“மனத்தை வெல்வது மா தவருக்கும் அரிதே!
மனத்தை வெல்லப் பக்குவம் பெறவேண்டும்.
அனுபவித்துப் பின் அடக்க வேண்டும் மனத்தை.
அனுபவிக்காது துறப்பது என்றுமே ஆபத்தானது.
சாந்தம், அறிவு, ஆத்ம விசாரம் உடையவன்
சம்சார வாழ்க்கையினால் பந்தப்படமாட்டான்.
இருப்பான் சமபுத்தி கொண்டவனாக – இல்லை
இன்பம் லாபத்தாலோ, துன்பம் நஷ்டத்தாலோ.
விதித்த வேத கர்மங்களைச் செய்யும் ஒருவன்
விரும்பக் கூடாது அந்தக் கர்மங்களின் பலனை.
அர்ப்பணிக்க வேண்டும் அவற்றை ஈஸ்வரனுக்கு;
ஆனந்த மயமான ஆத்ம அனுபவம் பெறுவதற்கு.
ஆள்கின்றேன் மன்னனாக மிதிலையை -ஆனால்
வாழ்கிறேன் நான் சமபுத்தியுடன் யதேச்சையாக.
சுகமும் இல்லை, துக்கமும் இல்லை எனக்கு;
சுலபம் ஜீவன் முக்தனாவது பற்றை ஒழித்தால்!
அனுபவிக்கின்றேன் அரசவாழ்வின் போகங்களை
அடைவதில்லை அவற்றில் பற்றோ, விருப்பமோ!
கடமைகளைச் செய்ய வேண்டும் திறமையாக;
உடமை கொள்ளக்கூடாது அவற்றின் பயன்களை!
காணும் பொருட்கள் அனைத்தும் பந்தப்படுத்தும்;
காண இயலாத பொருட்கள் நம்மை பந்தப்படுத்தா!
பேதங்களை உணரச் செய்வது மனிதனின் மனம்;
வேதனை, சாதனையை உணர்த்துவது மனித மனம்.
பரமாத்மாவை அடைய முடியும் அனுமானத்தால்
பரமாத்மாவை அடைய விடாது தடுப்பதும் மனம்!
பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனித மனம்;
இந்திரியங்களோ, தேஹமோ, ஜீவனோ அல்ல.
பற்றும், வெறுப்பும் தோன்றுவது மனத்தால்
பகைவன், நண்பன் என்ற பேதங்கள் மனத்தால்.
பேதங்கள் தோன்றுகின்றன மன விகாரத்தால்,
பேதங்கள் மறையும் மன விகாரம் மறைந்தால்!
1# 18d.Devi Bhaagavatam (Skanda 1 and 2)