[h=1]தாங்கும் கரங்கள்[/h] 
முன்னேறுவதில் உண்டு இரு வகை;
முற்றிலும் அவை முரண்பட்டவை.
தட்டிக் கொடுப்பது அதில் ஒரு வகை;
தடுத்து நிறுத்துவது அதில் மறு வகை.
உரமிட்டால் நன்கு வளரும் பயிராய்
ஊக்கப் படுத்தினால் வளருவர் சிலர்.
வெட்டி விட்டால் வளரும் செடி போல
வேகத்தடை வைத்தால் வளருவர் சிலர்.
தானாக அனைத்தும் செய்ய இயலாதார்,
தாங்கும் கரங்களை நாடுவர் எப்போதும்.
தடைகளே வேகத்தை அதிகரிப்பதனால்
தடைகளை விரும்பி வரவேற்பர் சிலர்.
ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும்;
பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும்!
தடுத்தால் வளருபவராக இருந்தால்,
தாங்க வேண்டிய அவசியம் இல்லை.
தாங்கினால் வளருபவராக இருந்தால்
தயவு செய்து அவர்களைத் தடுக்காதீர்!
நமக்கு வேண்டியது வளர்ச்சிதானே?
நமக்கு இரு வழிகளும் நல்லவையே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.