• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

rudhram details

kgopalan

Active member
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாt
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்


ஸ்ரீ ருத்ர நமகம் பரமேஸ்வரனைப் பற்றிய ஞானத்தை விளக்குகிறது. நம் மகரிஷிகள் தரிசித்து பரமேஸ்வரன் என்றால் யார் என்று கூறிய உயர்ந்த விஷயம் இது.


வேத மயமான சிவ தத்துவத்தை வேத மந்திரங்களின் வழியே தெரிவிக்கிறது ஸ்ரீருத்ர நமகம்.


வேதத்தின் ஒவ்வொரு மந்திரமும் சிவனைக் குறிக்கிறது. பின், விஷ்ணுவைப் பற்றி கூறவில்லையா? என்று கேட்க வேண்டாம். சிவன், விஷ்ணு என்று இருவர் இல்லை. இருப்பது ஒரே பரபிரம்ம தத்துவமே.


ருத்ர நமகம் என்னும் மந்திரக் குவியல் பரமேஸ்வரனைப் பற்றி பல விதங்களில் எடுத்துரைக்கிறது.
வேதம் என்றால் என்ன?
வேதத்தின் சொரூபத்தை அறிந்தால்தான் ருத்ர நமகம் பற்றிய தெளிவு கிடைக்கும்.


வேதம் என்பது லௌகீகமான உலகியல் சப்தமல்ல. பிற மதத்தவர்களுக்கு இருக்கும் பவித்திர கிரந்தம் போன்றதல்ல வேதம்.


வேதம் என்பது ஒரு நூல் அல்ல.
வேதம் என்பது சப்த சொரூபமான ஈஸ்வரன். அதாவது வேதத்தின் ஒவ்வொரு சப்தமும் பரமேஸ்வர சொரூபமே.


அது சாட்சாத் ‘அபௌருஷேயம்’ opஎன்று கூறப்படுகிறது. அதாவது மனிதனால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. ஈஸ்வரன் ஏற்படுத்திய சப்த பிரபஞ்சமே வேதம். ஆயின், இந்த சப்தத்தை யாரால் கேட்க இயலும்?


உலகியல் வாழ்வுக்குப் பயன்படும் சப்தங்களை நாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் ஈஸ்வரமயமான சப்தத்தைக் கேட்க வேண்டும் என்றால் இந்தக் காதுகளால் உபயோகம் இல்லை. இந்த காதுகளை உலகின் சப்தங்களைக் கேட்பதற்காகவே இறைவன் அளித்துள்ளான்.


ரிஷிகள் தவப் பார்வையால் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியைப் பெற்றார்கள். அச்சக்தியின் மூலம் சில தெய்வீக சப்தங்களைக் கேட்டர்கள். அவ்வாறு கேட்ட ஒலிகளை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.


அவர்கள் அவற்றை சிருஷ்டிக்க வில்லை. கேட்டதை எடுத்துச் சொன்னார்கள், அவ்வளவே.
எனவே, அவர்கள் கேட்டார்கள் என்று கூறாமல் பார்த்தார்கள் என்று கூறுகிறது.
வேத மந்திரக் குவியலை அவர்கள் தரிசித்தார்கள். அதாவது மந்திரத்தோடு கூட மந்திரத்துக்குத் தொடர்புடைய தேஜஸ் அவர்களுக்குத் தென்பட்டது. மந்திரம் என்று எண்ண வேண்டாம். இந்தப் புரிதல் இருந்தால்தான் ருத்ரம் நமக்குப் புரிய வரும்.
வேத வாக்கியங்களுக்கு மந்திரங்கள் என்று பெயர். புத்தகங்களில் எழுதுவதற்க்கு வாக்கியங்கள் என்று பெயர். இரண்டிற்க்கும் உள்ள வேறுபாடை கவனியுங்கள். எந்த சப்தத்திற்கு சக்தி இருக்குமோ அந்த சப்தத்திற்கு மந்திரம் என்று பெயர்.


பொருள் புரியா விட்டால் சக்தி இல்லை என்பதல்ல. அதன் இருப்பிற்கே சக்தி உண்டு. மந்திரத்தின் சைதன்யத்திற்கு ‘தேவதை’ என்று பெயர். சப்தத்தோடு கூட சைதன்யமும் ரிஷிகளின் புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்திக்கு தரிசனமளித்தது.


மந்திரங்களையும் அவற்றின் மூலம் தெளிவாகும் தேவதைகளையும் ரிஷிகள் நமக்கு அருளியுள்ளார்கள். அதுவே வேதம்.


வேதத்தின் ஸ்வரூபத்தை ‘காண்ட த்வயான் விதம்’ என்றழைப்பார்கள். அதாவது இரண்டு காண்டங்களைக் கொண்டது. ஒன்று கர்ம காண்டம். இரண்டாவது ஞான காண்டம். கர்ம அனுஷ்டானத்தோடு தொடர்புடைய மந்திர பாகம் அனைத்தும் கர்ம காண்டம். அவற்றை நாம் யக்ஞகளிலும் ஜபங்களிலும் பயன்படுத்துகிறோம்.
உபநிஷத்துகள் ஞான காண்டம் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேதத்திற்கும் சில சாகைகள் அதாவது பிரிவுகள் உண்டு.


ருக் வேதத்திற்கு இருபத்தோரு சாகைகள். யஜுர் வேதத்திற்கு நூற்றியோரு சாகைகள். அதர்வ வேதத்திற்கு ஒன்பது சாகைகள்.


சாம வேதத்திற்கு ஆயிரம் சாகைகள். இவற்றுள் ஒவ்வொரு சாகைக்கும் இறுதியில் ஒரு உபநிஷத்து கூறப்படுகிறது.


