• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீனிவாச பெருமாள் ஏழுமலையானின் வரலாற்&a

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீனிவாச பெருமாள் ஏழுமலையானின் வரலாற்&a

ஸ்ரீனிவாச பெருமாள் ஏழுமலையானின் வரலாற்று மகிமை பகுதி_1


பாரதத்தில் நைமிசாரண்யம் என்ற காடு இருக்கிறது. நமது தேசத்தின் கிழக்குப்பகுதியில் கோல்கட்டாவுக்கும், டேராடூனுக்கும் இடையில் உள்ளது இந்தக் காடு. தற்காலத்தில் பெருமாளின் 108 திவ்யதேசங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த தேசங்களில் இதுவும் ஒன்று. இந்த காட்டையே பெருமாளாக கருதி வழிபடுகிறார்கள். திருமங்கையாழ்வார் இங்கே சென்றிருக்கிறார். இவ்வூர் பற்றி பாசுரம் பாடியுள்ளார். தற்போது இங்கே பெருமாளுக்கு கோயில் இருக்கிறது.இந்த வனத்துக்கு புராணங்களில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எவ்வித இடைஞ்சலும் இன்றி தவம் செய்ய சிறந்த இடம் எது என்று திருமாலிடம் முனிவர்கள் கேட்டனர். பெருமாள் தனது சக்கரத்தை உருட்டி விட்டு, இது எங்கே போய் நிற்கிறதோ அந்த இடமே சிறந்த இடம் என்றார். சக்கரத்துக்கு நேமி என்ற பெயர். ஆரண்யம் என்றால் காடு. அந்தச்சக்கரம் உருண்டு சென்று விழுந்த இடம் நேமிஆரண்யம் என்றானது.


பின்னர் இதுவே நைமிசாரண்யம் ஆகி விட்டது.இந்தக் காட்டில் சூதர் என்ற முனிவர் வசித்தார். இவரே புராணங் களுக்கு மூலகர்த்தா. வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களையும் மற்ற முனிவர்களுக்கு உபதேசித்தவர் இவர். இதுதவிர, எல்லா தெய்வங்களின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார்.ஒருமுறை, நைமிசாரண்யத்து முனிவர்கள் சூதமுனிவரை அணுகி, சுவாமி! தாங்கள் எங்களுக்கு, வேங்கடம் என்னும் மலையில் குடிகொண்டுள்ள சீனிவாசனின் வரலாறை உரைக்க வேண்டும், என்றனர்.சூதருக்கு மிகுந்த மகிழ்ச்சி.சீனிவாசனின் கதையைக் கேட்டால் சகல பாவங்களும் நீங்கி விடும். நீங்கள் சரியானதொரு சந்தர்ப்பத்தை எனக்கும் தந்ததுடன், உங்களுக்கும் முக்தி கிடைக்கும்.


பக்தியுடனும், கவனமாகவும் யார் இதைக் கேட்கிறார் களோ, அவர்களுக்கு மறுபிறப்பில்லை. நீங்கள் முற்றும் துறந்த முனிவர்கள். உலகவாழ்வு பற்றிய கவலையில்லாதவர்கள். எனவே, உங்கள் கவனம் சிதற வாய்ப்பில்லை. இல்லறத்தில் இருப்பவர்களும் கூட, இந்தக் கதையைக் கவனமாக கேட்டால் போதும். அவர்களுக்கு செல்வவளம் சித்திக்கும், வாழ்வுக்குப் பின் ஆனந்தமயமான வைகுண்டத்துக்கும் செல்லும் பாக்கியம் பெறுவார்கள், என்று சொல்லி கதை சொல்ல ஆரம்பித்தார்.
இந்த உலகிற்கு சீனிவாசன் வருவதற்கு காரணமே நாரத முனிவர் தான். இவர் ஓரிடத்தில் இருக்கமாட்டார். நாரம் என்றால் தண்ணீர். ஆம்... பசியாலும், களைப்பாலும் மயக்கமடையும் ஒருவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் போதும். போகும் உயிர் திரும்பிவிடும். நாரதரும் அப்படியே. கலகங்கள் செய்தாவது உயிர்களுக்கு நன்மை தந்து விடுபவர். அதனால் தான் தண்ணீர் போல் உயிரூட்டுபவர் என்ற பெயரில் அவரது திருநாமம் அமைந்தது. தேவர்களின் நல்வாழ்வுக்காக, அசுரர்களிடையே கலகத்தை உருவாக்கி அல்லது அவர்களை இக்கட்டில் சிக்க வைக்கும் உபாயங்களை சமயோசிதமாகச் செய்யும் தைரியசாலியும் கூட. பிரம்மனின் புத்திரர் இவர். எந்நேரமும் நாராயண மந்திரத்தைச் சொல்பவர்.அவர் ஒருநாள் தன் தந்தையைக் காண பிரம்மலோகம் வந்தார்.


அப்போது, இந்திரனின் தலைமையில் தேவர்களும் தங்கள் குறைகளைச் சொல்ல அங்கு வந்திருந்தனர். ஆனால், சரஸ்வதியின் வீணாகானம் கேட்ட அவர்கள் மெய்மறந்து நின்றனர்.நாரதர் பிரம்மாவிடம், தந்தையே! திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்த பிறகு பூமியில் மீண்டும் பிறக்கவில்லை. இதனால் பாவிகள் உலகத்தில் அதிகரித்து விட்டனர். இதற்கு மூல காரணம் செல்வம் சேர்க்கும் ஆசை. செல்வ ஆசை மண்ணாசையையும், பெண்ணாசையையும் தூண்டுகிறது. உலக மக்களில் நல்லவர்களைக் காப்பாற்றவும், பாவிகளைச் சீர்திருத்தவும் மீண்டும் அவர் அவதாரம் எடுத்தால் தான் பூலோகம் பிழைக்கும். எனவே, திருமாலை இவ்வுலகில் பிறக்கச் செய்வதற்குரிய கோரிக்கையை தாங்கள் தான் அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். படைத்தவருக்கு, உயிர்களைப் பாதுகாப்பதிலும் பொறுப்பு இருக்கிறதல்லவா? என்றார். பிரம்மா நாரதரிடம், மகனே! நீ கலகக்காரன் என்பது ஊரறிந்த உண்மை. இன்று தந்தையிடமே கலகம் செய்ய வந்திருக்கிறாய் போலும்! நீ சகல லோகங்களிலும் சஞ்சரிப்பவன். சகல சக்திகளையும் தவத்தின் மூலம் பெற்றுள்ளாய். நீ நினைத்தாலே சகலமும் நடந்து முடிந்து விடும். நாராயணனின் திருப்பாற்கடல் முன்னால் நாங்கள் செல்ல முடியாது.


ஜெய, விஜயர்கள் தடுத்து விடுவார்கள். பகவானின் அனுமதி பெற்று கரையில் நின்றே அவரைத் தரிசிக்க முடியும். நீ அப்படியா? அவரது திருவடி தரிசனத்தை கடலில் நின்றே காண்பவன் நீ.மேலும், உன் வாயில் நாராயண நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சக்திமிக்க உன்னாலேயே அது முடியுமே! நீயே போய் நாராயணனைப் பார், என்றார்.ஒருவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லும் முன்பு, பிறர் சொன்னதை வைத்து சொல்லக்கூடாது. அதில் முன்பின்னாக விஷயங்கள் இருக்கும். நேரில் போய் பார்த்து கேட்டறிந்தால் சரியான தகவல்களைப் பெறலாம். நாராயணனிடம் புகார் சொல்லும் முன்பு, பூலோகத்தின் நிலைமையை நேரில் கண்டறியவும், நாராயணன் அங்கு பிறப்பதற்கு ஏற்ற இடத்தையும், அவரைப் பிறக்கப்போவதை முன்கூட்டியே முனிவர்களுக்கு அறிவிக்கவும் நாரதர் பூலோகம் வந்து சேர்ந்தார்.எத்தனையோ லோகங்கள் இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டாலும், இந்த உலகத்தின் பெயரில் தான் பூ இருக்கிறது. பூ மணக்கும் தன்மையும், வாடும் தன்மையும் உடையது. மலர்ந்த பூவைக் காணும் போது, மனம் மகிழ்கிறது. இதுபோல், நல்லவர்கள் பலர் தங்கள் செயல்பாடுகளால் இவ்வுலகை மகிழச் செய்கிறார்கள். ஆனால், இதே உலகில் பிறந்த வேறுசிலரோ, தங்கள் செயல்பாடுகளால் உலகை வாடச் செய்கிறார்கள். கெட்டவர்கள் செய்யும் கைங் கர்யத்தால் உலகமே வாடத்தானே செய்கிறது! இதனால், இந்த உலகை பூலோகம் என்றார்கள்.இத்தகைய அருமை யான உலகத்தை வாழச்செய்ய வந்தார் நாரதர். மற்ற தேவர்கள் இங்கு வந்திருக்கலாமே.


அவர்கள் பூமிக்கு வராமல் இவர் இங்கு வந்த காரணம் என்ன?
 
Last edited:
பகுதி_2


ஒருவன் பசியால் மயக்கமடைந்து விட்டால், உடனே என்ன செய்வோம்? ஒரு உருண்டை சோறை எடுத்து அவன் வாயில் ஊட்டினால், அது தொண்டைக்குள் இறங்குமா? அதனால், முதலில் சிறிது தண்ணீரை அவன் முகத்தில் தெளிக்கிறோம். அவன் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்க்கிறான். உடனே சிறிது நீரை அவனுக்குப் புகட்டுகிறோம். இப்போது, அவன் பெருமூச்சு விடுகிறான். அதாவது, நிற்க இருந்த மூச்சு தண்ணீரின் தூண்டுதலால் மீண்டும் துளிர்த்தது. நாரம் என்றால் தண்ணீர். இந்தச் சொல்லில் இருந்தே நாரதர் என்ற வார்த்தை பிறந்தது. பாவம் செய் தவர்களின் ஆதிக்கத்தால், உலகம் தத்தளித்த போது உயிர் கொடுக்க வந்தவர் நாரதர்.அவர், கங்கைக்கரையில் வசித்த முனிவர்களில் தலை சிறந்தவரான காஷ்யபரைச் சந்தித்தார். அப்போது, காஷ்யபரின் தலைமையில் மிகப் பெரும் யாகம் நடந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய தபஸ்விகள் எல்லாம் இணைந்து, உலகத்தின் நலன் கருதி இந்த யாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.நாரதர் மிகுந்த ஆனந்தமடைந்தார்.


காஷ்யபரே! தங்கள் தலைமையில் நடக்கும் இந்த யாகத்தின் நோக்கம் புனிதமானது. ஆனால், எனக்கொரு சந்தேகம், என்று தன் கலாட்டாவை ஆரம்பித்தார். நாரதர் பேச ஆரம்பித்தாலே கலகம் தானே!மகரிஷியே! தாங்கள் யாகம் நடத்துகிறீர்கள் சரி...இந்த யாகத்தின் பலனை எந்த தெய்வத்துக்கு கொடுத்தால், உலகம் ÷க்ஷமமடையும் என நினைக்கிறீர்கள்! யாராவது தேவருக்கு இதை அர்ப்பணிக்கப் போகிறீர்களா? அல்லது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்களில் யாருக்கேனும் தரப் போகிறீர்களா? உங்கள் யாகத்தின் குறிக்கோள் உலக அமைதி. அதைத் தரவல்லவர் யாரோ அவருக்கு இந்த யாகத்தின் பலனை அளித்தால் தானே சரியாக இருக்கும், என்றார்.
இந்தக் கேள்வியால், காஷ்யபரே சற்று மிரண்டு விட்டார் என்றால், மற்ற மகரிஷிகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.முக்காலமும் அறிந்த முனிவரே! சர்வலோக சஞ்சாரியே! இந்தக் கேள்வியின் நாயகனான நீரே அதற்கும் பதிலும் சொல்லி விட்டால் நன்றாக இருக்கும், என்று அவர் தலையிலேயே பாரத்தைத் தூக்கி வைத்து விட்டார் காஷ்யப மகரிஷி.நாரதருக்கு சிண்டு முடிய சரியான சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.முனிவர்களே! கர்வம், கோபம், சாந்தம் என்ற மூன்று குணங்களில் சாந்தமே உயர்ந்தது.


எவரொருவர் எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல், உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறாரோ, அவர் எந்தச் செயலிலும் வெற்றி வாகை சூடுவார். அவ்வகையில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரில் யார் சாந்தகுணம் மிக்கவரோ அவருக்கே யாகத்தின் பலனைக் கொடுங்கள், என்றார்.முனிவர்கள் சிக்கிக் கொண்டனர்.அதெப்படி முனிவரே! மூன்று ரத்தினங்கள், முக்கனிகள்...இவை நம் கண் முன் தெரிந்தால் எதை வேண்டாமென்று ஒதுக்க முடியும். அனைவருமே சமவல்லமை உடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க, இதில் யார் சிறந்தவர் என்று சோதித்துப் பார்த்தால், அது நெருப்போடு விளையாண்ட கதையாக அல்லவா இருக்கும், என்றனர்.ஆமாம்...இது கஷ்டமான காரியம் தான்! ஆனாலும், உங்கள் யாகம் வெற்றி பெற வேண்டுமே! அதற்கு இந்த பரீட்சையை செய்து தானே ஆக வேண்டும். அப்படி செய்தால் தானே ஏதாவது ஒரு தெய்வம் இந்த பூமிக்கு வரும். முந்தைய யுகங்களில் தெய்வங்கள் பல அவதாரங்கள் எடுத்து பூமிக்கு வந்தனர். தர்மத்தை நிலைநிறுத்தினர். கலியுகத்தில் இறைவன் அர்ச்சாவதாரம் (கடவுள் மனிதனாகப் பிறத்தல்) செய்ய வேண்டுமென்றால், அதற்கு தகுந்தவர் யார் என்பதைத் தெரியாமல் யாகம் செய்து என்ன பலன்? என்றார்.நாரதரின் பேச்சு முனிவர் களைக் குழப்பினாலும், அவர் சொல்வதிலும் ஏதோ அர்த்தமிருப்பதாகப் பட்டது.உடனடியாக, அவர்கள் தங்களில் சிறந்த ஒரு முனிவரை இந்த சோதனைக்காக அனுப்புவது குறித்து விவாதித்தனர்.


ஒரு பெரிய மனிதரைப் பார்க்க போக வேண்டுமென்றால், அவரைச் சென்று சந்திப்பவர் சகல ஞானங் களிலும் விபரம் அறிந்தவராக இருக்க வேண்டும். அந்தப் பெரிய மனிதர் ஏதாவது தவறாகச் சொன்னால் கூட, அவரை எதிர்த்து வாதிடும் திறமையும் இருக்க வேண்டும். மனிதனின் வாழ்வியலுக்கே இப்படியென்றால், மூன்று கடவுள்களைச் சந்திக்கச் செல்பவர் மகாதிறமைசாலியாக இருக்க வேண்டுமே! அதற்குத் தகுந்தவர் பிருகு என்னும் மாபெரும் தபஸ்வி என முடிவு செய்யப்பட்டது.பிருகு முனிவர் ஆனந்தமடைந்தார்.சில தபஸ்விகளுக்கே இத்தகைய யோகம் கிடைக்கும். தங்களைத் தரிசிக்க மகா தபஸ்விகளுக்கு இறைவன் அருளும் மாபெரும் பாக்கியம் அது.அதே நேரம், இந்த பிருகு முனிவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? மகா அகம்பாவி. யாரையும் மதிக்க மாட்டார். அவருடைய தவவலிமை உயர்ந்தது தான்! ஆனால், ஆணவம் இருக்குமிடத்தில் பக்திக்கு இடமில்லையே! அவருக்கு ஆணவம் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா?


எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண் இருக்கும். ஆனால், இவருக்கு காலில் ஒரு கண் இருந்தது. அது ஞானக்கண். பிறர் வாழ்வில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே உணர்த்தும் கண். இந்தக் கண்ணைப் பெற்றதால் அவருக்கு திமிர். எல்லார் வாழ்வும் தன் கையில் இருப்பது போன்ற ஒரு நினைப்பு.நாரதருக்கு பிருகு மீது மிகுந்த அன்புண்டு. மகாதபஸ்வியான இவர், ஆணவத்தால் அழிந்துவிடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில், அவரது கர்வத்தை பங்கம் செய்யும் விதத்தில், பிருகு முனிவரே தெய்வலோகங்களுக்கு செல்லலாம் என ஒப்புக்கொண்டார். பின்னர், அங் கிருந்து விடை பெற்று, பிற லோகங் களுக்கு புறப்பட்டுச் சென்றார்.


பிருகு முனிவரும் தெய்வலோகங்களுக்கு ஆனந்தமாகப் புறப்பட்டார்.
 
பகுதி_3


பிருகு முனிவர் சத்யலோகம் சென்ற போது, அங்கே அன்னை சரஸ்வதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பிரம்மா. அனர்கள் வெள்ளை பொற்றாமரை சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர். அங்கே ஏராளமான மகரிஷிகள் அமர்ந்திருந்தனர். தேவரிஷிகள், பிரம்மரிஷிகளும் அவர்களில் அடக்கம். அனைவரும் வேதத்தின் பொருளை பிரம்மா மூலம் கேட்டுக் கொண்டிருந்தனர்.பிருகு முனிவர் சோதிக்க வந்த வரல்லவா! பிரம்மாவுக்கு கோபமூட்டினாலும், தன்னை வரவேற்கிறாரா அல்லது எடுத்தெறிந்து பேசுகிறாரா என பரீட்சை வைக்கும் பொருட்டு, பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பிரதாயத்துக்காக வணக்கம் கூட தெரிவிக்காமல், அங்கிருந்த ஆசனத்தில் மிகவும் கர்வத்துடன் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டார்.பிரம்மாவுக்கு கோபம். இந்த பிருகு வந்தான், ஒரு வணக்கம் கூட சொல்லவில்லை, எனக்குத்தான் சொல்ல வேண்டும், இங்கே அவனை விட உயர்ந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற பிரம்மரிஷிகளெல்லாம் வீற்றிருக்கிறார்கள்.


அவர்களுக்கு சொல்லியிருக்கலாம். இவனது வாய் பேசுவதற்கு காரணமான சரஸ்வதிக்கு சொல்லியிருக்கலாம். இவனை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்றெண்ணியவராய், முகத்தில் கடும் கோபத்தைத் தேக்கி, ஏ பிருகு! என் வம்சத்தில் பிறந்த நீ, பிறருக்கு மரியாதை செய்வது என்ற சாதாரண தர்மத்தைக் கூட பின்பற்றவில்லை. இப்படிப்பட்ட, உன்னால் மற்ற உயர்ந்த தர்மங்களை எப்படி காப்பாற்ற முடியும்? இங்கே இருக்கும் விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்றவர்களெல்லாம் நாராயணனையே வழி நடத்தியவர்கள். இதோ இருக்கிறாரே! அத்திரி! அவர் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய பெருமையை உடையவர். இதோ இருக்கிறாரே! ஜமதக்னி! அவருடைய மகனாக பெருமாளே அவதரித்தார்.


பரசுராமராக இருந்து இவரது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பெற்றவளையே வெட்டித்தள்ளினார். இதோ இங்கே பவ்யமாக அமர்ந் திருக்கிறாரே, கவுதமர்! அவரது மனைவியை இழிவுபடுத்திய காரணத்துக்காக இந்திரனுக்கே சாபமிட்டவர்... இப்படிப் பட்ட உயர்ந்தவர்கள் முன்னால், நீ கொசுவுக்கு சமமானவன். அப்படியிருந்தும் இந்த சபையை அவமதித்தாய், என்று சத்தமாகப் பேசினார்.பிருகுவுக்கு வந்த வேலை முடிந்து விட்டது.ஆனாலும், அவர் பிரம்மனுக்கு ஒரு சாபத்தைக் கொடுத்தார்.நான் முனிவனாயினும் மனிதன், நீயோ தெய்வம்.. அதிலும் படைப்பவன். உனக்கு பொறுமை இல்லை. நான் ஒரு தேர்வுக்காக இங்கு வந்தேன், அந்தத் தேர்வில் நீ தோற்றாய், வருகிறேன், என்று கிளம்பினார்.அடுத்து அவர், சிவலோகத்தை அடைந்தார்.அங்கே நந்தீஸ்வரர் வாசலில் நின்றார். சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் தனித்திருந்தார். வாசலில் பூதங்களும், துவார பாலர்களான காவலர்களும் பாதுகாத்து நின்றனர். நந்திதேவர் வாசலை மறித்துக் கொண்டிருந்தார்.


