• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சக்கரத்தாழ்வார்

Status
Not open for further replies.
சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார்


UP_123223000000.jpg


மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள்: சுதர்சனம், பாஞ்சஜன்யம், கௌமோதகீ, நந்தகம், சார்ங்கம். இந்த பஞ்ச ஆயுதங்களும் மகாவிஷ்ணுவின் பணிகளைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும். இந்த ஆயுதங்களுக்கு ஐந்து தத்துவங்கள் உள்ளன அவை: சக்கரம் - மனஸ் தத்துவம்; கதை - புத்தி தத்துவம்; சங்கு - அகங்காரத் தத்தவம்; வாள் - வித்யா தத்துவம்; வில் - இந்திரிய தத்துவம். அதனால் அவரை பஞ்சாயுதபரன் என்றும் போற்றுவர்.

இதில் முதன்மையானது வலது கரத்தில் தாங்கியுள்ள சக்கரம் என்று சொல்லப்படும் சுதர்சனப் பெருமாள்தான். பெருமாளின் அம்சமாகவே இவர் விளங்குகிறார். எனவே, சுதர்சனரை திருமாலாகவே வணங்குகின்றோம். இவரே தலைமை ஸ்தானமும் வகிப்பதால், ஹேதிராஜன் என்ற பெயரும் இவருக்குண்டு.

திருமாலை எப்பொழுதும் தன்மீது தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வார் என்றும்; திருமாலின் வாகனமாக விளங்கும் கருடனை கருடாழ்வார் என்றும்; நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளிய மரத்துக்கு திருப்புளியாழ்வான் என்றும்; பஞ்ச ஆயுதங்களின் முதன்மையான சுதர்சனத்திற்கு சக்கரத்தாழ்வார் என்றும் ஆழ்வார் பட்டம் கொடுக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாழியாழ்வான், பருதி, திகிரி, வளை, ஆழி, சக்கரத்தண்ணல், நேமி தரங்கம் என்ற பலவகை திருநாமங்களும் இவருக்கு உண்டு. உக்கிரத்தன்மை கொண்டவராயினும் காருண்யம் மிக்கவர் இவர். பெருமாளின் ஐந்து நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை ஆகியவற்றில் சக்கரத்தாழ்வார் உடனிருக்கிறார்.

காக்கும் தொழில் புரிபவர் திருமால். அவர் தீமைகளை அழித்து நன்மைகளை வழங்க சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

சக்கராயுதம் - அதாவது சுதர்சனம் என்பது மகா சக்கரம். நடுவில் ஓம் என்ற தாரகத்தினையும்; ஷ்ரௌம் என்ற நரசிம்ம ஏகாட்சரத்தினையும், ஆறு இதழ்களில் சகஸ்ரா ஹும்பட் என்ற சுதர்சன ஆறு அட்சரங்களையும்; எட்டு இதழ்களில் ஓம் நமோ நாராயணாய என்ற அஷ்டாட்சரங்களையும்; பன்னிரண்டு இதழ்களில் பிந்துக்களுடன் கூடிய அம் தொடங்கி அ வரையிலான மாத்ருகா அட்சரங்களையும் கொண்டு, நரசிம்மானுஷ்டுப் மந்திர ராஜத்தின் அட்சரங்களான உக்ரம், வீரம், மகாவிஷ்ணும், ஜ்வலந்தம், ஸர்வதோமுகம், ந்ருஸிம்மம், பீஷணம், பத்ரம், ம்ருத்யும், ருத்யும் நமாம் யஹம் என்ற சுலோகம் முப்பத்திரண்டு இதழ்களிலும் எழுதப்பட்டுள்ளது.

மனிதனுக்கு ஏற்படும் நோய்கள், மன அமைதியின்மை, எதிலும் தோல்வி, மரண பயம், பில்லி, சூன்யம் போன்றவற்றால் ஏற்படும் பயம், வியாபாரத்தில் கஷ்டம் ஏற்படுதல், கண் திருஷ்டியால் முன்னேற்றம் தடைப்படுதல் போன்றவற்றைப் போக்கும் வல்லமை கொண்டவர் சக்கரத்தாழ்வார்தான்.

சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். அவர் சன்னதியில் நெய்விளக்கு ஏற்றி ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம என்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம். திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் சுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.

முற்காலத்தில் அம்பரீஷன் என்ற மன்னன் இருந்தான். பெருமாளின்மீது மிகவும் பற்று கொண்ட அவன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒருநாள் மன்னனின் கனவில் தோன்றிய திருமால் தனது சுதர்சனச் சக்கரத்தை வழிபடுமாறும்; அது எந்த நேரத்திலும் நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் கூறி மறைந்தார். அன்று முதல் மன்னன் சுதர்சனச் சக்கரத்தை வழிபட ஆரம்பித்தான்.

ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசி அன்று காலை உணவு உட்கொண்டு விரதத்தை முடிப்பான். மன்னனுடன் மக்களும் இவ்விரதத்தை செவ்வனே மேற்கொண்டனர். இந்த மன்னனை சோதிக்க விரும்பிய துர்வாச முனிவர் ஒருநாள் அரண்மனைக்கு வந்து, மன்னா, இன்று துவாதசி, நான் நீராடிவிட்டு உன்னுடன் உணவு உட்கொள்ள வருகிறேன் என்று கூறிச் சென்றார். முனிவர் சென்று நெடுநேரமாகியும் வரவில்லை. துவாதசி முடிய இன்னும் சிறிது நேரமே உள்ளதால் என்ன செய்வது என்ற நிலையில் சோர்வடைந்தான். இதைப் பார்த்த அரண்மனை புரோகிதர், சிறிது பெருமாள் தீர்த்தத்தைப் பருகி விரதத்தை நிறைவு செய்யுங்கள் என்று உபாயம் கூறினார். அதை ஏற்ற அம்பரீஷன் சிறிது நீரைப் பருகி விரதத்தை நிறைவு செய்தான். இதை அறிந்த துர்வாச முனிவர் கடும் சினம் அடைந்து, ஒரு பெரிய பூதத்தை தோற்றுவித்து மன்னரை விழுங்குமாறு உத்தரவிட்டார். உடனே பூதம் அம்பரீஷனை நோக்கிச் சென்றது. அம்பரீஷன் தினமும் வணங்கி வரும் சுதர்சனர் இதை அறிந்து பூதத்தை நோக்கி சீறிப் பாய்ந்தார். பூதம் ஓட ஆரம்பித்தது. விடாமல் சென்று பூதத்தைக் கொன்றுவிட்டு, அதை அனுப்பி வைத்த துர்வாச முனிவரையும் சுதர்சனர் வதம் செய்யச் சென்றார். பெருமாளின் ஸ்ரீசக்கரம் தன்னை வதம் செய்ய வருவதைக் கண்ட துர்வாச முனிவர் ஓடிச்சென்று பெருமாளின் திருவடியைப் பற்றிக் கொண்டார். உடனே பெருமாள், நீ உடனே சென்று அம்பரீஷ மன்னிடம் மன்னிப்பு கேள் என்று கூறினார். துர்வாசர் உடனே மன்னனிடம் சென்று மன்னிப்பு கேட்டார். அம்பரீஷன் கண்களை மூடி சுதர்சனர் பற்றி பதினொரு சுலோகங்களைப் பாடினார். அதைக் கேட்ட சுதர்சனர் அமைதியானார். இவ்வாறு தனது பக்தர்களைக் காக்க நொடிப்பொழுதும் தாமதிக்காமல் வருபவர் சுதர்சனர்.

நவகிரகங்களினால் தோன்றும் பிரச்சினைகளை உடனே போக்கும் உன்னத பார்வை உடையவர் சுதர்சனர். நவகிரகங்களில் முதன்மையானவர் சூரியன். ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால் அந்த ஜாதகர் உயர் நிலைக்கு வருவார் என்பது நிச்சயம். அத்தகைய சூரியனையே மறைத்து பகலை இருளாக்கியவர் சுதர்சனர்.

ஒருமுறை துர்வாச முனிவர் திருமாலை நேரில் பார்க்க வேண்டும் என்று தவம் இருந்தார். இதை அறிந்த நாரதர், என்ன துர்வாசரே ! எதற்காக திருமாலைப் பார்க்க இவ்வளவு கடுந்தவம் செய்கிறீர்கள்? என்று வினவினார். உலகத்திற்குப் பேரழிவு வரும் என்று என் மனம் சொல்கிறது. அதைத் தடுக்க வேண்டும். அதை திருமாலால் மட்டுமே செய்ய இயலும். அதனால்தான் அவரைக் காண தவம் செய்கிறேன் என்றார். உடனே நாரதர், முனிவரே, திருப்பாற்கடலில் திருமால் ஓய்வில் உள்ளபோது இது போன்ற பணிகளை சுதர்சனரே செய்துவிடுவார் எனக் கூறி, சுதர்சனரை நினைத்து வேண்டினார். உடனே நாரதர்முன் தோன்றிய சுதர்சனர், என்ன நாரதரே ! ஏன் என்னை நினைத்தீர்கள்? என்று வினவினார். நடந்ததை நாரதர் விளக்கமாகச் சொன்னார். துர்வாசரைப் பார்த்த சுதர்சனர், என்னை விட ஆற்றல் மிக்க இவரே அதைச் செய்யட்டுமே என்று துர்வாசரை இகழ்ந்து பேசினார். உடனே கோபம் கொண்ட துர்வாசர், முன்பு என்னைக் கொல்வதற்காக வந்தார். இப்பொழுது என்னை இகழ்ந்து பேசிவிட்டார். அதனால் பொன்னிறமான சுதர்சனர் கறுப்பாக மாறட்டும் என்று சாபமிட்டார். கோபம் கொண்ட சுதர்சனர் முனிவரைத் தாக்கச் சென்றார். உடனே திருமால் சுதர்சனரைத் தடுத்து நிறுத்தி, துர்வாசர் கொடுத்த சாபம் ஒருநாள் பலிக்கும் என்று கூறினார்.

அதுபோலவே பின்னாளில் நடந்தது. பாரதப்போரில் அர்ஜுனன் மகன் அபிமன்யுவை துரியோதனின் கூட்டத்தார் சூழ்ச்சி செய்து பத்ம வியூகத்தில் சிக்க வைக்க அவனை ஜெயத்ரதன் கொன்றான். இந்தச் செய்தியைக் கேட்ட அர்ஜுனன் கதறி அழுது, நாளை சூரியன் மறைவதற்குள்ளாக ஜெயத்ரதனைக் கொன்றுவிடுவேன். இல்லையென்றால் நானே தீயில் இறங்கி உயிரை விடுவேன் என்று கண்ணன் முன் சபதம் செய்தான்.

மறுநாள் மிகவும் உக்கிரமாக போர் நடந்துகொண்டிருந்தது. அர்ஜுனன் ஜெயத்ரதனைத் தேடினான். அவன் எங்கும் காணாமல் போக, மாலை நேரம் நெருங்குவதை உணர்ந்த அர்ஜுனன், தீயில் இறங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னான். அப்போது அர்ஜுனனின் தேரில் சாரதியாக இருந்த கண்ணன் தனது சக்கராயுதத்தை எடுத்து சூரியனை நோக்கி எறிந்தார். சுதர்சனச் சக்கரம் சூரியனை மறைத்து பிரபஞ்சத்தை இருளடையச் செய்தது. இருள் சூழ்ந்ததைப் பார்த்த ஜெயத்ரதன் வெளியில் வந்து, அர்ஜுனன் இறந்துவிடுவான் என்று மகிழ்ச்சியில் இருந்தான். கிருஷ்ணர் இதைப் பார்த்து தனது சக்ராயுதத்தை திரும்புமாறு கூறினார். சூரியன் தன் கதிர்களை பிரபஞ்சத்தின்மீது பரவவிட்டான். உடனே கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து, இதோ ஜெயத்ரதன் ! அவன்மீது அம்பை எறி என்று கூறினார். அர்ஜுனன் அம்பை எய்தவுடன் தலை தனியாகி அவன் தந்தை மடியில் விழுந்து, ஏற்கெனவே உள்ள சாபத்தின்படி இருவரும் தலை வெடித்து இறந்தார்கள். பாரதப் போரில் சுதர்சனத்தின் சக்தியை உலகுக்குப் புரிய வைத்தார் பெருமாள்.

ஸுதர்ஸனரின் வடிவத்தையே தனிக் கடவுளாகப் போற்றும் தன்மை வைணவத்தில் உண்டு. இதைப் போன்றே சைவாகமத்தில் வேல் வழிபாடு உள்ளதையும் காணலாம். ஸுதர்ஸனரின் பல்வேறு வடிவங்கள் பற்றி சில்பரத்னம் என்ற நூல் வர்ணிக்கிறது. திருமாலே இவரைத் தாங்கி நிற்பதால், திருமாலை சக்ரரூபஸ்ய விஷ்ணு என்று போற்றுகிறது. ஸுதர்ஸன வடிவங்கள் பல அமைந்துள்ளன.

4, 8, 16 என்ற கரங்களுடன் ஸுதர்ஸனரை பல்வேறு வடிவங்களில் காணலாம். ஸுதர்ஸனர் சாதாரணமாக எட்டுக் கரங்களுடன் வீறுகொண்டு எழும் தோற்றத்துடன், ஜ்வாலைகளின் மத்தியில் அறுகோண சக்கரத்தில் காட்சியளிப்பார். கற்சிலை அல்லது பஞ்சலோக விக்கிரக வடிவில் இவர் அமைந்திருப்பார்.

சுதர்சனர் தன் கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சத்துகாக்கினி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என பதினாறு ஆயுதங்கள் தாங்கியுள்ளார். சுதர்சனரின் பின்புறம் நான்கு கரங்களிலும் சக்கரம் தாங்கி யோக நரசிம்மர் காட்சியளிப்பார். இவரை சுதர்சன நரசிம்மர் என்பர். திருக்கரங்களின் எண்ணிக்கையை முன்னிட்டு தாங்கியுள்ள ஆயுதங்களின் எண்ணிக்கை அமைந்திருக்கும்.

தன் எதிரிகளை அழித்தொழிக்கவேண்டிய வேகத்தை முன்னிட்டு, இவரின் கரங்கள் நான்கு எட்டாகி எட்டு பதினாறு ஆக அமைந்துவிடுகிறது. திருவாழி ஆழ்வான் என்ற பெருமை கொண்ட இவரின் பெருமையை எழுதி மாளாது. ஞானம் மட்டுமின்றி நமக்கு ஆரோக்கியம், செல்வம், எதிரிகளிடமிருந்து விடுதலை, பில்லி, சூன்யங்களால் ஏற்படும் தொல்லைகளையும் நிவாரணம் செய்து தீராத நோய்களையும் தீர்த்துவைப்பவர் இவர். போர்முனையில் வெற்றியைத் தேடித் தருபவர்.

ஸுதர்ஸனர், புராணங்களில் பல நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பர். வராஹ அவதாரத்தில் கோரைப் பற்களாகவும், நரசிம்ம அவதாரத்தில் நகங்களிலும் அமைந்திருந்தார். வாமன அவதாரத்தில் பவித்ர தர்ப்பத்தில் பிரவேசித்து, அசுர குருவான சுக்ராச்சாரியாரின் கண்கள் இழக்கக் காரணமானார். ராமாவதாரத்தில், ராமரின் வில்லில் ஆவிர்பவித்திருந்தார். கிருஷ்ணாவதாரதத்தில் சிசுபாலனை, கிருஷ்ண பகவான் இவரைக் கொண்டே அழித்தார். தவிரவும், அம்பரிஷ மகாராஜாவின் ஏகாதசி விரதத்துக்குப் பங்கம் விளைவிக்க துர்வாச மகரிஷி, அம்பரிஷ ராஜா மீது பூதத்தை ஏவியபோது, அவரை இந்த சக்கராயுதமே காப்பாற்றியது.

பௌண்டரிக வாசுதேவன், சீமாலி என்ற எதிரிகளை , ஸுதர்ஸனத்தைக் கொண்டே கிருஷ்ண பகவான் அழித்தார். கஜேந்திர மோட்ச வைபவத்திலும், திருமால் இவரைக் கொண்டே யானையைக் கவ்வியிருந்த முதலையின் தலையை அறுத்து யானையின் துயர் நீக்கினார்.

இப்படிப்பட்ட பல மகிமைகளைக் கொண்ட சக்கரத்தாழ்வாருக்கு, காஞ்சி வரதர் கோயில், ஸ்ரீரங்கம், திருமாலிருஞ்சோலை, திருமோகூர் போன்ற தலங்களில் விசேஷ சன்னதிகள் அமைந்துள்ளன. திருக்குடந்தை என்ற கும்பகோணத்தில், சக்கரத்தாழ்வாருக்கு தனிக்கோயிலே அமைந்துள்ளது. காஞ்சியில் மிகப் பெரிய அளவில் காட்சி தருகிறார்.

திருமோகூர் சக்கரத்தாழ்வார் திருவுருவத்தில் ஸுதர்ஸன பீஜாஷர மந்திரங்கள் பொறிக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. ஸுதர்ஸனரைப் போல எட்டுக் கரங்கள் கொண்ட திருமாலை காஞ்சியில் அட்டபுயகரத்தில் தரிசிக்கலாம். வேறு எந்தத் திருக்கோயிலிலும் கிடைக்காத அருள்காட்சியை, அட்டபுயகரப் பெருமான் எட்டுக் கரங்களோடு காட்சி தருவதால், இவருக்கு சக்ரதரர் என்ற திருநாமமும் உண்டு. அவசர உதவிக்கு அருளும் பெருமாள் என்றே இவரை ஸ்வாமி தேசிகன் தனது அஷ்டபுஜாஷ்டகத்தில் போற்றியுள்ளார்.

தற்போது பல திருக்கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கும் தனி சன்னதிகள் அமைக்கப்படுகிறது. அங்கே அடிக்கடி ஸுதர்ஸன ஹோமம் போன்ற விசேஷ வழிபாடுகள் நடைபெறுவதிலிருந்தே இவரின் மகிமையைப் புரிந்துகொள்ளலாம்.

ஸுதர்ஸன பகவானின் பெருமையை நாடறியச் செய்ததில் முதலானவர் என்ற பெருமை ஸ்வாமி தேசிகனையே சாரும். இவர் இயற்றியுள்ள ஸுதர்ஸனாஷ்டகம் போன்ற ஸ்லோகங்கள் பலராலும் ஜபிக்கப்பட்டு வருகிறது. அதைப் போன்றே ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூரநாராயண ஜீயரின் ஸுதர்ஸன சதக பாராயணமும் மிகவும் சக்தி வாய்ந்தது. இவற்றைப் பாராயணம் செய்தும், சுதர்சனர் சன்னதியில் நெய் விளக்கேற்றியும், பலமுறை வலம் வந்தும் சுதர்சனரின் அருளைப் பெறலாம். ஸுதர்ஸன உபாஸனை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரை எந்திர ரூபத்தில் வழிபடும் முறையும் உள்ளது. ஸுதர்ஸனரின் பின்புறம் யோக நரசிம்ம மூர்த்தியைக் காணலாம். இவரை ஸுதர்ஸன நரசிம்மம் என்பர். ஸுதர்ஸன பகவானின் அம்சமாக அவதரித்தவரே திருமழிசையாழ்வார். பிரம்மோத்ஸவம் மற்றும் பெருமாள் கடலுக்குச் சென்று தீர்த்தவாரி மேற்கொள்ளும் சமயங்களிலும் ஸுதர்சனருக்கு முக்கியப் பங்கு உண்டு.


http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=1242
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top