஆணழகனைப் பரிசுத்தமாகக் காதலிக்க முடிகிறது. ஆனால், ஒரு திருநங்கையின் காதல் உணர்வு மட்டும் நாயகனாலும், நண்பனாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பரப் பட இயக்குநராலும் அருவருப்பாகவே பார்க்கப்படுகிறது. இது நியாயமா?

‘9’ என்ற அறை எண்ணைக் காட்டிப் பின் ஓஜாஸைக் காட்டிய உங்கள் அரதப் பழசான, அருவருப்பான விளையாட்டை எண்ணி என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதே ‘9’ என்ற சொல்லைத்தான் எந்த அற்பனும் எங்களைச் சிறுமைப்படுத்தப் பேராயுதமாகப் பயன்படுத்துகிறான்.


‘இப்படத்தில் எந்த மிருகமும் துன்புறுத்தப்படவில்லை’ என்ற சட்டபூர்வ அறிவிப்புடன் தொடங்கும் படத்தில், கிடைக்கும் ஒரு வாய்ப்பைக்கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத் திறனாளிகள்வரை காயப்படுத்த தங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது தணிக்கைக் குழு. மிருகங்களுக்கு மனமிரங்கி மனிதர்களான எங்களை ஏலியன்களாகப் பார்க்கும் அதன் தாராள மனதைக் கண்டிக்காமல் உங்களைக் கேள்வி கேட்டு என்ன பயன்?


வாசிப்பும், பகுத்தறிவும் கொண்ட நடிகரென நவீன இலக்கிய வாதிகளும் கொண்டாடும் நடிகர் கமல், ‘பொட்டை’ என்னும் சொல்லை வெகு ஆண்மையோடு தமது பல படங்களில் பயன்படுத்தியுள்ளார், அதற்கும் மேலே, ‘வேட்டையாடு, விளையாடு’ படத்தில் திருநங்கைகளையும், தன்பால் ஈர்ப்பினரையும் மலினப்படுத்தியிருக்கிறார் எனும்போது சந்தானத்தையும் விக்ரமையும் மட்டும் என்ன சொல்ல?
தமிழ்த் திரையுலக இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், காமெடியன்கள் நினைப்பதுபோல, ஆண் பராக்கிரமசாலிகளும், பெண்களும் மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல. உங்களால் அன்னியப்படுத்தப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்கள் ரசிகர் பட்டாளங்களின் ஒரு பகுதிதான்.


நாங்களும் படங்கள் பார்க்கிறோம். ரசிக்கிறோம், சிரிக்கிறோம், நீங்கள் மலினப்படுத்துவதையும் கடந்து எங்கள் உலகத்துக்குள்ளும் உங்களில் பலருக்கும் ரசிகைகள் இருக்கிறார்கள். அதற்காக எங்கள் சோற்றில் உப்பில்லை என்றுமட்டும் நினைத்துவிடாதீர்கள்.


இப்படிக்கு


லிவிங் ஸ்மைல் வித்யா

??????? ???????????????????????? - ????????? ?????????? ????????? ??????! - ?? ?????
 
இந்த வித்யாவின் வேதனையும் வாதமும் எனக்கு புரிகிறது.

அந்தவேதனையை சற்றும் தரம் தாழ்ந்துவிடாமல் வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

நான் இந்த வித்யாவை நேரில் சந்திக்க நேர்ந்தால் அவளிடம் (உள்ளம் முழுவதும் பெண்மையை நிரப்பிக்கொண்டிருக்கும் ஒரு மனித ஜீவனை வேறு எப்படி விளிப்பது?) இந்த மனிதர்கள் எல்லாருக்கும் சேர்த்து மன்னிப்புக்கேட்பேன்.

மனம் கனத்துத்தான் போயிற்று.
 
இந்த வித்யாவின் வேதனையும் வாதமும் எனக்கு புரிகிறது.

அந்தவேதனையை சற்றும் தரம் தாழ்ந்துவிடாமல் வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

நான் இந்த வித்யாவை நேரில் சந்திக்க நேர்ந்தால் அவளிடம் (உள்ளம் முழுவதும் பெண்மையை நிரப்பிக்கொண்டிருக்கும் ஒரு மனித ஜீவனை வேறு எப்படி விளிப்பது?) இந்த மனிதர்கள் எல்லாருக்கும் சேர்த்து மன்னிப்புக்கேட்பேன்.

மனம் கனத்துத்தான் போயிற்று.

attachment.php



Picture source: FB
 

Attachments

  • Well Said.webp
    Well Said.webp
    8.6 KB · Views: 113
Status
Not open for further replies.

Latest ads

Back
Top