ஒவ்வொரு வேத சாகையையும் மொத்தமாக நான்கு பாகங்களாகப் பிரிக்கலாம். இது வேதம் பற்றி முதலில் புரிந்து கொள்வதற்காக கூறப்படுகிறது. இதில் முதம் பாகம் சம்ஹிதா பாகம். இரண்டாவது பிராம்மணம். மூன்றாவது ஆரண்யகம். நான்காவது உபநிஷத்து.


உபநிஷத்து என்றால் என்ன?
உபநிஷத்துகள் ஞானத்தை மட்டுமே போதிக்கின்றன. ஆத்ம ஞானத்தைப் போதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது உபநிஷத். அதற்கு வேதாந்தம் என்றும் பெயர் உண்டு.


‘கலௌ வேதாந்தினஹ சர்வே’ என்று ஒரு கூற்று உள்ளது. கலியுகத்தில் அனைவரும் வேதாந்திகளாம். ‘விகத தந்தாஹா வேதாந்தாஹா’ – ‘பல் விழுந்தவர்கள் எல்லோரும் வேதாந்திகள்’ என்று கூட ஒரு கூற்று உண்டு. இதுவா இதன் பொருள்?


வேதாந்தம் என்ற சொல்லின் பொருள் என்ன? அதையும் அறிய வேண்டும்.
உபநிஷத்து வேதத்தின் ஹிருதயம் எதுவோ அதனை விவரிக்கிறது. உபநிஷத் என்ற பதத்திற்கு ‘குருவிடம் அமர்ந்து கற்க வேண்டிய வித்யை’ என்று பொருள். இதனை கற்பதற்கு ஒரு கிரம சிட்சணை அவசியம்.


புஸ்தகத்தைப் படித்தபடி டீ குடித்துக் கொண்டே எனக்கு உபநிஷத்து புரிந்து விட்டது; உபநிஷத் நோட்ஸ் எழுதி விட்டேன் என்று கூறி கொள்ளக் கூடாது.
குருவை சரணடைந்து அவரருகில் அமர்ந்து உபநிஷத்தினை அத்யயனம் செய்ய வேண்டும் என்பது பெரியோர் ஏற்படுத்திய நியமம்.


உபநிஷத் நம்மை பரப்பிரம்மத்திற்கு அருகாமையில் அமர்த்துகிறது. இதுவே இதன் விசேஷம். பின், வேதாந்தம் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது? ஒவ்வொரு வேத சாகையின் இறுதியிலும் கூறப்படுவதால் வேத+அந்த்தம் = வேதாந்தம் என்றார்கள். உபநிஷத் என்பது வேதம் அளிக்கும் தீர்மானம்.


கர்ம காண்டம்:-
கர்ம காண்டத்தில் மீண்டும் இரு பாகங்கள் உள்ளன. அவை கர்ம பாகம், உபாசனை பாகம். உபாசனை என்பது உபாசனை செய்யப்படும் தேவதையின் மந்திரத்தை எடுத்துக் கொண்டு அதற்குத் தக்க நியமங்களோடும் பக்தியோடும் ஆராதனை செய்வது.


இவ்விதம் கர்ம, உபாசனை, ஞானம் என்று மூன்று மார்க்கங்கள் வேதத்திலிருந்தே உற்பத்தி ஆயின. இம்மூன்றில் எது உயர்ந்தது என்று சர்ச்சை செய்ய இயலாது.


வேதமே இம்மூன்றையும் அளித்துள்ளதால் அவ்வவற்றின் பலன் அவ்வவற்றிற்கு உள்ளது. கர்ம காண்டத்தையும் உபாசனை காண்டத்தையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணிக்கும் புத்தியோடு செய்தாலும், தர்ம மார்க்கத்தில் நடக்க முடிந்தாலும் – இவ்விரண்டும் நமக்கு மனத் தூய்மையை அளிக்கும்.


சித்தம் தூய்மையானால் வேதாந்தம் புரிபடும். கர்மா எனப்படும் செயல்களாலும் உபாசனைகளாலும் ஏற்படும் பிரயோஜனம் மனத் தூய்மை. அதோடு இன்னொரு ரகசியமும் உள்ளது.


உபாசனை, கர்மா இரண்டும் செய்தால் இந்த உலகியல் வாழ்வில் உத்தம சுகங்கள் கட்டாயம் கிடைக்கும். எதனால் என்றால், நம் கர்மா மற்றும் உபாசனை மூலம் திருப்தியடைந்த தேவதைகள் நமக்கு வேண்டிய அனைத்தையும் அளித்து அருளுவார்கள். இந்த உடல் மறைந்த பின் உத்தம உலகங்களைச் சேர இயலும்.


சரி. அதன் பின் என்ன ஆவோம்?
“க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விஸந்தி’ – புண்ணியம் தீர்ந்தவுடன் மீண்டும் பிறவி எடுப்போம். அதனால் மேலுலக சுகங்களை அடைவதைவிட சிறந்தது ஒன்று உண்டு என்பதை அறிய வேண்டும். அதுவே ஆத்ம ஞானம். அதனை அடைந்தவன் மீண்டும் பிறக்க மாட்டான். அதனைப் பெற வேண்டும். அதனை அடைவிப்பதற்கே உபநிஷத் உள்ளது.


சத ருத்ரீயம்:-
‘ருத்ர நமகம்’ என்ற பாகத்திற்கு வேறொரு பெயர் ‘சத ருத்ரீயம்’. இதனை ‘ருத்ரம்’ என்றும் கூறுவர். இதன் இன்னொரு பெயர் ‘ருத்ரோபநிஷத்’. ஆனால் இது உபநிஷத் பாகத்தில் இல்லை.


