ஏனிந்த மாற்றங்கள்?
விண், மண், நீர், தீ, வளி என அனைத்தும்,
என் கட்டுப்பாடிலே என்கிற இறுமாப்பில்,
நிலமகளின் நல்வளங்களைச் சூறையாடி,
நிலம் முழுதும் வாகனங்களால் நிறைத்து,
ஆகாயப் பறவைகள் செய்து, அவற்றால்
ஆகாய வளி மண்டலத்தினைச் சிதைத்து,
மாசில்லா நீர் நிலைகளைக் கழிவுகளால்
மாசு படுத்தி விளையாடினாய் மனிதனே!
தன்னிகர் இல்லா இயற்கை அன்னையைத்
தன்னலம் கருதிச் சிதைத்து மகிழ்ந்ததால்,
வெகுண்ட அன்னை உன்னை ஒடுக்கிட, ஒரு
மிகுந்த பீதி தரும் அரக்கனைச் செய்தாளோ?
"நிலவில் அடி வைத்துவிட்டோம்; இனிமேல்
விரைவில் செவ்வாய் கிரகத்தில் வாழ்வோம்!",
என்று மார்தட்டி, அகந்தையும் கொண்டாய்!
என்ன நிலைமையில் இன்று உள்ளாய், பார்!
உலகம் பிறந்ததே எனக்காக என்று நினைத்து,
உலகின் வளங்களை அழிப்பதை நிறுத்திவிடு!
இயற்கை அன்னையைப் போற்றிடப் பழகிடு!
இயற்கை அன்னை காத்திடுவாள் அன்போடு!
வாழ்க வளமுடன்!