எளிய சடங்கு, பெரிய செலவு!
இறைவன் இறைவி சன்னதி எதிரில் நின்று,
குறையின்றி வாழ, இருவர் சேரும் சடங்கு!
இரு மனங்கள் இணையும் சிறந்த சம்பவம்;
திருமணம் என்னும் இனிய ஒரு வைபவம்!
சில நெருங்கிய உறவும், நட்பும் அங்கு சூழ,
சில மணித்துளிகளில் பூஜை முடிந்துவிட,
மாங்கல்யதாரணம் குத்துவிளக்கின் எதிரே;
மாலை மாற்றல், வேறு ஒரு மண்டபத்திலே!
பெண்ணின் குடும்ப வேண்டுதலால், இப்படிப்
பெண்ணின் குடும்பம் செய்திட வேண்டியது!
இந்தச் சடங்கு மட்டுமே அந்தக் கோவிலில்;
இந்த மணம் தொடரும் வேறு மண்டபத்தில்.
எல்லோரும் அந்தக் கல்யாண மண்டபத்தில்;
எல்லோரும் இருக்கைகளைத் தேடி அமர்ந்து,
பழகிய வட்டத்துடன் உரையாடி மகிழ்ந்திருக்க,
அழகிய பூ அலங்கார மேடையிலே, தம்பதியர்
பெற்றோர் அளித்த புத்தாடைகளைப் பெற்று,
சற்று நேரத்திலே, அழகாய் உடுத்திக்கொண்டு,
தென்னம் பாளைகள் அலங்காரமாக இருக்க,
மின்னும் குத்து விளக்குகளின் முன் அமர்ந்து,
கல்யாண மோதிரங்களை மாற்றிக் கொள்ள,
கல்யாணம் முடிந்தது, மந்திரங்களே இல்லாது!
இரு வேறு சமூக மக்கள் உறவாகி இணைந்திட,
ஒரு மேளம் கூட இல்லாது, மணம் முடிந்தது!
செலவு இல்லை என்றே நினைக்க வேண்டாம்!
செலவு லட்சங்களிலே ஆகியிருக்கும் நிச்சயம்!
சில நிமிடங்களில் ஓசையின்றி முடிந்தது மணம்;
பல லக்ஷங்களில் ஓடிவிட்டது செலவான பணம்!
வண்ணப் பூக்கள் அலங்கரித்த வட்டமான மேடை;
வண்ண விளக்குகள் மின்னின பல வரிசைகளில்.
முப்பத்தி மூன்று அடி நீள கிரேனில் ஒரு காமரா;
முன்னே நின்று மறைக்கும் விடியோக்காரர்கள்.
அவர்கள் மறைக்கும் திருமணத் தம்பதியர்களை,
அவர்களின் கிரேன் காமரா திரையில் காட்டியது!
ஒண்ணேகால் லக்ஷம் பெற்ற பாடகரின் கச்சேரி!
ஒண்ணேகால் மணி நேரம்தான் அந்தக் கச்சேரி!
மூன்று விதப் பாயசங்களுடன் அமர்க்கள விருந்து;
தோன்றியது, அதை உண்டால் தேவையே மருந்து!
ஒன்று மட்டும் புரிந்தது; பணத்திற்கு மதிப்பில்லை!
இன்று என்ன மாறினாலும், செலவு மாறுவதில்லை!
opcorn: