• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Aani Ayilyam

மாறன் நேர் நம்பியும் !
மாறன் அடி பணிந்து உய்ந்தவரும் !!

நாளை ஆனி ஆயில்யம்,
ஸ்ரீ ராமாநுஜரின் மானசீக/பரமாசாரியர் ஸ்ரீஆள வந்தாரின் அற்புதச்சீடர், ஸ்ரீமாறனேரி நம்பியின் அவதார திருநட்சித்திரம்.

அவரது தனியன்:

"யாமுநாசார்ய ஸச்சிஷ்யம்,
ரங்கஸ்தல நிவாசிநம்,
ஞானபக்தியாதி ஜலதிம்,
மாறனேரி குரும்பஜே"

'யாமுநாசார்யரின் ப்ரியசிஷ்யர்,
ஸ்ரீரங்கம் பெரிய கோயில் நித்யவாசி,ஞான,பக்திக்கடல் ஆகிய மாறனேரி நம்பி என்னும் ஆசார்யரை பூஜிக்கிறேன்'

ஆழ்வார்கள்/மற்ற ஆசார்யர்கள் திருநட்சி
த்திரங்களை ஸ்ரீ ராமாநுஜர் வைபவங்க
ளோடு, ஒப்பிட்டுக் கொண்டாடும் நாம் இன்று மாறனேரி நம்பி வைபவங்க
ளையும் அப்படியே அநுபவிப்போம்.

1.மாறன் பெயர் சூடிய மஹான்கள்.

மாறனேரி நம்பி நம்மாழ்வாரைப் போல் எங்கும், எதிலும் எம்பெருமானை அனுபவித்து இருந்ததாலும், நம்மாழ்வாரின் குணங்களோடு வாழ்ந்ததாலும் இவரை மாறன்-நம்மாழ்வாருக்கு நேரானவர் என்னும்படி 'மாறன் நேர்'-மாறனேரி நம்பி என்று அழைக்கப்ப்பட்டார்.

ராமாநுஜருக்கு ஆழ்வாரின் திருவாய் மொழியில் இருந்த அதீத அனுபவத் தாலும்,ஆழ்வாரின் திருவடி நிலைகளாக அவர் போற்றப் பட்டதாலும்,அமுதனார் அவரை "மாறன் அடிபணிந்து உய்ந்தவர்"என்று பாடுகிறார்.
உடையவரின் ஆசார்யர் திருமாலை யாண்டான் அவருக்குச் 'சடகோபமுனி/சடகோபன்(நம்மாழ்வார்) பொன்னடி'
என்னும் திருநாமத்தையும் சூட்டினார்.

2.மண்ணின் மகத்தான மகான்களின், திருநாமம் சூட்டிக் கொண்ட ஊர்கள்.

மாறனேரி நம்பி பாண்டிய நாட்டைச் சேர்ந்த 'புராந்தகம்' என்னும் கிராமத்தில் அவதரித்தார்.அந்த ஊர் தான் மாறனேரி நம்பியின் பெயரை ஏற்று,தற்போது சிவகாசிக்கு அருகில் உள்ள மாறனேரி என்னும் ஊர் என்று சொல்கிறார்கள்.

ராமாநுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரின் பழைய பெயர் பூதபுரி;பூதூர் என்றும் அழைக்கப்பட்டது.பூதகணங்கள் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்க பெருமாளை வேண்டி இங்கு தவம் இருந்தனர்.பெருமாள் "ஆதி கேசவப் பெருமாளாக" அவர்களுக்குப் பிரத்யட்சம் ஆனார்.அவர் ஆதிசேஷனை அழைத்து அங்கு ஒரு குளம் வெட்டச் சொன்னார். அந்தக் குளத்தின் புனித தீர்த்தத்தில் பூதகணங்களை நீராடச் சொல்லி அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார் பெருமாள்.பூத கணங்களின் சாபம் போக்கிய நல்லூர் பூதூர்.அங்கு குளம் வெட்டிய ஆதிசேஷனின் அவதாரமாக பிற்காலத்தில் அவதரித்தார் ராமாநுஜர்.அவர் அவதரித்த பேறு பெற்றதால் 'பூதூர்', "ஸ்ரீபெரும் பூதூர்"
(புதூர்) ஆயிற்று.பெரிய ஜீயர்/பெரிய ஆசார்யர்-ஜகத்துக்கே ஆசார்யரான ராமாநுஜரைப் பெற்றதால் 'பெரும்' பூதூர்.
உடையவர் என்னும் பெருஞ் செல்வந்தரை(உபய விபூதிகளுக்கும் நாயகர்),கைங்கர்ய ஸ்ரீ என்னும் கைங்கர்யச் செல்வரைப் பெற்றதால்,
"ஸ்ரீ பெரும் பூதூர்" ஆயிற்று.ராமாநுஜர் அவதாரம் செய்ததால் அந்த ஊருக்கே
ஸ்ரீ/அறம்/தர்மம்/பெருமை சேர்த்த
உடையவருக்கும் ஸ்ரீபெரும்புதூர் பெயரால்'பெரும்புதூர் மாமுனி' 'பூதபுரீஸ்வரர்' என்னும் பெயர்கள் உண்டு.

3.'இராஜ பிளவை'ஏற்ற சீடரும்,
'இராஜ சிம்மாசனம்'ஏற்ற சீடரும்:


ஸ்ரீ ஆளவந்தார் இராஜபிளவை என்னும் முதுகுநோயால் பெரிதும்அவதிப்பட்டார். அவர் நோயால் துன்புற்றதால்,அடிக்கடி சீடர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தார்.ஒரு நாள் மாறனேரி நம்பி மடத்துக்குச் சென்று, ஆசார்யர் ஆளவந்தாரைச் சேவித்தே ஆக வேண்டும் என்று வேண்டி அவரைச் சேவித்தார்.அப்போது நம்பி அவரிடம்"எந்தத் தகுதியும் சிறிதும், இல்லாத அடியேனுக்கு தேவரீர் நல் உபதேசங்கள் செய்து உயர்ந்த மோட்ச உபாயம் தந்து அருளினீர்கள். இன்று அடியேன் தேவரீரிடம் உள்ள ஒரு சிறந்த வஸ்துவைவேண்டுகிறேன்;அடியேனு
க்குத் தந்தருள வேண்டும்"என்றார்.
"எது வேண்டுமானாலும்கேள் தருகிறேன்"
என்றார்ஆசார்யர்.உடனே இவர்
"தேவரீரிடம் உள்ள இராஜபிளவை நோயைப் பிரசாதமாகத் தரவேண்டும்" என்றார்.இதைக் கேட்டு அதிர்ந்த ஆளவந்தார்"அதை எப்படித் தரமுடியும்.மேலும் அது கொடியநோய், அந்தக் கொடுமை உமக்கு வேண்டாம்" என்று மறுத்துவிட்டார்.மாறனேரி நம்பி,
ஆளவந்தார்ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத் துக்கு, ஆற்றும் அளப்பரிய கைங்கர்யங்
களுக்கு, நோய் இடையூறாக இருக்கக் கூடாது என்று பலவாறாக மன்றாடினார்.
அந்த நோயைத் தமக்குத் தராவிட்டால், அப்போதே உயிரை மாய்த்துக் கொள்வதாகக் கூறினார். வேறு வழியில்லாத ஆளவந்தாரும் உரிய மந்திரங்களை உரைத்துத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்."ஆசார்ய மஹாபிரசாதம்"என்று பெற்றுக் கொண்டார் நம்பி!!.இராஜபிளவையும் ஆளவந்தாரை விட்டு , மாறனேரி நம்பியின் திருமேனிக்குக் குடி புகுந்தது! நம்பி நோயுடன் மூன்று மாதங்கள் மிகுந்த வேதனைப்பட்டார்.தம் ஆசார்யர் ஆளவந்தார் திருநாமத்தைச் ஜபித்துக்கொண்டேயிருந்தார்.ஆசார்ய கிருபையால் மூன்று மாதம் கழித்து பூரண குணமடைந்தார்.

