• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தியாகராஜர் ஆராதனை தினம்

18ம் நுாற்றாண்டில் வாழ்ந்த தியாகராஜ சுவாமிகள் கர்நாடக இசையுலகில் குறிப்பிடத்தக்கவர். 1759 முதல் 1847 வரை வாழ்ந்த இவரது காலத்தை 'தியாகராஜ சகாப்தம்' என்று சொல்லலாம். இவரது நினைவிடம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது.
திருவாரூர் ராமபிரம்மம், சாந்தாதேவியாரின் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் தியாகராஜர். இவருக்கு ஜப்யேசன், ராமநாதன் என்னும் மூத்த சகோதரர்கள் இருந்தனர். தியாகராஜரின் பெற்றோர் திருவையாறுக்கு இடம் பெயர்ந்தனர். எட்டு வயதில் தியாகராஜருக்கு ராமதாரக மந்திரம் உபதேசிக்கப்பட்டது. ராமகிருஷ்ணானந்தர் என்பவரிடம் ராம சடாட்க்ஷரி மந்திரத்தை உபதேசம் பெற்று லட்சக்கணக்கில் ஜபம் செய்தார்.
தந்தையின் சங்கீத ஞானம் தியாகராஜரிடம் ஒட்டிக் கொண்டது. தாய் சாந்தாதேவியும் மகனுக்கு கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தார்.
திருவையாறில் உள்ள சமஸ்கிருத கல்லுாரியில் தியாகராஜர், நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். ராம சைதன்யர் (ராமனில் ஆழ்ந்து போகிறவர்) என்று சொல்லும் அளவுக்கு வால்மீகி ராமாயணத்தில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் அவை வித்வான் ஸொண்டி வெங்கட ரமணய்யாவிடமும் சங்கீதம் கற்றார். சபையில் பாடிய தியாகராஜர் மன்னரின் பாராட்டைப் பெற்றார். 38 வயதிற்குள் 96 கோடி ராமநாமம் ஜபித்ததன் பயனாக ராமலட்சுமணரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்.
பார்வதி அம்மையாரை தியாகராஜர் மணந்தார். ஐந்தாண்டுகளில் மனைவி இறந்ததால், அவரது தங்கை கமலாம்பாளை மறுமணம் புரிந்தார். சீதாலட்சுமி என்ற மகள் பிறந்தார்.
தந்தை ராமபிரம்மத்தின் மறைவுக்குப் பின், சகோதரர்கள் புறக்கணிக்கவே, வீட்டில் இருந்த ராமர் சிலையுடன் புறப்பட்டார். உஞ்சவிருத்தியில் (பிச்சை) கிடைத்த வருமானத்தில் காலம் தள்ளினார். பணம் ஏதும் பெறாமலேயே சீடர்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தார்.
ஒரு சமயம் சீடன் ஒருவன் செய்த தவறுக்காக கோபம் கொண்டார். மனைவி கமலாம்பாள் கோபத்தால் வரும் தீமைகளை விளக்க, 'சாந்தமுலேக சவுக்கியமுலேது' (சாந்தம் இல்லாமல் சவுக்கியம் இல்லை) என்ற பாடல் பாடினார். வேதாந்தியானாலும், கல்விமான் ஆனாலும் கோபம் கூடாது என்னும் பொருள் இப்பாடலில் பொதிந்துள்ளது.
தியாகராஜரின் மீது கொண்ட வெறுப்பால் சகோதரர் ஜப்யேசன், தம்பி எழுதிய பாட்டு புத்தகங்களுக்கு தீயிட்டார். ராமர் சிலையைத் திருடி காவிரியாற்றில் வீசினார். வருத்தப்பட்ட தியாகராஜர் 'அநியாய முஸேயகுரா ரானிது ராது' என்ற பாடலை பாடினார்.
கனவில் தோன்றிய ராமர் காவிரியில் சிலை கிடக்கும் இடத்தை தெரிவிக்க, தியாகராஜர் 'தொரிகிதிவோ' (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) என்ற பாடல் பாடினார்.
தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர், தன்னைப் புகழ்ந்து பாட தியாகராஜரை அழைத்த போது, ராமனைப் பாடிய நாக்கு உங்களைப் பாடாது என மறுத்தார். 'நிதிசால சுகமா? ராமுனி சந்நிதி ஸேவசுகமா?' (பணம் சுகமா...ராமசேவை சுகமா) என்னும் பாடல் அப்போது பிறந்தது. திருப்பதி, காஞ்சிபுரம், மதுரை போன்ற தலங்களை தரிசித்து பாடல் பாடினார். இறந்து போன ஒருவரை பாடல் பாடி உயிர்பிழைக்கச் செய்து, அவரது மனைவிக்கு தாலிபாக்கியம் கொடுத்தார். 1847 ல் பகுளபஞ்சமியான தை மாத தேய்பிறை பஞ்சமியன்று பஜனை கேட்டபடியே ராமருடன் கலந்தார்.
அவர் மறைந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்னர் இவரது பாடல்கள் பிரபலமாயின. பெங்களூர் நாகம்மாள் என்பவரின் முயற்சியால் தியாகராஜர் சமாதிக்கோயில் திருவையாறில் கட்டப்பட்டது. இங்கு பகுளபஞ்சமியன்று தியாகராஜர் ஆராதனை விழா சிறப்பாக நடக்கிறது.

எப்படி செல்வது: தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 13 கி.மீ.,
விசேஷ நாட்கள்: பகுள பஞ்சமி, மகாசிவராத்திரி,
நேரம்: காலை 6:00 - இரவு 10:00 மணி
தொடர்புக்கு: 94436 62578
அருகிலுள்ள தலம்: திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயில்
 

Latest ads

Back
Top