• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A temple built for 1000 years!

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்!

திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.

தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன.

திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது.

இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணா மலையார் ஆலயத்தின் பழமை சிறப்புகள், நமக்கு மேலும் அதிக அளவில் துல்லியமாக கிடைத்திருக்கும். சங்கநாட்டு மன்னன், காலச்சூரி மன்னன் ஆகியோரும் திருவண்ணாமலையார் அருளை கேள்விப்பட்டு நிறைய பொன்னும், பொருட்களையும் தானமாக கொடுத்துள்ளனர்.

இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளில் இருந்து திருவண்ணாமலை ஆலயம் முதலில் எப்படி தோன்றியது, எப்படி வளர்ச்சி பெற்றது, யார்-யாரெல்லாம் கோவிலை கட்டினார்கள் என்ற உண்மை ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால், இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

அடி, முடி காண முடியாதபடி, ஆக்ரோஷமாக, தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும், “இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்?” என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன், மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4-ம் நூற்றாண்டில் கருவறை, செங்கல்லால் கட்டப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது.

6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது.

9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது, திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817-ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10-ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள்தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள்.

அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது. 11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின. முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான்.

1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது.

12-ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம் நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா, கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி, வாரி வழங்கினார்கள்.

14-ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340-ம் ஆண்டு முதல் 1374-ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.

15-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணா மலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான்.

16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராய ருக்கு, திருவண்ணாமலை கோவில் மிக, மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றி அமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர்தான்.

அவர் மற்ற மன்னர்கள் போல ஏதோ ஒன்றிரண்டு திருப்பணிகள் மட்டும் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் ‘கிருஷ்ணராயன்’ என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.

1529-ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர், கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார்.

இதற்கிடையே குறுநில மன்னர்களும், சிவனடியார்களும் சிறு, சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பே கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது.

கோபுரங்கள் அனைத்தும் 1370-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னர்கள் மட்டுமல்ல... மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் போட்டி போட்டு செய்த திருப்பணிகள்தான் திருவண்ணாமலை தலத்தை நோக்கி மக்கள் அலை, அலையாக வர உதவி செய்தது.

14-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது. என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது.

கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் மகத்தானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும், சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179-ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும்.

மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும், பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. இன்று நாம் திருவண்ணாமலை ஆலயத்தை வியந்து, வியந்து பார்க்கிறோம் என்றால் அதற்கு இந்த இரு மன்னர்களிடம் இருந்த அண்ணாமலையார் மீதான பக்தியே காரணமாகும். எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்ததுதான்.

திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார், அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார்.

அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார். ஒரு மகன், தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அண்ணாமலையார் செய்து வருகிறார்.

Thiruvannamalai Temple.jpg
 

Latest ads

Back
Top