[h=1]இன்பமயமே![/h] 
பானை ஒன்று வேண்டும் நமக்குப்
பரமாத்மாவைப் புரிந்து கொள்ள.
பானைக்கும், அந்தப் பரமனுக்கும்
பாரில் என்ன தொடர்பு கூறும்?
மண்ணை நீரில் குழைப்பதனால்;
மண்ணும், நீரும் மிகவும் தேவை.
காற்றில் உலரவைப்போம்; எனவே
காற்றும் மிகவும் அவசியமானதே.
காய்ந்தால் மட்டும் போதாது;
வெந்தால்தான் உறுதி பெறும்.
எரியும் நெருப்பில் இட்டு, அதைக்
கரியாமல் சுட வைப்போம் நாம்.
பானைக்குள் ஆகாசம் உள்ளதைப்
பாமரனும் கூட அறிந்திடுவான்.
ஐம்பூதங்களின் உதவி இன்றியே,
அமையாது ஓர் அழகிய பானை!
ஐம்பூதங்களின் உதவி இன்றியே,
அமையாது உலக ஸ்ருஷ்டியுமே.
மாறுபாடுகளும் உள்ளன என்பதை
மறுப்பதற்கில்லை எனக் காண்போம்.
பானை செய்யும் களிமண் வேறு;
பானை செய்யும் குயவன் வேறு;
பானை என்பது முற்றிலும் வேறாம்.
பானை, குயவனோ, மண்ணோ அல்ல.
பானைக்கும், பரமாத்மாவுக்கும்
ஆன பேதங்கள் இவைகளே ஆம்.
அவனே இங்கு களிமண் ஆவான்,
அவனே இங்கு குயவன் ஆவான்.
அவனே இங்கு பானையும் ஆவான்.
அவனே மூன்று பொருளுமாவான்.
செயல், செய்பவன், செய்யப்படும்
பொருள் அனைத்தும் இங்கு, அவனே.
மனத்தில் இதை நினைவுகொண்டால்,
அனைத்துலகமும் இனி இன்பமயமே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.