#1472 to #1476
#1472. உடலைக் கடந்த ஒளி
ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள்
ஏனம் விளைந்து எதிரே காண்வழி தொறும்
கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு
ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆமே.
ஞானம் விளைந்து சிந்தையில் எழும் போது முகத்தின் முன்பு இளம் பிறை போன்ற ஒளி மண்டலம் விளங்கும். இது தலையை ஒட்டித் தோளின் இரு புறங்களிலும் அமையும். அப்போது இழிந்த உடலைக் கடந்து அவர்கள் ஒளிமயம் ஆவார்கள்.
#1473. ஞானத்தின் நான்கு வகைகள்
ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்குமாம்,
மோனிக்கு இவை ஒன்றும் கூடா; முன் மோகித்து
மேல் நிற்றலாம் சத்தி வித்தை விளைந்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.
ஞானத்தில் ஞானம், ஞானத்தில் யோகம், ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை என்ற நான்கும் ஞானியாரின் இயல்புகள். பிரணவ சித்தி பெற்ற அனுபவம் மிகுந்த ஞானிக்கு இவை நான்கும் தேவை இல்லை.சந்திர மண்டலதின் ஒளியில் விளங்குகின்ற சக்தி மகிழ்வடைந்து அவர்களுக்கு மெய் ஞானத்தைத் தந்துவிடும். ஆதாரங்களில் பொருந்தி யோகம் செய்யும் மற்றவர்களுக்குச் சரியை கிரியை என்பவை உரியவை.
#1474. நான்கு நிலைகள்
ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தின் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன் முத்தி நாடலே.
ஞானிக்கு ஞானம் அடைவதில் நான்கு நிலைகள் உள்ளன. ‘நான்’ எனும் அகப் பற்றும், ‘எனது’ என்னும் புறப்பற்றும் அகலுவது ஞானத்தில் ஞானம் பெறுவது. நாதாந்ததில் பேரொளியைக் காண்பது ஞானத்தில் யோகம் அடைவது. நல்ல வீடு பேற்றினை விரும்புவது ஞானத்தில் கிரியை ஆகும்.
#1475. சுத்தன் முத்தன் சித்தன் ஆவான்
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயங் கரை ஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவ முத்தன் சித்தனே.
ஞானத்தில் ஞானம் போன்ற நான்கையும் பெற்றவன் நல்வினைகள் தரும் நற்பயனையும், தீ வினைகள் தரும் தீப் பயனையும் கடந்து நிற்பான். கண்ணிய நேயத்தின் ஞான வரம்பைக் கடந்து நிற்பான். திண்ணிய மலங்கள் நீங்கி அவன் சுத்தன், முத்தன், சித்தன் ஆவான்.
#1476. ஞான சமயம் முதலியவற்றின் பயன்
ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞான நிர்வாணமே நன்றி வானருள்
ஞானாபிடேகமே நற்குரு பாதமே.
ஞானத்தில் சமய தீட்சை :
மெய்ப்பொருளை நாடும் ஞானி தானும் மெய்ப்பொருளைப் போன்று ஒளி உருவானவன் என்று உணர்வது.
ஞானத்தில் விசேட தீட்சை:
அங்ஙனம் ஒளியுடன் விளங்குவது
ஞான நிர்வாண தீட்சை:
மெய்ப்பொருளின் அருளைப் பெறுவது
ஞான அபிடேகம்:
குருமண்டலத்தில் இரண்டறக் கலத்தல்.
ஆன்ம தரிசனம் = ஆன்மா தன்னை அறிதல்.
சிவ தரிசனம் = ஆன்மா பராசக்தியை அறிதல்.
சிவ யோகம் = ஆன்மா இடையறாது பரையில் நிற்றல்.
சிவ போகம் = ஆன்மா குரு மண்டலத்தில் அழுந்துதல்.