• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாரதியின் வேத முகம்

Status
Not open for further replies.
பாரதியின் வேத முகம்

பாரதி ஒரு பன்முகக் கவிஞர். நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று இவற்றிற்கு விரோதமி்ல்லாத வகையில் அனைத்து உலக மக்களையும் அனைத்து மொழிகளையும், அனைத்துச் சமயங்களையும் நேசிக்கும் பண்பு, சொல் புதிது பொருள் புதிதாய் கவிதை இசைத்த புலமை, பெண் விடுதலை, சமூக நீதிக்குப் போராட்டம் இப்படிப் பல முகங்கள் உண்டு அவருக்கு.

நாடகத்தில் ராவணனாகவோ முருகனாகவோ வேடம் போடுபவர் பல அட்டைத் தலைகளைத் தாங்கி வருவதைப் பார்க்கிறோம். எல்லா முகங்களும் ஒன்று போல இருந்தாலும் உண்மை முகம் ஒன்று தான், அதன் வடிவத்தை ஒட்டியே மற்ற முகங்கள் அமைக்கப் பட்டுள்ளன, அந்தத் தலை தான் மற்ற தலைகளையும் தாங்குகிறது என்பதையும் நாம் அறிவோம்.

பல முகம் கொண்ட பாரதியின் உண்மை முகம் எது? எந்த முகத்தின் அடிப்படையில் மற்ற முகங்கள் அமைந்துள்ளன?

வேதங்களின் மீது அவர் கொண்டிருந்த மரியாதை தான் அவரது உண்மை முகமாகத் தோன்றுகிறது. தான் பிறந்த குலத்துக்கு உரிய ஆசாரங்களைக் கைவிட்டதோடு அல்லாமல், தன் சாதியினரையும் எள்ளி நகையாடியவர் பாரதி. அப்படிப்பட்ட புரட்சிக்காரர், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பது வியப்புக்குரிய உண்மை.

தனது பாடல்களிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவரது இந்த வேதப் பற்று தெய்வ பக்திப் பாடல்களில் மட்டுமல்லாது சமூக விடுதலைப் பாடல்களிலும், தேச பக்திப் பாடல்களிலும் கூட வெளிப்படுவதைக் காணலாம்.

வேதம் பாரத நாட்டின் கலாசாரத்தின் ஆணி வேராக இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் சில தவறான கருத்துகளும் தவறான விளக்கங்களும் வேத இலக்கியத்தில் புகுந்துவிட்டன. இவற்றையும் அக்கால வேதியர்கள் வேதம் என்ற பெயரிட்டே அழைத்தனர். இந்தப் போலி வேதங்களை நீக்கி விட்டு வேதத்தை அதன் தொன்மையான தூய நிலையில் கொண்டு வைக்க வேண்டும் என்பது அவரது பேரவா. இந்தக் கருத்து அவரது ஒவ்வொரு பாடலின், கதையின், கட்டுரையின் அடிநாதமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவற்றில் சிலவற்றை அடுத்து வரும் பதிவுகளில் காண்போம்.
 
ஒன்று பரம் பொருள்

பாரதி இந்து மதத்தின் மீதும் வேதங்களிடத்தும் பெரு மதிப்புக் கொண்டிருந்த போதிலும் பிற மதங்களைச் சமமாகவே போற்றினார். அவரது இந்தச் சமயப் பொதுமைக்கு அடிப்படை ரிக் வேதமும் பகவத்கீதையும் தாம். ரிக் வேதத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வசனம், “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்பது. “ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள் பலவிதமாய்ச் சொல்லினர்,” என்று பாரதி அதை மொழி பெயர்க்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான், “யார் யார் என்னை எந்தெந்த வடிவில் வழிபடுகிறார்களோ அவரவரை அந்தந்த நம்பிக்கையில் நான் நிலைக்கச் செய்கிறேன்.” இவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்ட பாரதி தன் எழுத்துகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இக் கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

எல்லாச் சமயங்களும் கடவுள் ஒன்றே என்று தான் கூறுகின்றன. ஆயினும் ஏன் தகராறு? தன் சமயத்தையே நன்கு அறியாத அரை குறை மனிதர்கள், “நான் வணங்குவது மட்டுமே கடவுள், மற்ற சமயத்தவர் வணங்குவது பேய்களை, பேய் வழிபாடு செய்வோரைத் திருத்துவது அல்லது அழிப்பது என் கடவுளுக்கு உகப்பானது,” என்ற வகையில் பேசுகிறார்கள். அத்தகையோருக்குப் பாரதி அறிவுறுத்துகிறார் -

வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று
வேதம் புகன்றிடுமே- ஆங்கோர்
வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ்
வேதமறியாதே
நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று
நான்மறை கூறிடுமே- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்
நான்மறை கண்டிலதே.
 
வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுபவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு வேடங்களே. இந்த வேடங்களைத் தெய்வத்தின் மீது மனிதர் தாம் சுமத்துகின்றனர். அதன் உண்மையான சொரூபம் சுத்த அறிவு ஆகும். வள்ளுவர் இறைவனை வாலறிவன் என்று போற்றுகிறார். இறைவன் எல்லாம் அறிந்தவன் என்று தான் எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. இதை உணர்த்தும் வேத வசனம், “ப்ரக்ஞானம் ப்ரம்ம” (அறிவே கடவுள்) என்பதைப் பாரதி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் -பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ என்று பாரதி கேட்கிறார்.

நாம் என்ன செய்கிறோம்? மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் பல கள்ள மதங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம். இது முறையா? அச்சமும் அறியாமையுமே வன்முறையின் அடிப்படை. எனது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சமும், எல்லா மதங்களுக்கும் உட்புகுந்த கருத்து ஒன்றே என்பதை அறியாமையுமே மாற்றுச் சமயத்தாரை அழித்தால் நம் சமயம் வாழும் என்ற மூட நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. வீரமில்லாமல் இந்த அச்சங்களுக்கு இடமளிப்பவர் எந்தச் சமயத்தவரானாலும் இறைவனை அடைய முடியாது என்கிறார் பாரதி.

வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பூணல் வேண்டும்

“ஒவ்வொரு மனிதனும் தனித் தனி இயல்பினன். அவனவன் மதம் அவனது தனித் தன்மையைப் பொறுத்தது. எனவே இன்னும் இரண்டு கோடி மதங்கள் பெருகட்டும். எத்தனை பேர் எத்தனை விதமாக வழிபட்டாலும் உண்மை ஒன்றே” என்கிறார் விவேகானந்தர். பாரதி அதனை வழிமொழிகிறார்-

பூமியிலே கண்டமைந்து மதங்கள் கோடி
புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்
சாமிஎன ஏசுபதம் போற்றும் மார்க்கம்
ஸநாதனமாம் இந்துமதம் இஸ்லாம் யூதம்
நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்
நல்ல கண்பூசி மத முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள்பல உளவாமன்றே
யாவினுக்கும் உட்புகுந்த கருத்திங்கொன்றே

தெய்வம் பல பல சொல்லிப் பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்
என்கிறார் பாரதி. அல்லாவைப் போற்றி அவர் பாடுவதைக் கேட்போம்-

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளிவானில்
நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி
அல்லா அல்லா அல்லா

இதே கருத்தைக் காளி மீது ஏற்றிப் பாடுகிறார்.

விண்டுரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை
அண்டம் கோடி வானில் அமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
 
பாரதி விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனையைக் கவனியுங்கள். தொல் பழம் தெய்வங்கள் உள்பட, வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய கிருத்துவப் பெயர்களும் ஒரே பரம்பொருளைக் குறிப்பதை விளக்குகிறது அது.
விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி
அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்
தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்
உள்ளொளியாகி உலகெலாம் திகழும்
பரம்பொருளேயோ, பரம்பொருளேயோ
ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்
தேவதேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மாமகளேயோ
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

சமயங்கள், சாத்திரங்கள், சடங்குகள் எல்லாம் உண்மையை அடைவதற்கான படிகளே அன்றி அவையே இறுதி நிலை அல்ல. மனதைச் செம்மைப்படுத்திப் பரம்பொருளை உள்ளத்தால் தொட முடிந்தால் இவை தேவையற்றதாகி விடும்.
காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே
சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றால் போதுமடா
தவமொன்றும் இல்லை ஒரு சாதனையுமில்லையடா
சிவமொன்றே உள்ளதெனச் சிந்தை செய்தாற் போதுமடா

அறிவு விளக்கம் பெறாத குழந்தை நிலையில் உள்ளோர் தாம் விரும்பிய வெவ்வேறு வடிவங்களில் பரம்பொருளை வழிபடட்டும். ஆனால் அதே நிலையில் நின்று விடாமல் படிப்படியாக மேலே உயர்ந்து வடிவங்கள், வழிபாட்டு முறைகள், வேதங்கள், தவங்கள் இவற்றைக் கடந்து பரம்பொருளை உள்ளத்தால் உணரும் நிலைக்கு வரட்டும். இவை எல்லாமே உண்மை தான். இதை உலகுக்கு உணர்த்தவல்ல ஒரே நாடு நமது நாடு தான் என்பதில் பெருமை கொள்கிறார் பாரதி.
ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்
உலகின்பக் கேணிஎன்றே
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
நாயகிதன் திருக்கை
பாரதியின் இந்த சமய சமரசத் தன்மை ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி என்ற வேதக் கொள்கையிலிருந்து பெறப்பட்டது.
 
சூழ்ந்ததெல்லாம் கடவுள்

கடவுள் எங்கே இருக்கிறார்? தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் கதையைக் கூறுகிறோம். இதை இக் கால இரணியர்கள் ஏற்றுக் கொள்வார்களா? புராணங்களைப் புளுகு என்று தள்ளும் காலம் இது.
தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது..... வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.

ஈசாவாஸ்ய உபநிடதம் கூறும் ‘இந்த எல்லாமே இறைவன் தான்’ (ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்) என்ற கருத்தை அதில் காண்கிறார்.

சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே
சொல்லென்று இரணியனும் உறுமிக் கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் தூணிலுள்ளான்
நாராயணன் துரும்பிலுள்ளான் என்றான்
வல்லமைசேர் கடவுளில்லாப் பொருளொன்றில்லை
மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ

கேளப்பா சீடனே கழுதை ஒன்றை
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருனனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதை மட்டும் விரித்துச் சொல்வேன்
விண் மட்டும் தெய்வமன்று மண்ணுமஃதே
 
யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதி உபநிடத மகா வாக்கியங்களின் விளக்கமாக உள்ளது. இது உலகம் முழுமையையும் ருத்திர வடிவமாக வணங்குகிறது.

மந்திரி, வணிகர், தேரோட்டி, வேடர், கள்வர், விராதன், [ஒழுக்கக் கேட்டால் புறம் தள்ளப்பட்டவர்], தச்சர், குயவர், செம்படவர் என்று பல வடிவங்களில் விளங்கும் ருத்திரருக்கு வணக்கம் தெரிவிக்கும் அது, சடைமுடியர், மொட்டைத் தலையர், நிற்பவர், நடப்பவர், தூங்குபவர், அருகில் இருப்பவர், தொலைவில் இருப்பவர் என்று எவரையும் மிச்சம் வைக்காமல் இறைவனாகக் கருதி வணங்குகிறது. மனிதர் மட்டுமல்ல, நாய், குதிரை ஆகிய விலங்குகள் வடிவத்திலும் ருத்திரன் விளங்குவதாகக் கூறப்படுகிறார். தேர், ஆற்று நீர், மரங்கள் போன்ற உயிரற்ற பொருள்களாகவும் அவர் இருக்கிறார். இந்த மனிதருக்குள்ளும், பிராணிகளிடத்திலும், பொருட்களுக்குள்ளும் ருத்திரன் வசிப்பதாகக் கூறாமல் அவர்களே, அவையே ருத்திரன் என்று கூறுவது கவனிக்கத்தக்கது.

“நீயே கார்த்திகை நட்சத்திரமாகவும் அக்னியாகவும் உள்ளாய். நீயே அக்னியின் சுவாலை, பிரஜாபதியின் ஒளி, சோமரசத்தின் பிரகாசம். நீயே ரோகிணி நட்சத்திரமாகவும் பிரஜாபதியாகவும் உள்ளாய். நீயே ஆதிரை, நீயே ருத்திரன், நீயே புனர்வஸு, நீயே அதிதி, நீயே பூசம், நீயே பிரகஸ்பதி, நீயே ஆயில்யம், நீயே பாம்புகள், நீயே மகம், நீயே பித்ருக்கள்...” என்று நீளும் மற்றொரு யஜுர் வேதப் பகுதி [யஜுர் 4.4.10] விண்ணிலுள்ள நட்சத்திரங்கள், தேவர்கள் எல்லாவற்றையும் ஒரு பரம்பொருளின் பல தோற்றங்களாகக் காண்கிறது.
இந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு பாடினார்.

சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்
;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்
[பாரதி அறுபத்தாறு 15, 17, 18]
 
மனிதர்க்குக் கோபம் வருவதற்கான காரணத்தை ஆராய்கிறார் பாரதி. நம்மைச் சூழ்ந்தது எல்லாம் கடவுள், நாமும் கடவுள் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்குமானால் நமக்குக் கோபம் வராது அல்லவா? நம்மிலும் வேறான ஒரு பொருளிடம் தானே நாம் கோபித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு பொருள் எதுவும் இல்லை என்ற வேதக் கருத்தைச் சுருக்கமாக, மூன்று வார்த்தைகளில் தருகிறார். சூழ்ந்தது எல்லாம் கடவுள்.

சூழ்ந்ததெலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே
சேருவதே மானிடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

தன் வசன கவிதையில் பாரதி இக் கருத்தை மேலும் விளக்குகிறார்.

இவ்வுலகம் ஒன்று

ஆண், பெண், மனிதர், தேவர்,
பாம்பு, பறவை, காற்று, கடல்,
உயிர், இறப்பு இவை அனைத்தும் ஒன்றே
ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலை, அருவி,
குழல், கோமேதகம் இவ்வனைத்தும் ஒன்றே
இன்பம், துன்பம், பாட்டு,
வண்ணான், குருவி, மின்னல், பருத்தி
இஃதெல்லாம் ஒன்று
மூடன், புலவன்,
இரும்பு, வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள்
வேதம், கடல்மீன், புயற் காற்று, மல்லிகை மலர்
இவை ஒரு பொருளின் பல தோற்றம்
உள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று
இந்த ஒன்றின் பெயர் - தான்
தானே தெய்வம்
தான் அமுதம் இறவாதது

பாரதி இக்கொள்கையைப் பின்பற்றினார். அத்வைத நிலையின் உச்ச கட்டத்தில் நின்று அவர் பாடுகிறார்.

காக்கைச் சிறகினிலே நந்தாலா -நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா- நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா- நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்
தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா

உலகனைத்துமாக வியாபித்து நிற்கும் பிரமம் நானே (அஹம் ப்ரம்மாஸ்மி) என்ற உபநிடதக் கருத்து எவ்வளவு எளிய சொற்களில் வெளிப்படுகிறது பாருங்கள்.

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்.
காற்றும் புனலும் கடலுமே நான்,

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான்.

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்,
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

இன்னிசை மாதரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,
புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளேன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்ட பல சக்திக் கணமெலாம்நான்,
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்,
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்கு முதற் சோதி நான்.
 
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

இறைவன் கண்ணனாக அவதரித்துப் பாரதப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாகப் பணி புரிந்தது நமக்குத் தெரியும். அதே கண்ணன் துரியோதனனாக வடிவெடுத்து அர்ஜுனனோடு சண்டையிட்ட செய்தி தெரியுமா?
இது என்ன புதுக்கதை? பாரதத்திற்குப் போட்டியாக யாரேனும் நாத்திகர் கீரதம் என்று ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்ன?
இதை எழுதியவர் நாத்திகர் அல்ல. அத்வைத வேதாந்தத்தில் தோய்ந்து கண்ணனின் பரம பக்தராக வாழ்ந்து, இன்று பதின்மூன்றாவது ஆழ்வாராகப் போற்றப்படும் பாரதி தான் இப்படிச் சொல்கிறார்.
அரைச் செய்தி சொன்னால் குழப்பமாகத் தான் இருக்கும். முழுவதையும் கேளுங்கள்.
கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எதைக் கொண்டு படைத்தார் என்ற வினாவுக்கு விடையாக அத்வைதம் கூறுகிறது – கடவுள் எதைக் கொண்டும் உலகைப் படைக்கவில்லை. தானே பிரபஞ்சமாகத் தோற்றம் காட்டி அருளினார். அப்படி என்றால் இங்குக் காணப்படும் மலைகள், கடல்கள், காடுகள், விலங்குகள், மனிதர்கள் எல்லாமே கடவுளின் வெவ்வேறு தோற்றங்கள் தாமே. அப்படி இருக்க, மானிடரில் சிலரைப் பகைவர் என்று கூறி வெறுக்கிறோமே அது சரியா? சரி அல்ல. அதனால் தான் பாரதி கூறுகிறார் –
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்
புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்
‘யாரையும் மேல் தோற்றத்தை மட்டும் பார்த்து மதிப்பிடக் கூடாது. ஆழ்ந்து நோக்குக. புகை நடுவில் தீ போல, சிப்பியினுள் முத்து போல, குப்பை நடுவே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி போல, பகைவனிடத்திலும் உறைவது பிரம்ம சைதன்யமே. தின்ன வரும் புலியைப் பார். அதன் கண்ணில் தெரியும் பசியைக் கூர்ந்து நோக்கு. பராசக்தி தென்படுவாள். எந்த தேவி எல்லா உயிரினங்களிலும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அந்தத் தேவிக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் என்று தேவி பாகவதம் கூறுவதைச் சிந்தனை செய். அந்தப் பராசக்தியைக் கும்பிடு.
‘எல்லா உயிர்களாகவும் இருப்பது ஒரே கடவுள் என்றால், எதிரி என்று முத்திரை குத்தி ஒருவனை அழித்து விட்டு நீ வாழ நினைப்பது எவ்வளவு பேதைமை? எதிரியை அழிப்பதன் மூலம் நீ கடவுளை அழிக்க முயல்கிறாய். நீயும் கடவுள் தானே? அதாவது உன்னையே நீ அழிக்க முற்படுகிறாய்.
‘இதெல்லாம் கடவுளின் லீலை என்பதை உணர்க. அவனே புலியாகவும் மானாகவும் வடிவெடுத்து ஒன்றை ஒன்று அழிப்பதாகத் தோற்றம் காட்டுகிறான். எதுவும் அழிவதும் இல்லை, எதுவும் அழிக்கப்படுவதும் இல்லை. மாயத் தோற்றங்களில் ஒன்று மறைகிறது, ஒரு புதிய மாயத் தோற்றம் ஏற்படுகிறது.
‘பாரதக் கதை கேட்டிருக்கிறோம். அங்கே, பார்த்த சாரதியாக வந்தது மட்டும் கண்ணன் அல்ல. அங்கு இருந்த அனைத்து மனிதர்களும் விலங்குகளும் உயிரற்ற பொருள்களும் கண்ணனே. அவனே தன்னை இப்படிப் பல கூறாக ஆக்கிக் கொண்டு பாரதப் போர் என்னும் மாயையைத் தோற்றுவித்தான். சுருக்கமாகச் சொல்லப் போனால், பார்த்த சாரதி மட்டுமல்ல, பார்த்தனும் கண்ணனே, அவனை எதிர்த்த துரியோதனனும் கண்ணனே, அவனது தம்பிகளும் கண்ணனே.
‘விசுவரூப தரிசனம் தந்து நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ற முக்காலத்தையும் காட்டின கண்ணன் தன் உடலுக்குள்ளேயே இரு திறத்துப் படைகளையும் உள்ளடக்கிக் காட்டவில்லையா? இந்த உண்மையைச் சந்தேகம் இன்றித் தெரிந்து கொண்டால் உன் உள்ளம் நிறைவு பெறும். சிறிதேனும் சந்தேகம் கொண்டால் குடம் தேனில் ஒரு துளி விஷம் என்ற கதை ஆகிவிடும்’ என்பது பாரதியின் கருத்து.
இனி அப்பாடலைப் பார்ப்போம்.
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்
புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி வளராதோ?

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ?
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவான் என்ற சாத்திரம் கேளாயோ?

போருக்கு வந்தங்கெதிர்த்த கௌரவர் போல வந்தானும் அவன்
நேருக்கருச்சுனன் தேரிற் கசை கொண்டு நின்றதும் கண்ணனன்றோ?

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையிற் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் அவளைக் கும்பிடுவாய்.
 
பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

பாரதியார் இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டியது ஏன்? அன்னியர் நம்மை ஆளக்கூடாது என்பதாலா? அல்ல. அத்வைதக் கொள்கையை நெஞ்சில் நிலையாகப் பதித்திருந்த அவர் நம்மவர் அன்னியர் என்று பிரித்துப் பார்க்கவில்லை. அதனால் தான் அவரது எழுத்துகளில் எங்கும் ஆங்கிலேயர் பால் வெறுப்புக் காணப்படுவதில்லை. பின் அவரது விடுதலை வேட்கைக்குக் காரணம் என்ன? பார்ப்போம்.
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவும்
சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்
இன்புற்றுவாழ்க

என்பது பாரதி விநாயகரிடம் வைக்கும் வேண்டுகோள். எல்லா உயிர்களும் தெய்வம் என்பதை உணர்ந்து விட்டால் பிறர் மீது அச்சம், பகைமை, கோபம், பொறாமை ஏற்படுமா? பூமண்டலம் எங்கும் அன்பும் பொறையும் மட்டுமே விளங்கும்.
அச்சம் முதலான இந்தத் தீய குணங்களை நீக்கி விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் என்று பாரதி கூறுகிறார். எல்லோரும் அமர நிலை எய்த முடியும்.
எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான் என்ற வேதக் கருத்தை உலகிற்கு அளிக்கத் தகுதி பெற்ற ஒரே நாடு இந்தியா தான்.

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்

என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் ஆம் ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் - வாழ்க

இந்தியா தாழ்ந்து நின்றால் உலகனைத்திலும் அஞ்ஞான இருள் பரவி விடும். எனவே தான் பாரதி இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்று பாடுபடுகிறார்.

சுதந்திர தேவியின் ஒளி பெறாவிடில் அங்கு அறிவுண்டோ, ஆக்கமுண்டோ?
காவிய நூல்கள், ஞானக் கலைகள், வேதங்களுண்டோ?” என்று கேட்கிறார். மேலும்

மற்றோரிடத்தில்,

வேத நூல் பழிக்கும் வெளித் திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி?”

என வினவுகிறார். ஏனெனில் அம்மிலேச்சர்,

மாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்

எனவே பாரதி இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டியது வேத நெறி தழைக்கவும், உலகெங்கிலும் அறம் ஓங்கி வளரவும் தான்.

பாரதி மகாத்மா காந்தியைப் போற்றியது ஏன்? எல்லா உயிர்களும் கடவுள் என்ற அத்வைதக் கொள்கையைக் கொண்டு, இழிவான வழி முறைகளே நிறைந்த அரசியலைத் தூய்மைப்படுத்தியதற்காகத் தான்.

மன்னுயிரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்ன மெய்ஞானத் துணிவினை மற்றாங்
கிழிபடு போர் கொலை தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியலதனிற்
பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்

என்று காந்தியைப் பாராட்டுகிறார் அவர்.
 
சாதிகள் இல்லையடி பாப்பா

இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சாதி இல்லை. வர்ணாசிரம முறை இருந்தது.

வர்ணாசிரமம் என்பதில் வர்ணம் ஆசிரமம் என்ற இரு சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஆசிரமம் என்பது ஒரு தனி மனித வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்கைளக் குறிக்கும் – மாணவப் பருவம், இல்லறப் பருவம், காடு வாழ் பருவம், துறவுப் பருவம். இந்த ஆசிரம முறை பற்றிப் பாரதி எதுவும் கூறவில்லை. இளம் பருவத்தில் துறவு பூணும் முறை புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வந்து சேர்ந்த ஒரு கேடு என்று மட்டும் கூறுகிறார்.

ஆனால் வர்ண முறையைப் பாரதி பெரிதும் போற்றினார். வர்ணம் என்ற சொல் நிறம் என்ற பொருளுடையது. இது தொழில் அடிப்படையில் மனித சமூகத்தில் காணப்படும் பிரிவைக் காட்டுவது. ஒவ்வொரு சமூகத்திலும் நடைபெறும் தொழில்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சிலர் அறிவுத் துறையில் (ஆசிரியர், ஆராய்ச்சியாளர்) ஈடுபடுகின்றனர். சிலர் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் (அரசு அதிகாரிகள், ராணுவத்தினர்), சிலர் வாணிபத்திலும், மற்றையோர் உற்பத்தித் தொழிலிலும் உள்ளனர். ஒரு சமூகம் சீராக இயங்க இந்த நான்கு குழுக்களும் தேவை. இவற்றில் எந்த ஒன்றும் உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ சொல்ல முடியாது. ஒரு யந்திரத்தின் நான்கு பாகங்கள் போல, இவை நன்கு பொருந்தி சீராக அமைந்தால் தான் சமூக யந்திரம் சிக்கலின்றி இயங்கும். இதைத் தான் பாரதி குறிப்பிடுகிறார்.

வேதமறிந்தவன் பார்ப்பான் - பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்
சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

பகவத்கீதையில் நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன என்று கண்ணன் கூறுவதைப் பாரதி குறிப்பிடுகிறார்.

நாலு குலங்கள் அமைத்தான் அதை
நாசமுறப் புரிந்தனர் மூடர்

பாரதியாரின் ஞானரதம் அவரது கருத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது.

பிறக்கும் போது மனிதர்கள் எல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகிறார்கள். சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச: (நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன) எனப் பகவான் சொல்லியிருக்கிறார்.
பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம பேதங்கள் இருப்பதாகச் சொல்வது பிழை. ஸகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம நெறி சீர் கெட்டுப் போயிருக்கிறது. பூர்வத்தில் பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத் தான் இருந்தது. அதற்கு அந்நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய ஸகல நூல்களும் ஸாக்ஷி. இப்பொழுது பாரதநாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறை தான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறிவிட்டது. அது பற்றியே அந்நாட்டினர் வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்.”

இப்படி, விரிவாக வர்ண முறையை ஆதரித்த பாரதி, வர்ணங்களுக்குள்ளே உயர்வு தாழ்வில்லை, எத்தொழில் செய்தாலும் அனைவரும் சமம் என்பதைப் பல இடங்களிலும் வலியுறுத்துகிறார்.

சீலம் அறிவு தருமம் இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை,
மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை
,
ஏவல்கள் செய்பவர் மக்கள்


என்றிருப்பது போல, சமூகத்திலும் வெவ்வேறு தொழில் செய்வோர் ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல வாழ வேண்டும் என்பது அவர் கருத்து.
பாரதியின் பூனைக் குட்டிகள் பாட்டு அனைவரும் அறிந்தது.

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை
பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்
சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில்
மானிடர் வேற்றுமை இல்லை

சாதி போல் அல்லாமல் வர்ணம் மாற்றிக் கொள்ளக் கூடியது என்பதை அவர் வலியுறுத்துகிறார். அவரது ஞானரதத்தில் தர்ம லோகம் என்ற பகுதியில் கதாநாயகன் கூறுகிறான்:–

எனது பிதா க்ஷத்திரியர். நான் பிராமணன். என் மக்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன். மற்றவர்களை யெல்லாம் மற்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, ஸ்வபாவம் முதலியவற்றைக் கருதி உரியவாறு பயிலுமாறு செய்திருக்கிறேன்.”

வர்ண முறையைப் போற்றிய பாரதி சாதி முறையைத் தீவிரமாக எதிர்த்தார். வர்ணம் என்பதும் சாதி என்பதும் ஒன்றல்ல என்ற உண்மையைப் பலர் அறிவதில்லை.

வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணமாக ஏற்படும் பிரிவுகளைப் பாரதி அடியோடு வெறுத்தார்.

