[h=1]நேர்மை, வாய்மை[/h] 
நேர்மை என்பது நம் மனம், மொழி,
செயல்களை ஒருமைப்படுத்துவதே.
நேரில் ஒன்றும், மறைவில் ஒன்றும்,
செய்யாதிருப்பதே நேர்மை ஆகும்.
பேச வேண்டும், நாம் எண்ணியதையே;
பேச்சும், எண்ணமும் வேறுபடக் கூடாது!
பேசியதையே நாம் செய்ய வேண்டும்;
பேச்சும், செயலும் மாறுபடக் கூடாது!
ஒன்றை நினைத்து, மற்றதைப் பேசினால்;
அழிந்து போகும் நம் வாக்கின் நேர்மை!
ஒன்றைப் பேசி, மற்றதைச் செய்தால்;
அழிந்து போகும் நம் உடலின் நேர்மை!
தன் நெஞ்சு அறிந்து பொய் சொன்னால்,
தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்றாலும்;
பொய்மையும் உயிர்களுக்கு நன்மை செய்தால்,
வாய்மையே ஆகும், இது வள்ளுவன் வாக்கு!
வாய்மை என்பது எந்த உயிர்களுக்கும்,
தீமை பயக்காததைச் சொல்வதே ஆம்.
வாய்மையை விடவும் சிறந்தது ஒன்று
வலை விரித்துத் தேடினாலும் கிட்டாது.
மனம், மொழி, செயல்கள் மாறுபடும்போது,
மனோ வியாதிகள் உற்பத்தி ஆகின்றன.
ஒருமைப்பாட்டையும், வாய்மையையும்
ஒருங்கிணைத்து நாம் வாழ்ந்திடுவோம்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.