பிருகுவோ, இவர்கள் யாரையும் மதிக்கவில்லை. அங்கே நடந்த தியான வைபவத்தை பார்வையிட்டபடியே, அத்துமீறி புகுந்தார். நந்தியிடமோ, பிற காவலர்களிடமோ அனுமதி பெறவில்லை. சிவன் கோபத்தின் பிறப் பிடமல்லவா! தாங்கள் தனித்திருந்த போது, உள்ளே நுழைந்த பிருகுவிடம், நீ பிரம்ம வம்சத்தில் பிறந்திருந்தும் தர்மங்களை அறியாமல் உள்ளே வந்து விட்டாய். தம்பதியர் தனித்திருக்கும் போது, அங்கே செல்லக்கூடாது என்ற எளிய தர்மம் கூட புரியாத உனக்கு தபஸ்வி என்ற பட்டம் எதற்கு? இதோ! உன்னைக் கொன்று விடுகிறேன், என்றவராய் திரிசூலத்தை எடுத்தார்.ஆனால், அன்னை பார்வதி சிவனைத் தடுத்து விட்டார்.நாம் தனித்திருக்கும் வேளையில் நம் பிள்ளை தெரியாமல் வந்துவிட்டது.உலக உயிர்கள் அனைத்துமே நம் பிள்ளைகள் தானே! அதிலும், பிருகு தவத்தால் உயர்ந்தவன். எந்நேரமும் இறைநாமம் சொல்பவன். அவன் தெரியாமல் ஏதோ செய்துவிட்டான் என்பதற்காக இப்படி சூலத்தை ஓங்குகிறீர்களே என்று பிருகுவுக்கு சாதகமாகப் பேசினாள்.ஆனாலும், பிருகு இந்த சமாதானத்தைக் கண்டு கொள்ளவில்லை. அவர் வந்த வேலை முடிந்து விட்டது. கோபப்படுவது போல் நடித்து, அங்கிருந்து வைகுண்டம் சென்றார்.


ஹரி ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்னை மகாலட்சுமியின் கடாட்சத்தால் எங்கும் நவரத்தினங்களின் ஒளி வெள்ளம் பாய்ந்தது. அது ஒரு அருமையான நகரம். அந்த நகரத்தில் மாளிகைகளெல்லாம் தங்கத்தால் எழுப்பப் பட்டிருந்தன. வைகுண்டத்திலுள்ள ஒரு அரண்மனையில் மகாவிஷ்ணு துயிலில் இருந்தார். மகாலட்சுமி அவரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.பிருகு வந்தது மகாவிஷ்ணுவுக்கு தெரியும். ஆனாலும், அவன் மாயவன் ஆயிற்றே! எந்த பரீட்சை வைத்தாலும் தேறி விடுவானே! படிக்கிற குழந்தைகள் மகாவிஷ்ணுவை தினமும் வணங்க வேண்டும்.


அவர் கல்வியின் அதிபதியான ஹயக்ரீவராகத் திகழ்கிறார்.ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மகே என்ற ஸ்லோகத்தை தினமும் சொன்ன பிறகு, கேசவா...கேசவா...கேசவா என ஏழு தடவைகள் தொடர்ச்சியாக சொன்ன பிறகு கல்விக்கூடத்துக்கு கிளம்பும் குழந்தைகள் மிகப்பெரிய தேர்ச்சி பெறுவார்கள்.பெருமாள் கோயிலுக்குப் போனால் முதலில் தாயாரை வணங்க வேண்டும். அப்படி அல்லாமல், நேராகப் பெருமாளை போய் வணங்கினால் கோரிக்கை அவ்வளவு எளிதில் நிறைவேறாது.


பிருகுவோ மகாலட்சுமியைக் கண்டு கொள்ளவே இல்லை. அது மட்டுமல்ல!ஏ நாராயணா! பிரம்மலோகத் துக்கும், சிவலோகத்துக்கும் போய் அவமானப்பட்டு உன் லோகம் வந்தேன். நீயோ, எழக்கூட இல்லாமல் தூங்கிக் கொண்டிருக் கிறாய். பக்தனின் கோரிக்கைகளை கவனிக்காமல் இப்படி உறங்கினால் உலகம் என்னாவது? எழுந்திரு, என கத்தினார்.மகாவிஷ்ணு அது காதில் விழாதது போல் இருந்தார்.எல்லாரும் பகவானின் திருவடி தன் மீது படாதா என நினைப்பார்கள். இங்கே, பகவானோ பக்தனின் திருவடி தன் மீது படாதா என காத்திருந்தார். இதோ! அது பட்டுவிட்டது.
 
பகுதி_4


ஆம்... பகவானின் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு. மகாலட்சுமி எங்கிருக்கிறாள்? பெருமாளின் மார்பிலே இருக்கிறாள். தந்தையை மிதித்தது கூட மன்னிக்கத் தகுந்த குற்றம், இங்கே தாயார் மிதி பட்டிருக்கிறாள். அவளை மிதித்தது கொடிய பாவம். தாயை அவமதிப்பவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. இங்கோ, அவளை மிதிக்கவே செய்திருக்கிறார் பிருகு. அவருக்கு கண் போய்விட்டது.ஐயையோ! அப்படியானால், எல்லாருமே கோபக்கார தெய்வங்கள் தானே! கண்ணைப் பறித்துக் கொண்டாரே பெருமாள், என எண்ணி விடாதீர்கள். பெருமாள் முகத்திலுள்ள கண்ணைப் பறிக்கவில்லை.


பிருகுவுக்கு கால்களில் கண்கள் உண்டு. அது ஞானக்கண். அதன் மூலம், எதிர்காலத்தில் பிறருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் கணித்துச் சொல்லி விடுவார். இதனால், எல்லார் ஜாதகமும் தன் கையில் என்ற மமதை தான் பிருகுவின் இந்த ஆர்ப்பாட்டங்களுக் கெல்லாம் காரணம். ஆனால், எல்லார் எதிர்காலத்தையும் தெரிந்து வைத்திருந்த அவர், தன்னைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் விட்டதுதான் இப்போது இந்த அவலத்துக்கு காரணம்.ஞானக்கண் இருப்பதால் தானே பிருகு ஆட்டம் போடுகிறான். பெற்ற தாய்க்கு சமமான, உலகத்துக்கே படியளக்கிற லட்சுமி தாயாரை எட்டி உதைத்தானே! இவனுக்கு எதற்கு ஞானக்கண்! மற்றவர்கள் சொன்னார் களே என்பதற்காக தெய்வங்களை இவன் சோதித்ததற்குப் பதிலாக, அவர்களில் எல்லாரையும் இறைஞ்சி, யார் முதலில் வருகிறாரோ, அவருக்கு யாகபலனைக் கொடுப்போம் என்று முடிவெடுத்திருந்தால் இவன் ஞானி! பதிலுக்கு, ஆணவத்தால் அறிவிழந்த இவனுக்கு இதுவே தக்க தண்டனை எனக்கருதி, பெருமாள், பிருகுவின் காலிலுள்ள கண்ணை அவர் அறியாமலேயே பறித்து விட்டார்.ஆனால், ஏதும் அறியாதவர் போல் சயனத்தில் இருந்படியே, முனிவரே! மன்னிக்க வேண்டும். தாங்கள் இங்கு வந்ததை நான் கவனிக்கவில்லை.


ஐயோ! தங்கள் திருப்பாதங்கள் என்னை மிதித்த போது, என் மீதுள்ள ஆபரணங்களால் தங்கள் கால்களில் காயம் ஏதும் ஏற்பட்டதா? அமருங்கள், அமருங்கள், எனது மஞ்சத்தில் அமரும் தகுதி தங்களுக்குண்டு. தாங்கள் வந்த விபரம் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஆவன செய்கிறேன், என்று ஆறுதல் மொழி சொன்னார்.பிருகுவுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது.ஆஹா... இவரல்லவோ பொறுமையின் திலகம். இவரை எட்டி உதைத்து விட்டோமே! பதிலுக்கு இவரை யாகபலனை வாங்க வரும்படி யாசித்திருக்கலாமே! என நினைத்த போது, கண்ணைப் பிடுங்கிய இடத்தில் வலிக்க ஆரம்பித்தது.அவர் அம்மா... அப்பா... எனக் கதறினார்.அதே நேரம், இறைவனை மிதித்ததற்காக தனக்கு இந்த தண்டனையும் தேவை தான் என்றபடியே, லட்சுமி நரசிம்மரை துதிக்க ஆரம்பித்தார். மனிதனுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால், உடனே லட்சுமி நரசிம்மரை பிடித்துக் கொள்ள வேண்டும். அவரை நினைத்து லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே எனச் சொன்னால், கஷ்டம் பறந்தோடி விடும்.


தன் பக்தன், பிரகலாதானுக்கு ஒரு கஷ்டம் என்றவுடன், எங்கும் பரவிநின்ற அவர், அவன் குறிப்பிட்ட தூணில் இருந்து வெளிப்பட்டு பாதுகாத்தவர். அப்படிப்பட்ட கருணாமூர்த்தி தன் கண்ணெதிரில் சயனித்திருக்க, லட்சுமி நாராயணான அவரை லட்சுமி நரசிம்மராகக் கருதிய பிருகு, லட்சுமி நரசிம்மா! அறியாமல் செய்த தவறுக்கு என்னை மன்னிக்க வேண்டும், என்றார்.மகாவிஷ்ணு அவரிடம் சமாதானமாக, கவலை வேண்டாம் முனிவரே! பக்தனின் பாதம்பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள், என்றார்.பிருகுவும் யாகபலனை பெற பூலோகம் வரவேண்டும் என்று சொல்ல, அவ்வாறே ஆகட்டும் என பெருமாள் அருள்பாலித்தார். பிருகு புறப்பட்டார்.


மகாலட்சுமிக்கோ கடும் கோபம்.இங்கே என்ன நடக்கிறது? இந்த முனிவர் என்னை எட்டி உதைக்கிறார்? நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்களே! (முனிவரின் கண்ணைப் பறித்தது லட்சுமிக்கு தெரியாது) இவரை இதற்குள் அழித்திருக்க வேண்டாமா? நம்பி வந்த மனைவியைக் காப்பாற்றுவது கணவனின் கடமை. இந்த தர்மத்தைக் கடைபிடிக்காத உங்களுடன் வாழ எனக்கு விருப்பமில்லை. நான் பூலோகம் செல்கிறேன். என்னை அங்கு வந்து பாருங்கள், என்று சொல்லி விட்டு, சயனத்தில் இருந்து எழுந்து வேகமாக எழுந்தாள் லட்சுமி தாயார். பகவான் அவளைச் சமாதானம் செய்தார்.லட்சுமி! பொறுமைக்கு இலக்கணமான பெண்களுக்கு கோபம் வரக்கூடாது. பிருகு யார்? நம் பக்தன்! பக்தர்கள் நமது குழந்தைகள். பல குழந்தைகளை பூமிக்கு அனுப்பினோம்.


சிலர் நம்மை வணங்குகிறார்கள், சிலர் தூஷிக்கிறார்கள். நம்மை தூஷிக்கிற குழந்தைகளுக்கு தான் நாம் ஏராளமான செல்வத்தைக் கொடுக்கிறோம், அவர்களையும் கருணையுடன் பார்க்கிறோம். காரணம் என்ன! அவன் தூஷணையை கைவிட்டு, நற்கதிக்கு திரும்ப வேண்டுமே என்பதற்காகத் தான்! பிருகு, ஒரு சோதனைக் காகவே இங்கு வந்தான். அந்த சோதனையில் வெற்றி பெற நான் அவனுக்கு உதவினேன். நீயும் அவனை ஆசிர்வதிக்காமல் விட்டுவிட்டாயே, என்றார்.லட்சுமி அவரிடம், தாங்கள் சொல்லும் சமாதானத்தை ஏற்க முடியாது. கணவனிடம் என்று பாதுகாப்பு கிடைக்கவில்லை என ஒரு பெண் உணர்கிறாளோ, அதன் பின் அவனை நம்பிப் பயனில்லை. நான் தங்களை விட்டுப் பிரிகிறேன். மேலும். நீர் சந்தர்ப்பவாதி.


எந்த விஷயமாக இருந்தாலும் சமாதானம் கூறி, மாயம் செய்து தப்பித்து விடுவீர்! என்னை அவமதித்த பிருகுவைத் தண்டித்தே தீருவேன், என சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டாள்.பூலோகத்திலுள்ள ஒரு புண்ணியத்தலத்துக்கு வந்தாள். ஊரின் பெயரிலேயே பேரழகு.... ஆம்... அவ்வூரின் பெயரிலேயே ஜீவகாருண்யம் இருந்தது... அதுதான் கொல்லாபுரம்.
 
பகுதி_5


லட்சுமி ஒரு இடத்தில் இருக்கும் வரை தான் யாருக்குமே மதிப்பு... நம் வீட்டிலேயே எடுத்துக் கொள்வோமே! வேலைக்கு போகும் வரை மனைவி கணவனை கொண்டாடுவாள், பிள்ளைகள் ஒன்றாம் தேதியானால் சுற்றி சுற்றி வருவார்கள். வேலையில் இருந்து நின்ற பிறகு, பென்ஷன் வாங்கினால் ஏதோ கொஞ்சம் மதிப்பிருக்கும். ஒன்றுமில்லாவிட்டால்... கண்டு கொள்வார் யார்?லட்சுமி பிராட்டியார் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தங்கிவிட்டதால், வைகுண்டத்தின் செல்வச்செழிப்பு அகன்றது.


ஸ்ரீதேவி சென்று விட்டதால், தரித்திர தேவி உள்ளே புகுந்தாள். தேவர்களெல்லாம் கலங்கினார்கள்.அவர்கள் திருமாலிடம், பெருமாளே! தாங்கள் லட்சுமி தாயார் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து, அவர்களைச் சமாதானம் செய்து மீண்டும் வைகுண்டம் அழைத்து வர வேண்டும். தேவலோகமே வறுமைக்கு ஆட் பட்டால், செல்வம் வேண்டி வணங்கும் நம் பக்தர்களுக்கு எப்படி வாரி வழங்குவது! உலக உயிர்களுக்கு படியளக்காவிட்டால், நமக்கு எப்படி மதிப்பிருக்கும்? என்றனர்.திருமாலும், அவர்கள் முன்னால் நாடகமாட ஆரம்பித்து விட்டார். ஆமாம்..ஆமாம்...லட்சுமி இங்கிருந்து செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். பிருகுவைக் கண்டித்திருந்தால், அவள் இங்கிருந்து சென்றிருப்பாளா? பின்விளைவுகளைப் பற்றி சிந்தியாமல் இருந்து விட்டேனே, என வருத்தப்படுவது போல நடித்தவர், பூலோக சஞ்சாரத்துக்குதயாராகி விட்டார்.லட்சுமி அங்கேயே இருந்திருந்தால், பூலோகத்தில் முனிவர்களின் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்? கலியுகத்தில் நடக்கும் பாவங்களை எப்படி தடுக்க முடியும்? இந்தக் காரணத்தால், லட்சுமிக்கு கோபம் வரச் செய்த திருமால், அவளுக்கு பூலோகம் செல்லும் மனநிலையை உண்டாக்கி விட்டு, தானும் அங்கே செல்ல தயாரானார். தேவர்களே! லட்சுமி எங்கிருந் தாலும் நான் அழைத்து வருகிறேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும், என்றவர் அவள் மறைந்திருக்கும் இடத்தை தேடியலைவது போல் பல இடங்களிலும் சுற்றினார்.


சீதையைப் பிரிந்த ஸ்ரீராமன் காட்டில் எப்படியெல்லாம் தேடியலைந்தாரோ! செடி, கொடிகளிடம் எல்லாம் என் சீதையைப் பார்த்தீர் களா! என்று கேட்டு புலம்பினாரோ, அதுபோல திருமால், என்லட்சுமியைப் பார்த்தீர்களா! என்று செடி, கொடிகளிடமெல்லாம் கேட்டுக்கொண்டே நடந்தார்.எங்கு தேடியும் லட்சுமி கிடைக்காமல், ஏழு மலைகளை உள்ளடக்கிய திருமலை என்னும் மலைக்கு வந்தார். அப்பகுதியில் ஆதிவராஹர் குடியிருந்தார். திருமால் எடுத்த அவதாரங்களில் பன்றி முகம் கொண்ட வராஹ அவதாரமும் ஒன்று. வராஹமாக அவதாரமெடுத்து, பூமியைத் தோண்டி வேதங்களைக் கண்டெடுத்து பிரம்மாவிடம் ஒப்படைத்த பிறகு, அதே வடிவில் திருமலையில் அவர் குடியிருந்தார். ஆதியில் தோன்றியவர் என்பதால், அவர் ஆதிவராஹர் எனப்பட்டார்.


இதனால், திருமலையில் அவர் தங்கியிருந்த இடமும் ஆதிவராஹ ÷க்ஷத்ரம் எனப்பட்டது.இந்த தலத்தை ஆதிவராஹ நரசிம்ம ÷க்ஷத்ரம் என்றும் அழைப்பர். நரசிம்மரும் இதே மலையை ஒட்டிய அஹோபிலத்தில், தன்அவதார காலத்தை முடித்து விட்டு தங்கியிருந்தார்.திருப்பதி வெங்கடாசலபதியின் செல்வச்செழிப்புக்கு காரணமே இந்த நரசிம்மர் தான் என்ற கருத்தும் உண்டு.இங்கு வந்த திருமால், ஒரு புளியமரத்தில் இருந்த புற்றில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்து விட்டார்.திருமால் ஒருபுறம், லட்சுமி ஒருபுறம் இருந்தால் உலக இயக்கம் என்னாகும்? இதை சரிசெய்ய எண்ணினார் கலக முனிவர் நாரதர். அவர், தன் தந்தையான பிரம்மாவிடம் சென்றார்.தந்தையே! பிருகு முனிவர் செய்த சோதனையால் கோபமடைந்த லட்சுமி தாயார் இப்போது கொல்லாபுரத்தில் இருக்கிறாள்.திருமாலோ, ஆதிவராஹ ÷க்ஷத்ரத்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார்.


அவர் லட்சுமியைக் காணாமல் அன்னம் கூட புசிப்பதில்லை. இப்படியே போனால் என்ன செய்வது?முதலில் திருமாலுக்கு அன்னம் புகட்ட வேண்டும். அதற்கு தாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.
பிரம்மா உடனடியாக சிவபெருமானிடம் சென்றார். நடந்த விஷயத்தைச் சொன்னார். மேலும், பெருமானே! நாம் இருவரும் பசு, கன்று வேடத்தில் செல்வோம்.அவருக்கு பால் புகட்டி வருவோம், என்று வேண்டுகோள் விடுத்தார்.மைத்துனருக்கு ஒரு பிரச்னை என்றால், சிவனுக்கு பொறுக்குமா? இப்போதும் கூட கிராமங்களில் மைத்துனன் இருந்தால் மலையேறி பிழைக்கலாம், என்பார்கள்.இதன் பொருள் தெரியுமா?மைத்துனரான திருமால் திருமலையில் இருக்கிறார். அவரது பசி போக்க கைலாயமலையில் இருக்கும் சிவன், திருமலையில் ஏறப்போகிறார்.


இதனிடையேநாரதர் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தவத்தில் இருந்த லட்சுமி தாயாரைச் சந்தித்தார்.நாராயணா என்ற திருநாமம் முழங்க வந்த அவரை லட்சுமி வரவேற்றாள்.தாயே! தாங்கள் சிறு பிரச்னைக்காக கோபித்துக் கொண்டு வந்து விட்டீர்கள். நீங்கள் இல்லாமல் திருமாலால் ஒரு கணமாவது வைகுண்டத்தில் இருக்க முடியுமா? அவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே! தாங்கள், அவரைப் பிரிந்த ஏக்கத்தால் அவர் மனம் பட்ட பாடு தெரியுமா? அவர் உங்களைத் தேடி காடுகள், மலைகள், குகைகளில் எல்லாம் அலைந்தார்.


எங்கும் கிடைக்காமல், இப்போது திருமலையிலுள்ள ஆதிவராஹ ÷க்ஷத்ரத்தில் தங்கியுள்ளார். தங்களை எண்ணி புலம்பி அலைந்த அவர், சாப்பாடு, உறக்கம் ஆகியவற்றை மறந்து, தாங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரு புளியமரப்பொந்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். தாங்கள் அவரைக் காப்பாற்ற உடனடியாக கிளம்ப வேண்டும், என்றார்.லட்சுமிக்கு பகீரென்றது.அவசரப்பட்டு விட்டோமே என வருந்திய அவள் திருமாலைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாள்.
 

Latest posts

Latest ads

Back
Top