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மேலவர் கீழவரென்றே வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் இன்று
பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்
சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.

மானிடச் சாதி என்ற ஒன்றைத் தான் அவர் ஒப்புக் கொள்கிறார்.

கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வைய முழுதும் பயனுறப்
பாட்டிலே அறம் காட்டு என்னும் ஓர் தெய்வம்.

..............................................ஆயிரம் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க. நீரனைவரும்
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதி ஒன்றையே சார்ந்தவராவீர்.

மானிடர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற உயிரினங்களையும் உயிரற்றவைகளையும் கூட ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.

காக்கை குருவி எங்கள் சாதி
காடும் மலையும் எங்கள் கூட்டம்

என்று அவர் பாடும்போது அத்வைத மாமேருவின் உச்சிக்கே போய் விடுகிறார்.

கீதை முன்னுரையில் அவர், கண்ணபிரான் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமே அன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராது இருத்தலே ஞானிகளுக்கு லட்சணம் என்கிறார்.

பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லட்சணம். எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.

இவ்வாறு அவரது சமூகச் சமத்துவக் கொள்கையும் வேத அடிப்படையைக் கொண்டது என்பது தெரிகிறது.
 
எத்தனை கோடி இன்பம்

வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். காணும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. வாழ்க்கையின் இருண்ட பகுதியையே எண்ணி, ஐயோ என் வாழ்க்கை இப்படித் துன்ப மயமாக ஆகிவிட்டதே, உலகில் எல்லாரும் வஞ்சகக்காரர்கள், எல்லாப் பொருளும் துன்பம் நிறைந்தவை என்று அஞ்சி அஞ்சிச் சாகும் மானிடப் பூச்சிகளுக்கும் அவர்களுக்கும் தான் எத்தனை வேறுபாடு. இதோ இந்த வேத மந்திரத்தைப் பாருங்கள்.

மது வாதா ருதாயதே
மது க்ஷரந்தி ஸிந்தவ:
மாத்வீர் நஸ் ஸந்த் வோஷதீ:

மது நக்தம் உதோஷஸி
மதுமத் பார்த்திவகும் ரஜ:
மது த்யௌ ரஸ்து ந: பிதா

மதுமாந்நோ வனஸ்பதி:
மதுமாகும் அஸ்து சூர்ய:
மாத்வீர் காவோ பவந்துந:

பித்ரு தர்ப்பணத்தின் போது முப்பாட்டனார்க்கு எள்ளும் நீரும் அளிக்கும் போது இந்த மந்திரத்தைச் சொல்கிறோம். இதன் பொருள் என்ன?

இனிய காற்று வீசுகிறது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன. செடி கொடிகள் நமக்கு இனியனவாக இருக்கட்டும். இரவும் விடியற்காலையும் இனியவையாக உள்ளன. பூமியின் புழுதி இனிதாக உள்ளது. நமது தந்தை போன்ற ஆகாயம் இன்பம் அளிக்கட்டும். வனத்தின் மரங்கள் இன்பம் நிறைந்தவைகளாக இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் இனிமையான பாலை அளிக்கட்டும்.

உலகில் துன்பம் இருப்பது உண்மை தான். ஆனால் அதற்காகத் துவண்டு விடக் கூடாது என்பது பாரதியின் கருத்து. நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு அளிப்பாள் என்று நம்புக” என்று ஊக்கம் தருகிறார் அவர். துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம், இன்பமே வேண்டி நிற்போம் யாதும் அவள் தருவாள் என்று கூறுகிறார். அவருக்குக் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் நந்தலாலா தென்படுகிறான். கேட்கும் ஒலியில் எல்லாம் அவனது கீதமே காதில் விழுகிறது. தீக்குள் விரலை வைத்தாலும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுகிறது. அவரது இந்த வசன கவிதையைப் பாருங்கள். இந்த வேத மந்திரத்தின் நேர் மொழிபெயர்ப்பு போலவே உள்ளது.

இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமை யுடைத்து
காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது
ஞாயிறு நன்று திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது
கடல் இனிது மலை இனிது காடு இனிது
ஆறுகள் இனியன

இன்பம் என்ற இந்த வசன கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள். நமக்கும் பாரதியைப் போல எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று நன்றி சொல்லத் தோன்றும்.
 
ஓம்



வேதம் ஓதத் துவங்கும் போதும், முடிக்கும் போதும், ஓம் என்னும் மந்திரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது. எந்த மந்திரத்தைக் கூறினாலும் அதற்கு முன் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரம்மம் (பரம்பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரத்தின் பொருள் என்ன?

ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.

வேத மந்திரங்களில் பாரதிக்கு மிகவும் பிடித்தமான சொல் ஓம். கந்தர்வ லோகத்தில் பிரதிமைகள் இல்லாத கோவில்களும் சில உண்டு. அங்கு ஓம் என்று ஒளி எழுத்தில் எழுதி வைத்திருப்பதாக ஞானரதம் என்ற கட்டுரையில் அவர் கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் இறை வணக்கப் பாடலில் ஓம் எனப் பெரியோர்கள் ஓதுவது தான் பிரமம் எனப்படும் அறிவும் அனந்தமும் ஆகிய நிர்மலப் பொருள் என்கிறார். இறைவனை வணங்கும் போது ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்த வேண்டும் என்று அவரது விநாயகர் நான்மணிமாலை கூறுகிறது.

ஓங்காரம் ஆசீர்வாதத்திற்கு உரிய மங்கலச் சொல் என்று பாரதி கருதியதை, “தருமன் முகமலர்ந்து வருக என்று சொல்லி ஓம் என்று ஆசீர்வதித்தான்” என்று அவரது தர்மலோகம் கூறுகிறது. ஓங்காரத்தை தியானத்திற்குரிய எளிய மந்திரமாகவும் மன அமைதி் தருவதாகவும் அவர் கருதினார் என்பது தருமலோகம் என்ற கட்டுரையில் “முனிவர்கள் இருவரும் பிரம்மத் தியானத்திலே அமர்ந்திருந்தார். நான் ஓம் என்று ஜெபித்து சாந்தி தேவியை வரிக்கலானேன்” என்று கூறுவதிலிருந்து அறியலாம்.

இறைவனை ஓங்கார வடிவினனாகச் சொல்வது ஏன்?

ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற வட சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.

வேதத்தில் ஓங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதன் நோக்கம் புதுமையில் நாட்டம் கொண்டவனாக இரு என்று அறிவுறுத்துவதற்கே.

சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கற்பனைகள், புதிய சிந்தனைகள், புதிய விளையாட்டுகள், புதிய நண்பர்கள் என்று நாள் தோறும் புதுமையை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இது தான். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

புராணங்களின் மெய்ப் பொருள் கண்டு பயன் பெற வேண்டும் என்ற பாரதியின் கருத்துக்கு இணங்க, ஓங்காரம் தொடர்பான ஒரு புராணக் கதையின் உட்பொருள் காண முயல்வோம்.

பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது. புதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். புதியனவற்றை ஏற்க மறுக்கும் முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.

இந்த நெறிப்படி, காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. ரிக் வேத ஸம்ஹிதையே இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அடித்தளம் இட்டது. பின்னர் எழுந்த நூல்களும் இத் தடத்திலேயே சென்றன. எனவே அவையும் வேதம் என்ற தலைப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.

வேதம் காலம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓங்காரமே சாட்சி. ஆம். வேதத்தின் ஸம்ஹிதை என்ற காலத்தால் மூத்த பகுதியில் இந்த ஓங்காரம் ஒரு சொல்லாக அமையவில்லை. இது ஒரு பிற்காலக் கண்டுபிடிப்புத் தான் என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இன்று எந்த வேத மந்திரம் சொல்வதானாலும் ஓங்காரத்துடன் தான் துவக்கப்படுகிறது, ஓங்காரத்துடன் முடிக்கப்படுகிறது.

நிகழ்காலத்திலும் இந்தப் புதுப்பி்க்கும் செயல் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பது பாரதியின் விருப்பம். அதனால் தான் ஆத்திசூடியில் வேதம் புதுமை செய் என்கிறார். நாம் புதுமையை விரும்பினாலும் அதை ஏற்றுக் கொள்வதற்கும் பழமையைக் கைவிடுவதற்கும் நமக்குத் தயக்கம் அதிகம். இதைப் பாரதி தன் மனத்துக்கு அறிவுறுத்தும் பாடலில் காட்டுகிறார்.

புதியது காணில் புலனழிந்திடுவாய்
புதியது விரும்புவாய் புதியது அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்
பழமையாம் பொருளிற் பரிந்து போய் வீழ்வாய்
பழமையே அன்றிப் பார்மிசை ஏதும்
புதுமை காணோம் எனப் பொருமுவாய்

பாரதி மற்றவர்க்கு உபதேசித்ததைத் தான் நடைமுறைப்படுத்திக் காட்டினார். முந்தைய புலவர்களினின்றும் மாறுபட்டு்க் காலத்திற்கு ஏற்ற புது வகையான பாடல்கள், புது வகையான கருப் பொருள்கள் கொண்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது போல, மானிட சமுதாயம் நலம் பெறுவதற்கான ஒரு புதிய மந்திரத்தையும் உருவாக்கினார்.

சொல் புதிது

வேத மந்திரங்களைச் சொல்லி முடிக்கும்போது, ‘எங்கும் அமைதி நிலவுவதாக’ என்று பொருள்பட ‘ஓம் சாந்தி’ என்று மும்முறை சொல்லி முடிப்பது வழக்கம். இந்தியா தாழ்வுற்றுப் பாழ்பட்டு நின்ற நிலையில் நமக்குத் தேவை செயலற்றுக் கிடக்கும் அமைதி அல்ல, செயல்படுவதற்கான வலிமையே என்று உணர்ந்து பாரதி ஓம் சக்தி என்ற புதிய மந்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். இம்மந்திரம் வேத வழக்கில் இல்லாதது. ஆனால் இதன் கருத்து வேத சம்மதமானதே என்பதை விவேகானந்தரின் இந்த உபநிடத மேற்கோள் மெய்ப்பிக்கிறது.

உபநிஷத் கூறுகிறது, “வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.”

இவ்வாறு ஓம் சக்தி மந்திரம் பாரதியால் வேத நெறி அடிப்படையில் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதை அறிகிறோம்.
 
இப்போதே முக்தி

தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கும் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. இதையே தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்கிறோம். இவை ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் அடைய வேண்டியவை என்று கூறப்படுகின்றன.

தரும நெறிப்படி நடக்க வேண்டும். பொருள் தேடி உண்ண வேண்டும். உலக இன்பங்களைச் சுவைக்க வேண்டும். பின் மோட்சம் அடைய வேண்டும். இந்த மோட்சம் என்ற சொல்லுக்கு விடுதலை, விடுபட்டு நிற்றல் என்று பொருள். இறந்தபின் அடைய வேண்டிய நிலை என்று தான் அனைவரும் இதற்குப் பொருள் கூறுகின்றனர்.

ஆனால் மோட்சம் என்பது இறந்த பிறகு அடையப்பட வேண்டியது என்பது வேதத்தின் உண்மையான கருத்து அல்ல. வேதத்தின் உண்மையான கூற்றுப்படி நான்காவது புருஷார்த்தம் இறந்த பிறகு அடையும் சொர்க்கப் பதவி அல்ல, பயத்திலிருந்து விடுபடுவதையே அது குறிக்கிறது என்கிறார் விவேகானந்தர்.

பாரதியாரின் பாடல் ஒவ்வொன்றிலும் இந்த வேதக் கருத்து ஆதார சுருதியாக ஒலிப்பதைக் கேட்கலாம்.

மோட்சம் என்பது இறந்த பிறகு கிடைப்பது அல்ல என்பதை அவர் வாக்கிலேயே கேட்போம்.
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம்
பேயுரையாமென்று இங்கு ஊதேடா சங்கம்

இத்தரை மீதினில் இந்த நாளில்
இப்போதே முத்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையில் களிப்பவர்
தூயவராம் என்று இங்கு ஊதேடா சங்கம்

கவலைப்படுதலே கருநரகம்மா, கவலையற்றிருத்தலே முக்தி என்று அவரது விநாயகர் நான்மணிமாலை விளக்குகிறது.

விடுதலை என்ற தலைப்பில் பாரதி நான்கு பாடல்கள் பாடியிருக்கிறார். நான்கில் எதுவும் அரசியல் சுதந்திரம் அடைவது பற்றியோ இறந்த பின் அடைவதாகச் சொல்லப்படும் சுவர்க்கம் பற்றியோ பேசவில்லை.

பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்ற பாட்டில் ஜாதி சமத்துவம், ஆண் பெண் சமத்துவம், ஏழை பணக்காரன் சமத்துவம், ஆண்டான் அடிமை என்ற வேறுபாடற்ற சமத்துவம் இவை தான் பேசப்படுகின்றன. சமத்துவமற்ற நிலையிலிருந்து விடுதலை பெறுவதே இதன் கருப்பொருள். எல்லாம் கடவுளின் ரூபங்கள் என்ற வேதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பாரதி இந்த சமத்துவத்தை வலியுறுத்துகிறார். இது சமுதாய வாழ்வின் விடுதலை.

மற்ற மூன்று பாடல்களிலும் பாரதி மனிதன் தன் சொந்த வாழ்வில் தானாக ஏற்படுத்திக்கொண்ட தளைகளிலிருந்து விடுதலை பெறுவதைக் கூறுகிறார்.

உயிர்க் கூட்டங்களில் மனிதன் மட்டும் தான் உணவு தேடுவதை ஒரு சுமையான வேலையாகச் செய்து கொண்டவன். தாவரங்களோ பறவைகளோ மனிதன் அளவு அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் அவற்றின் உணவுத் தேவை சொற்பமானது. உணவு தேடுவதையும் உண்பதையும் சுமையான கடமையாகக் கருதாமல் அவை மகிழ்ச்சியாகச் செயல்படுகின்றன. மரங்களும் செடி கொடிகளும் எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ என்று கேட்கிறார் பாரதி.

அவரது முக்தி இலக்கணம் சிட்டுக்குருவியினது போன்ற வாழ்க்கை தான். அது எப்படிப் பொழுது போக்குகிறது?
முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்து அன்பு செய்திங்கு
முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
வைகறையாகு முன் பாடி விழிப்புற்று
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக்குருவி போலே

சோம்பேறித்தனமாக ஒரு வேலையும் செய்யாமல் கதை பேசிப் பொழுது போக்குவது தான் முக்தி என்று பாரதி கருதுகிறாரா? அல்ல, அல்ல. அன்பு செய்து என்று ஒரு வார்த்தை போட்டிருக்கிறார் கவனியுங்கள்.

விடுதலை என்று தலைப்பிட்ட மற்றொரு பாடலில் பாரதி கூறுகிறார்,
....................பாடுபடல்வேண்டா
ஊனுடலை வருத்தாதீர், உணவு இயற்கை கொடுக்கும்
உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்
பாடுபடல் வேண்டா, ஊனுடலை வருத்தாதீர் என்று சொல்லும்போது

சோம்பேறித்தனத்தைத் தான் அவர் விடுதலை என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது. அடுத்த வரியில் தொழில் அன்பு செய்தல் என்று கூறுவதைச் சற்று சிந்தித்தால் தான் உண்மையான பொருள் விளங்கும்.

மீண்டும் விநாயகர் துதிக்குப் போவோம். அதில் கடமைகள் யாவை என்று பட்டியல் இடுகிறார். தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இறைவனைப் போற்றுதல் இந்நான்கே பூமியில் எவர்க்கும் கடமை என்கிறார். பிறர் நலம் வேண்டுதல் என்பது மற்றவர்க்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் என்று பொருள். பிறர் துயர் தீர்த்தல் என்பது அதிலிருந்து வேறானது என்பது புலனாகின்றது. அங்கு அன்பு செய்தல் என்று கூறியதைத் தான் இங்கு பிறர் துயர் தீர்த்தல் என்கிறார். இது மனத்தாலோ வாய்ச் சொல்லாலோ செய்யப்படும் பிரார்த்தனை அல்ல. இது உடலால் உழைப்பதையே குறிக்கும். தனக்காக உழைக்காமல் பிறருக்காக உழைத்தால் அது ஊனுடலை வருத்தாது. அது பாடாக, சுமையாகத் தோன்றாது. எனவே தன் உணவுக்காக, தன் சுகத்துக்காக உழைக்கும்போது தான் கவலைகளும் பயங்களும் துயரங்களும் ஏமாற்றங்களும் தோன்றும். அவ்வாறின்றி பிறருக்காக உழைப்பது கவலையிலிருந்து விடுபட வழியாகிறது. அதுவே முக்தி என்பது பாரதியின் கருத்து.

பாரான உடம்பினிலே மயிர்களைப் போல்
பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே
நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா
காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா
கால்வாய்கள் பாய்ச்சுவதிற் கலகம் வேண்டா
சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு
சிவன் செத்தாலன்றி மண் மேல் செழுமையுண்டு

ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண்டாகும்
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு
நீதியில்லாக் கள்வர் நெறியாயிற்றப்பா
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சியன்றோ

தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு இயற்கை கொடுக்கும் என்பதை மற்றொரு பாட்டிலும் தெளிவுபடுத்துகிறார்,

நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்.

இவ்வாறு ஊருக்கு உழைப்பதன் மூலம் தன்னைப் பற்றிய கவலையைத் துறந்து வாழும் வழியை அடைவது இவ்வுலகில் வாழும்போது தான் முடியும். அதைத் தான் பாரதி மண்ணுலகிலிருந்து வானகத்தைத் தீண்டுவது என்கிறார்.
 
இப்போதே முக்தி

தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கும் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. இதையே தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்கிறோம். இவை ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் அடைய வேண்டியவை என்று கூறப்படுகின்றன.

தரும நெறிப்படி நடக்க வேண்டும். பொருள் தேடி உண்ண வேண்டும். உலக இன்பங்களைச் சுவைக்க வேண்டும். பின் மோட்சம் அடைய வேண்டும். இந்த மோட்சம் என்ற சொல்லுக்கு விடுதலை, விடுபட்டு நிற்றல் என்று பொருள். இறந்தபின் அடைய வேண்டிய நிலை என்று தான் அனைவரும் இதற்குப் பொருள் கூறுகின்றனர்.

ஆனால் மோட்சம் என்பது இறந்த பிறகு அடையப்பட வேண்டியது என்பது வேதத்தின் உண்மையான கருத்து அல்ல. வேதத்தின் உண்மையான கூற்றுப்படி நான்காவது புருஷார்த்தம் இறந்த பிறகு அடையும் சொர்க்கப் பதவி அல்ல, பயத்திலிருந்து விடுபடுவதையே அது குறிக்கிறது என்கிறார் விவேகானந்தர்.

பாரதியாரின் பாடல் ஒவ்வொன்றிலும் இந்த வேதக் கருத்து ஆதார சுருதியாக ஒலிப்பதைக் கேட்கலாம்.

