அன்னை .....
நல்ல அழகு, நுண்ணறிவு, ஓயாத சுறுசுறுப்பு, எல்லாவற்றையும் கற்பதில் ஆர்வம்,
புதியவை எல்லாம் முயற்சி செய்யும் முனைப்பு .... இன்னும் எத்தனையோ சொல்லலாம்.
மிகச் சில பெண்களே இவரைப்போல உலகில் பிறப்பார். சிறு வயதில், தன்னை
ஈன்றவளை இழந்ததால், அவளை ஈன்றவள் பாதுகாப்பில் வளர்ந்தவர். சகோதரர்கள்
அனைவரிடமும், ஒரே தங்கையிடமும் அதிகப் பாசம் காட்டுவார்! எனக்கு நினைவு
தெரிந்த நாளிலிருந்து நான் கண்டது, அயராது உழைக்கும் அன்னையைத்தான்! அவரின்
கோபமும் மிகப் பிரசித்தம். ஆனால், எல்லோருக்கும் உதவும் மனது!
சின்ன வயது நினைவுகள் சில..... 'தொப்பிப் பெட்டி' என்று ஒன்று! ஓர் அண்டாக்
கொள்ளளவு! தொப்பி போல மூடி உள்ளதால் அந்தப் பெயர். பூட்டும் வசதி உண்டு...
ஆனால், என்றும் பூட்டப்படாதது! அது நிறைய, தேன் குழல் அல்லது நாடா முறுக்கு
செய்து அடுக்குவார்; போக வரச் சாப்பிடுவோம். இப்போது நினைத்தாலும் பகீரதப்
பிரயத்தனமாகத் தோன்றுகிறது. தாமரைக் கிழங்கு வாங்கி வந்து, சுத்தம் செய்து, சின்னச்
சின்ன வட்டமாய் வெட்டி, பெரிய அண்டாவில், மஞ்சள் பொடி, உப்பு, காரம் சேர்த்த நீரை
ஊற்றி, நறுக்கின துண்டங்களைப் போட்டு வேகவைத்து, வெய்யிலில் உலர்த்தி......
அப்பப்பா.... நாங்கள் ஐவரும் எடுபிடிகளாக ஓடி வலம் வந்தபோதும், அம்மா செய்த
வேலைகளை நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது!
மைசூருக்கு நாங்கள் சென்றபோது, மகாராஜாவின் அரண்மனைக்குள் அனுமதி மறுத்தான்
காவலாளி, கன்னடத்தில் கத்திக் கொண்டு! நாங்கள் அனைவரும் தயங்கி நின்றபோது,
அம்மா முன்னே சென்று, 'ஹிந்தி மாலூம்?' என்று கேட்டுவிட்டு, A K 47 போல ஹிந்தியில்
பொரிந்து தள்ள, காவலாளி அம்பேல்... அம்மா, அரண்மனை முழுக்க சுற்றிப் பார்த்து
வந்தார்!
தைரியத்தின் மறு உருவம் அம்மா. ஒரு முறை கிணற்றில் நல்ல பாம்பு விழுந்துவிட,
அனைவரும் அதைக்கண்டு அலறிவிட்டோம்! அப்பாவுக்கு அன்று பொள்ளாச்சியில் வேறு
வேலை வர, பாம்பாட்டி அங்கு கிடைத்தால், அவனை நாளை வரச் சொல்லலாம், என்று
கிளம்பினார். நாங்களும் காரில் தொற்றிக்கொண்டோம்! கார் வெளியில் வருமுன்னே,
தயார் நிலையில் நிற்கும் அம்மா, அன்று வரவில்லை! வேறு என்ன? அந்தப் பாம்பை
விடுவிக்க வேண்டுமே, எங்கள் இடைஞ்சல் இல்லாது! எண்ணியபடியே, நாங்கள் திரும்பி
வருமுன், பாம்புக்கு விடுதலை! ஆம்... ஒரு கூடையில் கயிற்றைக் கட்டி, கிணற்றுக்குள்
விட்டு, பாம்பு அதில் ஏறியதும், மேலே இழுப்பாராம்; எட்டு முறைகள் பாதி
தொலைவிலேயே, மீண்டும் கிணற்றில் விழுந்த அது, ஒன்பதாம் முறை, கிணற்று
விளிம்பு வரை சவாரி செய்ய, அதை ஒரு கம்பால் தள்ளிவிட்டாராம். என்ன தைரியம்!
கேட்ட எங்கள் தூக்கம் போனது அன்று இரவு!
சென்னையில் (அன்றைய மெட்ராசில்) அப்பாவின் மாமா பெண்ணுக்குக் கல்யாணம்.
அதற்கு வந்த அம்மாவுக்கு, சம்பந்தி வீட்டில் பக்ஷணம் கொண்டுபோய் 'ஒப்பேற்றும்'
வேலை. ஏன் தெரியுமா? 'முறுக்கு' அத்தனையும் 'நொறுக்கு'!!! ஆம்... நொறுங்கிப்
போனது. குதிரை வண்டியில் பக்ஷணங்களை ஏற்றிக்கொண்டு, சம்பந்தி வீட்டிற்குச்
சென்றார், அம்மா. நயமாக அந்த மாமாவுடன் பேச, முடிவில் அவரே, 'முறுக்கை
உடைத்துத் தானேம்மா சாப்பிடறோம்! பரவாயில்லை. ருசி நல்ல இருந்தாலே போதும்!'
என்று சொல்லிவிட்டார்! மணப்பெண் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்! இது போல
எத்தனையோ நிகழ்வுகள்.....
:blah: தொடரும் ......