தமிழ் தலைப்பு, ஆங்கிலத்தில் எழுத்துக்கள் இருந்தாலும்! எனவே, தமிழில் எழுதுகிறேன்.
எங்கள் ஊரில் கொலு!
என் சிறு வயதில், எங்கள் கிராமத்தில் (ஆனைமலை), வைக்கும் கொலு பொம்மைகள், நினைவில்
நிழலாடுகின்றன! எத்தனை சந்தோஷ நேரங்கள் அவை! நிறைய வீடுகளில், கண்ணில் படும் பெட்டிகள், பெஞ்சுகள்
எல்லாம் படிகள் போல அமைந்து, வெள்ளைத் துணிகளால் (வேஷ்டிகள் பல அலமாரியில் காணாமல் போகும்!)
போர்த்தி மூடப்பட்டு, கொலு பொம்மைகளைத் தாங்கத் தயாராகிவிடும். 'ரெடிமேட்' கொலுப் படிகள் இல்லாத
காலம் அது! சில பணக்காரர்கள், ஆசாரியின் உதவியால், மரத்தில் செய்து வைத்திருப்பார்கள். ஆற்று மணலையும்,
களி மண்ணையும் அள்ளி வந்து, படிகளின் முன்பாகத் தரையில் கொட்டி, அதில் எண்ண அலைகளுக்கு ஏற்ப,
பார்க்கும், பீச்சும், பழனி மலையும், திருப்பதி மலையும் என, பலவும் உருவாகும். அட்டாணி (ஓ! இந்த சொல்லைக்
கேட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன!) என்னும் பரணில், சிறுவர்கள், சிறுமிகளை ஏற்றிவிட்டு, கொலு
பொம்மைகளை இறக்கி, அதில் ஓராண்டு வாசனை மணக்கும் செய்தித் தாள்களைப் பிரித்து எடுத்து, துடைத்து,
அடுக்க ஆரம்பிப்பார்கள்! பூரண கும்பமும், புது உடை உடுத்திய மரப்பாச்சி பொம்மைகள் இரண்டும், முதலில்
படிகளில் ஏறும்!
எல்லா வயது சிறுமிகளுக்கும், மிகவும் கொண்டாட்டம். ஏனென்றால், பட்டுப் பாவாடைகள் தினமும் உடுத்தக்
கிடைக்கும். குட்டிப் பசங்களுக்கும் கொண்டாட்டமே! ஏனென்றால், கிருஷ்ணர், ராமர் என்று பல வேஷங்களைப்
போட்டு, 'மஞ்சள் குங்குமத்திற்கு' மாமிகளை அழைக்க, அக்காக்களுடன் அனுப்புவார்கள்! ஊரே விழாக் கோலம்
பூண்டிருக்கும். வண்ண வண்ண உடைகளுடன் சிறுமிகளும், வேஷங்களுடன் சிறுவர்களும் தெருக்களில் உலவ,
மாமிகள் பட்டுப் புடவைகள் சரசரக்க நடக்க, தம் இசைத் திறமையை சங்கீதம் கற்ற, கேட்ட, குழந்தைகளும்,
பெரியவர்களும் காட்ட, மிகவும் ஆனந்தமாக இருக்கும். சிலர் பாடினால், எப்போது நிறுத்துவார்களோ என்றும்
தோன்றுவது உண்டு! எங்களிடம் சில மாமிகள், 'நேயர் விருப்பம்' போலப் பாட்டுக்களைப் பாடச் சொல்லி, கேட்டு
ரசிப்பதும் உண்டு. அந்தக் காலத்தில் ஹிட் பாட்டுக்கள், 'மாமவது ஸ்ரீ சரஸ்வதி', 'பஞ்சா ஷட் பீட ரூபிணி',
'ஸரசிஜநாப ஸோதரி' என்பவையே! . பாடினாலும், பாடாவிட்டாலும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமத்துடன்
சுண்டலும், ரவிக்கைத் துணியும் தருவார்கள், இப்போதுதான், பிளாஸ்டிக் கூடைகள், தட்டுகள், டப்பாக்கள்,
பித்தளைக் கிண்ணங்கள் என்று ரவிக்கைத் துணிக்குப் பதிலாகத் தருகின்றார்கள்.
மாலை வேளை ஆகிவிட்டால், கொலு வைத்த வீடுகளை, ஏழைச் சிறுவர், சிறுமியர் ஆக்கிரமிப்பார்கள்! கல்கி
பேப்பர்தான் சரியான சைஸ், சுண்டல் கட்ட; பெரியதாக இருக்குமே! சில மாத கல்கி இதழ்கள், சுண்டலுக்காக
சேமிக்கப்படும்! ஐந்து மணிக்குள் பூஜை முடித்து, சுண்டல் பொட்டலங்கள் போட்டுவிட வேண்டும். சில சிறுவர்கள்,
இரண்டு கைகளையும் நீட்டிக் கேட்கும்போது, மனம் சஞ்சலப்படும், அவர்களின் ஏழ்மையை நினைத்து! சுண்டல்
தீர்ந்துவிட்டால், இருக்கவே இருக்கிறது பொரி கடலை; அள்ளிக் கைகளிலே கொடுக்க வேண்டியதே!
கோவில்களில், அம்மனுக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரம் செய்வார்கள். இதற்கென்று சிறப்பு
நிபுணர்களை, பொள்ளாச்சியிலிருந்து அழைப்பதும் உண்டு! தாம் 'வேண்டிக்கொண்ட' புடவைகளை, அம்மனுக்கு
நவராத்திரி நாட்களில் கொடுத்து அணிவிப்பார்கள். தங்கள் 'கட்டளை' என்று சொல்லி, கோவில்களில் பூஜைக்கும்,
பிரசாதத்துக்கும் பணம் கொடுப்பவர்களும் உண்டு.
சென்னைக்கு வந்தபின், அத்தனை 'மஜா' இல்லை என்றே சொல்லலாம். பலர் வீடுகளிலும், நவராத்திரி ஒரு 'status
symbol ' போல ஆகிவிட்டது! பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்பவர்கள் குறைவுதான். ஆனால், போட்டி எதில் இருக்கும்
என்றால், அவரவர் வைத்துக் கொடுக்கும் பொருட்களின் பட்டியலில் மட்டுமே! நவாவரணக் கிருதிகள்
தெரிந்தவர்கள் 'க்ரூப்' பல உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் எல்லாக் கிருதிகளையும் பாடி,
பாடியவர்களுக்கு, சாப்பாடோ அல்லது சிற்றுண்டியோ விநியோகித்து, அதன் பின், வெற்றிலை இத்யாதி வசதிப்படி
வழங்குவது நடக்கிறது. சில பணக்காரி மாமிகள், பாடுபவர்களை அழைத்துப் பாடச் சொல்லி, அவர்களுக்குப்
புடவைகள் வைத்துக் கொடுப்பதும் நடக்கிறது.
ஒரு முக்கியமான விஷயம் மறந்துவிட்டேனே! சில நாளிதழ்கள், தங்கள் அருகாமையில் உள்ள வீடுகளுக்கு,
'கொலு Contest' வைப்பார்கள். சிறந்த மூன்று கொலுகளுக்கும் பரிசுகள்; மற்றும் ஆறுதல் பரிசுகளும் உண்டு!
நீர் மேல் கோலம், நீர் உள் கோலம், ரங்கோலி என்று வரைந்து அசத்துவார்கள்!
எப்படி இருந்தாலும், என் சிறு வயது நினைவுகள் போல இவை அத்தனை இனிமை இல்லை என்றே சொல்லுவேன்!
:thumb: