சிக்கனக் கல்யாணம்!
ஊரடங்குக் காலத்திலே சுப முகூர்த்த நாளினிலே,
ஊர் மெச்ச நடந்திடுமே சிக்கனக் கல்யாணம்.
விருந்துக்கு ஐம்பது பேர் மட்டுமே இருப்பதால்,
விருந்தோம்பல் செய்வதிலே வில்லங்கம் இல்லை.
வலைத்தளத்தில் ஒளி பரப்பைக் காணும் சுற்றம்,
இலை வழியச் சாப்பாட்டைக் கேட்காது அன்று!
ஆசிகள் அலைபேசி வழியாக வந்து நிறையும்;
ஓசியில் சாப்பிட வரும் கூட்டமும் குறையும்.
பொய்யான சிரிப்புடனே மேடையிலே நின்று,
மொய்ப் பணத்தை வாங்கி வைக்கும் வேலையில்லை இன்று!
வீணான ஆடம்பரச் செலவுகளும் குறையும்;
வீணாகக் கடன் வாங்கிப் படும் தொல்லை குறையும்.
சேமித்த செல்வத்தை மணமக்கள் பெற்றால்,
சேர்ந்து வாழும் இல்வாழ்வு சிறந்திடுமே அன்றோ?
பீதியைக் கிளப்பிடும் இச் சிறு கிருமி கூட,
போதித்ததோ நமக்குச் சில நல்வழிகளைக் கூட?
வாழ்க நலமுடன்!