• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

1800 ஆண்டுக்கு முந்தைய தமிழகக் கோவில்கள்

Status
Not open for further replies.
1800 ஆண்டுக்கு முந்தைய தமிழகக் கோவில்கள்

tpk-temple-silpi.jpg


Picture of Tirupparankundram drawn by Silpi for Ananda Vikatan

1800
ஆண்டுக்கு முந்தைய தமிழகக் கோவில்கள்
தமிழர்கள் மிகவும் தெய்வ பக்தி உடையவர்கள். திருக் குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலேயே பத்து குறள்களில் முத்து முத்தாகக் இறை வழிபாட்டைக் கோர்த்து வைத்துவிட்டார். அது மட்டுமல்ல, பத்து குறள்களில் ஏழு குறள்களில் இறைவனின் பாதங்களில் (தாள், அடி) நமஸ்காரம் செய்தும் எழுதிவிட்டார். உருவ வழிபாட்டுக்குரிய விக்ரகங்கள் அவர் கண் முன்னர் இருந்ததால்தான் இப்படி பாத நமஸ்காரம் செய்யும் 7 குறள்களை எடுத்த எடுப்பிலேயே எழுதிவிட்டார்.


இவருக்கு முன்வந்த தொல்காப்பியரோ, வேத கால தெய்வங்களான இந்திரன் (வேந்தன்) வருணன், விஷ்ணு (மாயோன்), ஸ்கந்தன்/ சேயோன் (சிவப்பு நிறமானவன்) ஆகியோரே தமிழர்களின் தெய்வங்கள் என்று அடித்துச் சொல்லிவிட்டார்.
பல பாடல்களில் இறைவனின் வாகனங்களையும், கொடிகளையும் நக்கீரர், காவிரிப் பூம்பட்டிணத்து காரிக்கண்ணனார் ஆகியோர் சித்தரிப்பதால் கட்டாயம் சிலைகளுடன் கூடிய கோவில்கள் இருந்திருக்க வேண்டும். ஐந்து ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை, --காரைக்கால் அம்மையார் முதல் சுந்தரர் வரை-- ஊர் ஊராகச் சென்று பாடிய தலங்களே சுமார் 300 தலங்கள் ஆகும். இவர்களுக்கு முன் வாழ்ந்த மாணிக்கவாசகர் கூறும் சில தலங்கள் என்ன வென்றே கண்டுபிடிக்க முடியவில்லை. ஆழ்வார்களும் நூற்றுக்கும் மேலான தலங்களைப் பாடிவிட்டனர். இப்படி 400, 500 இடங்களில் புகழ்பெற்ற கோவில்கள் இருந்து, அவர்களை ஊர் ஊராக பாத யாத்திரை செய்ய வைத்தது என்றால், அந்தக் கோவில்கள் அவர்களுக்கும் முன்னரே பல காலமாக இருந்திருக்க வேண்டும்.


சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் அறு படை வீடுகளைக் காண்கிறோம். பரிபாடலில் தாமரை வடிவில் அமைந்த மதுரை நகரின் மத்தியில் கோவில் இருந்ததைப் படிக்கிறோம். ஆக 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் வாழ்வில் கோவில்கள் இரண்டறக் கலந்துவிட்டன.

இதோ பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் கோவில் பட்டியல்:
“பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்” (சிலம்பு)

“ அமரர் தருக் கோட்டம் வெள்யானை கோட்டப்
புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க் கோட்டம் வேற் கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறப்பணையான் வாழ் கோட்டம்
நிக்கந்தன் கோட்டம் நிலாக் கோட்டம்” (சிலம்பு)


பூம்புகார் எனப்படும் புகாரில் இருந்த கோவில்கள்:
1.பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்= சிவ பெருமான் கோவில்
2.அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயில் = முருகன் கோவில்
3.வால்வளை மேனி வலியோன் கோயில் = பலராமன் கோவில்
4.நீலமேனி நெடியோன் கோவில் = கண்ண பிரான் கோயில்
5.மாலை வெண்கொடை மன்னவன் கோயில்= இந்திரன் கோவில்
6.அமரர்தருக் கோட்டம்= கற்பகத் தரு கோட்டம்
7.வெள்யானை கோட்டம்= ஐராவதம்/யானை கோவில்
8.புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம்= பலதேவன்
9.பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம்= சூரிய தேவன் கோவில்
10.ஊர்க்கோட்டம்= ஊர் காவல் தெய்வமக் கோவில்
11.காமவேள் கோட்டம்= மன்மதன் கோவில்


12.வேற்கோட்டம்= முருகன் கோவில்
13.வச்சிரக் கோட்டம்=இந்திரனின் வஜ்ராயுதக் கோவில்
14.புறப்பனையான் வாழ் கோட்டம்= ஐயனார் கோவில்
15.நிக்கந்தன் கோட்டம் = அருகன் கோவில்
16.நிலாக் கோட்டம்= சந்திரன் கோவில்
இவை அனைத்தும் சிலப்பதிகாரத்தில் காணப்படுபவை.


17 முதல் 22 வரை சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் அறு படை வீடுகள் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (செந்தூர்), திரு ஆவினன் குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோராடல்(திருத்தணி) , பழமுதிர்ச்சோலை( அழகர் கோவில்)

alagarkoil.jpg

Picture of Alagar Koil drawn by Silpi for Anada Viaktan magazine

23.மதுரை நகர் கோவில்

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீறுர் பூவின்
இதழகத்தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட்டனைத்தே அண்ணல் கோயில் (பரிபாடல்)


பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வெண்குடை மதுரை நகரின் கோயிலை வலம் வரும்போது மட்டும் தாழ்வாக இருக்குமாம். பிராமணர்கள் வாழ்த்தும் போது மட்டும் அவன் தலை தாழுமாம் (புறநானூறு பாட்ல 6, காரிகிழார்)


பணியியர் அத்தை நின்குடையே; முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலம் செயற்கே!
இறைஞ்சுக, பெரும, நின் சென்னி; சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! (புறம்.6)

இது தவிர கொல்லிப் பாவை முதலிய தெய்வங்கள் பற்றிய குறிப்புகளும், குமரிக் கடற்கரை தெய்வம் பற்றிய குறிப்பும் சங்க இலக்கியத்தில் உள்ளன.


கொடிகள் , வாகனங்கள் பற்றிய எனது கட்டுரைகளையும் படிக்கவும்:

1.சங்க இலக்கியத்தில் வாகனங்கள்
2.Flags of Ancient Indian Kings
3.Hindu Vahanas in Kalidasa and Tamil Literature


(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்: இந்தக் கட்டுரையை வேறு இடத்தில் பயன்படுத்துவதானால் ‘பிளாக்’-கின் பெயரையோ கட்டுரையாளர் (லண்டன் சுவாமிநாதன்) பெயரையோ வெளியிடுங்கள். பெயர் இல்லாமல் தங்கள் கட்டுரை போல வெளியிடுவது--தமிழுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் செய்யும் துரோகம் ஆகும்)
 
Dear Vijaya
Thanks for reading and finding time to post a comment.
I wish I translate all my articles in English. But I couldn't do it.
Still there are hundreds of topics to cover.
I will try.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top