ராமாநுஜர்,தம் மானசீக ஆசார்யர் ஆளவந்தார் விரும்பியபடி, அவருக்குப் பின் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைமை ப்பீடத்தை-இராஜ சிம்மாசன
த்தை ஏற்றார்.அவர் விட்டுச் சென்ற மூன்று முக்கியமான கைங்கர்யங்களைச்செவ்வனே செய்து முடித்தார்.ஒருவகையில் பார்த்தால்,
இந்தக் கைங்கர்யங்களையும் மாறனேரி நம்பி போல் கேட்டுப்பெற்றார்.

ஆளவந்தார் விட்டுச்சென்ற சிம்மாசன த்தை ஏற்கவந்த ராமாநுஜருக்கு அரங்கன், மிகப்பிரம்மாண்டமான இராஜ சிம்மாசனமான"லீலாவிபூதிக்கும் ,நித்யவிபூதிக்கும் உடையவர்"என்பதையே
வழங்கினார்.

4.மண்ணை, மஹாபிரசாதமாக ஸ்வீகரித்த மஹநீயர்கள்:

ஒருநாள் ஆளவந்தார் தம் சீடர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது,ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டி
ருந்த ஒருவர்,சேற்று மண்ணைஎடுத்து உண்பதைப்பார்த்து அவரை அழைத்து ஏன் மண்ணை உண்கிறீர் என்று கேட்டார்.
அவர் "சுற்றியுள்ள எல்லாப் பொருட்களுமே எம்பெருமான் படைத்தவையே;அவையெல்லாம் எம்பெருமானின் பிரசாதங்களே,எனவே தமக்கு "சேறும்" எம்பெருமானின் பிரசாதமான "சோறாக" இருக்கிறது" என்றார்.
மேலும்,"இந்த உடல் மரணத்திற்குப் பின் மண்ணுக்குள் செல்கிறது.அந்த மண்ணையே உண்டு பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடலைப் பேணுகிறேன்" என்றார்.

இவரது உயர்ந்த சிந்தனையைக் கண்டு உகந்த ஆளவந்தார் அவரைத் தம் சீடராக்கி தம்முடன் அழைத்துச் சென்றார்.
அந்தச் சீடரே நம் மாறனேரிநம்பி!!!

ராமாநுஜர் ஒருநாள் ஸ்ரீரங்கம் வீதி வழியாக செல்லும்போது, அங்கு
சிறுவர்கள் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தனர். மணலில் கோவில் கட்டி, அதில் மணல்பெருமாளை உருவா க்கி மண்ணையே தீர்த்தமாகவும்,
பிரசாதமாகவும் கொண்டு திருவாரா
தனையும் செய்தார்கள்.அங்கு வந்த ராமாநுஜரைப் பார்த்த சிறுவர்கள்"ஜீயர் ஸ்வாமிகளே !பிரசாதம் பெற்றுக் கொள்ளுங்கள்"என்றனர்.
உடையவரும் அவர்களின் மணல் பெருமாளுக்கு தண்டம் சமர்ப்பித்து,
"அடியேன்,ஸ்வாமி"என்று வணங்கி நின்றார். சிறுவர்கள் கொடுத்த மண்பிரசாதத்தை ஸ்வீகரித்துக் கொண்டார்!!!

5. பவித்ர மங்கள த்ரவியமான சீடர்/சீடரின் பவித்ர மங்களத்தை உணர்த்திய ஆசார்யர்:

ஆளவந்தார் தம் மடத்துக்கு ஒரு புதிய திருமாளிகை கட்டிமுடித்து, ஒரு நல்ல நாளில் கிரகப் பிரவேசம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.மாறனேரி நம்பி தாழ்ந்த குலத்தைச்(பஞ்சம வர்ணம்) சேர்ந்தவர் ஆதலால், தாம் கிரகப்பிரவேசம் ஆனபின் மாளிகைக்குள் செல்லத் தகுதியற்றவர் என்று நினைத்துக் கொண்டு,கிரகப்பிரவேசத்துக்கு முதல்நாள்(இன்னும் சில பணிகள் பாக்கியிருக்கும் நிலையில்) உள்ளே சென்று பார்த்து வந்தார்.இதை அறிந்த சில அந்தண சீடர்கள், ஆளவந்தாரிடம் மாறனேரி நம்பி புதிய மாளிகைக்குள், சென்று அபச்சாரம் செய்து விட்டார் என்று புகார் செய்தனர்.இதைக் கேட்ட ஆளவந்தார் பெரிதும் மகிழ்ந்து,பரம பாகவத உத்தமரான மாறனேரி நம்பி தம் பொன்னடிகளைச் சாற்றியதே அந்தத் திருமாளிகைக்கு உயர்ந்த கிரகப்பிரவேசம் என்றார்.
மறுநாள் செய்யவிருந்த ஹோமம்/பூஜைகள் எல்லாவற்றையும் நிறுத்தச் சொல்லிவிட்டார்.சிறந்த கிரகப்பிரவேசம் ஆகிவிட்டது என்று அனைவருக்கும் தெரிவிக்கும்படியும் கூறினார்.

ராமாநுஜர் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த காலத்தில்,நித்யமும் காலையில் காவிரி ஆற்றுக்கு நீராடச் செல்கையில்,தம் அத்யந்த சீடர்கள் ஆழ்வான்/ஆண்டான் ஆகியோரின் தோள்களில் கையிட்டுக் கொண்டு செல்வார்.நீராடித் திரும்பி வரும்போது பிராமணரல்லாத, மல்லர் குலத்தைச் சேர்ந்த பிள்ளை உறங்கா வில்லி தாசர் தோள்களில் கையிட்டுக் கொண்டு வருவார்.இது அங்கிருந்த சில பிராமண சீடர்களுக்குப் பிடிக்கவில்லை.
அவர்கள் ராமாநுஜரிடம் அவர் அப்படிச்
செய்வது அபச்சாரம் அல்லவா என்றனர்.உறங்காவில்லி தாசரின் பத்தரைமாற்றுக் குணங்களை அனைவரும் அறிந்து போற்றும் வண்ணம் சில நிகழ்வுகளை நடத்தினார் உடையவர்.தமக்கே பிராமணர் என்னும் செருக்கு ஒரு துளியும் வந்து விடக்கூடாது, என்பதற்காகவே உறங்காவில்லி தாசர் தோள்மீது கைவைத்து வந்ததாகச்சொன்னார்.
அதனால் உறங்காவில்லி தாசர் "ராமானுஜபர்ஷவேதி"(பர்ஷவேதி--உரசினால் கல்லையே தங்கமாக்கும் வேதி உலோகம்) என்று கொண்டாடப் படுகிறார்.

6.மாறன் அருளித்தந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹமும்,மாறனேரி நம்பி வடித்துத் தந்த ஆசார்ய விக்ரஹமும்:

நம்மாழ்வாரிடம்,மதுரகவி ஆழ்வார் தம் திருவாராதனைக்கு ஆசார்ய விக்ரஹம் வேண்டும் என்று பிரார்த்திக்க,ஆழ்வார் தாமிரபரணி ஆற்றுத் தீர்த்தத்தை எடுத்துக் காய்ச்சினால் விக்ரஹம் கிடைக்கும் என்றருளினார்.அவ்வாறு மதுரகவியாழ்வாருக்குக் கிடைத்த முதல் விக்ரஹமே "பவிஷ்யதாசார்யர் ராமாநுஜர்" விக்ரஹம்.(ஆழ்வார் திருநகரி சதுர்வேதி மங்கலத்தில் எழுந்தருளி உள்ளார்).இரண்டாம் முறை தீர்த்தத்தைக காய்ச்சிய போது நம்மாழ்வார் விக்ரஹம் கிடைத்தது.
அதே போல,ஆழ்வார் நாதமுனிகளுக்க்கு நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களை, அருளித் தந்த போது,பவிஷ்யதாசார்யர் ராமாநுஜர் விக்ரஹத்தையும் தந்தருளி னார்(திருக்கோஷ்டியூரில் சேவிக்கலாம்).
இந்த இரண்டு விக்ரஹங்களும் எம்பெருமானார் அவரிப்பதற்கு பல ஆயிரம்/நூறு ஆண்டுகளுக்கும் முன்பே
தோன்றின !!

மாறனேரி நம்பி தம் ஆசார்யர் ஆளவந்தார் விக்ரஹத்தை,மண் கொண்டு சிருஷ்டித்தார்.தம் திருமாளிகையில் எழுந்தருள்வித்து திருவாராதனை செய்து வந்தார்.
பின்னர்,பெரிய நம்பிகள்,அவரிடம் இருந்து பெற்று ஆராதனை செய்து
வந்தார். இந்த விக்ரஹம் ஆளவந்தார் காலத்திலேயே சிருஷ்டிக்கப்பட்டது.

7.மகத்தான மாறனேரி நம்பி மூலம்,
மஹாபூரணர் மகிமையை,உணர்த்திய ராமாநுஜர்.

மாறனேரி நம்பி தம் அந்திமக்காலத்தில் மிகவும் நோய்சாற்றி,தம்முடைய தேவைகளுக்குப் பிறர் துணையை அண்டி வாழவேண்டிய நிலையில் இருந்தார்.அவர் குலத்தைக் கருத்தில் கொண்டு,யாரும் அவருக்கு உதவமுன் வரவில்லை.ஆனால் மிகச் சிறந்த அந்தணகுலச் சிரேஷ்டர்,மஹாபூரணர் என்று போற்றப்பட்ட பெரியநம்பி ஸ்வாமிகள் (ராமாநுஜருக்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்து வைத்த ஆசார்யர்),எல்லா உதவிகளும் செய்தார்.அவரைக் குளிப்பாட்டி,
மருந்திட்டு சிசுருஷை செய்தார்.அவரும் அவர் திருக்குமாரத்தி அத்துழாயும் மாறனேரி நம்பிக்கு வேண்டிய உணவு வகைகளைப் பக்குவமாகச் சமைத்து அவர் இருக்கும் இடத்துக்கு எடுத்துச் சென்று கொடுத்தனர்.அவர் தம் அந்திம தசையில் "ஆளவந்தார் உகந்த அடியேனது திருமேனியை அவைஷ்ணவர்களான எனது உறவினர்கள் ஸம்ஸ்ஹரிக்கும்படி விட்டு விடாதீர்கள்--புரோடாசத்தை
நாய்க்கிடாதே கொள்ளும்--"என்று பெரியநம்பிகளிடம் பிரார்த்தித்தார்.
சிறிது காலத்தில்,மாறனேரிநம்பி பரமபதம் எய்தினார்.அவருடைய சரமதிருமேனிக்கு செய்யவேண்டிய அந்திம ஸம்ஸ்காரங்களை பெரியநம்பி ஸ்வாமியே செய்தார்.

இவையெல்லாம் சுமார், 950 ஆண்டுகளுக்கு முன்னால் நிலவிய, கட்டுக்கோப்பான ஆச்சார பிராமண சமுதாயத்தில்,மிகப்பெரிய புரட்சி யாகும்.எனவே பெரியநம்பிகளை பிராமண சமுதாயத்திலிருந்து ஜாதிப்பிரதிஷ்டம் செய்து விலக்கி வைத்துவிட்டனர்.ஸ்ரீரங்கம் பெரிய கோவிலுக்குள்ளும் வரக்கூடாது என்று தடை விதித்து விட்டனர். ராமாநுஜர் பெரியநம்பிகளிடம் அவர் ஏன், இப்படி
(பிராமண சமுதாய வழக்கத்துக்கு விரோதமாக) செய்தார் என்று கேட்டார்.(உடையவர் பெரிய நம்பி அவ்வாறு செய்ததே மிகச் சிறந்த கைங்கர்யம் என்பதை நன்கு அறிந்திருந்தார். ஆனாலும் நம்பிகளின் மேன்மையை உலகோருக்கு,உணர்த்தவே இந்த வினாவை எழுப்பினார் !!)

பெரியநம்பிகள்"பாகவத கைங்கர்ய
த்துக்கு நாம் வேறொருவரை நியமிக்க முடியாது.நாமே தான் செய்து முடிக்க
வேண்டும்.அதுமட்டுமல்லாமல்
ஸ்ரீராமர் ஜடாயு என்னும் பறவைக்கு அந்திம கைங்கர்யங்கள் செய்தார். அடியேன் ராமரைவிட உயர்ந்தவன் அல்ல; மாறனேரி நம்பியும் ஜடாயுவை விடத்தாழ்ந்தவர் அல்ல.விதுரரைக் காட்டிலும் மாறனேரி நம்பி சிறியவரா?அடியேன் தர்மரை விடப் பெரியவனா? எனவே அடியேன் செய்ததில் எந்தத் தவறும் இல்லை.மேலும் நம்மாழ்வார் திருவாய் மொழியில் "பயிலும் சுடரொளிமூர்த்தியை"(3-7),
"நெடுமாற்கடிமை செய்வேன் போல்(8-10) பதிகங்களில்
பாகவத சேஷத்துவத்தைப் பற்றி மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார் நம்மாழ்வார்.
அது வெறும் தத்வார்த்தம் மட்டும்அன்று. வெற்றுக் கடல்ஓசையும் அல்ல.நாம் ஆழ்வாருடைய தெய்வீக வார்த்தையைப் பெரிதும் பின்பற்ற வேண்டும்" என்றார்.
செவியுற்ற எம்பெருமானார் அவருக்குத் தண்டம் சமர்ப்பித்துச் சேவித்தார்.அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக சேஷத்துவத்தின் எல்லைநிலமான பாகவத சேஷத்துவத்தை அற்புதமாக நடைமுறைப் படுத்தியுள்ளார் என்று அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.

இந்த வைபவத்தை பூர்வாசார்யர்கள் மிகவும் உகந்து கொண்டாடியுள்ளார்கள்:

ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
ஸ்ரீவசநபூஷணம்
"மாறனேரி நம்பி விஷ்யமாகப் பெரிய நம்பி உடையவருக்கு அருளிச்செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது"(234)

ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்ய ஹ்ருதயம்:
"மிலேச்சனும் பக்தனானால், சதுர்வேதிகள் அநுவர்த்திக்க,அறிவு கொடுத்துக் குல தெய்வத்தோடு ஒக்க,
பூஜை கொண்டு........மூவரில் முற்பட்டவர்(ஆளவந்தாரின் சிஷ்யர்களின் மூன்று "நம்பி"களில்--பெரிய நம்பி,திருக்கோஷ்டியூர் நம்பி,பெரிய திருமலை நம்பி) சந்தேகியாமல்,ஸகஜரோடே புரோடாச மாகச் செய்த புத்ரக்ருத்யமும்......"(85)

மாறநேர் நம்பி வாழித்திருநாமம்:

"ஆனிதனில் ஆயில்யம் அவதரித்தான் வாழியே !
ஆளவந்தார் திருவடிகள் ஆச்ரயித்தோன்
வாழியே !
மாநிலம் எதிராசர் மனம் வாழ்வித்தோன் வாழியே !
மதிள் அரங்கமதில் வாழ்ந்தருள்வோன் வாழியே !
தேனமரும் தென்மொழியின் சிறப்பறிந்
தோன் வாழியே !
திகழ் ஞான பக்திகளால் சேர்ந்திருப் போன் வாழியே !
வானவரில் பொருவரிங்கு மகிழ்ந்து
வந்தோன் வாழியே !
மாறனேறி நம்பி இணை மலரடிகள் வாழியே !!!

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
1.மாறனேரி நம்பி.
2.ஸ்ரீரங்கம் உடையவர் சந்நிதியில்
தம் ஆசார்யர்,ஆளவந்தாருடன் மாரனேரி நம்பி.
3.பெரிய நம்பிகள்.
4.ராமாநுஜர்,உடையவர் சந்நிதி,ஸ்ரீரங்கம்.

1626076680522.png

1626076687372.png

1626076694124.png


1626076702032.png
 

Latest ads

Back
Top