வெள்ளி நாணயங்கள் | A rainbow of thoughts relating Mankind to God and the World.
வெள்ளி நாணயங்கள்

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நான்,
ஒவ்வொரு மூட்டைநிறைய நாணயங்கள்,
அள்ளி அள்ளி தினம் தந்திட்டால், நீங்கள்
உள்ளம் மகிழ்ந்து என்ன செய்வீர்கள்?
நான் தரும் நாணயங்கள் மாறுபட்டவை.
நன்றாகச் செலவு செய்ய முடியும், ஆனால்
மாற்றி வேறு யாருக்கும் கொடுக்கவோ, அன்றி
மறுநாள் கணக்கில் சேர்க்கவோ இயலாது!
பயன் படுத்தியே ஆக வேண்டும், உங்களால்
இயன்றவரை. இல்லாவிட்டால் முழுவதுமாய்
மறைந்து விடும் அந்த மாயப் பண மூட்டை;
என்று இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஒவ்வொரு வெள்ளி நாணயத்தையும்,
ஒழுங்காக உமக்கு மிகவும் பிடித்ததை,
வாங்கச் செலவு செய்து மனம் மகிழ்வீர் .
வந்ததை வீணாக்க மாட்டீர் அல்லவா?
இறைவன் நமக்கு ஒவ்வொரு நாளும்,
இனிய 86,400 நொடிகள் அளிக்கின்றான்.
நம்மால் அதை மாற்றவும் முடியாது!
நம்மால் அதை சேமிக்கவும் முடியாது!
“ஒரு முறை போனால் போனது தான்!” என்றாலும்
ஓராயிரம் நொடிகளை நாம் வீணடிக்கின்றோம்!
பணம் என்றால் பாங்காக உள்ள எல்லோரும்,
மனம் போலக் காலத்தை விரயம் செய்கின்றோம்!
ஒவ்வொரு நொடியை வீணாக்கும் போதும்,
ஒவ்வொரு நாணயம் உருண்டோடுவது போல;
எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும்,
எண்ணுவோம், நொடிகளையும் வீணாக்காமல்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி