க்ருஷ்ணாவதாரமும் ந்ருசிம்மாவதாரமும்
க்ருஷ்ணாவதாரமும் ந்ருசிம்மாவதாரமும் பலவிதமான மனதினை உருக்கும் நிகழ்வுகளைக் கொண்டவை. ரெண்டு அவதாரங்களும் மனமார ஸ்மரனைப் பண்ணின மாத்ரம் (just thinking) அளப்பற்கரிய உயர்ந்த புண்யங்களையும் பலன்களையும் அளிக்க வல்லவை. இந்த இரு அவதாரங்களில் உண்டான சில ஸ்வாராஸ்யமான விஷயங்களைக் காண்போம்.
க்ருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீமன் நாராயணன், தன்னைச் சரணடைந்த பாண்டவருடன் அவர்கள் போரில் வெல்லும் வரை இருந்து அவர்களைப் பாதுகாத்தான். ந்ருஸிம்ஹாவதாரத்திலோ தனது பக்தனாகிய ப்ரஹ்லாதனிடமிருந்து தள்ளியே நின்றான் அந்தப் பரமன். அவதார கார்யமாம் ஹிரண்ய வதத்திற்குப் பின்னர், கருணை சாகரமாக பொங்கிய மனம் பொறுக்காது, அந்த பாலகனிடம் "என்னை மன்னித்து விடு ப்ரஹ்லாதா" என்கிறானாம் அவனது பிராணநாதன். அதிர்ந்து போன ப்ரஹ்லாதனிடம், "நீ அல்லலுற்ற போதெல்லாம் நான் வரவில்லை. வந்து உன்னை காக்கவில்லை. அதற்காக தான் இந்த மன்னிப்பு" என்கின்றானாம். ஸ்ரீமன் நாராயணன்பால் அளவிலடங்கா பக்தி கொண்ட அந்தப் பாலகனோ "ஒவ்வொரு முறையும் உன் திருநாமமே என்னை காப்பாற்றிற்று நரசிம்மா. உன் திருநாமமே என்னைக் காப்பாற்றிய பின்னர் நீ வர வேண்டும் என்ற அவசியம் உண்டாகவில்லையே" என்றானாம். இங்கு, பக்தி என்பதற்கு எல்லையென்று ஒன்று இல்லவே இல்லை என்பது ப்ரத்யக்ஷமாக (clearly) தெரிகின்றது.
"எங்கே உன் மாயாவி?" என்று அந்தப் பரமனின் பெயரை தப்பித்தவறி கூட சொல்லிவிடக் கூடாது என்று அசாத்தியமான ஜாக்கிரதையுடன் இருந்த ஹிரண்யன் இல்லாமல் போனான். ஒரு வேளை ஹிரண்யன் "எங்கே உன் ஹரி?" என்று கேட்டிருந்தால் அந்த "ஹரி" என்ற திருநாமம் அவனைக் காப்பாற்றி இருக்கக் கூடும்.
"எங்கே உன் மாயாவி?" என்று கேட்ட ஹிரண்யனின் கண்ணுக்கு 'அந்த மாயாவி' கடைசி வரை எங்குமே தெரியவில்லை. "எங்குமுளன் என் ஹரி" என்ற அந்த பாலகன் கண்ணுக்கோ அவன் ஆரம்பம் முதலே எல்லாவிடத்திலும், தூணிலும் துரும்பிலும், அந்தத் துரும்பினை ஒரு லட்சம் கூறுகளாக வகுத்த போது உண்டாகும் வஸ்துக்குள்ளெல்லாம் தெரிந்தான். "ஆரம்பம் முதலே அந்த பாலகன் கண்ணுக்கு அந்த நாராயணன் தெரிந்தான்" என்ற கூற்றுக்கு, பிரஹலாதன் அவனது தாயின் கர்ப்பத்தில் இருந்த போதிலிருந்தே என்று மற்றொரு அர்த்தமும் கொள்ளலாகும்.
ஒவ்வொரு ஆபத்து நேரும் போதும், பிரஹலாதன் என்ற அந்த உயர்ந்த பக்தனானவன், தனது இரு கரம் கூப்பி, கண்களை மூடி அந்தப் பரமனது திருநாமத்தை ஜபித்தவாறு இருந்தான். காம்யார்த்தமாக "என்னைக் காப்பாற்று" என்று அவன் கேட்கவே இல்லை. அவன் திருநாமமானது தன்னைக் காப்பாற்றும் என்ற அதீதமான நம்பிக்கையினால் தன்னைக் காப்பாற்றுமாறு அவன் கேட்கவில்லையா? அல்லது தானே அந்தப் பரம்பொருளின் சொத்து. அதனால் 'சரணாகதி' என்று அவன் திருவடி நினைந்து நிற்பது ஒன்றே தான் செய்ய வேண்டியது என்று ஐயமற உணர்ந்திருந்ததினால் தன்னைக் காப்பாற்றுமாறு அவன் கேட்கவில்லையா? எதுவாக இருந்தாலும், என்னே இந்த நம்பிக்கையின் உயர்வு?
