கலியின் இருப்பிடங்கள்
ஒரு நாள் மன்னன் பரீக்ஷித்து கண்டது,
ஒரு கால் எருதினை அடிக்கும் மனிதனை;
அருகினில் ஒரு பசு உருவினில் பூமகள்,
அருவியாய்ப் பெருகிடும் கண்ணீர் வழிந்திட;
முதல் யுகமான கிருத யுகத்தினில்,
முழு எருதாக இருந்தது தர்ம தேவதை.
தவம், ஆசாரம், தயை, சத்யம் என்ற
தன் கால்கள் ஒவ்வொன்றாய் இழந்து;
கலியுகத்தில் சத்யம் என்னும் ஒரே
காலுடன் தடுமாறுகின்றது தர்மம்.
தடியால் அடிப்பவனே கலிபுருடன்,
தாங்க முடியவில்லை மன்னனுக்கு.
“இனி என் நாட்டில் உன்னைப் போன்ற,
இரக்கமில்லதவனுக்கு இடமில்லை “என்று
கலியை விரட்ட முனைந்தான் மன்னன்,
கலியோ தன் பக்க நியாயத்தைப் பகர்ந்தான்.
“இறைவன் என்னை இப்படிப் படைத்தான்,
இதில் என் தவறு ஏதும் இல்லை. நீங்கள்
அளிக்கும் இடத்தில் ஒளிந்து கொள்கின்றேன் ,
அனுமதி தரவும் வேண்டுகின்றேன்” எனப் பணிய,
மது, மாது, கொலை, சூது, தங்கம் என்று
மன்னன் கலிக்கு அளித்தான் ஐந்து இடங்கள்.
போதாது என்று மன்றாடிய கலிக்கு அளித்தான்,
மேதாவி மன்னன் மேலும் ஐந்து இடங்கள்,
காமம், பொய், வெறி, கலகம், பகைமை;
கலிக்கு கிடைத்த வேறு ஐந்து புகலிடங்கள்.
கலியின் புகலிடங்கள் அறிந்து, அவற்றுடன்,
கலப்பதை நாம் அறவே தவிர்ப்போம்! .
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.