மோட்சம் என்பது இறந்த பிறகு கிடைப்பது அல்ல என்பதை அவர் வாக்கிலேயே கேட்போம்.
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம்
பேயுரையாமென்று இங்கு ஊதேடா சங்கம்

இத்தரை மீதினில் இந்த நாளில்
இப்போதே முத்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையில் களிப்பவர்
தூயவராம் என்று இங்கு ஊதேடா சங்கம்

கவலைப்படுதலே கருநரகம்மா, கவலையற்றிருத்தலே முக்தி என்று அவரது விநாயகர் நான்மணிமாலை விளக்குகிறது.

விடுதலை என்ற தலைப்பில் பாரதி நான்கு பாடல்கள் பாடியிருக்கிறார். நான்கில் எதுவும் அரசியல் சுதந்திரம் அடைவது பற்றியோ இறந்த பின் அடைவதாகச் சொல்லப்படும் சுவர்க்கம் பற்றியோ பேசவில்லை.

பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்ற பாட்டில் ஜாதி சமத்துவம், ஆண் பெண் சமத்துவம், ஏழை பணக்காரன் சமத்துவம், ஆண்டான் அடிமை என்ற வேறுபாடற்ற சமத்துவம் இவை தான் பேசப்படுகின்றன. சமத்துவமற்ற நிலையிலிருந்து விடுதலை பெறுவதே இதன் கருப்பொருள். எல்லாம் கடவுளின் ரூபங்கள் என்ற வேதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பாரதி இந்த சமத்துவத்தை வலியுறுத்துகிறார். இது சமுதாய வாழ்வின் விடுதலை.

மற்ற மூன்று பாடல்களிலும் பாரதி மனிதன் தன் சொந்த வாழ்வில் தானாக ஏற்படுத்திக்கொண்ட தளைகளிலிருந்து விடுதலை பெறுவதைக் கூறுகிறார்.

உயிர்க் கூட்டங்களில் மனிதன் மட்டும் தான் உணவு தேடுவதை ஒரு சுமையான வேலையாகச் செய்து கொண்டவன். தாவரங்களோ பறவைகளோ மனிதன் அளவு அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் அவற்றின் உணவுத் தேவை சொற்பமானது. உணவு தேடுவதையும் உண்பதையும் சுமையான கடமையாகக் கருதாமல் அவை மகிழ்ச்சியாகச் செயல்படுகின்றன. மரங்களும் செடி கொடிகளும் எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ என்று கேட்கிறார் பாரதி.

அவரது முக்தி இலக்கணம் சிட்டுக்குருவியினது போன்ற வாழ்க்கை தான். அது எப்படிப் பொழுது போக்குகிறது?
முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்து அன்பு செய்திங்கு
முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
வைகறையாகு முன் பாடி விழிப்புற்று
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக்குருவி போலே

சோம்பேறித்தனமாக ஒரு வேலையும் செய்யாமல் கதை பேசிப் பொழுது போக்குவது தான் முக்தி என்று பாரதி கருதுகிறாரா? அல்ல, அல்ல. அன்பு செய்து என்று ஒரு வார்த்தை போட்டிருக்கிறார் கவனியுங்கள்.

விடுதலை என்று தலைப்பிட்ட மற்றொரு பாடலில் பாரதி கூறுகிறார்,
....................பாடுபடல்வேண்டா
ஊனுடலை வருத்தாதீர், உணவு இயற்கை கொடுக்கும்
உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்
பாடுபடல் வேண்டா, ஊனுடலை வருத்தாதீர் என்று சொல்லும்போது

சோம்பேறித்தனத்தைத் தான் அவர் விடுதலை என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது. அடுத்த வரியில் தொழில் அன்பு செய்தல் என்று கூறுவதைச் சற்று சிந்தித்தால் தான் உண்மையான பொருள் விளங்கும்.

மீண்டும் விநாயகர் துதிக்குப் போவோம். அதில் கடமைகள் யாவை என்று பட்டியல் இடுகிறார். தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இறைவனைப் போற்றுதல் இந்நான்கே பூமியில் எவர்க்கும் கடமை என்கிறார். பிறர் நலம் வேண்டுதல் என்பது மற்றவர்க்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் என்று பொருள். பிறர் துயர் தீர்த்தல் என்பது அதிலிருந்து வேறானது என்பது புலனாகின்றது. அங்கு அன்பு செய்தல் என்று கூறியதைத் தான் இங்கு பிறர் துயர் தீர்த்தல் என்கிறார். இது மனத்தாலோ வாய்ச் சொல்லாலோ செய்யப்படும் பிரார்த்தனை அல்ல. இது உடலால் உழைப்பதையே குறிக்கும். தனக்காக உழைக்காமல் பிறருக்காக உழைத்தால் அது ஊனுடலை வருத்தாது. அது பாடாக, சுமையாகத் தோன்றாது. எனவே தன் உணவுக்காக, தன் சுகத்துக்காக உழைக்கும்போது தான் கவலைகளும் பயங்களும் துயரங்களும் ஏமாற்றங்களும் தோன்றும். அவ்வாறின்றி பிறருக்காக உழைப்பது கவலையிலிருந்து விடுபட வழியாகிறது. அதுவே முக்தி என்பது பாரதியின் கருத்து.

பாரான உடம்பினிலே மயிர்களைப் போல்
பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே
நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா
காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா
கால்வாய்கள் பாய்ச்சுவதிற் கலகம் வேண்டா
சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு
சிவன் செத்தாலன்றி மண் மேல் செழுமையுண்டு

ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண்டாகும்
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு
நீதியில்லாக் கள்வர் நெறியாயிற்றப்பா
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சியன்றோ

தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு இயற்கை கொடுக்கும் என்பதை மற்றொரு பாட்டிலும் தெளிவுபடுத்துகிறார்,

நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்.

இவ்வாறு ஊருக்கு உழைப்பதன் மூலம் தன்னைப் பற்றிய கவலையைத் துறந்து வாழும் வழியை அடைவது இவ்வுலகில் வாழும்போது தான் முடியும். அதைத் தான் பாரதி மண்ணுலகிலிருந்து வானகத்தைத் தீண்டுவது என்கிறார்.
 
இனி ஒரு விதி செய்வோம்

பாரதியின் கோபம் வெளிப்படும் இடங்களில் ஒன்று ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்று துவங்குகிறது. ‘தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்பதை எந்த நாளும் காக்க வேண்டிய ஒரு விதியாக அவர் விதிக்கிறார். தின்ன வரும் புலியை அன்போடு சிந்தையில் தேக்கச் சொன்ன அவர் இவ்வளவு கொடூரமாகச் சபதம் செய்தது ஏன் ?

சற்றே பின்னோக்கி, அவர் வாழ்ந்த காலத்தைப் பார்ப்போம். புகழ் பெற்ற தாது வருஷத்துப் பஞ்சம், இந்திய மக்களில் மூன்று கோடிப் பேரைப் பலி வாங்கிய கொடுமை அவர் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு தான் ஏற்பட்டது. இதன் துன்பங்கள் எல்லாம் மக்கள் கூறக் கேட்டு இளம் பாரதி மனதில் படிந்திருக்க வேண்டும். பசியின் கொடுமையை அனுபவித்தவர் தான் உள்ளபடி உணரமுடியும். பாரதியும் அதை அனுபவித்திருந்தார். கவிதையையும் நாட்டுக்கு உழைத்தலையும் தொழிலாகக் கொண்ட அவருக்குப் பரிசாகக் கிடைத்தது வறுமை தான். ஆனால் அவர் ஒரு போதும் வாடிய தன் வயிற்றுக்காகக் கவலைப் படவில்லை. அவர் வருந்தியது இந்நாட்டு மக்களுக்காகத் தான்.

கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன்

காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிகின்றாரே இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழி இல்லையே
என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயிரிட்டு இந்திய மண்ணின் சாரம் குறைந்துவிட்டது என்ற வாதத்தைப் பாரதி ஒப்புக் கொள்ளவில்லை. இந்தியா பாருக்குள்ளே நல்ல நாடு என்றும், கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு என்றும் இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணறு நிறை நாடு என்றும் கூறுகிறார்.

பின் ஏன் பஞ்சம்? நம் மக்கள் உழைக்க அஞ்சுவதாகச் சிலர் கூறுகின்றனர். ஜப்பானியரைப் போல் உழைத்தால் நாம் எங்கோ போயிருப்போம் என்பர். பாரதி இதையும் மறுக்கிறார்.

மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் நீர் பாய்ச்சாவிடினும் வகை வகையாப் புற்கள் நெற்கள் மலிந்திருக்கும் என்பார் அவர்.

ஆக, பஞ்சத்துக்குக் காரணம் வளமின்மையோ உழைப்பின்மையோ அல்ல. எல்லாம் விளைந்தும் சரியான பங்கீடு இல்லாதது தான் காரணம். உடையவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்காமல் பதுக்குகிறார்கள். அதற்கு அடிப்படையான அன்பு இல்லை அவர்களிடம். அதனால் பாரதி பல இடங்களிலும் அன்பையே வலியுறுத்துகிறார்.

மனிதரின் கடமையாக அவர் கூறும் நான்கில் ஒன்று, பிறர் துயர் தீர்த்தல். இதைச் செய்யச் சிலர் தவறுவதால் உலகில் பிறர் துடிதுடிக்கின்றனர். பஞ்சத்திலும் நோய்களிலும் பாரத மக்கள் புழுக்கள் போலத் துஞ்சத் தம் கண்ணால் கண்டும சோம்பிக் கிடக்கும் இந்நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கும் அவரது சொல்லின் வேகத்தைப் பாருங்கள்.
மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ?

