ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனிவரைப்பார்த்து வினவிய 16 வினாக்களில்
பதினோராவது வினா...
११. एकप्रियदर्शन: क:
எவ்வளவுகாலம் பார்த்துக்கொண்டிருந்தாலும் தெகுட்டாமல் இனிமையே செல்லும்படியான பார்வையையுடையவன் யாவன்?
சிறந்த அழகுடையவன் யாவன்? என்றவாறு.
இராமபிரானின் வடிவழகு *எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழியூழிதொறும்
அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதமே* என்று நம்மாழ்வார் அருளிச்செய்தபடி ஊழிதோறூழியோவாது பார்த்துக்கொண்டிருந்தாலும் அபூர்வக்காட்சியாகவே இருக்கும்.
இப்படிப்பட்ட அழகு குடிகொண்டிருந்ததுகணாடே வஸிஷ்டபகவான் ராமன் என்று திருநாமம் சாத்தினன். ரமயதி இதி ராம: ரமயதி என்கிற வாயுதூபதாதியினால் தேறும் வடசொல். தன்னழகைக்காட்டி ஓவாது களிக்கச்செய்பவன்.
பும்சாம்த்ருஷ்டிசித்தெபஹாரிணம் இராமனுக்கு யுவராஜபட்டாபிஷேகம் நிச்சயித்தவளவிலே இராமனைத் தன்னிடம் வரவழைத்தான்.வந்துகொண்டிருகாகிற ராமனை மன்னவன் தூரத்திலிருந்து பார்க்கும்போது அவனுள்ளம் போரித்தபடியை வான்மீகி பேசுகிறார்.
*சர்த்ரகாந்தாநநம் ராமம் அதீவ ப்ரியதர்சனம்
ரூபௌதெரூயகுணை: பும்சாம் த்ருஷ்டிசித்தாபஹாணம்*
ந ததர்ப்ப ஸமாயாந்தம் பச்யமாநோ நராதிப:*
என்றுதண்டாபூபிகா ந்யாயத்தாலே ஆண்களையே சித்தமபகரிக்கச்செய்யுமென்றால் பெண்களைச்சொல்லவும் வேணுமோ!..என்று ராமனுடைய அழகில் ஈடுபடாதாரில்லை என்கிறார்.கம்பனும் கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந்தோளினாய் என்கிறார்.
தசரத மன்னவரிடம் ராமலக்ஷ்மணர்களைப் பெற்றுக்கொண்டு போகையில் சூர்யன் அஸ்தமித்தவாறே பிள்ளைகள் உறங்கிப்போயினர்.
பிறகு பின்மாலையில் இராமனை யெழுப்புகின்ற முனிவர் கௌசல்யா ஸுப்ரஜாராமா! என்கிறார்.இதனை கௌஸல்யா ஸுப்ரஜா என்று பிரித்துப்பொருள்கொள்கையில் கௌஸல்யாதேவியானவள் நல்லபிள்ளைபெற்றவள் என்றாகிறது. ஒரேபதமாகக்கொண்டால் கௌஸல்யாதேவியின் நல்லபுதல்வனான ராமனே!என்றாகிறது. இராமா!பொழுதுவிடிந்தது எழுந்திரு என்றுசொல்லவேண்டிய சந்தர்ப்பத்தில் கௌஸல்யையைக்கொண்டாடுவது எதற்காகவென்றால்....
முனிவன் உண்ணப்புக்கு வாயைமறப்பாரைப்போலே தான் அதிணரிதாத காரியத்தை மறந்து,பெற்றவயிற்றுக்குப் பட்டங்கட்டுகிறவனாய் ஒரு திருவாட்டி பிள்ளைபெற்றபடி என்னே!* என்று கௌஸல்யையைக்கொண்டாடுகிறான். வடிவழகு படுத்தும் பாடு! என்று...
இராமன் மிதிலாபுரி திருவீதி வலம்வருங்காலத்தில் அவனைக்கண்ட மாதர்களின் தன்மையை
*தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற்கமலமன்ன
தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கைகண்டாருமஃதே
வாளாகொண்டகண்ணார் யாரே வடிவினை முடியக்கண்டார்,
ஊழ்கண்டசமயத் தன்னானுருவுகண்டாரை யொத்தார்*
என்றுகூறுகின்றார்.
இராமனது ஓரோரவயத்தின் அழகைக் கண்டவர்கள் மற்றோரவயத்தில் கண்செலுத்தமாட்டாதவர்களாயினர் என்றுசொன்னவிதனால் திவ்யமங்களவிக்ரஹ சௌந்தர்யம் தெரிவிக்கப்பட்டது.