மனசாட்சி மெல்ல மடிகிறதே!
காரிருளில், சில இரவில், மனசாட்சியைப்
பார்க்கிறேன் அதற்கு உள்ளதா உயிர் என;
அதுதான் சிறிது சிறிதாக, மரணத்தை நோக்கி
அனுதினம் செல்கிறதே! என் செய்வேன் நான்?
மனசாட்சி மெல்ல மடிகிறதே!
அஞ்சு நட்சத்திர உணவகத்தில் உண்ண,
அஞ்சாமல் செலவு செய்து, அது கதவருகில்
ஊழியம் செய்யும் காவலனின் ஒரு மாத
ஊதியமென்ற நினைப்பை உதறுகையில்,
மனசாட்சி மெல்ல மடிகிறதே!
காய்கறிக்காரனின் சின்ன மகன், கைகளால்
காய்களைப் புன்னகையுடன் எடை போட,
துள்ளி மகிழ்ந்து, திரிந்து விளையாடி, அவன்
பள்ளி செல்லவில்லையே என எண்ணாதபோது,
மனசாட்சி மெல்ல மடிகிறதே!
உயர் ரக ஆடைகளை அணிந்து நான் செல்ல,
'உயிரினும் மேலான தனது மானம் காத்திட
இயலுமா?', எனக் கிழிந்த ஆடைகளால் ஒருத்தி
முயலும் காட்சியைக் காணாது செல்லுகையில்,
மனசாட்சி மெல்ல மடிகிறதே!
பணக் கற்றைகளை வீசி, பொம்மைகள் வாங்கி,
மன நிறைவுடன் நான் வர, அரைகுறை ஆடையில்,
பசியைப் பறை சாற்றும் கண்களுடன், சிறுவர்
பசி போக்க விற்கும் பொம்மையை வாங்கிடினும்,
மனசாட்சி மெல்ல மடிகிறதே!
உடல் நலம் குன்றிய பணிப்பெண், சிறு மகளை
உடல் தேறும் வரை பணிக்கு அனுப்ப, பள்ளியைப்
புறக்கணித்து வந்த அவள் பாத்திரம் தேய்ப்பது,
இரு நாட்கள்தானே என்று எண்ணிடும் சமயம்,
மனசாட்சி மெல்ல மடிகிறதே!
ஏதோ ஒரு பெண் மானபாங்கம் செய்யப்பட்டதும்,
ஏதோ ஒரு குழந்தை கொல்லப்பட்டதும், கேட்டதும்,
நல்லவன் போல் நான் கொஞ்சம் வருந்தினாலும்,
நல்ல வேளை, நம் பெண் அல்ல என நினைக்கையில்,
மனசாட்சி மெல்ல மடிகிறதே!
சாதி மத பேதங்களால், மக்கள் மாக்களாகி
மோதிடும் நேரம், எதுவும் செய்ய இயலாமல்,
என் தேசம் சீரழிவது ஊழல் அரசியல்வாதிகளால்
எனக் கூறி, என் கடமைகளை நான் மறக்கும் நேரம்,
மனசாட்சி மெல்ல மடிகிறதே!
நகரம் முழுதும் புகை மண்டி, மூச்சு விடமுடியாத
நரகமாய் மாறிய போதும், நான் ஒருவன் செல்லும்
மகிழ்வுந்தால் பெரிய சேதம் வராது என்று எண்ணி,
மகிழ்வுடன் என் பயணத்தைத் தொடரும் சமயம்,
மனசாட்சி மெல்ல மடிகிறதே!
கார் இருளில், ஓர் இரவில், என் மனசாட்சியைப்
பார்க்கிறேன் அதற்கு இன்னும் உள்ளதா உயிர் என,
அதன் உயிர் ஒட்டிக்கொண்டு உள்ளதே! நான்
அதனைச் சிறிது சிறிதாய்க் கொன்று புதைப்பினும்!
கருத்து: திரு. ராம் ஜெத்மலானி
ஆக்கம்: ராஜி ராம்
வாழ்க வளமுடன்; நலமுடன்!