#1438 to #1442
4. கடுஞ் சுத்த சைவம்
ஆடம்பரமும், ஆரவாரமும் இன்றி ஞான நிலையில் ‘தானே அவனாக’ நிற்கும் நிலை கடுஞ் சுத்த சைவம். கிரியைகளைத் துறந்து விட்டுத் தூய ஞானம் பெறுவதன் மூலம் கடுஞ் சுத்த சைவர் சாயுச்சியம் அடைவர்
#1438. யார் சுத்த சைவர்?
வேடங் கடந்து விகிர்தன்தன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சம் செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடுஞ் சிவாபோத கர்சுத்த சைவரே
சுத்த சைவர்கள் வெளிக் கோலங்களில் விருப்பம் கொள்ளார். அவர்கள் உலகியல் ஆடம்பரம் இல்லாதவர். ஆசைகளையும், பற்றுகளையும் நீத்து விட்டுப் பிறவிப் பிணியில் பிணைக்கின்ற சீவ போதத்தையும், பாசத்தையும் அழித்து விட்டு அவர்கள் இறைவனைச் சென்று அடைவர்.
#1439. எது சித்தாந்த நெறி?
உடலான ஐந்தையு மோராறு மைந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
பாடலான கேவல பாசம் துடைத்துத்
திடமாய்த் தனையுற்றல் சித்தாந்த மார்க்கமே.
உடல் என்று எண்ணி நாம் மயங்கும் ஐந்து கோசங்கள் இவை:
(1). அன்னமய கோசம், (2). பிராணமய கோசம், (3). மனோமய கோசம், (4). விஞ்ஞானமய கோசம், (5). ஆனந்தமய கோசம்.
உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் இவை :
(1). மூலாதாரம், (2). சுவாதிட்டானம், (3). மணிபூரகம், (4). அனாஹதம், (5). விசுத்தி, (6). ஆக்ஞா
சிவ தத்துவங்கள் ஐந்து எனப்படுபவை இவை:
(1). சுத்த வித்தை (2). மகேசுரம் (3). சாதக்கியம் (4). விந்து (5). நாதம்.
இவற்றையும், இவற்றைச் சார்ந்ததவற்றையும் முற்றிலுமாக நீக்கிவிட்டுச் சீவன் தன் உண்மை நிலையினை அறிந்து கொண்டு, அதில் நிலைத்து நிற்பதுவே சித்தாந்த நெறி.
#1440. ஞானமே பெரிது!
சுத்த சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
மத்தகை யான்மா அரனை யடைந்தற்றால்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.
சிவன் அருளிய ஆகமங்கள் முக்தியின் நான்கு நிலைகளைக் கூறும்.
(1). சாலோகம், (2). சாரூபம், (3). சாமீபம், (4). சாயுச்சியம் எனப்படும் இந்நான்கு நிலைகளையும் சாராமல், பிரணவ நெறியின் மூலம் நேராக சாயுச்சியம் அடைவது சாலச் சிறந்தது. முக்தர்கள் பிரணவ நெறியின் மூலம் முக்தி அடைவது பரமுக்தியின் மூலம் ஆகும். ஆன்மா உலகப் பொருட்களை வெறுத்து நீக்கிவிட்டுப் பிரணவப் பொருளான இறைவனை அறிந்து கொண்டால் அதுவும் சுத்த சிவமாகவே மாறிவிடும். இத்தகைய முக்தர்கள் சுத்த சைவர்.
#1441. “அது நீ ஆகின்றாய்!”
நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டில்லாத் தற்பதம்
தானென்று நானெற்ற தத்துவ நல்கலால்
தானென்றும் நானெற்றுஞ் சாற்றகில் லேனே.
அறிபவன் நான், அறியப்படும் பொருள் சிவன் என்று எண்ணி ஆராய்ந்து நான் சிவனைச் சென்று சேர்ந்தேன். அப்போது சிவன், சீவன் என்ற இரு வேறு நிலைகள் இல்லை! சீவனே சிவன் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். அதனால் நான், அறிபவன் அறியப்படும் பொருள் என்ற நிலைகளைக் கடந்து, பிரித்து அறிய இயலாத பெரு நிலையை அடைந்து விட்டேன். ‘அது’வாக நானே மாறிவிட்டேன். சிவன், சீவன் என்ற வேறுபாடுகள் இன்றி அவனுடன் ஒன்றி விட்டேன்.
#1442. பர சாயுச்சிய நிலை
சாற்றரிதாகிய தத்துவம் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிவிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய் நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.
சொல்ல இயலாத அந்தப் பெரு நிலையை அடைந்துவிட்டால், அடக்குவதற்கு அரிதாகிய ஐம்பொறிகளும் தாமே செயல் இழந்து அடங்கி விடும். அதன் பின்னர் ஞானம் விளக்கின் ஒளி போன்று நன்கு ஒளிரும். சிரசின் மேல் சீவன் சிவனுடன் ஒன்றி நிற்றல் கூடும்.