இந்நிலை வளரவிட்டால் என்ன ஆகும் ? ரஷ்யப் புரட்சியைச் சுட்டிக் காட்டுகிறார். அங்கு

உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை

மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்
ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி

அன்பு கொண்டு பகுத்துண்டு வாழ்ந்தால் மேன்மையுறலாம். இன்றேல் மாகாளியின் கோபத்துக்கு இலக்காகி வஞ்சனையாளர் எல்லாம் வீழ்ந்திடுவர். எனவே நான் அழிக்காவிட்டாலும் மாகாளி இந்த சுயநல ஜகத்தை அழிக்கப் போவது திண்ணம். எனவே அன்பு செய்யுங்கள். அடுத்தவர் பசியை நீக்குங்கள். கிருத யுகம் மீண்டும் மலரும் என்கிறார் அவர். பாரதியின் கோபம் நமக்குப் புரிகிறது.

பாரதியின் அன்பு வட்டம் இந்தியாவை மட்டுமோ, மனிதரை மட்டுமோ உள்ளடக்கியதல்ல. பூமண்டலம் முழுமையும் உள்ள எல்லா உயிர்களையும் கொண்டது அது.

மண் மீதுள்ள மக்கள் பறவைகள்

விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவதேவா
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக. துன்பமும் மிடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க என்பேன். இதனை நீ
திருச்செவிக்கொண்டு திருவுளமிரங்கி
அங்ஙனே யாகுக என்பாய் ஐயனே.

“மங்கலம் நல்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். யக்ஞம் சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம். யக்ஞம் செய்பவருக்காக வேண்டுகிறோம். நமக்கு தேவதைகள் நன்மை செய்யட்டும். மனிதர்கள் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். செடி கொடிகள் மேலோங்கி வளரட்டும். நம்மிடமுள்ள இரண்டு கால் பிராணிகளுக்கு மங்கலம் உண்டாகட்டும். நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்” என்ற வேதத்தின் கூற்றே இங்கு எதிரொலிக்கக் கேட்கிறோம்.
 
தேன் வந்து பாயுது காதினிலே

பாரதியின் பிரபலமான பாட்டு, செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பது. நாவால் சுவைக்க வேண்டிய தேன் காதிலே பாய்ந்தால் அதன் இனிமையை அனுபவிக்கமுடியுமா என்று எண்ணுகிறோம்.

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்று ஒரு பாடல். வாக்கு காதினால் உணரப்படுவது. இதில் கண்ணால் காணக் கூடிய ஒளி எங்கிருந்து வந்தது என்று நமக்குச் சந்தேகம் வருகிறது.

குழந்தைக் கதை என்ற தலைப்பில் ஒரு கதை- பாரதி எழுதியது. பெயர் தான் குழந்தைக் கதை. விஷயம் என்னவோ கனமானது தான், முதல் உலகப் போரைப் பற்றியது. அதில் ஒரு வரி, மேலே பருந்துகளும் கருட பக்ஷிகளும் வட்டமிட்டு வெயிலைத் தின்று கொண்டுலாவின, என்று வருகிறது. வெயிலையாவது தின்பதாவது.

இப்படிப் பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றி மாற்றிச் சொல்வது, ஒரு கவித்வ உத்தி மட்டுமல்ல. அதன் பின்னணியில் ஒரு பெரிய தத்துவம் உள்ளது.

பாரதியின் பதஞ்சலி யோக சூத்திர விளக்கத்தைப் பார்ப்போம். யோக சாஸ்திரப்படி, வெளியில் தெரியும் கண் காது முதலான பொறிகளால் நாம் காட்சி கேள்வி முதலான அனுபவம் பெறுவதில்லை. மாறாக, சித்தமே காண்கிறது, கேட்கிறது, வாசனை, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவற்றை அறிகிறது. சித்தம் செயல் படாமல் இருக்கும் போது பொறிகள் தம் வேலையைச் செய்தாலும் அது நம் அறிவுக்கு எட்டுவதில்லை. மாறாக, சித்தம் ஆனந்த நிலையில் இருக்கும் போது இந்த எல்லா அனுபவங்களும் பொறிகள் இல்லாமலே கூட நிகழும்.

இதை விளக்குவது அவருடைய ஞானரதம் என்னும் கட்டுரை. கந்தர்வ லோகத்தில் பாரதி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அனுபவத்தை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்.

கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னை அறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான ஸங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினை உடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமை ஆகமாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக் கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று யோசித்தேன். எனது அறிவிற்குப் புலப்படவில்லை.

இந்த இனிய ஒலி என்னைப் பரவசப்படுத்துகிறதே, அது எங்கிருந்து வருகிறது என்றேன். மேலே பார் என்றனள். நீல வானத்தில் சந்திரன் தாரகைகளிடையே கொலு வீற்றிருக்கக் கண்டேன்.


அவருடைய கிரணங்கள் என்றாள்.


சந்திர கிரணங்களா, சந்திர கிரணங்களுக்கும் இந்த மனோகரமான தொனிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன்.


சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓசை இயற்கை. அது இந்த உலகத்தில் நன்றாகக் காதில் விழுகிறது. உங்கள் மண்ணுலகத்திலே ஜனங்களுடைய செவியில் விழுவது கிடையாது. ஆனால் அங்கே கூட அருமையான கவிகளின் செவியில் இந்த ஓசை படும் என்றாள்.


இவ்வாறு பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றிச் சொல்வதற்கு வேத ஆதாரம் உண்டா? உண்டு. யஜுர் வேதம் 1.1.5.11 ‘ஒளியுள்ள சொற்களைச் சொல்லுக’ என்கிறது. நம்மைப் போன்ற சாமானியர்கள் சொல்லின் ஒலியை மட்டுமே அறிவோம். ரிஷிகள் அதன் ஒளியையும் அறிந்திருந்தார்கள். மருத்துகள் (புயற் காற்று) சூரியனைப் போலப் பிரகாசிக்கிறது என்கிறது ரிக் வேதம் 1.64.2. இன்னும் நிறைய உண்டு.

வேத ரிஷிகளைப் போல் பாரதியின் சித்தமும் எப்பொழுதும் பரம்பொருளின் நினைவிலேயே, ஆனந்த நிலையில் தோய்ந்திருந்தது. அதனால் அவருக்குப் புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் சாத்தியமாயிற்று. தீக்குள் விரலை வைத்த போது நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கிடைத்தது. காற்றுத் தேவனின் உடல் வயிர ஊசி போல ஒளி வடிவமாகக் காட்சி தந்தது.
 
கற்பக விநாயகக் கடவுளே போற்றி

பாரதி எல்லா இந்து தெய்வங்களையும் அல்லாவையும் ஏசுவையும் போற்றிப் பாடியுள்ளார் என்றாலும் விநாயகர் ஒருவருக்குத் தான் அவர் நான்மணிமாலை பாடிச் சூடியுள்ளார். விநாயகரைக் குறிப்பதாகக் கருதப்படும் “கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே” என்ற வேத மந்திரத்தின் பொருளையும் அதில் மறவாமல் குறிப்பிடுகிறார்.

வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருகஸ்பதியும் பிரமனும் யாவும்
தானேயாகிய தனி முதற் கடவுள்
என்று வாழ்த்துகிறார்.

பிற்காலத்தில் ஏற்பட்டதாயினும் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் விநாயகர் துதியாகிய சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்ற சுலோகத்தையும் அவர் மறக்கவில்லை.

வெள்ளாடை தரித்த விட்டுணு என்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழுதேத்திப் பணிவது முறையே.

மேலும் விநாயகரை ஆர்ந்த வேதப் பொருள் காட்டும் தீபன், வேதச் சுடர், வேத காரணன் என்றும் போற்றுகிறார். விநாயகர், ஸத்தெனத் தத்தெனச் சதுர் மறையாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள். எல்லா மதங்களுக்கும் பொதுவான முழுமுதற் கடவுளுக்கு உள்ள பல பெயர்களில் விநாயகர் என்பதும் ஒன்று என்பது தான் பாரதியின் கொள்கை. அவர் விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனை நாமாவளியைப் பார்த்தால் தொல் பழம் தெய்வங்கள் உள்பட எல்லா தெய்வங்களின் பெயர்களும் அதில் வந்து விடுகின்றன.

பரம் பொருளேயோ பரம் பொருளேயோ
ஆதி மூலமே அனைத்தையும் காக்கும்
தேவ தேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மாமகளேயோ

இன்னொரு பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற மத தெய்வங்களின் பெயர்களையும் சூட்டுகிறார்.

விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச் சடை முடியனாய்
பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா யெஹோவா எனத் தொழுதன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

புராணங்களை ஒட்டி விநாயகரைக் கறையுண்ட கண்டன் மகன், சக்தி மகன், அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகன் என்று அழைத்தாலும் அவர் புராணக் கதைகளின்படி விநாயகரைப் பெருவயிறன் (லம்போதரன்) என்றோ, அருணகிரியார் பாடியபடி ‘மிக்க அடிசில் கடலை பட்சணமெனக் கொள் அருள் விக்கின சமர்த்தன்’ என்றோ அக்காலப் பள்ளி மாணவர்களின் தோத்திரப் பாடலின்படி ‘நூறு குடலை மாம்பழம் நொடிக்கும் அளவில் அமுது செய்ய வல்ல பிள்ளாய்’ என்றோ ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. ஏன்? எல்லாம் வல்ல கடவுளுக்குப் பெருந் தீனி தின்பது சிறப்புச் சேர்க்கும் ஒரு செயலா? கடவுளை உணவு உண்பதில் சமர்த்தன் என்று குறிப்பிட்டால் வழிபடுவோருக்கும் அதுவே வழக்கமாகி விடும் என்று பாரதி கருதி இருப்பார்.

மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மூர்த்தி மனதுக்கு ஏற்றதாக இருக்கிறது. சிவனின் உக்ர தோற்றத்தில் ஒருவருக்கு ஈடுபாடு ஏற்படுகிறது என்றால் மற்றவருக்கு நாராயணனின் பள்ளி கொண்ட தோற்றம் அமைதி தருகிறது. குறும்பு செய்யும் கண்ணன் ஒருவனுக்கு மகிழ்ச்சி தந்தால் மற்றவனுக்குக் கோபத்துடன் வேலேந்தும் முருகன் ஆறுதல் தருகிறான். சோகமே வடிவான ஏசு ஒருவனுக்கு ஈடுபாடு தருமானால் இன்னொருவனுக்கு ஆனந்தமே வடிவான கணபதி மகிழ்ச்சி தருகிறார். விநாயகரைப் பார்த்து பாரதி பாடுகிறார் கேட்போம்.

எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனதிற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும்போது நின் மவுன
நிலை வந்திட நீ அருள் செய்வாய்
கனக்கும் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாயே

‘யத்பாவயஸி தத் பவஸி’ என்ற பழமொழிப்படி எந்த உருவத்தை மனதில் தியானிக்கிறோமோ அந்த உருவத்தின் தன்மைகள் நம்மிடம் படியும். ஆம். அசையாமல் உட்கார்ந்திருக்கும் கணபதியை நாம் வழிபட்டால் நமக்கும் அவருடைய மவுன நிலை சித்திக்கும். மனதில் சலனமோ மதியில் இருளோ தோன்றாது. தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாமல் இருக்க முடியும். ஏது நிகழினும் நமக்கென்ன என்று இருக்க முடியும். சலனமற்ற மனமும் தெளிவான புத்தியும் தானே நாம் பெறக் கூடிய வரங்களுள் மிகச் சிறந்தவை.
 
நம்புவதே வழி

இஸ்லாமிய வேதம் குர் ஆன் பல இடங்களில் அல்லா மேல் ஈமான் கொள்ளுங்கள் என்று நம்பிக்கையை வலியுறுத்துகிறது. கிருத்துவர்களின் பைபிளும் பல இடங்களில், விசுவாசியுங்கள் என்று நம்பிக்கையை முதன்மைப்படுத்துகிறது. ஆனால் இந்து மதமோ அந்த அளவுக்கு நம்பிக்கையை வலியுறுத்துவதாகத் தெரியவில்லை.

வேதம் தனி மனித சிந்தனைக்குக் கொடுத்துள்ள சுதந்திரம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. வேதத்தை ஒப்புக் கொள்ளாதவரைப் பாவி என்றோ காபிர் என்றோ இந்துக்கள் இகழ்வதில்லை. மாறாக புதிய சிந்தனைகளை வரவேற்று அவற்றின் உண்மைகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்லனவற்றை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரே வேதத்திற்கு சங்கரர் ஒரு விதமாகவும் ராமானுஜர் ஒரு விதமாகவும் மத்வர் ஒரு விதமாகவும் விரிவுரை எழுதியுள்ளனர். அவரவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை ஏற்றுக் கொள்ளவும் அதன்படி நடக்கவும் பிறப்புரிமை பெற்றவன் இந்து. கடவுள் இல்லை என்று சொல்பவனையும் வேத மதம் வெறுப்பதில்லை. இன்றைய பெரியார் மட்டுமல்ல, முற்காலத்தில் வாழ்ந்த ஜாபாலி என்ற முனிவரின் கருத்துகளும், சார்வாகர்கள் என்றழைக்கப்பட்ட நாஸ்திகர்களின் கருத்துகளும் இந்து சமய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

வேதம் நம்பிக்கையை வலியுறுத்துகிறதா? சாதாரண மக்கள் வழக்கில் நம்பினவருக்கு நடராசா, நம்பாதவருக்கு யமராசா என்று சொல்லப்படுகிறது என்றாலும் வேதத்தில் எந்த இடத்திலும் இந்த வேதம் சொல்வதை நம்புங்கள். நம்பினால் தான் கடைத்தேறுவீர்கள், இல்லாவிட்டால் நரகத்துக்குப் போவீர்கள் என்ற மிரட்டல்கள் காணப்படுவதில்லை.

இத்தகைய சூழ்நிலையில் பாரதியின் இரு வரிகள் நமக்குப் புதிராக உள்ளன. முதலாவது, சக்தியைக் கும்பிடுமாறு தன் மனத்துக்கு அறிவுறுத்தும் இடத்தில்

நம்புவதே வழி என்ற மறை தனை
நாம் இன்று நம்பி விட்டோம் என்கிறார்.

இன்னொரு பாடலில்

நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக நலம் பெறலாம்
என்கிறார்.

வேதம் நம்பிக்கையை வலியுறுத்துவதாக அல்லவா கூறுகிறார். உண்மையா? தேடினால் கிடைப்பது சிரத்தை பற்றிய ஒரு சூக்தம். ரிக்வேதம் பத்தாவது மண்டலம் 151வது சூக்தம்.

சிரத்தை என்பது அடைய வேண்டிய லட்சியத்தில் உறுதியும் அதை அடைவதற்கான வழியில் முழு முனைப்புடன் ஈடுபடுவதையும் குறிக்கும். செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் தன் இறுதி நோக்கத்துக்குப் பயன்படுமா என்று ஆராய்ந்து பயன்படக்கூடிய எந்த சிறு செயலையும் விடாமல் செய்வதும் பயன் தராத எந்த சிறு செயலையும் செய்யாதிருப்பதும் இதில் அடங்கும். இதில் நம்பிக்கை எங்கே வந்தது?

ஆதி சங்கரர் சிரத்தை என்பதற்கு நம்பிக்கை என்றே பொருள் தருகிறார். இறைவன் ஒருவர் உண்டு என்பதில் சந்தேகம் இல்லாத தெளிவான மனத்துடன் இருப்பதே நம்பிக்கை என்கிறார். அதுவே சிரத்தையின் அடிப்படை. குறிக்கோளில், அதாவது இறைவனிடத்தில், நம்பிக்கையும் அதை அடையும் வழியாகிய, குருவின் வார்த்தைகளில் நம்பிக்கையும் தான்.

ஒரு உதாரணம் பார்ப்போம். ஒருவன் ஒரு புதிய ஊருக்குச் செல்ல விரும்புகிறான், ஒருவரிடம் வழி கேட்கிறான். அவன் அதில் நம்பிக்கையோடு பயணம் செய்ய வேண்டும். கொஞ்ச நேரம் சென்ற பின் இந்தப் பாதை சரியானது தானா? நமக்குச் சொன்னவர் சரியாகத் தான் சொல்லி இருப்பாரா? நாம் போய்ச் சேருவோமா என்று ஐயுறுதல் கூடாது.

நம்பிக்கை இன்றி, சந்தேகம் தன்னை ஆட்கொள்ள அனுமதிப்பவன் அழிவான் என்கிறது கீதை. (ஸம்சயாத்மா விநச்யதி)

இந்த சிரத்தை, அதாவது குறிக்கோளில் உறுதியும் செயல்பாட்டில் சந்தேகம் மற்றும் குறை இல்லாத வினைத் திட்பமும், ஒரு தேவியாக உருவகப்படுத்தப்பட்டு வேதத்தில் போற்றப்படுகிறது. அதன் சுருக்கமான மொழி பெயர்ப்பு இதோ:-

சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. அதைச் சொற்களால் போற்றுவோம். சிரத்தையே, கொடுப்போருக்கும் கொடுக்க விரும்புவோருக்கும் விரும்பிய பலன்களைக் கொடுப்பாயாக. (சிரத்தையோடு செய்தால் விரும்பிய பலன் கிடைக்கும்.) தேவர்கள் அசுரர்களுடன் இட்ட போரில் சிரத்தையைக் கைக் கொண்டனர். வெற்றி பெற்றனர். (நோக்கத்தில் வெற்றி பெற வேண்டுமென்ற) இதய தாகத்தால் சிரத்தை அடையப்படுகிறது. சிரத்தையால் செல்வம் அடையப்படுகிறது. சிரத்தையைக் காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் வணங்குகிறோம். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக் கொடு.

இந்தக் கருத்துகளைத் தான் பாரதி ஒரு வரியில் கூறுகிறார்.
நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு.

சிரத்தையை, அதற்கான இதய தாகத்தை, அடைவது எப்படி? அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல சிரத்தையை அடைய சிரத்தை என்னும் அம்பிகையைத் தான் வணங்க வேண்டும். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக் கொடு என்று தான் அந்த ரிக் வேத சூக்தம் நிறைவடைகிறது. பாரதியும் அதையே எதிரொலிக்கிறார்.

அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிக நலம் பெறலாம்.

நம்புவதே வழி என்ற மறை தனை
நாம் இன்று நம்பி விட்டோம்.

This brings to an end this serial, which has the unique distinction of being a soliloquy with no feedback from readers. However I am glad that it has been viewed by 1674 people so far and more will see it in future.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top