முக்திக்கு வழி
Ennangalin Vannak Kalavai - Visalakshi Ramani
முக்திக்கு வழி

இறைவன் காண்பதற்கு மிக அரியவன்,
இறைவன் அடைவதற்கும் மிக அரியவன்;
இறையருள் இன்றி எந்த முயற்சிகளும்,
இயலாது செய்வதற்கு, எந்த மனிதனாலும்!
விக்கித்து நின்று, இப்படிக் கூறும் நாம்,
முக்திக்கு முயற்சி செய்வதும் இல்லை.
இறைவன் மிகவும் அரியவன் ஆயினும்,
அடைவது இயலும், நாம் முயன்றால்!
உணவு, உடைகள், உறையுள் என்பவை,
உலகில் மனிதரின் தேவைகள் என்பார்.
இது பற்றிச் சற்றுச் சிந்தித்தால் புரியும்,
எது உயிர் வாழ மிகவும் தேவை என்பது!
உணவே இல்லாமலும் கூட ஒரு மனிதன்,
உணர்வுடன் இருப்பான் நீண்ட நாட்கள்.
உழைத்திடும் உடைகளும் உறுதியாகவே,
கிழிந்து, நைந்து கீழே விழும் வரையில்.
உறையுள் என்பது வெறும் பகல் கனவே,
தெருவில் உறங்கும் பல மனிதருக்கே.
இவை அன்றித் தேவை ஓர் உயிர் வாழ,
சுவை மிகு நீரும், சுத்தமான காற்றுமே!
நீர் நம் உடலுக்கு அவசியம் ஆயினும்,
நீர் அருந்தாமல் வாழ இயலும் பல நாள்;
காற்றுத்தான் மனிதனின் பிராண சக்தி;
காற்று இன்றி எத்தனை நேரம் வாழஇயலும்?
மூழ்கிய நீரில் மனிதன் ஒருவன், தன்
மூச்சு காற்றுக்குத் தவிப்பது போலவே,
பக்தியுடன் பரமனை எண்ணிப் பரிதவித்தால்,
முக்தி அளிப்பான் நமக்கு அவன் நிச்சயம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.