ராகமும் மன நிலையும்!
இசையால் மயக்க முடியும் என அறிவோம்;
இசையால் முகம் மாற்றம் வருமோ? வரும்!
பதினைந்தாம் மேளகர்த்தா ராகம்; அதனை
அதிகாலை இசைக்க, நன்மைகள் பெருகும்!
மாயமான அந்த மாயாமாளவகௌளையே
மாணவர் இசைப் பயற்சிக்கு அரிச்சுவடியும்!
இன்னொரு விசேஷம் என்னவெனில், இது
தன் ஜன்ய ராகங்களுக்கும், தனது சாயலை,
கொஞ்சமும் மாற்றாது அளிக்கும்! அதுவே
நெஞ்சம் உருகும் இசையாக அமைந்திடும்!
புதிய பாடல் ஒன்றை நாதநாமக்ரியாவில்
இனிய குரலிலே அன்புச் சகோதரிகள் பாட,
ரசிகர்கள் அனைவர் முகங்களும் சோகமாகி,
அதிசயிக்க வைத்தன! சிரிப்பே கிடையாது!
திருப்பிப் போட்ட u போல உதடுகள் வளைய,
திரும்பத் திரும்ப அந்த முகங்களைக் காட்ட,
'இப்படி மனித முகங்களை இசை மாற்றுவது
எப்படி சாத்தியம்?' என்று மனமும் வியந்தது!
கட்டிப் போடும் இசை என்பது இதுதான் என்று
திட்டவட்டமாக சொல்ல வைத்த பாடல் அது!