• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருமங்கையாழ்வார்

ஆழ்வார்களிலேயே அதிக அளவில் திவ்யதேசங்களுக்குச் சென்று தரிசித்தவர் திருமங்கையாழ்வார் மட்டுமே. அதிக அளவில் பாசுரங்கள் பாடியவரும் இவரே. இவர் மொத்தம் 82 திவ்யதேசங்களுக்குச் சென்று மங்களாசாசனம் சென்றுள்ளார். இவர் பாடிய மொத்தப் பாசுரங்கள் 1253.

இவர் திருநறையூர் திருத்தலத்தில் 111 பாசுரங்கள் பாடியுள்ளார். திருக்கண்ணபுரம் திவ்யதேசத்தில் 100 பாசுரங்கள் பாடியுள்ளார். இந்த இரண்டு திருத்தலங்களும் திருமங்கையாழ்வாரால் அதிகம் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம். இவர் 82 திவ்யதேசங்களைத் தரிசித்திருந்தாலும், தான் பிறந்த திருக்குறையலூரில் மட்டும் பாசுரங்கள் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏராளமான திவ்யதேசங்களுக்கு மனைவி குமுதவல்லியோடு சேர்ந்தே யாத்திரை மேற்கொண்டார். திருவரங்கம் திருக்கோவிலில் திருமதில் எழுப்பியுள்ளார்.

திருக்கோவலூர் திருத்தலத்தில் கோபுரம் எழுப்பியுள்ளார். இவ்வாறு பல கோவில்களில் திருத்தொண்டுகளையும், திருப்பணிகளையும் தம்பதி சமேதராக தரிசனம் பெற்றிருக்கிறார்.

பிரபந்தம் :-

நம்மாழ்வார் அருளிய நான்கு பிரபந்தங்களுக்கும் ஆறு அங்கமாக ஆறு திவ்யபிரபந்தங்களைப் பாடி அருளியுள்ளார்.

1. பெரிய திருமொழி - 1084 இது மட்டும் அதிக பாசுரங்களைக் கொண்டது.
2. திருக்குறுந்தாண்டகம்
3. திருநெடுந்தாண்டகம்
4. பெரிய திருமடல்
5. சிறிய திருமடல்
6. திருவெழு கூற்றிருக்கை

பெரிய திருமொழி :-

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி - 1084 பாசுரங்களைக் கொண்டது. இதனை "அறிவுதரும் பெரிய திருமொழி" என்று போற்றுகிறார் வேதாந்த தேசிகர்.

வழிபாடு :-

திருமங்கையாழ்வாருக்கு கோவிலில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார பெருமாள்களிடம் அதிக அளவு ஈடுபாடு உண்டு. இவரை பதியே "பரவித்தொழும் தொண்டர்" என்றும் அழைப்பதுண்டு.

இவரைப் பெரியோர்கள் 'ஆத்மாவை வெய்யிலில் வைத்து, உடலை நிழலில் வைத்து வளர்த்தவர்' என்பார்கள். ஏனெனில், அந்த அளவிற்கு எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் மேல் பக்தி கொண்டு வழிபாடு செய்துள்ளார் திருமங்கையாழ்வார்.

இவரது அர்ச்சாவதார பாவத்தில் ஏற்பட்ட ஊற்றத்தை வைத்தே பெரியோர்கள் இவரை இவ்வாறு அழைத்தனர் அன்றி மாற்று கருத்துகள் இல்லை.

திருமங்கையாழ்வார் தன்னை நாயகியாகப் பாவித்து இறைவன் மேல் பாசுரங்கள் பாடியுள்ளார். நாயகியாகப் பாவித்துப் பாடிய தலங்களுள் மிகச்சிறப்பு பெற்றவவை நாகப்பட்டிணம் சௌந்தர்யராஜப் பெருமாள். நாயகியான திருமங்கையாழ்வாரின் திருநாமம் "பரகால நாயகி".

இத்தலத்தில் திருமங்கையாழ்வார் தன்னை நாயகியாகப் பாவித்து நாகை அழகியாரே! என்று நாகை சௌந்தர்யராஜப் பெருமாளின் திருவழகை வியந்துப் பாடியுள்ளார். திருநறையூர் நாச்சியார் கோவில் நம்பி பெருமாளையும் நாயகி பாவத்தில் வியந்து பாடியுள்ளார்.

வேல் பெற்ற ஊர் :-

மற்ற ஆழ்வார்களில் இருந்து இரண்டு விசயங்களில் தனித்து இருப்பவர் "திருமங்கையாழ்வார்". ஒன்று குமுதவல்லியோடு தம்பதி சமேதராக இருப்பது. மற்றொன்று அவர் கையிலுள்ள "வேல்".

திருமங்கையாழ்வார் வைத்திருக்கும் வேல் யார் பரிசாகக் கொடுத்தது என்று தெரியுமா?.

சைவ சமயத்திலுள்ள நான்கு சமயக் குரவர்களில் ஒருவர் "திருஞானசம்பந்தர்". அவர் சிறுவயதிலேயே ஞானப் பால் உண்டவர். அத்தகைய மாபெரும் மனிதர் தான் திருமங்கையாழ்வாருக்குத் தன் கையிலுள்ள வேல் ஒன்றினை பரிசாகக் கொடுத்தார். ஒரே காலத்தில் வாழ்ந்த இவ்விரு பெரியோர்களும் சந்தித்த நிகழ்வு சுவாரஸ்யம் மிகுந்தது.

திருஞானசம்பந்தரும் - திருமங்கையாழ்வாரும :-

ஒருமுறை திருமங்கையாழ்வார் சோழநாட்டுத் தலமான சிதம்பரம் சென்று மங்களாசாசனம் செய்து, சீர்காழி எல்லையில் நுழையும்போது, அவருடைய தொண்டர்கள் "நாலுகவிப் பெருமாள் வந்தார்" என்று விருதுகூறிச் செல்ல, சைவம் தழைத்தோங்கிய சீர்காழியில் திருஞானசம்பந்தரின் சீடர்கள் "விருது கூறலாகாது" என்று கூறி, திருமங்கையாழ்வாரை திருஞானசம்பந்தரிடம் அழைத்துச் சென்றனர்.

திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரிடம் "நாலுகவிப் பெருமாள் என்று கூறப்படுவது உண்மையெனில், ஒரு குறள் பாடும்'' என்றாராம்.

நாலுகவி என்பது "ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி" என்பனவாகும் திருமங்கையாழ்வாரும் "ஒரு குறளாய் இருநிலம் மூவடி வேண்டி'' எனத் தொடங்கி பத்துப் பாசுரங்களில் 108 வைணவத் தலங்களுள் ஒன்றான சீர்காழியில் வெண்ணெய் உண்ட தடாளப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்குப் பாசுரமிட்டார்.

இதனால் மகிழ்ந்த திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரை "பரகாலன்" என்று அழைத்து, வேல் ஒன்றை பரிசாக அளித்தார்.

திருமங்கையாழ்வார் கையில் உள்ள வேல் பற்றி மணவாளமாமுனிகளின் "அணைத்த வேலும்" என்ற பாசுரம் மூலம் அறியலாம்.

சமகாலத்தவர்களான இவ்விருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோது, திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரை கீழ்வருமாறு புகழ்ந்து பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் :-

"கடியுண்ட நெடுவாளை கராவிற்றப்பிக்
கயத்துக் குளடங்கா மல்விசும்பிற்பாய
அடியுண்ட வுயர் தெங்கின் பழத்தாற்பூகம்
அலையுண்டு குலைசித றுமாலிநாடா

படியுண்ட பெருமானைப் பறித்துப் பாடிப்
பதம்பெற்ற பெருமானே தமியேன் பெற்ற
கொடியொன்றும் நின்பவனிக் கெதிரே சென்று
கும்பிட்டா ளுயிரொன் றுங்கொடு வந்தாளே''.

விளக்கம் :-

தன்னைக் காத்துக்கொள்ளக் கருதிய பெரிய வாளை மீனானது, முதலை வாயினின்றும் பிழைத்தோடி, குளத்தில் தங்கியிராமல், வானத்தில் பாயவும், அவற்றால் தாக்கப்பட்ட உயர்ந்த தென்னைமரத்தின் நெற்றுக்கள் கீழே விழும்போது கமுக மரங்கள் அவற்றால் அசைவுற்று பாக்குக் குலைகளைச் சிதறுகின்ற, திருவாலி நாட்டாழ்வாரே.

பூமியை விழுங்கிய திருமாலை வழிப்பறி செய்து, அவர் இன்னாரென்று உணர்ந்த பிறகு அவர்மீது பாட்டுப் பாடி, திருவடியை அடைந்த பெரியோனே! உன் ஊர்கோலம் வரும்போது அதற்கு எதிர்முகமாக, எனக்குப் பிறந்த கொடிபோன்ற பெண்ணொருத்தி போய் வணங்கினாள்.

"உள்ளமும் உடலும் உன் (பெருமாள்) வசமாகிவிட, உயிரை மாத்திரம் என்னிடம் கொண்டு வந்தாள்" என்று அகச்சுவைபட பாடினார்.

இங்கு உள்ளமும், உடலும் உன்வசமாகிட என்று திருஞானசம்பந்தர் திருமங்கையாழ்வாரை நாயகி பாவனையில் சொல்லி பாடுகிறார். இவரது உயிர் என் கண் முன்னே இருக்கிறது. இவளது உடலும், உள்ளமும் காழிச்சீராளனான வெண்ணெய் உண்ட தடாளப் பெருமாளிடம் இருக்கிறது என்ற அர்த்தத்தில் பாடுகிறார்.

திருமங்கையாழ்வார் :-

இப்பாடலைக் கேட்ட திருமங்கையாழ்வாரும், திருஞானசம்பந்தரை கீழ்வருமாறு புகழ்ந்து பாடினார்.

"வருக்கைநறுங் கனிசிதறிச் செந்தேன் பொங்கி
மடுக்கரையிற் குளக்கரையின் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலஞ் செய்யுங் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்

அருட்குலவு மயிலைதனி லனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோ மென்
றிருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இதனையுமோர் பெண்ணாக்க லியல்பு தானே''.

விளக்கம் :-

பலா மரமானது வாசனையுள்ள பழங்களைச் சிதறுவதால், ஒழுகிய நல்ல தேன் மிகுதிப்பட்டு சிறு குட்டைகளின் கரைகளிலும் பெரிய குளத்தின் கரைகளிலும் மடைகளிலும் ஓடும்படி, வெள்ளமாய்ப் பரவுவதால், வண்டுகள் பேரோசை இடுகின்ற சீர்காழியில் வாழும் ஆளுடையப் பிள்ளையாராகிய, திருஞானசம்பந்தப் பெருமானே! கேட்பீராக!.

'சிவபெருமானது திருவருள் விளங்குகின்ற திருமயிலையிலே தீயினால் சுடப்பட்ட எலும்பை, பூம்பாவையாகிய கன்னி வடிவமாகச் செய்தோமென்று நினைத்திருப்பது போதாது, உம்மை தரிசித்து உமது அழகாகிய நிலவொளியின் வெப்பத்தால் வாடிய இப்பெண்ணையும் மகிழ்ச்சியுடையதாகச் செய்தல் உமது கடமைதான்' என்று அகத்துறை அமைத்துப் பாடினார்.

சிவபெருமானின் திருமேனியின் அழகைத் தரிசித்து, அழகிய நிலவொளியின் வெப்பத்தால் வாடிய இப்பெண்ணை (திருஞானசம்பந்தர்) மகிழ்ச்சிப்படுத்துவது உமது கடமை என்கிறார்.

திருஞானசம்பந்தர் மற்றும் திருமங்கையாழ்வார் இருவரும் ஒருவரையொருவர் மற்றொருவரை நாயகி பாவனையில் சொல்லி இறைவனே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.

இந்த நிகழ்விற்குப் பின் ஒருவரையொருவர் நண்பர்களானார்கள். மேலும், திருஞானசம்பந்தர் "ஆலிநாடன், அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொற்றவேற் பரகாலன்" என்று பல பட்டங்களைச் சூட்டியதோடு, தன் நட்பிற்கு இலக்கணமாக வேல் ஒன்றினையும் பரிசாக அளித்தார்.

இந்த வேல் தான் திருமங்கையாழ்வார் எந்த நேரமும் தன்னுடைய திருக்கரங்களிலேயே வைத்திருப்பார். இன்றும் திருவாலி திருநகரி சென்றால் கையில் வேலுடன் இருக்கும் திருமங்கையாழ்வாரைத் தரிசிக்கலாம்.

இந்த வேலினைத் தன்னுடைய கரத்தில் வைத்துக் கொண்டு தான் திருநாடு எழுந்தருளினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சைவமும் - வைணவமும் தழைத்தோங்க வந்து அவதரித்த இவ்விருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பாடியுள்ளது சமய நல்லிணக்கத்தையே எடுத்துக்காட்டுகிறது.

இவ்விரு பெரியோர்கள் - புண்ணியவான்கள் வாழ்ந்த சீர்காழியில் வாழ்பவர்கள் பேறு பெற்றவர்களாவார்கள்.
 

Latest ads

Back
Top