கர்ம காண்டத்திற்குத் தொடர்புடைய பாகத்தில் கூறப்பட்டுள்ளது. பின், இதன் சிறப்பு என்ன? கர்ம காண்டத்தில் இருக்கும் மந்திரங்கள் கர்ம காண்டத்திற்கு மட்டுமே பயன்படும். ஞான காண்டத்தில் இருக்கும் மந்திரங்கள் ஞான காண்டதிற்கு மட்டுமே பயன்படும்.


இரண்டிற்கும் பயன்படும் மந்திரங்கள் ஏதாவது உள்ளனவா என்று கேட்டால் அதுவே ‘ருத்ரம்’.


இதில் ஞான காண்டதிற்குரிய உபநிஷத் விஞ்ஞானமும் உள்ளது. கர்மா, உபாசனை இரண்டிற்கும் கூட பயன்படுகிறது.


ருத்ரத்தை யக்ஞம் போன்ற செயல்களிலும், உபாசனைகளிலும் ஏன் பயன்படுத்துகிறோம்? ‘இஷ்டப் ப்ராப்தி. அனிஷ்ட பரிஹாரம்’ ஏற்படுவதற்காக. அதாவது விரும்பியவை கிடைப்பதற்கும், விருப்பமில்லாதவை விலகுவதற்கும். இதற்காகத் தானே எந்தச் செயலும் உபாசனையும் செய்யப்படுகிறது?


லௌகீகமான உபாயங்களால் நம்மால் அடைய முடியாதவற்றை சாதித்துக் கொள்வதற்காக தோன்றியது வேதம். ‘பரமேஸ்வரனைப் பற்றி அறிந்து கொண்டால் அவன் மேல் நமக்கு அன்பு பிறந்து அவனை அடைவதற்கு முயற்சிப்போம்’ என்று வேதம் கூறுகிறது.


வேதத்தில் கர்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ள இந்த தெய்வீக ஞானம் ஒரு புறம் உபாசனைக்கும் பயன்படும். மறுபுறம் உபநிஷத் காண்டத்திற்கும் பயன்படும். ஞான காண்டம், உபாசனா காண்டம், கர்ம காண்டம் – மூன்றிற்கும் பயன்படுவதால்தான் வேதத்தில் முக்கியமான ஸ்தானத்தில் ருத்ரத்தை வைத்துள்ளார்கள். வேதத்தின் இதயமாக ருத்ரம் உள்ளது.


நமக்கு வீட்டில் வெளிச்சம் வேண்டுமென்றால் வீட்டில் தீபம் ஏற்றுவோம். வீதியில் வெளிச்சம் வேண்டுமானால் வீதியில் ஏற்றுவோம். இவ்விரண்டிற்குமே வெளிச்சம் வேண்டுமென்றால் வீட்டிற்கும் வீதிக்கும் நடுவில் வைப்போம்.


இதனையே ’த்வார்தேஹளீ தத்த தீப நியாயம்’ என்பார்கள். கர்ம காண்டத்திற்கும் ஞான காண்டதிற்கும் பயன்படுவதற்கு ஏற்றாற்போல் வேதத்திற்கு ஹிருதயமாக ருத்ரத்தை வைத்துள்ளார்கள்.


அது மட்டுமல்ல. சத ருத்ரீயம் என்பது ஒரு உபநிஷத்தாகக் கூட கூறப்படுகிறது. ருத்ரம் கேட்பது எத்தனை சிறந்ததோ ருத்ரத்தின் உயர்வைக் கேட்பது கூட அதே அளவு சிறப்பு வாய்ந்தது. அதனைக் கூறிக் கொண்டிருந்தால் பரமேஸ்வரன் ஆனந்தமடைவான்.


வேதத்தில் எத்தனையோ பாகங்கள் இருந்தாலும் இந்த ஒரு பாகத்தைப் பற்றி இத்தனை உயர்வாக பிற நூல்களில் எடுத்துக் கூறப்படுவது போல் வேறு எங்கும் காண முடியாது. ருத்ரத்திற்கு மட்டுமே பல்வேறு விளக்கங்கள் காணப்படுகின்றன.


புராணங்கள், தர்ம சாஸ்திரங்கள், தந்திர சாஸ்திரங்கள் – அனைத்திலுமே ருத்ரத்தின் பிரயோகங்கள் அதாவது பயன்படுத்தும் விதங்கள் பற்றி கூறியுள்ளார்கள்.


எதெதனைப் பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பது பற்றி ருத்ரத்தில் ஏகப்பட்ட மந்திரங்கள் உள்ளன.


பதினோரு அனுவாகங்கள் அதாவது அத்தியாயங்கள் இதில் உள்ளன. இந்த பதினோரு பாகங்களில் மீண்டும் எத்தனையோ மந்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு மந்திரத்தாலும் ஒவ்வொரு பலனைப் பெற முடியும்.


வாக்கு சித்தி பெற வேண்டுமென்றால் எந்த மந்திரம் ஜபிக்க வேண்டும்? வியாதி நிவாரணத்திற்கு எந்த மந்திரம்? கடன் தொல்லை நீங்க எந்த மந்திரம்? குழந்தைகள் பிறக்க எந்த மந்திரம்? விரோதி பயம் நீங்க எந்த மந்திரம்? இவ்வாறு ஒவ்வொன்றிற்கும் ஒரு மந்திரம் கூறப்பட்டுள்ளது.


நாட்டில் கேடுகளோ, வரட்சியோ, வெள்ளமோ ஏற்பட்டால் எந்த மந்திரம் பயன்படுத்த வேண்டும்? இத்தனையும் உள்ளது ருத்ரத்தில். அதாவது இது ஒரு பெரிய மருந்து கடை போன்றது.


இன்னும் கூறப் போனால், ஒவ்வொரு மந்திரமும் ஒரு ஔஷதம் அதாவது மூலிகை. இந்த மூலிகையை எவ்வாறு பயன்படுத்தி எந்தப் பலனைப் பெறுவது என்பதைப் பற்றி நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதைப் பற்றிக் கூட சாஸ்திரம் உள்ளது.


அதற்கு ‘கல்ப சாஸ்திரம்’ என்று பெயர். இதில் பயன்படுத்தும் விதங்களை விவரித்துள்ளார்கள். அது மட்டுமின்றி, மந்திர சாஸ்திரங்களிலும் ருத்ர மந்திரத்திலுள்ள எந்த மந்திரத்தை எவ்வாறு பிரயோகிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்கள்.


வித்யாரண்ய சுவாமிகள்:-
தற்சமயம் கிடைக்கும் ருத்ரம் பற்றிய பாஷ்யங்கள் நான்கு. இன்னும் எத்தனை உள்ளனவோ…?


அவற்றுள் ஒன்று வித்யாரண்ய சுவாமிகள் எழுதிய பாஷ்யம். வித்யாரண்யர் எழுதிய வேத பாஷ்யத்தில் ருத்ரம் பற்றி உள்ளது. வேதத்தின் பொருளை தெளிவாக அழகாக விவரித்துள்ளார்.


அதில் ஒரு வார்த்தை கூறியுள்ளார்- “ருத்ரம் கர்ம காண்டத்தில் இருப்பதால் இதற்கு கர்ம அங்கம் உள்ளது. இதன் மூலம் ஞானம் பெறப்படுவதால் இதனை உபநிஷத்திலும் கூறியுள்ளார்கள். அனைத்து உபநிஷத்துகளின் சாரம் இது!” என்று கூறி அதற்குச் சில பிரமாணங்கள் காட்டி உள்ளார்.


எங்கெங்கு எவ்விதம் கூறப்பட்டுள்ளது என்பது பற்றி கூறுகையில் ஒரு வார்த்தை சொல்கிறார்-
“ஸ்ம்ருத்யாகம புராணேஷு ருத்ராத்யயன ப்ரஸம்ஸனம் பஹ்வஸி”
-வித்யாரண்யரின் கூற்று இது.


“ஸ்ம்ருதி, ஆகம, புராணங்கள் இம்மூன்றிலும் இந்த ருத்ர அத்யாயம் பற்றி சிறப்பாகப் புகழப்பட்டுள்ளது’. ஸ்ம்ருதி என்றால் தர்ம சாஸ்திரம். ஆகமம் என்றால் மந்திர சாஸ்திரம்.
‘ருத்ர கல்பம் என்ற நூலை பிரத்யேகமாக எழுதுகிறேன்’ என்கிறார் வித்யாரண்யர்.


சிவன் தொடர்பான அனைத்து ஞானமும் ருத்ர நமகத்தில் நிரைந்துள்ளது. அதனால்தான் வித்யாரண்யர் பாஷ்யம் மட்டும் எழுதிவிட்டு சும்மா இராமல் ‘ருத்ர கல்பம்’ என்று தனியாக ஒரு நூலிய எழுதியுள்ளார்.


மிகவும் விஸ்தாரமான கிரந்தம் அது. இதைப் பற்றி குறிப்பிடுகையில் அவர்,
‘இங்கு நான் கர்ம காண்டத்தின் அங்கமாகவே வியாக்கியானம் செய்துள்ளேன். அங்கு மீதி விஷயங்களை எல்லாம் சொல்கிறேன்’ என்கிறார். நம் துரதிருஷ்டம் அந்த புத்தகம் எங்கும் கிடைக்கவில்லை.


ருத்ர நமகம் யஜுர் வேதத்தில் ‘ஐந்தாவது பிரபாடகம்’ என்ற பிரிவில் உள்ளது. மொத்தம் ருத்ரத்திற்கும் ஒரே பொருள், ‘பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம்’ என்பதே.


ஏழாவது பிரபாடகத்தில் ‘சமகம்’ வருகிறது. ‘சமே’ என்ற சப்தம் ஆவிர்த்தி ஆகிக் கொண்டே இருக்கும். இந்த சப்தம் முன்னூற்று ஐம்பது தடவை வருகிறது. ‘சமே’ என்ற சொல் பல முறை வருவதால் அதற்கு ‘சமகம்’ என்று பெயர்.


யாக்யவல்கிய மகரிஷி:-
ஒரு முறை யாக்யவல்கிய மகரிஷியிடம் பிரம்மசாரிகள் சென்று ஒரு ஐயம் கேட்டனர். பிரம்மத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தால் அத்யயனம் செய்பவர்களுக்கு பிரம்மசாரிகள் என்று பெயர்.
அவர்கள், ‘எதனை ஜபிப்பதால் அமிர்த தத்துவம் அடையப் பெறுவோமோ அதனைக் கூறுங்கள்!’ என்று கேட்டனர்.


யாக்ஞவல்கியர் கூறுகிறார், ‘சத ருத்ரேண இதி’ என்று. ‘சத ருத்ரம் ஜபம் செய்தால் சித்தம் சுத்தமாகி மோட்சம் கிட்டும்’ என்கிறார்.


உபநிஷத்துகள் ஏற்பட்டதே அமிர்த நிலை அடைவதற்காக. எனவே ருத்ரம் மூலம் அமிர்த நிலை பெறப்படும். இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெறலாம். துக்கங்களை நீக்கிக் கொள்ளலாம்.


நவ கிரகங்கள் படுத்தும் தொல்லைகளை விலக்கிக் கொள்ளலாம். இவையனைத்தும் லௌகீக பிரயோஜனங்கள். இவை வேண்டும் என்று கேட்பது தவறல்ல.
சிலர் கூறலாம், ‘பரமத்மாவை அடைவதே முக்கியம், இக லோக சுகம் வேண்டாம்’ என்று.


ஆனால் அவ்வாறு கூறுவதைப் போல் நடப்பது எளிதல்ல. உயிர் வாழும் வரை அவையும் தேவையே. வாழ்க்கையில் ஆசைகள் இல்லாமலிருக்கலாம். ஆனால் தேவைகள் இருக்கும்.


எனவே சிருஷ்டியில் தற்போது கிடைப்பது அனைத்தையும் பரமேஸ்வரனின் அருளால் பெறுகிறேன் என்று உணர்வதற்காகவாது யக்ஞம் செய்ய வேண்டும்.


அல்லது இவை வாழ்நாள் முழுவதும் கிடைக்க வேண்டுமென்றாலும் யக்ஞம் செய்ய வேண்டும். அடுத்த பிறவியில் கிடைக்க வேண்டுமென்றாலும் யக்ஞம் செய்ய வேண்டும்.


இத்தனை விதமான கோரிக்கைகளோடு யக்ஞம் செய்வது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இது மட்டுமே பரம பிரயோஜனம் என்று எண்ணிவிடக் கூடாது. பெற வேண்டியது இன்னொன்று உள்ளது.


அதற்கும் வழி இதுதான். இதுவே அதற்கும். இதுவே இதற்கும். எத்தனை நன்றாக உள்ளது பார்த்தீர்களா? வேறு வேறு வழி முறைகள் என்றிருந்தால் எத்தனை சிரமம்! கவனமாக அறிந்து கடைப்பிடித்தால் இதுவே ஞானத்திற்கும் வழி வகுக்கும்.
‘‘எந்த அமிர்த தத்துவத்தை நீர் அடைய எண்ணியுள்ளீரோ அந்த அமிர்தத்தின் பெயரே சத ருத்ரீயம்’.


அந்த அமிர்தமே பரமேஸ்வரன். சிவனே அமிர்தம். நாம் அடைய வேண்டிய அமிர்தம் சிவனே. அவனே மிருத்யுஞ்ஜயன். அவனே அமிர்தேஸ்வரன்.


அமிர்த சொரூபனான சிவனின் பெயர்களாதலால் அவற்றை எப்போதும் ஜபித்தால் அவனையே பெறுவோம்!” என்று யாக்ஞவல்கியர் கூறுகிறார்.
ருத்ரத்தை அனுசரித்து சிவ நாமங்களை எடுத்து ‘ருத்ர த்ரிசதி’ தயாரித் துள்ளார்கள்.


அவை யாருடைய பெயர்கள்? ‘அமிர்தஸ்ய நாம தேயானி’. ருத்ரனே அமிர்தன். அதாவது சாஸ்வதமானவன். அந்த அமிர்தத்தோடு தொடர்புடைய விஷயம் அனைத்தும் இதில் உள்ளன. எனவே அமிர்த நிலையின் இயல்பே இதில் கூறப்படுகிறது.


இதனை உபாசனை செய்பவர்களும் அனுஷ்டானம் செய்பவர்களும் அமிர்தன் ஆகிறார்கள். தேஹ நிலையிலிருந்து அஹம் பிரஹ்மாஸ்மி என்ற நிலை வருவதற்குத் தேவையான ஞானம் அனைத்தனையும் இதில் கூறியுள்ளார்கள். ருத்ரோபனிஷத் என்று எதனால் கூறப்படுகிறதோ புரிந்தது அல்லவா?


இனி சதருத்ரீயம் என்ற பெயர் ஏன் வந்ததோ பார்க்கலாம். ‘சதம் அனந்தம் பவதி’. அனத்தமான ருத்ரர்களைப் பற்றிக் கூறுகிறது. பரமேஸ்வரனின் அனந்தமான விபூதிகளையும் எல்லையில்லாத அளவற்ற சொரூபங்களையும் பற்றி இதில் கூறுகிறார்கள்.


கூர்ம புராணத்தில் ஒரு கதை உள்ளது:-
வசுமனஸன் என்ற ராஜரிஷி பிரம்மா அளித்த வரத்தால் நீண்ட ஆயுளைப் பெற்று காயத்ரி உபாசனை செய்து வந்தார். அதற்கு மகிழ்ந்த பரமேஸ்வரன் தரிசனமளித்து இவ்வாறு கூறினார், “யஜுர் வேதத்தின் சாரமான சத ருத்ரீய அத்யாயத்தை ஒரு முகப்பட்ட மனதோடு என்மீது பக்தி கொண்டு ஜபிப்பாயாக. இவை என் ரகசியமான பெயர்கள்.


அனைத்து வேதங்களிலும் போற்றப்பட்டவை. வாழ்வில் அமைதி ஏற்படுத்துபவை. சுத்தமாக இருந்து இந்த நாமங்களால் என்னை வணங்கு. பிரம்மசாரியாக மிதமான உணவுண்டு விபூதி அணிந்து இறுதி வரை ஜபிப்பவன் பரம கதியை அடைவான்”. மேற்சொன்ன கூற்றை அனுசரித்து வசுமனஸன் ருத்ரத்தை அனுஷ்டானம் செய்து பரம கதியைப் பெற்றான்.


அவிமுக்தம் என்றால் என்ன?;-
‘அவிமுக்தம் மம க்ஷேத்ரம் மந்நாம பரமம் சுபம்
சதருத்ரீய ஜாபித்வம் ததா சன்யாச முத்தமம்!’
-என்பது ஸ்ம்ருதியின் மற்றொரு வாக்கியம். அவிமுக்தம் என்றால் காசீ க்ஷேத்ரம்.


‘அவிமுக்தத் தலத்தில் மரணமடைந்தவன், சன்னியாசம் ஏற்றுக் கொண்டவன், சத ருத்ரீயம் ஜபம் செய்பவன் – இவர்கள் மோட்சத்தை அடைவார்கள்’ என்று கூறப்படுகிறது. சத ருத்ரீயத்தின் பெருமை எவ்வளவு உயர்ந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது.
 
காசீ மூன்று இடங்களில் உள்ளது. ஒன்று பூமியில். இரண்டாவது வேதத்தில். மூன்றாவது நம் உடலில். நம் புருவ மத்தியில் உள்ளது மனித உடலில் உள்ள காசீ க்ஷேத்ரம். இது ஜோதிர் லிங்க ஸ்தானம்.


அதனால்தான் புருவ மத்தியில் தியானம் செய்த வண்ணம் உயிர் நீப்பவர்கள் காசீ க்ஷேத்திரத்தில் மரணமடைந்து முக்தி பெற்றதற்குச் சமமாகக் கருதப்படுகிறார்கள். வேதத்தில் உள்ள காசீ க்ஷேத்ரம் சதருத்ரீயம்.


யார் சத ருத்ரீயத்தை நிரந்தரம் அனுஷ்டானம் செய்வாரோ அவருக்கு ருத்ர க்ரந்தி பேதனம் நிகழ்ந்து கைவல்யத்தை அடைவார். சத ருத்ரீய ஜபம் சகல பாவங்களையும் பஸ்மம் செய்ய வல்லது என்பது பராசர புராணம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள விஷயம்.


இங்கு ஒரு கதை பார்ப்போம்:-
ஒரு முறை யமலோகம் வெறிச்சோடி இருந்ததாம். யமனுக்கு வேலையே இல்லையாம். சக உத்யோகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினாராம். ஜீவர்களை நரக லோகத்திற்கு அழைத்து வரும் பாவ தேவதைகள், வியாதி தேவதைகள் போன்றோரைக் கூப்பிட்டு விசாரணை செய்தாராம்.


“நீங்களெல்லாம் வேலையே செய்வதில்லையா? நரக லோகம் வெறுமையாக உள்ளதே! இங்கு ஜீவர்கள் வருவதற்கு உங்கள் வேலையை நன்கு செய்யுங்கள்!” என்றாராம். “உங்களுக்குப் பதவியளித்து பட்டம் கட்டியது எதற்காக?’ என்று கோபப்பட்டாராம்.


“நாங்கள் உண்மையாக வேலை செய்கிறோம். எங்கள் தவறு எதுவும் இல்லை. நாங்கள் பூமிக்குச் செலவதற்கான தேவை ஏற்படுவதில்லை. ஏனென்றால் எல்லோரும் சதருத்ரீயம் ஜபம் செய்து சிவனை பூஜிப்பதால் எமக்கு பூமிப் பிரவேசம் கிடைப்பதில்லை” என்றார்கள்.


‘சாக்ஷாத் கைவல்ய சாதனமான ருத்ர அத்யாயத்தை எல்லோருமே படிக்கிறார்கள். எனவே நாங்கள் பயந்து ஓடுகிறோம். நாங்கள் அவ்வளவு எளிதில் விட்டுவிடக் கூடியவர்கள் அல்ல. யார் எத்தனை பிராயச்சித்தங்கள் செய்தாலும் எங்களுக்கு பயமில்லை.


பாவத்தின் வடிவிலும் வியாதி வடிவிலும் அவர்களிடம் புகுந்து விடுவோம். எங்களுக்கு அத்தகு சக்தி உண்டு. ஆயிரம் பிராயச்சித்த கர்மாக்கள் செய்தாலும் அவர்களை வீழ்த்திவிட எங்களால் முடியும். ஆனால் ருத்ர அத்யாயத்தை மட்டும் எங்களால் வீழ்த்த இயலாது’ என்றார்கள் பரிதாபமாக.


ஆயிரம் பிராயச்சித்த கர்மாக்களை விட ஒரு ருத்ர அத்யாயம் எத்தனையோ உயர்ந்தது. பிராயஸ்சித்த செயல்களால் செய்த பாவம் தீருமே தவிர, மீண்டும் பாவம் செய்ய வேண்டுமென்ற குணம் மாறாது. ருத்ர அத்யாயம் அதைச் செய்யக் கூடியது.


அதனல்தான் அதற்கு சக்தி அதிகம் என்று கூறப்படுகிறது. அதன் மூலம் கிடைக்கும் தேஜஸ் சாதாரண மானதல்ல. ருத்ரத்தை பக்தியோடு ஜபம் செய்பவர் பெறும் தேஜஸ்ஸால் அவரை யாராலும் வெல்ல முடியாதவராக ஆகிறார். ஐம்பூதங்களும் கூட அவரை ஜெயிக்க முடியாது. அவர் அருகில் கூட அவற்றால் நெருங்க இயலாது.


‘ததோ பூத ப்ரேத பிசாச பத்த ப்ரஹ்ம ராக்ஷச யக்ஷ யமதூத சாகினீ டாகினீ சர்வ ஸ்வாபத தஸ்கர ஜ்வராத் யுபத்ரவாத்!’ என்று மஹா ந்யாசத்தில் கூறப்பட்டுள்ளது.


நிரந்தரம் சிவனை பூஜிப்பவர்களைப் பார்த்து வியாதிகளும் பாவங்களும் உபத்திரவங்களும் பூத பிரேத பிசாசுகளும் விலகி நின்று பயம் கொள்ளும். ‘சர்வே ஜ்வலந்தம் பஸ்யந்து’ – அவற்றுக்கு இவர்கள் அக்னி ஜ்வாலை போல் தென்படுவார்களாம். ‘சாம்பவ தேஜஸ்’ என்பார்கள் இதனை.


‘அதனால், யமதர்ம ராஜா! எங்களால் அவர்களை நெருங்க முடியவில்லை’ என்றார்கள்.


ருத்ராத்யாயம் ஜபம் செய்பவர் எந்த ஊரில் வசிக்கிறாரோ அந்த ஊரில் கெடுதல்கள் நிகழாது. அவரைச் சுற்றி உள்ள பிரதேசம் கூட நன்மை பெறும். அதனால்தான் ஒரு சிவாலயம் இருந்தால் கூட அந்த ஊரைக் காத்து அருளும் என்று கூறப்படுகிறது. அந்த ஊர் முழுவதும் க்ஷேமமாக விளங்கும். பீடைகள் நெருங்காது.


‘ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நதீ தீரத்திலும் ஒவ்வொருவரும் ருத்ர ஜபம் செய்கிறார்கள்’ என்றார்கள் யம தூதர்கள்.


ருத்ரம் வெறும் அபிஷேகத்தின் போது படிப்பதற்கு மட்டுமே அல்ல. ஜபத்திற்கும் பயன்படுகிறது. ஹோமத்திற்கும் பயன்படுத்தலாம். பல விதங்களில் அதன் பிரயோஜனம் காணப்படுகிறது. அபிஷேகத்திற்கு திரவியம் அல்லது தேவையான சாமான்கள் இல்லா விட்டாலும் ருத்ர ஜபம் செய்தபடி அமர்ந்திருக்கலாம். அபிஷேகம் செய்த பலன் கிடைத்து விடும். அத்தகைய சக்தி வாய்ந்தது ருத்ரம்.


‘ருத்ர ஜபம் செய்பவர் அருகில் நாங்கள் ஒரு கணம் கூட நிற்க இயலாது. யமா! நரகத்தை நிரப்புவதற்கு என்ன செய்வாயோ உன் இஷ்டம் போல் செய்து கொள்!’ என்றன பாவ தேவதைகள்.
யமன் உடனே பிரம்மாவைப் பார்க்கக் கிளம்பினான்.


‘பதவி கொடுத்தால் போதுமா? வேலை கொடுக்க வேண்டாமா?’ என்றானாம் பிரம்மாவிடம் சென்று. ‘சிருஷ்டியில் அனைத்தும் நல்லவையே இருந்தாலும் கஷ்டமே. தீமையே இருந்தாலும் ஆபத்தே. முக்குணங்களும் ஒரே மாதிரி இருந்தால் சிருஷ்டி தொடராது. வேறுபாடுகள் வேண்டும்’ என்றானாம்.


பிரம்மா யோசித்து, இரண்டு விஷயங்களை பூமிக்கு அனுப்பினாராம்.
அவித்யைக்கு இரண்டு மகள்கள். 1.அசிரத்தை. 2.துர்மேதம் அதாவது துர்புத்தி.


இவ்விரண்டும் பூமியில் பிரவேசித்து நேரம் பார்த்து சிறிது சிறிதாக மனித புத்தியில் புகுந்தன. அதனால் ஒவ்வொருவரும் சபலம் கொண்டவர்களாக மாறி சங்கல்ப பலமிழந்து ருத்ர ஜபங்களை மறந்தார்கள். சிவ பூஜையை விட்டு விட்டார்கள். அதனால் மீண்டும் பாவங்களும் வியாதிகளும் ஆக்கிரமித்தன. யம லோகம் நிரம்பி வழிந்து களை கட்டியது.
– இந்த கதை ஸ்காந்த புராணத்திலுள்ள ப்ரஹ்மோத்த்ர கண்டத்தில் உள்ளது.
இதில் பிரதானமான போதனை – அசிரத்தை, துர்மேதம் இவற்றால் மனிதன் தெய்வத் தொண்டினை மறந்து நற்காரியங்களைத் துறந்து பதிதனாகவும் பாவியாகவும் மாறுகிறான்.


சிரத்தை என்றால் சாஸ்திர வாக்கியங்களின் மேல் கொள்ளும் நம்பிக்கை. புலங்களுக்கு அப்பாற்பட்ட உண்மைகளை அனுபவத்தில் உணர்வதற்கு சிரத்தையே பிரதானம். ‘ஸ்ரத்தாவான் லபதே ஞானம் ‘ என்பது கீதாசாரியனின் வாக்கு.


‘அஞ்ஜாஸ்ச அஸ்ரத்த தானஸ்ச சம்சயாத்மா வினஸ்யதி’- ‘மூர்க்கன், சிரத்தை இல்லாதவன், சந்தேகப்படுபவன் நசிவான்’ என்றும் எச்சரித்துள்ளான் ஸ்ரீகிருஷ்ணன்.
சிரத்தை இல்லாமலிருப்பதே அசிரத்தை. அதற்குத் துணை துர்மேதம். குதர்க்கப் பேச்சு, நற்செயல்களை ஏளனம் செய்வது, சாஸ்திர விரோதமாக ஆலோசிப்பது இவையே துர்புத்தியாகிய துர்மேதம்.


இவ்விரண்டும் துக்கதித்ற்கு வழி வகுப்பவை – என்று அழகிய கதை போல் விவரித்துள்ளார் வியாச மகரிஷி.
‘நாள் முழுவதும் வேதம் படித்தால் அந்த நாள் சுத்தமான நாள். ருத்ரம் படித்தால் அந்த க்ஷணத்திலேயே சுத்தமாகிவிடுவான்.


எனவே இது வேதத்திற்கு சாரமாகக் கூறப்படுகிறது’ என்கிறது யாக்யவல்க்ய ஸ்ம்ருதி.


‘சிவனை தியானித்து சத ருத்ரீயம் படித்தால் பூமியிலுள்ள அனைத்து செல்வத்தையும் சிவனுக்கு அர்ப்பணித்த புண்ணியம் கிடைக்கும். ஒரு முறை ருத்ரம் ஜபம் செய்தால் பூமியிலுள்ள சகல பொருட்களாலும் சிவனை பூஜித்த பலன் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்.


ஒரு மரக்கிளையில் பழம் பழுக்க வேண்டுமென்றால் மரத்தின் வேருக்கு நீரூற்ற வேண்டும். விருட்சத்தின் மூலத்தில் நீர் ஊற்றுவது எவ்வாறோ அவ்வாறே ருத்ரத்தால் சிவனை வழிபடுவது. அதன் மூலம் சகல தேவதைகளும், விஸ்வம் எனப்படும் விருட்சமும் திருப்தி அடைகின்றன.
சன்யாசிக்கு எந்த செயலும் விதிக்கப்படவில்லை.


காயத்ரி மந்திரம் கூட சன்யாசிக்குக் கிடையாது. வெறும் பிரணவம் மட்டுமே ஜபிக்கலாம். இல்லறத்தார் வெறும் பிரணவம் ஜபம் செய்யக் கூடாது. உபதேசம் பெற்று மந்திரத்தோடு கூட பிரணவத்தையும் சேர்த்து ஜபம் செய்ய வேண்டும். வேதத்தில் குறிப்பிட்ட ஒரு அத்தியாயத்தைப் படிப்பேன் என்றோ, யக்ஞம் செய்வேன் என்றோ நினைத்து சன்யாசி செய்யக் கூடாது.


ஆனால் ஆச்சர்ய ஸ்தானத்திலுள்ள சன்யாசிகள் செய்விப்பார்கள். அவர்களாக செய்ய மாட்டர்கள். நம்மை நல்வழிப்படுத்துவதற்காக செய்விப்பார்கள். அது வேறு விஷயம். ஆனால் எத்தகைய சன்யாசி ஆனாலும் கூட ‘சத ருத்ரீய சன்யஸ்து’ – சத ருத்ரீயம் மட்டும் படிக்க வேண்டுமாம். பிரணவத்திற்கு எத்தனை முக்கியத்துவமோ சத ருத்ரீயத்திற்கும் அத்தனை முக்கியத்துவம் கூறப்படுகிறது. ‘அத்யாஸ்ரமீ ஜபேத’ என்றார்கள்.


அது மட்டுமல்ல… ‘மோட்சம், சுகம், பிராயஸ்சித்தம் – மூன்றும் வேண்டுமென்றால் ருத்ரோபநிஷத் தவிர வேறொரு கதி இல்லை’ என்று கூறப்படுகிறது. பிரம்மசாரிகள், இல்லறத்தார், வானப் பிரஸ்தர், சன்யாசி – நால்வரும் இதனைப் படிக்க வேண்டும்.


ஸ்ரீகிருஷ்ணரும் ஸ்ரீருத்ரமும்:-
மகாபாரதத்தில் அனுசாசனிக பர்வத்தில் தர்மபுத்திரன் ஸ்ரீ கிருஷ்ணரைக் கேட்கிறான், ‘கிருஷ்ணா! துர்வாசரிடமிருந்தும், உபமன்யுவிடமிருந்தும் மிகுந்த சிவ ஞானத்தைப் பெற்றாய் அல்லவா? எனக்கு அவற்றை எடுத்துக் கூறுவாயா?’ என்று.


‘பரமாத்மாவின் நாமங்கள் வேதத்திலும் சாஸ்திரத்திலும் நிறைய உள்ளன. ஆனால் சத ருத்ரீயம் மிக மிக உத்தமமானது. விடியற்காலையில் எழுந்து யார் இருகை கூப்பி சதருத்ரீயத்தை படிக்கிறாரோ அவரால் இயலாதது என்று ஒன்றும் இல்லை’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.


துரோண பர்வத்தில் அர்ஜுனனிடம் வியாச பகவான் சத ருத்ரீயத்தின் மாஹாத்யமம் விவரிக்கிறார். அங்கு சதருத்ரீயம் என்ற அத்தியாயம் கூட உள்ளது.


அது மட்டுமல்ல. கூர்ம புராணத்தில் கிருஷ்ணர் கூறிய வார்த்தைகள் இவை: ‘சுயமாக நான் எப்போதும் பஸ்மம் தரித்து சதருத்ரீயம் ஜபம் செய்கிறேன்”. இதற்கான பிரமாணம் மஹாபாரத்தில்கூட காணப்படுகிறது.


ஸ்ரீ கிருஷ்ணர் மௌனமாக விபூதி பூசிக் கொண்டு ருத்ராக்ஷ மாலை அணிந்து இந்த திவ்யமான ருத்ரம் ஜபம் செய்ததாக மகாபாரத்தில் கைலாச யாத்திரை என்ற கட்டத்தில் காணப்படுகிறது.


மானச சரோவர் கரையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ருத்ரம் ஜபிக்கையில் அவருக்கு பரமேஸ்வர தரிசனம் கிடைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
சத ருத்ரீய மந்திரத்தின் அதிதேவதையான சிவன் ஸ்ரீகிருஷ்ணருக்கு தரிசனமளித்து, ‘நீர் எதற்காக என்னைப் பூஜிக்கிறீர்? நீர் இவ்வாறு ஜபம் செய்யத் தேவையில்லையே! நீர் சாட்சாத் பரமாத்மா ஆயிற்றே!’ என்று கேட்கிறார்.


அதற்கு ஸ்ரீகிருஷ்ணர், ‘மயா ப்ரமாணம் யததோ லோகஸ்த தனுவர்ததே!’ என்கிறான்.


-‘நான் செய்வதை உலகம் அனுசரிக்கும். அதனால் நான் உம்மைப் பூஜித்தேன்!’ என்கிறான்.


உலகுக்கு ஆதர்சமாக இருப்பதற்காக ஸ்ரீகிருஷ்ணன் சிவனை பூஜித்தான். ‘யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஹ தத்த தேவேதரோ ஜனஹ’.
இத்தனை விஷயம் உள்ளது ருத்ரத்தில். இத்தகைய உயர்ந்த ருத்ரத்தைக் கேட்டால் போதும். படித்தால் போதும். நாம் உய்வடைந்து விடுவோம்
 

Latest ads

Back
Top