யானை படுத்தாலும்....
யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பர்!
யானை படுத்தால் ஏன் குதிரை மட்டமாகும்
என்று சிறு வயதில் பொருள் புரியாமல் நான்
சென்றது உண்டு; பின்னர் தெரிந்தது பொருள்!
ஒரு கம்பீரமான யானை படுத்துவிட்டாலும்,
ஒரு குதிரையின் உயரம் இருப்பது நிஜமே!
சூடோ சூடு என்று தட்பவெப்பம் உள்ள எம்
சிங்காரச் சென்னையில் பனியும் உண்டு!
வசை பாடித் திரியும் பலர் இங்கிருந்தாலும்
இசை பாட என்று ஒரு குளிர் மாதம் உண்டு!
வாத்தியம் வாசிப்பவர் பாடு பரவாயில்லை;
வாத்தியம் வசிக்கக் குரல் தேவை இல்லை!
பாடும் கலைஞர்கள் குரல் கம்மிவிட்டால்,
பாடும் பல சஞ்சாரங்கள் 'ததிங்கிணதோம்!'
உச்சஸ்தாயி எட்டுவதற்குத் தம் சுருதியை
நிச்சயமாக இறக்கிவிடுவார்; ஆகையால்,
மந்தரஸ்தாயி ஸ்வரங்கள் பாடும் பொழுது
தந்திரம் போலக் காற்றே வந்திடும்; எனவே
எப்போதும் பாடும் தம் பாணியை மாற்றியே
அப்போது பாடும் சூழ்நிலையும் வந்திடும்!
என்னவானால் என்ன? மேதைகளின் இசை
திண்ணமாக மனதைச் சென்று அடையுமே!
யானை படுத்தாலும் குதிரை மட்டம்; இதுவே
யானை போன்ற உயர் இசைக்கும் பொருந்தும்!
:first: