புதிய சாகசங்கள்!
மனிதனுக்கு என்றுமே புதுமையாக ஏதேனும்
இனிதே முயல ஆர்வம் இருப்பது நிஜம்தான்.
இன்று தொலைக்காட்சி ஒளிபரப்பியவற்றில்,
நன்கு மனத்தைக் கவர்ந்தது, டெல்லி நிகழ்ச்சி.
இரு சக்கர வாகனங்களிலே, புதிய சாகசங்கள்,
ஒரு நிமிடமும் கண் சிமிட்டாது கண்டு மகிழ!
வண்டியின் கைப்பிடியைக் கைகளால் தொடாது,
வண்டியில் ஏறிச் செய்தனர், அந்த விந்தைகளை!
முதலாவதாக ஒருவர் பைக்கில் நின்றபடி வர,
இரண்டாவது ஒருவர் பத்மாசனம் போட்டு வர,
அதைத் தொடர்ந்து வந்த பலரும், வித்தைகள்
அதைவிடச் செய்து, பாராட்டுகளைப் பெற்றனர்.
ஏணியை வைத்து ஒருவர் சாய்ந்து அமர, அந்த
ஏணியின் உச்சியில் ஒருவர் புத்தகம் படித்திட,
இருவர் நின்றபடிப் பிடித்திருந்த ஒரு கோலில்,
ஒருவர் கவிழ்ந்து படுத்த நிலையிலே வந்திட,
பதினைந்து, இருபது என்ற எண்ணிக்கையில்
பதவிசாகப் பலர் ஒரே வண்டியிலே பயணிக்க,
நிற்கும் வீரர்களைப் பற்றியவாறு, சில வீரர்கள்
விற்போல அழகாக வளைந்து நின்றபடி வந்திட,
அடுக்கி வைத்தது போல. நாற்பத்தியொருவர்
தடுக்காது ஒரு வரிசை வண்டிகளில் நின்று வர,
வீரர்களில் உறுதியும், நீண்ட காலப் பயிற்சியும்,
நேரில் கண்டது போல, நாங்களும் மகிழ்ந்தோம்!
:dance: