#1569 to #1572
#1569. தெய்வத் தன்மை பெறலாம்
ஆமே பிரான்முகம் ஐந்தொடு ஆருயிர்
ஆமே பிரானுக் கதோமுக மாறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.
உயிர்களுடன் பொருந்தி விளங்கும் சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. தத் புருடம், அகோரம், சத்தியோசாதம், வாமதேவம், ஈசானம் என்ற ஐந்து முகங்களுடன் என்னும் ஐந்து முகங்களுடன் அதோமுகம் என்னும் ஆறாவது முகமும் உண்டு. சிவனை உணர்ந்து கொண்டவர்களுக்கு அதோமுகம் மேல் நோக்கியபடி விளங்கும். ஆறு முகங்களும் சதாசிவன் போல ஆகிவிடும். சிவத்தை அறியாதவர்களுக்கு அதோமுகம் கீழ் நோக்கியபடி இருக்கும்.
#1570. சக்தியின் செயல்கள்
ஆதிப் பிரானுல கேழு மளந்தவன்
ஓதக் கடலு முயிர்களு மாய்நிற்கும்
பேதி பிலாமையி னின்ற பராசக்தி
ஆதிக்கண் தெய்வமு மந்தமு மாமே.
ஆதிப் பிரானாகிய சிவன் ஏழு உலகங்களிலும் கலந்து விளங்குகின்றான். அலை கடலாகவும், கடல் சூழ்ந்த உலகமாகவும், உலகில் உள்ள உயிர்களாகவும் இருக்கின்றாள் சக்தி. சிவனிடமிருந்தி பிரியாமல் இருக்கும் சக்தி, ஆதியில் உலக உற்பத்திக்கு உதவி புரிகின்றாள். அவளே அந்தத்தில் உலகினைத் தன்னுள் ஒடுக்கிக் கொள்கின்றாள்.
#1571. இம்மையில் மறுமையைக் காணலாம்
ஆய்ந்தறி வார்க ளமரர் வித்தி யாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே.
அமரர், வித்தியாதரர் போன்றவர்கள் ஆராய்ந்தால் உண்மையை அறிந்து கொள்ள முடியும். ஆயினும் அவர்கள் இன்பம் வேண்டி இறைவனை வழிபடுவதால் உண்மையை அறிந்து கொள்வதில்லை. ஆராய்ச்சியால் அறிய முடியாத அரன் நெறியை அவன் சேவடிகளைக் கை தொழுது நான் அறிந்து கொண்டேன். அதனால் நான் இம்மையிலேயே மறுமை இன்பத்தை அடைந்தேன்
#1572. சிவனை அறிவதே மேலான சமயம்
அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை
அறியவொண் ணாத அறவகை யாக்கி
அறியவொண் ணாத வறு வகைக் கோசத்து
அறியவொண் ணாததோ ரண்டம் பதிந்ததே.
மனித உடலைப் பெற்றதன் பயன் இறைவனை அறிந்து கொள்வதற்கே என்ற இந்த உண்மையை மக்கள் அறிந்து கொள்ளவில்லை! அறிய ஒண்ணாத சிவம் சீவனின் கூடு போன்ற அண்டமாக உள்ளது. அறிய ஒண்ணாத வானத்தைச் சிவம் உடலின் ஆறு ஆதாரங்களில் இயங்க வைத்தது. சிவம் அறிய ஒண்ணாதவற்றை உடலின் ஆறு கோசங்களில் அனுபவிக்கச் செய்தது.
ஆறு கோசங்கள்:
1. பூத ஆத்மா, 2. அந்தராத்மா, 3. தத்துவாத்மா,
4. சிவாத்மா, 5. மந்திராத்மா, 6. பரமாத்மா.
இத்துடன் திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம் முற்றுப் பெற்றது.