அந்தக்காலம் நன்றாகத்தான் இருந்தது.
ஒரு தடவை ரேடியோவில் கேட்டாலே சினிமாப்பாட்டு மனப்பாடம் ஆச்சு.
பேருந்துக்குள் கொண்டுவந்து தினத்தந்தி மாலைமுரசு விற்பார்கள். தினத்தந்தியில் வருடக்கணக்காக கன்னித்தீவு விடாமல் படித்தோம்.
மிதிவண்டி வைத்திருந்தோம். பஞ்சர் ஒட்டத்தெரிந்திருந்தது.
பள்ளிக்கு செருப்பு போடாமல் போனோம். முள் குத்தினால் சேப்டி பின் ஆல் எடுத்துவிடுவோம்.
எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.
ரஜினி, கமல், KB படம் ரிலீஸ் என்றால் ஒரு மாசம் அலசுவோம்.
பேருந்தில் எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும்.
கல்யாண வீடுகளில் பாய் போட்டு சாப்பாடு.
கபில் தேவின் விளையாட்டு ஐந்து நாட்கள் டெஸ்ட் மாட்சில் fantastic.
குமுதம் விகடன் கல்கி வந்தவுடன் தொடர்கதை முதலில் படிக்க அக்கா தங்கைகளுடன் அடிபிடி சண்டை.
ரேடியோவில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலி பரப்பு கேட்டது சுகமான அனுபவம்.
காலை வேளையில் வீடுகளின் முன் பெண்கள் கோலாமிடுவதில் போடும் போட்டி ரசிக்க சுகமாயிருந்தது.
மாட்டுவண்டி பிடித்து பக்கத்து ஊரில் டென்ட் கொட்டகையில் சினிமாவுக்கு போக 2 நாள் முன்பே திட்டமிடுவோம்.
தீபாவளி பண்டிகை கொண்டாட ஒருமாதத்துக்கு முன்பே எதிர்பார்ப்பொடு தயாராவோம்.
புது ஸ்கூல் யுனிபார்ம் தான் சிலருக்கு தீபாவளி ட்ரெஸ்.
வானொலி நாடகங்களை இரவு வேளைகளில் ரசித்து கேட்போம்.
எல்லாரும் படித்தது அரசுப் பள்ளீகளில் இலவசமாகத்தான்.
நெடுஞ்சாலைகளில் எப்போதாவது பேருந்து வரும்.
மழை நின்று நிதானமாக பெய்யும்
தமிழாசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.
வேலை கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்தவன் எந்தக்குடும்பத்திலும் பாரமாக கருதப்படவில்லை.
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.
க்ரிக்கெட் பற்றி வாக்குவாதம் செய்து அடி பிடியாக முடிந்ததுண்டு.
சந்தைக்குப்போக பத்து ருபாய் போதும்
அம்மா பக்கத்தில் படுத்து நிம்மதியாக உறங்கினோம்.
கொளுத்தும் வெயிலில் செருப்பு இல்லாமல் நடந்தோம்.
முடிவெட்ட 2 ருபாய் தான். சவரத்துக்கு 50 பைசா
பருவப்பெண்கள் பாவாடை தாவணி உடுத்தி தேவதைகளாக வலம் வந்தனர்.
சுவாசிக்க நல்ல காற்று இருந்தது. குடிதண்ணீருக்கு காசு கொடுத்து வாங்கவில்லை.
தெருவில் சிறுமிகள் பாண்டி ஆடுவர். நாங்கள் நுங்கு வண்டி ஒட்டுவோம்.
டாக்டர் வீட்டுக்கே வருவார். ரோஸ் கலரில் மிக்சர் தருவார். இரண்டு நாட்களில் உடம்பு குணமாகிவிடும்.
காதலிப்பதில் ஒரு த்ரில் இருந்தது.
சினிமாப்பாட்டு புத்தகம் கிடைக்கும்
எழுத்தாளர் சுஜாதா கதைகள் சிக்குனு இருக்கும். சாண்டில்யன் கதைகள் எங்களை கரிகாலனாக்கியதுண்டு.
மயில் இறகுகள் புத்தகத்துக்குள் குட்டி போட்டன-நிஜமாகவே.
ஐந்து ரூபாயை தொலைத்து விட்டு அப்பாவிடம் அடிவாங்கியதுண்டு.
மூன்றாம் வகுப்பு முதல் தான் ஆங்கிலம்
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் ட்ரவுசர்.
பி.யூ.சியில் வேட்டி.
பக்கத்து வீட்டு மீனுக்குட்டி குடுத்த அந்த ஒரே ஒரு முத்தம் ஏழு ஜன்மத்துக்கும் மறக்காது.
மொத்தத்தில் மரியாதையும் சந்தோஷமும் நிறையவே இருந்தது
தொலைந்துபோனவை நம் நாட்கள் மட்டுமல்ல. நம் சுகங்களும் மகிழ்ச்சியும் கூடத்தான்.