யார் துறவி?

உலகினைத் துறந்தனர் இருவர்;
உறவில் கணவன் மனைவியர்.
கானகம் ஒன்றில் இருவரும்
ஏகும்போது கண்டான் கணவன்,
மின்னும் வைரக்கல் ஒன்றை!
என்ன ஒளிக் கற்றைகள், ஆஹா!
பின்னே வரும் மனைவி அந்த
மின்னும் வைரத்தைக் கண்டால்,
இன்னும் வைராக்கியம் பெறாமல்
என்ன சொல்வாளோ? செய்வாளோ?
பெண் மனதில் ஆசை வைரத்துக்கும்,
பொன்னுக்கும் மறைந்து விடுமா?
நொடியில் குனித்து எடுத்தவன்,
உடையில் மறைப்போமா அல்லது
மண்ணில் புதைப்போமா அதைக்
கண்ணுக்குத் தெரியாமல், என்று
தவிக்கும் போது மனைவி கேட்டாள்,
தலையில் ஓங்கி அடித்தாற்போல,
“சிறு கல் ஒன்றையும், வைரத்தையும்
ஒரு போல் எண்ண முடியாத நீங்கள்
சந்நியாசி ஆக விரும்புவானேன்?
சம்சாரத்தை வீணே துறப்பானேன்?”
“என்னைக் காட்டிலும், ஒரு காலத்தில்
பொன்னை விரும்பிய பெண்ணே மேல்!”
வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி.