• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reply to thread

Ganga Snanam


ஐயோ! பள்ளத்தில் விழுந்து விட்ட  இந்த கிழவரைக் காப்பாற்றுங்களேன்,  எனக் கதறித் துடித்துக் கொண்டிருந்தாள்  அந்தப் பெண்மணி. கங்கையில்  குளித்துக் கொண்டிருந்த ஒரு முதியவரையும்,  அவருடன் வந்த இளம் பெண்ணையும்  வெள்ளம் இழுத்துக் கொண்டு சென்றது. கிழவர்  வசமாக ஒரு பள்ளத்தில் சிக்கிக்  கொண்டார். அவர் கழுத்தளவு தண்ணீரில் நின்று  கொண்டிருந்தார். இன்னும் சற்று  வெள்ளம் அதிகரித்தாலும் அவர் மூழ்கிவிடும்  நிலைமை இருந்தது. இளம் பெண்ணோ  நீச்சல் தெரிந்தவள் என்பதால் கரைக்கு வந்து  விட்டாள். முதியவரை எப்படி  கரைக்கு கொண்டு வருவது என்பது தான் அவளது  சிந்தனையாக இருந்தது. யாரவது  நீச்சல் தெரிந்த ஆண்கள் அந்த முதியவரை  காப்பாற்றுங்களேன். அவர் என்  வீட்டுக்கு சொந்தக்கரார். என்னோடு கங்கையில்  நீராடி பாவம் தொலைக்க  வந்தார். ஆனால் வசமாக பள்ளத்தில் சிக்கிக் கொண்டாரே!  யாராச்சும்  காப்பாற்றுங்க என்று அரற்றினாள்.


கங்கையில் குளித்துக்   கொண்டிருந்த யாரும் அந்தப் பெண்மணியைப் பற்றி கவலைப்படவே இல்லை. அந்தப்   பள்ளத்தில் போய் நாமும் சிக்கி செத்து தொலையவா? என்றே நினைத்தனர். அப்போது   ஒரு சில இளைஞர்கள் மட்டும் அந்தப் பெண்ணின் அருகில் வந்தனர். அடடா!  எவ்வளவு  அழகாக இருக்கிறாய்! உன்னோடு வந்த அந்த கிழவனைக் காப்பாற்ற ஏன்   துடிக்கிறாய். நீ எங்களோடு வா. நாங்கள் உன்னை உன் வீட்டில் பத்திரமாக   கொண்டு சேர்த்து விடுகிறோம், என்றனர். அந்தப் பெண் கலங்கிப் போனாள். இந்த   வாலிபர்கள் வஞ்சக எண்ணத்துடன் தன்னை அழைக்கிறார்கள் என்பதைப் புரிந்து   கொண்டாள். இருந்தாலும் தன் கலக்கத்தை வெளிக்காட்டாமல் அவர்களுக்கு பாடம்   கற்பிக்க முடிவு செய்தாள்.



நீங்கள் முதலில் என்   வீட்டுக்காரரைக் காப்பாற்றுங்கள். அதன்பிறகு அவரையும் அழைத்துக் கொண்டு   நாம் ஒன்றாகச் செல்வோம், என்றாள்.இளைஞர்கள் மனதில் தீய எண்ணம் கொழுந்து   விட்டு எரிந்தது. அவர்கள் தனியாகக் கூடிப் பேசினர்.டேய்! நாம் முதலில்   கிழவனைக் காப்பாற்றி கரை சேர்த்து விடுவோம். செல்லும் வழியில் கிழவனை   அடித்து உருட்டிவிட்டு, அந்தப் பெண்ணை இலகுவாக காட்டுக்குள் தூக்கிச்   சென்று விடுவோம், என்று திட்டமிட்டனர்.


அவர்கள் அந்தப் பெண்ணின்  அருகில்  மீண்டும் வந்தனர். நீ சொன்னது போலவே கிழவரை மீட்டு வருகிறோம்,  எனச்  சொல்லிவிட்டு தண்ணீரில் குதிக்கத் தயாராயினர். அந்தப் பெண்  அவர்களைத்  தடுத்தாள். இளைஞர்களே! உங்கள் மனிதாபிமானம் பாராட்டுக்குரியது  தான். ஆனால்  அந்தக்கிழவர் இறைவனிடம் ஒரு வரம் பெற்றிருக்கிறார். இவர்  ஏதாவது ஆபத்தில்  சிக்கிக் கொண்டால், பாவமே செய்யாத ஒருவன் தான் தன்னைக்  காப்பாற்ற வேண்டும்.  பாவம் செய்யாத யாரேனும் அவரைத் தொட்டால், அவர்கள்  தலைவெடித்து இறந்து  போவார்கள் என்பதே அந்த வரம். எனவே உங்களில் யார் பாவம்  செய்யாதவர்களோ  அவர்கள் அவரைக் காப்பாற்ற தண்ணீரில் குதியுங்கள், என்றாள்.  அவ்வளவு தான்.  அங்கு நின்ற இளைஞர்கள் எல்லாருமே ஓடிவிட்டனர்.


  அந்தப் பெண் மிகவும்  வருத்தப்பட்டாள். கங்கையில் குளிப்பதே பாவத்தை  தொலைப்பதற்கு தான். ஆனால்  இங்கு வந்தும் திருந்தாத இந்த ஜென்மங்களை என்ன  செய்வது? என அவள் நினைத்துக்  கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு இளைஞன்  அங்கு வந்தான். பெண்ணே! இங்கு  நடந்ததைக் கவனித்துக் கொண்டு தான்  இருந்தேன். அந்த துஷ்டர்கள் போகட்டுமே  என்று காத்து நின்றேன்.  கவலைப்படாதே! நான் போய் அவரை கரைக்கு கூட்டி  வருகிறேன், என்றவன் தண்ணீரில்  குதித்தான். முதியவரை தன் முதுகில்  சிரமப்பட்டு ஏற்றி, கஷ்டப்பட்டு  நீச்சலடித்து கரையில் கொண்டு வந்து  சேர்த்தான். அவனை கிழவரும், அந்த  யுவதியும் நன்றிக் கண்களுடன் பார்த்தனர்.



அவன் தன் கடமை  முடிந்ததும் எந்த  எதிர்பார்ப்புமின்றி வந்த வழியே போக ஆரம்பித்தான்.  அப்போது கிழவரும், இளம்  பெண்ணும் அவனை அழைத்தனர். அவன் திரும்பிப்  பார்த்தான். அங்கே சாட்சாத்  பரமசிவனும், பார்வதியும் காட்சி தந்தனர். அவன்  அவர்கள் காலில் சாஷ்டாங்கமாக  விழுந்து நமஸ்கரித்தான். இறைவா! தாங்களா  தண்ணீரில் தவித்த கிழவராக  நடித்தது. இந்த நாடகத்தை எதற்காக  நிகழ்த்தினீர்கள்? என்றான். உடனே பார்வதி  தேவி, மகனே! என் கணவர் தண்ணீரில்  விளையாட்டாக தவிப்பது போல் நடித்தாலும்,  அவரையே காப்பாற்றிய பெருமை  பெற்றாய். உலகம் சுமக்கும் உத்தமனை சில  நிமிடங்களாவது நீ சுமந்தாய்.  உனக்கு எல்லா வளமும் பெருகும், என்றவள் இந்த  நாடகத்தை நடத்தியதற்கான  காரணத்தையும் சொன்னாள்.


மகனே! கைலாயத்தில்  எனக்கும், என்  நாதருக்கும் தர்க்கம் ஏற்பட்டது. கங்கையில் வந்து எல்லாரும்  குளிப்பதை  நானும், அவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். இங்கு குளிக்கும்  அனைவரின்  பாவமும் நீங்கி விடும் அல்லவா? என நான் தாய்மை உணர்வோடு கேட்டேன்.  அவர்  பாவம் நீங்காது என பதில் உரைத்தார். நான் ஏன் எனக் கேட்டேன். அதற்கு  அவர்,  இங்கு யாருமே கங்கா ஸ்நானம் செய்யவில்லையே! கங்கையில் உடலை   நனைக்கிறார்கள் அவ்வளவு தான், என்றார். *உண்மையான கங்கா ஸ்நானம் என்பது   மனதில் களங்கமற்ற நிலையைக் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது என்றார். *உலக   மக்கள் இங்கு வந்து கடமைக்காக நீராடினால் அது கங்கா ஸ்நானமல்ல. களங்கமற்ற   உள்ளத்தோடு பக்தி பொங்க நீராடுவது தான் கங்கா ஸ்நானம் என்பதை உணர்த்தவே   இங்கு வந்தோம், என்றாள். காசிக்கு தீபாவளிக்கு செல்வது மிகப் பெரும்   புண்ணியம் தரும். ஆனால் வட்டி வாங்கிய பணத்துடனும், கங்கையில் கூட்டத்தோடு   கூட்டமாக பெண்களை உரசவும் சென்றால் நம் பாவம் நீங்காது. சரிதானே!


Back
Top