• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

''ஏன் கிருஷ்ணாவதாரம்? - நம்மை ஈர்த்து உய்வி&#2

Status
Not open for further replies.
''ஏன் கிருஷ்ணாவதாரம்? - நம்மை ஈர்த்து உய்வி&#2

''ஏன் கிருஷ்ணாவதாரம்? - நம்மை ஈர்த்து உய்விப்பதற்காக

'' வசுதேவ சுதம் தேவம், கம்ச சாணூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் '
'

ஸ்ரீயப்பதியான எம்பெருமான் தனது உயர்ந்த பரம பதத்திலிருந்து கீழிறங்கி இப்பூவுலகில் பிறந்ததைத்தான் ''அவதாரம்'' என்ற சொல் குறிக்கிறது. இத்தகைய அவதாரங்கள் எண்ணற்றவை என்று பாகவத புராணம் கூறுகிறது. அவற்றுள் மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நாரசிம்ஹ, வாமன, பரசுராம, பலராம, ராம, கிருஷ்ண, கல்கி முதலியவை சிறந்தனவாக கருதப்படுகிறது.

ஏன் இந்த அவதாரங்கள் என்ற கேள்விக்கு கிருஷ்ணனே தனது பகவத் கீதையில் பதிலளித்திருக்கிறார்.

''பரித்ராணாய சாதுநாம் வினாசாயச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே ''

சாதுக்களைக் காப்பாற்றவும், தீங்கு செய்வோரை தண்டிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் இவ்வுலகில் பிறக்கிறேன் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா.

மேலும் இந்த உலகில் அதர்ம க்ருத்யங்களின் பாரத்தை, சுமையை, என்னால் தாங்க இயலவில்லையே என பூமா தேவி பெருமானிடம் முறையிட்டதர்காக, தானே உலகில் தோன்றி பாரதப்போரில் பதினெட்டு அக்ஷவ்ணிகளில் ஈடுபட்டவர்களில் கடைசியில் மிஞ்சினவர்கள் ஒன்பது பேர் மட்டுமே இருந்தார்கள் என்ற நிலை ஏற்பட்டது. காரணம் நிறைய பேர் அதர்மத்துக்கும் அசத்தியத்துக்கும் துணை போனதால் என்பது விளங்கும்.

அவரது மற்றைய அவதாரங்களைப்பார்ப்போமா :

--அசுரன் களவாடிய வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் கொடுக்க --- மீனாக

--அமுதத்தை தேவர்களுக்கு அளிக்க - ஆமையாக

- இரணியாக்ஷனைக் கொன்று நீரில் மூழ்கிய பூதேவியை காக்க - வராஹஸ்வாமியாக

- இரனியகசிபுவை அழித்து பிரஹலாதனை ரட்சிக்க
- நரசிம்மராக

- தேவலோகத்தை இந்திரனுக்கு அளிக்க - வாமனனாக

-மதம் பிடித்த அரசர்களை -அழிக்க பரசுராமனாக

--ராவணாதியர்களை அழிக்க மனதுக்கினிய ராமனாக

எனவே தான் இந்த வரிசையில் பார்த்தால் சிசுபாலன், தந்தவக்ரனை அழிக்க மட்டுமே கிருஷ்ணனாக அவதாரம் எடுத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டவர்களின் நீண்ட பட்டியலில் இவர்கள் எங்கோ ஒரு மூலையில் உள்ளனர். கிருஷ்ணன் அவதாரத்தில் அவனால் அழிக்கப்பட்டு பரகதி அடைந்து உய்ந்தவர்கள் பட்டியலும் வெகு நீளமானது. இன்னார் பெரியவர், இன்னார் சிறியவர், என இந்த பட்டியலில் உள்ளவர்களை பாகுபடுத்துவதும் கடினம். கிருஷ்ணாவதாரத்தின் சிறப்பு இது.

ஞானம், சக்தி, வீரம், பலம், தேஜஸ், ஐஸ்வர்யம் முதலிய ஆறு கல்யாண குணங்களை உடையவன் கிருஷ்ணா பரமாத்மா. . ஸ்வாதந்த்ரியம், ஸ்வாமித்வம், சௌகுமார்யம், ஸவ்ஹார்த்தம், ஸவ்லப்யம். வாத்சல்யம் -- இவை கிருஷ்ணாவதாரத்தில் பிரகாசித்த குணங்கள். ஏன் கிருஷ்ணனிடம் மட்டும் அக்குணங்கள் இருந்தன?

கிருஷ்ணன் -- ஆகர்ஷணம் பண்ணுபவன். மக்களை தம் பால் ஈர்த்து உய்விப்ப தற்காகவே எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம்.

நமது ஆழ்வார்கள் அனைவருமே கிருஷ்ணன் பற்றி நிறைய சிந்தித்து கிருஷ்ணாவதார மகிமையில் ஆழங்கால் பதித்தவர்கள் . நம்மாழ்வார் '' கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்'' என்று போற்றப்பட்டவர். ஆழ்வார்கள் பாசுரம் எளியோரையும் கிருஷ்ணன் பால் ஈர்த்தது எனலாம். கிருஷ்ணாவதார மகிமையை உணர இப்பாசுரங்கள் பெரிதும் உதவின எனலாம். ஒரு சிலவற்றை மட்டுமே இங்கு பார்க்கலாம்.

''சீதக்கடலில் அமுதன்ன தேவகி,
கோதைக்குழலால் அசோதைப் போதந்த
பேதைக்குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே, பவள வாயீர் வந்து காணீரே''

என்ற பெரியாழ்வார் சொல் மூலம் தேவகியும் அசோதையும் செய்த புண்யம் நாம் அறிகுவோம். இதை வைத்தே ''என்ன தவம் செய்தனையோ எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க'' என்று பாடுகிறோம்.

அவர்கள் மட்டுமா.....!

ஓடுவார், விழுவார், உகந்து ஆலிப்பார்,
நாடுவார், நம் பிரான் எங்குற்றான் என்பார்,
பாடுவார்களும், பல் பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆயர்பாடியே ''

என்பதன் மூலம் அந்த ஆயர்பாடி பெற்ற பெரும்பெற்றினை அறியலாம்.

அன்றுமுதல் இன்று வரை கன்னிப்பெண்கள் எத்தனையோ ஆயிரம் பேர் :

''நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடை பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்"

என்ற ஆண்டாள் சொல்லுக்கேற்ப கனவிலும் கிருஷ்ணனை நினைந்து ஏங்குகிறார்கள்.

''ஆதியாகி, ஆயனாய மாயன் என்ன மாயமே'' என்று அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான எம்பெருமான் ஆயனாக பிறந்ததே மாயம் என்கிறார் நம்மாழ்வார்.

இதுவன்றியும் திருமங்கை ஆழ்வாரோ

'' நந்தன் குல மதலையாய் வளர்ந்தானாகிலும்
நான்முகத் தந்தை காண் எந்தன் பெருமான் காண் சாழலோ,
தாழ் குழலாள் வைத்த தயிரினை உண்ட பொன்வயிறு
ஏழ்வுலகம் உண்ட பின்னும் இடம் உடைத்து சாழலோ !!
கண்ணினுட் சிறுத்தாம்பினால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியவன் இன்னவர்க்கும் சாழலோ !!
மன்றில் மரக்கால் கூத்து ஆடினாலும்
என்றும் அரியன் இன்னவர்க்கும் சாழலோ!!


என்று திருச்சாழல் மூலம் திருமங்கை மன்னன் கிருஷ்ணனின் எளிமையையும் மேன்மையையும் பறை சாற்றுகிறார்..

இதற்கெல்லாம் இடையிலே, பகவான் கிருஷ்ணனாகப் பிறந்தது வெண்ணெய் களவாடுவதற்கும் நப்பின்னையை மணப்பதற்கும் தான் என்கிறார் நம்மாழ்வார். இதோ அவரது பாசுரம்: –

''சூட்டு நன்மாலைகள் தூயன வேந்தி,
விண்ணோர்கள் நல் நீர்
ஆட்டி, அம் தூபம் தரா நிற்கவே,
ஆங்கோர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப்போந்து
இமில் ஏற்று வன் கூன்
கோட்டிடை ஆடினை கூத்து
அடல் ஆயர் தம் கொம்பினுக்கே ''--

ஆம், நாம் என்னதான் அவனைப் புகழ்ந்தாலும் அவன் வெண்ணெய் களவாடியது தான் நம் நினைவுக்கு வருகிறது.

''ஆராத தன்மையனாய் ஆங்கொரு நாள் ஆய்ப்பாடி
சீரார் கலை அல்குல் சீரடி செந்துவர் வாய்
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக்கொண்டு
ஏராரிடை நோவ எத்தனையோர் போது மாய்,
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேறொரு கலத்திட்டு
நாராருறியேற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்
ஒராதவன் போல் உறங்கியறிவுற்று
தாரா தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி
ஆறாது வெண்ணை விழுங்கி - அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே
ஒராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும் ---


விடுவாளோ? கண்ணினுட் சிறு தாம்பினை எடுத்தாள். உரலோடு இணைத்துக் கட்டினாள் . அவனும் கட்டுண்டான். ஏங்கினான். எளிமையைக் காட்டினான். இதை நினைத்த நம்மாழ்வார்:

' பத்துடையவர்க் கெளியவன் , பிறர்க்கரிய
வித்தகன், மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள்
மத்தறு கடை வெண்ணெய் களவினில் உரலிடை யாப்புண்டே
எத்தோ! உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே'' --

இதை நினைத்தவுடனேயே நம்மாழ்வார் மயங்கி விழுந்தார்.

கிருஷ்ணன் மனிதர்க்கு மட்டுமல்ல, பசுக்களுக்கும் மோக்ஷமளித்தான் .பசுங்கன்றுகளோடு இணைந்திருந்தான்.

'' பட்டி மேய்த்து ஓர் காரேறு பலதேவர்க்கு ஓர் கீழ் கன்றாய்
இட்டிறிட்டு விளையாடி, இங்கே, போதக் கண்டீரே,
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக்கொண்டு விளையாட பிருந்தாவனத்தே கண்டோமே!

என்பது ஆண்டாள் திரு வாக்கு. பசுங் கன்றுகளை ஆற்றுக்கு இட்டுச் சென்று, தான் முழங்காலிட்டு, கைகளை முதுகில் கட்டிக் கொண்டு, தான் வாயினால் நீர் பருகி பசுக்கன்றுகளுக்கும் நீர் பருக கற்றுக்கொடுத்தான். என்னே அவனது நீர்மை !!

கிருஷ்ணனின் ஞானமும் அறிவும் அவனது அனைத்து அவதாரங்களிலும் ஒளி வீசியிருந்ததை நம்மாழ்வார் '

'அறிவினால் குறைவில்லா, அகில ஞாலத்தவர் அறிய,
நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத் தொரு மூர்த்தி '' -

என்று கிருஷ்ணனின் அனைத்து கல்யாண குணங்களும் ஒளி வீசுவதை எண்ணி அவன் பால் தன்னை இழந்தார்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கிருஷ்ணாவதாரத்தை எதற்கு என்று கேட்டால் எப்படி பதில் சொல்வது, எப்படி எழுதுவது? பொதுவாக விபவாவதாரங்கள் காட்டாற்று வெள்ளம் போலே வந்து செல்வன என்பார்கள். பகவான் பிறந்த போது வாழ்ந்தவர்க்கு மட்டுமே அவனைக்காணும் பாக்கியம் கிட்டியிருக்கும். பயன் கிடைக்கும் ஆனால் கிருஷ்ணாவதாரம் அப்படியன்று. அது துவாபர யுகத்தில் நடந்தது. ஆனால் கலியுகத்தில் பிறந்த ஆண்டாள், தான் மட்டுமல்ல, அனைவரும் சிறு காலையில் கண்ணனைச் சேவிக்கலாம். ஏழேழ் பிறவிக்கும் அவனோடு இணைந்து இருக்கலாம் அவன் நம்மை காப்பாற்றுவான்'' என்கிறாள், தனது திருப்பாவையில். அதாவது, நம்மையெல்லாம் தன் வயப்படுத்திக்கொண்டு, ஈர்த்துக்கொண்டு உய்விப்பதற்காகத்தான் எம்பெருமான் பூவுலகில் பிறந்துள்ளார். இன்று மட்டுமல்லாமல் என்றும் அவன் நம்மை காப்பாற்றுவான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

'' சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மெய்த்துண்ணும் குளத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றை பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்''-

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்''

A Nice and Well explained reason for the above by a Student of Prince School Nanganallur

N. DEEPIKKA , STUDENT OF X1 STD, PRINCE SCHOOL, NANGANALLUR


Source: Sage of Kanchi

Jambunatha Iyer
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top