[h=1]அபிமானம், அவமானம்[/h] 
பிறந்தவுடன் இருக்காது தேக அபிமானம்!
பிறகு நாம் வளர வளர உடன் வளரும்
நான், எனது என்கின்ற எண்ணங்களும்,
என் தேகம் என்கின்ற அபிமானமும்.
அபிமானம் முற்றும் அழிந்தால் அன்றி
ஆத்மாவைச் சற்றும் அறிய முடியாது!
ஆத்மாவை நன்கு அறிந்தவன், தேக
அபிமானத்தை முற்றிலும் துறப்பான்.
களித்து விளையாடிக் களைத்த பின்னர்,
குளிக்கச் சென்ற கோகுலப் பெண்களின்,
அவிழ்த்து வைத்த ஆடைகளைத் திருடியே,
அழித்தான் அவர்களின் தேக அபிமானத்தை!
கரங்களைக் கூப்பிக் கும்பிட்டபடியே
கரை ஏறும்படிக் கண்ணன் பணித்ததும்,
கண்ணீர் மல்கக் கதறினார் பெண்கள்; பின்
கண நேரத்தில் தேக மயக்கம் ஒழிந்தனர்.
பரம ஹம்சர்களுக்குத் தெரியாது தமக்கு
பாரமான உடல் ஒன்று இருக்கிறது என்றே!
ஆத்மாவில் திளைத்து, இறையில் நிலைத்து,
உடலையும் அறியார்; உடையையும் அறியார்.
அபிமானம் உள்ளவர்களுக்கே ஏற்படும்
அவமானம் என்ற மன மயக்கம் ஒன்று.
அபிமானத்தைத் துறந்துவிட்டால் பிறகு
அவமானம் ஏது? அல்லது மானம்தான் ஏது?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.