• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நவராத்திரி

Status
Not open for further replies.
நவராத்திரி




10461476_272943819581575_2464546626327820210_n.jpg




சாக்த வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும்.

நவமி அன்று சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படும். நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி. ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற அமைத்து, சரஸ்வதி தேவியின் அருளைப் பெற வேண்டும் நிகழ்ச்சியாக நடைபெறும். அன்று அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும்.


விஜய தசமி - வெற்றியைத் தரும் பத்தாம் நாள். பூஜிக்கப்பட்ட கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தும் எடுத்தாளப்படும். அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் அக்ஷராப்யாசம் என்னும் கல்வி கற்கத் தொடங்க அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.


வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.
பெண்களின் பெருமையைப் போற்றும் விழா, நவராத்திரி விழா.

பெண்களின் கைவினைத்திறன், கற்பனை சக்தியைத் தூண்டும் விழா.


நவராத்திரி சமயத்தில் வீட்டில் "கொலு" என்னும் அமைப்பில், மூன்று, ஒன்பது அல்லது பனிரண்டு படிகள் அமைத்து, அதில் பல்வேறு வகையான பொம்மைகளை அமைத்து, அம்பிகையை அமைத்து, வழிபாட்டுடன், ஆடலும் பாடலுமாக வீடே சொர்க்க லோகம் போல காட்சியளிக்கும்.


நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம்.


நவராத்திரி வழிபாட்டால்,
பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன்.
கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன்.
சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன்.
மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு;
எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.




நவராத்திரிகள் கொண்டாடப்படும் காலங்கள் :

சித்திரை மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் வசந்த நவராத்திரி.
ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் சாரதா நவராத்திரியாகும்.
தை மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரியாகும்.

புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு :புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.

புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர்.

இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.


சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.
நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.


தேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.


நவகன்னிகா வழிபாடு

நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.


அதன்படி,

முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி
இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி
மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி
நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோகிணி
ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா
ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா
ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி
எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்க்கா
ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - சுபத்ரா


என்று வணங்கப்படுவார்கள்.


புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.


முதல் (1,2,3) மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.

இடை மூன்று (4,5,6) நாட்கள் லட்சுமி வழிபாடு.

கடை மூன்று நாட்கள் (7,8,9) சரஸ்வதி வழிபாடு.


துர்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை'', ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.
அவனை வதைத்த பத்தாம் நாள் 'விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி].

நவதுர்க்கை: வன துர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, சூரி துர்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.


இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.


அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மகா இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.


சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, "ஆற்றங்கரைச் சொற்கிழத்தி" என்று குறிப்பிடுகிறது.


சரஸ்வதி பூஜை :

நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.

சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூTப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.


விஜய தசமி:

ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.


அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி


ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.


துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.
இலட்சுமி: 4. மகாலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.
சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.



நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.

ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை.


நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் பல கன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.


புராணங்களில் நவராத்திரி :

வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது.

பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.


நவராத்திரி புராணம் :

முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?


வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும், வரமுனியை எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.
ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.


அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.
மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.


மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.


எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை அருளினார் பிரம்ம தேவன்.
மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.


மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.


தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவ பெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்புறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூSதையாய் புறப்பட்டாள்.

அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.


அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.


இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.


மற்றொரு கதை:

மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சமிஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9 நாட்கள் அம்மன் ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் துணிகளை தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.


விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.
சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.


காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.


நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.
நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :


1. ஏழ்மை வராது
2. அன்பு கிடைக்கும்
3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
6. கல்வி ஞானம் பெருகும்
7. உத்யோக உயர்வு
8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
9. மன அமைதி கிடைக்கும்.
10. தேக ஆரோக்கியம்



நவராத்திரியில் கொலு வைக்கும் முறை.
ஒன்பது படிகள் :


* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

* மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடமி பெற வேண்டும்.

* ஆறாவது படியில் ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டுமி.

* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.

* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.



நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம்




Source: Hindukkalin Prasad
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top