க்ருஷ்ணாவதாரத்தில் பஞ்ச பாண்டவர்களுக்காக அந்தப் பரமன் அவ்வப்போது மாயங்களைப் புரிந்து அவர்களைக் காத்தான். ந்ருஸிம்ஹாவதாரத்திலோ அவன் தனது பக்தனுக்காக ஒரே ஒரு முறை தான் மாயம் புரிந்தான். சிங்கமுகம், கோர ரூபம், தூணைப் பிளந்து வந்த வேகம், எங்கும் நிறைந்து நின்ற லாவகம், எதிரியை எறும்பினை நசுக்குவது போன்று நசுக்கிய பராக்ரமம், யாரும் எதிர்த்து நிற்கத் துணியாத உக்ரம் என்று எவ்வளவு அட்டகாசம்? எவ்வளவு ஆர்பாட்டம்? அத்தனையும் கண்ணிமைக்கும் நேரத்துக்கும் குறைவான நொடிப்பொழுதில்.
க்ருஷ்ணன் தனது தாயான தேவகியின் திருவயிற்றில் பத்து மாதங்கள் வாசம் செய்தான். பின்னர் அவளை அவதார காரியத்திற்காகப் பிரிந்தான். ந்ருஸிம்ஹனோ தனது தாயாகிய அந்தத் தூணின் திருவயிற்றில் வாசம் செய்தது க்ஷணார்த்தமே. அவன் நிறைந்திருந்த மற்ற இடங்களை விட்டு அவன் வெளிவராது, அந்தத் தூணிலிருந்து மட்டுமே வெளி வந்ததினால், இந்தப் பிரபஞ்சமே அவனது தாயாக இன்னும் அவனை கர்ப்பம் தரித்துள்ளது என்பது சுவாமி தேசிகனது திருவாக்கு. இல்லாத தனது தாயை ந்ருஸிம்ஹன் இன்னமும் பிரியவே இல்லை. எவ்வளவு ரசனை வாய்ந்த அனுபவம் இது.
க்ருஷ்ணாவதாரத்தில் கம்சனை வதம் செய்த போது அந்த அழகிய பரமனுக்கு வயது 14. ந்ருஸிம்ஹாவதாரத்திலோ ஹிரண்யனை வதம் செய்தது அதற்க்கு முந்திய க்ஷணம் பிறந்த கோர ரூபம் கொண்டிருந்த சிங்கமுகத்தான்.
க்ருஷ்ணாவதாரத்தில் அந்தப் பரமன் பண்ணாத குறும்புகளே இல்லை எனலாம். விளையாடாத விளையாட்டே இல்லை எனலாம். ந்ருஸிம்ஹவதாரத்திலோ பிறக்கும்போதே சீற்றம். பிறந்தவுடன் வதம் என்று குடலும், குருதியும், அசுர வீரர்களின் உயிரற்ற உடல்களுமே விளையாட்டு பொம்மைகளாய்.
க்ருஷ்ணாவதாரத்தில் நீல மேக ஷ்யாமளனாக மனதினை மயக்கும் அழகுடன் அவதரித்த கிருஷ்ணன், ந்ருஸிம்ஹாவதாரத்தில் குகை போன்ற வாயும் கோரைப் பல்லும் சிலிர்த்தெழுந்த பிடரி மயிருமாக கோர ரூபம் கொண்டு அவதரித்தான்.
க்ருஷ்ணாவதாரத்தில் ராதை, பாமா, ருக்மணி, லட்சோபலட்சம் ஆய்ச்சியர் என்று கோலாகலமாக இருந்தவன், ந்ருஸிம்ஹனாக அவதரிக்க தன்னுடைய மகிஷியையே விட்டு விட்டு அவசர அவசரமாக ஓடி வந்தான். அவதார கார்யம் முடிஞ்சப்புறம் தான் அவனுக்கு தன்னோட மகிழியோட ஞாபகமே வந்தது.
ந்ருஸிம்ஹாவதாரம் பக்தியின் மகிமையை மேம்படுத்திக் காட்டுவதற்காக உண்டான அவதாரம். ஆனால், அதுக்காக அந்தப் பரமன் எவ்ளோ பரிஷ்ரமப்பட வேண்டியிருந்திருக்கு. அத்தனையும் ஏத்துண்டு சரணாகதியோட உயர்வை நமக்கெல்லாம் புரிபடச் செய்தானே. அவனோட சொத்தான ஆத்மாவை அபஹரணம் பண்ணிண்டு நம்மளோட கர்மாவை கழிக்க இந்த பூமியிலே வந்து பொறந்திருக்க நம்ம மேல எவ்ளோ கருணை. எவ்ளோ காருண்யம். எவ்ளோ வாத்சல்யம். இந்த பிறப்புலேர்ந்து மீண்டு நாம் அடையவேண்டியது அவனை. அதற்கு உபாயமாக இருப்பதும் அவனே என்பதை அழகாக ரசனையுடன் உணர்த்துவது ந்ருஸிம்ஹாவதாரம்.
ந்ருஸிம்ஹா... ந்ருஸிம்ஹா.. உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி. காப்பாத்து