14. பக்குவன்
14. பக்குவன் = தகுதி உடையவனும், குருவின் சொற்படி நடப்பவனும் ஆன நல்ல மாணவன்.
#1690 to #1693
#1690. நல்வழி அறிவாளர்
தொழுது அறிவாளர் சுருதி கண்ணாகப்
பழுது அறியாத பரம குருவை
வழி அறிவார் நல் வழி அறிவாளர்
அழிவு அறிவார் மற்றை அல்லாதவரே.
வழி பட்டுத் தொழும் இயல்புடைய மாணவன் வேதாகமத்தின் இன்றியமையாமையை உணர்ந்து கொண்டு, குற்றமற்ற ஒரு பரம குருவை நாடிச் செல்வான். இவன் முக்தியை விரும்பும் நல்லறிவு படைத்தவன். உலகியலில் ஆர்வம் கொண்டு முக்தியை விரும்பாத மாணவனோ எனில் அழியும் வழியையே அறிவான்.
#1691. உகந்து ஆண்டருளாயே
பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி
அதைத்து ஒழிந்தேன் , இனி யாரோடும் கூடேன்,
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து, உடையாய் உகந்து ஆண்டருளாயே.
பரமா! உன்னை நாடி நான் வீணே பதை பதைப்பதைக் கை விட்டேன். உலகத்தில் உழன்று களைத்துப் போனேன். இனி யாருடனும் நான் சேர மாட்டேன். என் வினைகளைச் சிதைத்து அழித்து விடு! என் சிந்தாகுலம் தீரும் வண்ணம் என்னை உவந்து ஏற்றுக்கொள்வாய்!
#1692. இசைக்கின்ற அன்பருக்கு ஈயலாம்
பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே.
ஞானம் பெறவேண்டும் என்னும் பதைபதைப்பு இருக்கும் போதே மாணவனிடம் பரம் என்னும் விதையை விதைப்பான் நல்ல ஆசிரியன். சிந்தையைச் சிதறாமல் ஒருமுகப் படுத்தி மேலே சகசிர தளத்தில் நிலை நிறுத்தி இசைவாக இருக்கும் அன்பனுக்கு மெய் ஞானம் உறுதியாக ஈயப்படும்.
#1693. நல்ல குருவை நாடுவீர்
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்க
உள்ள பொருளுடல் ஆவி யுடனீக
எள்ளத் தனையு மிடைவிடாதே நின்று
தெள்ளி யறியச் சிவ பதந் தானே.
நாடுவதாயின் நல்ல குருவை நாடுவீர்! அவருக்கு உம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் காணிக்கை ஆக்குவீர் ! அவர் காட்டும் நல்ல வழியில் எள்ளளவும் தடங்கல் தொடர்ந்து நடந்தால் உமக்குச் சிவபதம் தானே தெளிவாகும்.#1693. நல்ல குருவை நாடுவீர்