[h=1]நல்லதோர் வீணை[/h] 
வீணையும் பெண்ணும் ஒரேபோலவே;
வீணர்கள் இசைக்கவே இயலாதவர்கள்.
இசைக்கத் தெரிந்தவரிடம் கிடைத்தால்,
இசைப்பார் உலகை மயக்கும் இசையை.
பெண் பார்க்கப் போகும்போது தேவை,
பெண் ஆடவும், பாடவும் தெரிந்தவளாக!
படித்து விட்டுப் பணியிலும் இருந்தால்,
பல மதிப்பெண்கள் கூடிவிடும் அன்றோ!
என் மருமகள், என் மனைவி என்றே
எக்காளம் இடுவர் மணமான புதிதில்;
“என்ன பாட்டும் கூத்தும் எப்போதும்?”
என்று மாறிவிடும் வெகு விரைவில்.
எல்லாமே அறிய வேண்டும்; ஆனால்
எதுவுமே செய்ய அனுமதி மறுப்பு!
எதற்காகக் கற்றுத் தேர்ந்த மருமகள்?
எதுவும் கற்காத பெண் போதாதோ?
கலையை அழிப்பதும், ஒடுக்குவதும் ஒரு
கொலைக்குச் சமம், கற்றவர் நோக்கில்.
விலை மதிப்பில்லாத கலையைக் கற்று
வீணாக்குவதால் என்ன பயன் விளையும்?
நல்லதோர் வீணையைக் கைகளில் எடுத்து,
நலம் கெடப் புழுதியில் எறிந்து விடாதீர்!
வல்லவன் கைகளை அடையட்டும் அது!
வானவர் மயங்க இசைக்கட்டும் அது!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.