எல்லோரும் ’டெல்லர்’

கத்தை கத்தையாய் பச்சை நோட்டு,
கலகலக்கும் நாணயக் கூட்டு,
இவைகள் அளிக்கும் உற்சாகம் ,
இனிமை, அருமை, பெருமை, உண்மை !
தேடித் தேடி பொருள் ஈட்டி,
ஓடி ஓடி அதைப் பெருக்கி,
நாடி நாடிச் செலவுகள் செய்து,
கூடிக் கூடி இன்புறுகின்றோம்!
உலகில் வரும்போது வெறுங்கை,
உலகை விட்டு செல்லும்போதும் அதுவே!
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம்,
சேர்ந்து வராது செல்லும் போது!
எத்தனை அழகிய வீடோ, மனையோ,
எத்தனை சிறந்த உடையோ, நகையோ,
எத்தனை அதிக பணமோ, காசோ,
எத்தனை செல்வச்செழிப்போ, களிப்போ,
செல்லும் போது உடன் வராது ஒரு
செல்லாக்காசு கூட! நாம் சேமிக்கலாம்;
செல்வத்தை கொடுக்கலாம் வாங்கலாம்;
செலவுகள் செய்து மனம் மகிழலாம்!
வங்கிப் பணம் எல்லாம் “டெல்லர்” வசம்,
வங்கியினுள்ளே இருக்கும் வரையில் தான்.
வெளியே அவர் செல்லும் போது, ஒரே ஒரு
வெள்ளிப் பணமாவது அவர் கூட வருமா?
ஆம், நாம் எல்லோரும் டெல்லர்களே!
ஆனால், நாம் உலகத்தின் டெல்லர்கள்.
உலகமே ஒரு பெரிய வங்கி ஆவதால்,
உயரிய மனிதர்கள் அதன் டெல்லர்களே!
அவர்கள் வங்கிப் பணத்தை உரிமையுடன்
ஆளுவது போலவே நாமும் உரிமையுடன்
ஆளலாம் நம்மிடமுள்ள செல்வதை! நம்
ஆயுள் உள்ளவரை தான், பிறகு இல்லை!
நல்லதையே நினைத்து, நன்மையே செய்து
செல்லும் வழியை நல்வழி ஆக்குவோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நாம்,
வானுறையும் தெய்வத்துடன் ஒன்றுவோம்.
வாழ்க வளமுடன்
விசாலாக்ஷி ரமணி.