வள்ளுவரைப் போற்றுவோம் ..... 410
ஊடலின் இன்பம்.
சின்னச் சின்னக் காரணங்களைக் காட்டிச் செய்திடும்
சின்னச் சின்ன ஊடல்களின் இன்பத்தை அறிவோமே!
தவறே செய்யாத பொழுதும் தலைவனிடம் ஏதேனும்
தவறு கண்டுபிடித்து, ஊடல் செய்திடுவாள் தலைவி!
இருவருக்கு இடையில் இப்படி வருகின்ற ஊடல்தான்,
இருவரின் காதலை வளர்க்கும் என்கிறார் வள்ளுவர்.
'இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவரளிக்கும் ஆறு'. இது குறள்.
ஊடலில் தோன்றும் சிறு துன்பத்தினால், நல்ல அன்பு
காதலில் வீழ்ந்தோருக்கு வாடினாலும், அந்த ஊடலும்
பெருமையான தன்மையுடையதே என்பதை உணர்த்த,
அருமையான ஒரு குறட்பாவை நமக்கு அளிக்கின்றார்!
'ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்', என்று கணிப்பு!
மெல்லிய காதல் உணர்வுகளையும், நன்கு ஆராய்ந்து,
துல்லியமாக நமக்கு விளக்குகின்றார், திருவள்ளுவர்!