• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

The places where Kubera worshiped with eternal wealth!

வற்றாத செல்வமருளும் குபேரன் பூஜித்த தலங்கள்!

ஒரு சமயம் தன்னுடைய சகல நிதிகளையும் இழந்து குபேரன் கஷ்டப்பட்ட போது ஈசனிடம் வேண்டி நின்றான். ஈசன் அவனுக்காக இரங்கி சகல செல்வ வளங்களையும் மீண்டும் அளித்த தினமே தீபாவளியாக கொண்டாடுகின்றோம். இப்படி அருள்பெற்ற குபேரன் பூஜித்த தலங்களுக்கு சென்று வருதலுமே சகல செல்வ வளங்களையும் பெருக்கித் தரும். குபேரன் வழிபட்ட ஆலயங்களுக்கு செல்லும்போது தாரித்ரியம் என்கிற வறுமைக் கொடுமை ஒழிந்து போகும்.

செல்லூர்

மதுரையிலுள்ள வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்துள்ளது திருவாப்புடையார் கோயில். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாகவும் திகழ்கிறது. சகல செல்வத்திற்கும் அதிபதியாக வேண்டுமென புண்ணிய சேனன் என்பான் விரும்பினான். அகத்தியரின் பாதம் படர்ந்து எழுந்தான். திருவாப்புடையார் எனும் இத்தல ஈசனை நோக்கி தவம்புரியச் சொன்னார், அகத்தியர். அவனின் தவம் பலித்தது. ஆனால், அவனின் அகங்காரம் பெருகியது. கண்மண் தெரியாமல் தவறுகளை செய்தவனின் ஒரு கண்ணை ஈசன் பறித்தார். புண்ணிய சேனன் வருந்தினான். மீண்டும் தவம் செய்து தொழுதான் ஈசனும் அவனை மன்னித்து இன்றிலிருந்து உன் பெயர் குபேரன். நீயே சகல செல்வங்களுக்கும் அதிபதி என்றார். இதுவே குபேரன் உற்பவித்த தலமாகும். நாமும் குபேரன் தோன்றிய தலத்திற்குச் சென்று திருவாப்புடையாரை தரிசித்து வளம் பெறுவோம்.

திருக்கோளூர்

குபேரன் ஒன்பது வகையான நவநிதிகளுக்கும், எண்ணிலடங்கா பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி தனது அளகாபுரியை ஆண்டான். குபேரன் சிறந்த சிவபக்தனாக இருந்தான். சிவபக்தியில் சிறந்தவனாக இருந்தாலும் தான் செல்வப் பெருவேந்தன் என்று கர்வத்தோடு அலைந்தான். கயிலாயத்திற்கு வந்தான். ஈசன் உமையோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததை கண்டான். சித்த விகாரத்தால் உலகாளும் அன்னையென்று பாராமல் அழகை ரசித்தான். சட்டென்று சுதாரிப்பதற்குள் ஈசனும், உமையும் அவன் மனதறிந்தனர்.

இவனும் வெட்கித் தலைவணங்கினான். ஆனாலும், அவன் கர்வத்தையும், சித்தத்தில் சுத்தமுண்டாக்க உமையன்னை சினம் கொண்டாள். உன் உருவம் விகாரமடைந்து, உன்னிடமுள்ள நவநிதிகளும் உன்னை விட்டகல வேண்டுமென்று சபித்தாள். குபேரனை விட்டு நவநிதிகளும் அகன்றன. அவனை விட்டகன்ற நிதிகள் தன்னை வைத்துக்கொள்வார் யாருமின்றி பெருமாளை வேண்டி பொருநை நதி நீராடி பிரார்த்தித்தன. திருமால் நவநிதிகளையும் தன் அருகே வைத்து பாதுகாப்பளித்து அதன் மீது சயனம் கொண்டார். அதனாலேயே அவருக்கு வைத்தமாநிதிப் பெருமாள் எனும் திருநாமம் உண்டாயிற்று. வேறொருபுறம் குபேரன் தன் தவறுணர்ந்து பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்தான். பார்வதியிடம் மன்னிப்பு கோரினான்.

நான் உன்னை சபித்தவாறே உன் மேனியின் விகாரம் மறையாது. ஒரு கண்ணும் தெரியாது. ஆனால், நீ இழந்த பெருஞ் செல்வங்களின் சாரமான நவநிதிகளும் தாமிரபரணிநதியின் தென்கரையில் அமைந்துள்ள தர்ம பிசுன ஷேத்ரத்திலுள்ள (இன்றைய திருக்கோளூர்) திருமாலிடம் தஞ்சமடைந்துள்ளன என்றார். திருக்கோளூர் வந்தவன் பெருமாளைக் குறித்து பெருந்தவம் புரிந்து மன்றாடினான். திருமால் மனமிரங்கி குபேரனை மன்னித்து நவநிதிகளைத் தந்தருளினார். இன்றும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், இன்னும் செல்வங்கள் பெருகவும் வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி சகல சம்பந்துமிக்க வாழ்க்கையைப் பெறுகின்றனர். இங்கு தீர்த்தமே குபேர தீர்த்தம்தான். நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் இதுவொன்றாகும். இத்தலம் நெல்லையிலிருந்து 37.கி.மீ. தொலைவில் உள்ளது.

தஞ்சாவூர்

எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் குபேரன் இலங்கையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தான். ராவணனால் தன் நாடு, நகரம், புஷ்பக விமானம் எல்லாம் இழந்து வடதிசை நோக்கி வந்து சசிவனம் என்னும் வன்னிக்காட்டுப் பகுதிக்கு வந்தான். சுயம்புவாக தோன்றிய அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கி, தொண்டு செய்துவந்தான். அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், குபேரனுக்கு உமாதேவியுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார். சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளும் தந்து அருள்புரிந்தார்.

இதனால் இந்த தலம் ஸித்தி தரும் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஈசனிடமிருந்து வரங்கள் பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கினான். இந்த தலத்தில் வழிபடும் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் தந்து அருளுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டான். இக்கோயிலில் குபேரன், குபேர மகாலட்சுமி ஆகியோர் தனிச் சந்நதியில் அருளுகின்றனர். தீபாவளியன்று நடைபெறும் மஹா குபேர ஹோமம் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து குழுமுகிறார்கள். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தஞ்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

செட்டிக்குளம்

செட்டிக்குளம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தது. சோழனும், பாண்டியனும் சேர்ந்து கட்டிய திருக்கோயிலாகும். இறைவன் ஏகாம்பரேஸ்வரர் எனவும், இறைவி காமாட்சி அம்மை என்கிற திருப்பெயரோடு அருட்பாலிக்கின்றனர். சுமார் 800 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. பொதுவாக ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படுவது வழக்கம்.

ஆனால் இங்கே, கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என மொத்தம் 12 இடங்களில் குபேரனின் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். அதாவது மேஷம் முதலான 12 ராசிகளுக்கும் இந்த குபேரர்கள் அருள் வழங்குகிறார்கள். ஒவ்வொரு ராசிக்காரரும், அந்தந்த ராசி குபேரனை வணங்கி, தம் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு பெறுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் குறிப்பிட்ட குபேரனுக்கு ‘குபேர ஹோமம்’ நடத்து கின்றனர். இந்த 12 குபேரர்கள் தவிர, மகா குபேரனின் சிற்பமொன்றும் ஆலய கோபுரத்தின் உட்புறம் வடக்குத் திசையில் உள்ளது. திருச்சி, துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கீவளூர்

சந்திரகுப்தன் எனும் வைசியன் தன்னிடமிருந்த சகல செல்வங்களையும் இழந்தான். மனம் நொந்து திசை தேசம் தெரியாது ஈசனருளால் கேடிலியப்பர் எனும் திருப்பெயரோடு அருளும் கீவளூர் தலத்தை அடைந்தான். திருக்கோயிலுக்குள் புகுந்து நந்தியம்பெருமானின் காலடியில் வீழ்ந்தான். கோயிலை மும்முறை வலம் வந்தான். ஈசன் கருணைக் கண்களால் அவனைக் கண்டார். இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனுக்கு வைசியனை அடையாளம் காட்டினார். சந்திரகுப்தன் இத்தலத்தில் தனிச் சந்நதியில் அருளும் குபேரனை வணங்கி பெருஞ் செல்வம் பெற்றான். இத்தலம் நாகப்பட்டினம் திருவாரூர் பாதையில் அமைந்துள்ளது.

கல்லிடைக்குறிச்சி

இக்கோயிலின் கருவறையில் வராஹரின் வலப்புறத்தே பூமா தேவியார் அமர்ந்திருக்கும் கோலம் காணக் கிடைக்காதது. பேரழகானது. இத்தல பெருமாள் இங்கு எழுந்தருளும்போதே குபேரன் முதன் முதலாக வந்து கைகூப்பி தொழுதான். விஷ்ணு தர்மன் என்னும் அரசன் அந்த ராஜ்யத்தை பரிபாலித்தான். குபேரன் அந்த அரசனைக் கூப்பிட்டு இந்த புண்ணிய தலத்தில் யாகசொரூபியான வராஹருக்கு ஓர் கோயில் கட்ட வேண்டும் என்று பணித்தார். மேலும், இப்பெருமாளை தரிசிப்போர்களுக்கு எக்காலத்தும் வற்றாத செல்வம் அருளுமாறு பக்தர்களின் பொருட்டு தான் எம்பெருமானிடம் கேட்டுக்கொள்வதாய் கைப்பிடித்து உறுதியும் அளித்தார். உடனே, குபேரன் முன் நிற்க, அந்த அரசன் ஏராளமான பொருட் செலவில் கோயில் அமைத்தான். குபேரன் அந்த மன்னனுக்கு சொன்ன சொல், அந்த வார்த்தை இன்றுவரை பிசகாது உள்ளது. இவ்வூரில் உள்ளோரும், இப்பெருமாளை தரிசிப்போரும் சகல செல்வச் செழிப்போடு திகழ்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருத்தேவூர்

ராவணன் குபேரனோடு போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதும நிதி என்கிற அமிர்த கலசங்களை எடுத்துச் சென்றான். இதை வைத்துக் கொண்டிருந்தால்தான் அவன் குபேரனே ஆவான். இதனால் குபேரன் தன்னுடைய குபேர ஸ்தானத்தை இழந்தான். இத்தலத்தில் அருளும் தேவபுரீஸ்வரரை குபேரன் செந்தாமரை புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான். ஈசனின் அருளால் ராவணனிடமிருந்து குபேர கலசங்களை திரும்ப பெற்று மீண்டும் குபேர பட்டத்தை பெற்றான். பெரும் பணக்காரர்களாக இருந்து மீண்டும் வறுமையில் தள்ளப்பட் டோர்கள் இத்தல நாயகரான தேவபுரீஸ்வர ரையும், அம்மையான மதுரபாஷினியையும் வழிபட செல்வச் செழிப்போடு வாழ்வர் என்பது உறுதி. திருவாரூர் நாகப்பட்டிணம் சாலையிலுள்ள கீவளூர் எனும் தலத்திற்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

திருவண்ணாமலை

அருணாசல மலையை கிரிவலமாக வரும் போது குபேர லிங்கத்தை தரிசிக்கலாம். இங்கு இது ஏழாவது லிங்கமாக விளங்குகி றது. இது குபேரனால் வழிபடப்பட்ட லிங்கமாகும். எனவே, பொருளாதாரத்தில் குன்றி இருப்போர் இந்த லிங்கத்தை வழிபட செல்வ வளம் பெருகும்.

திருச்சி - திருவானைக்காவல்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் நுழைந்ததும் எதிரே குபேர லிங்க கோயிலை காணலாம். இந்த லிங்கம் மகாலட்சுமியிடமிருந்து குபேரன் தவமிருந்து பெற்றதாக புராணங்கள் பகர்கின்றன. தன்னிடமிருக்கும் சங்கநிதி, பதுமநிதிகள் நீங்காதிருக்க ஈசனை நோக்கி குபேரன் தவமியற்றினான். ஈசனோ, உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருப்பது என்பது மகாலட்சுமியின் அருளில் உள்ளது என்று சொல்லி மறைந்தார். குபேரன் மகாலட்சுமியை நோக்கி தவமியற்றி திருமகளின் திருக்கரத்தால் சுயம்பு லிங்கத்தை பெற்று இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இன்றும் குபேர லிங்கத்தினை சுக்கிர ஹோரையில், அர்ச்சித்து வெண் பட்டாடை சமர்பித்து வழிபட வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

சென்னை காளிகாம்பாள்

சென்னையின் மையப் பகுதியான பாரிமுனை தம்புச் செட்டி தெருவில் அமைந்துள்ளது காளிகாம்பாள் கோயில். இக்கோயிலை வியாசர், அகத்தியர், குபேரன்
போன்றோர் வழிபட்டுச் சென்றிருக்கின்ற னர். எனவே, குபேரனின் அருள் பெற இத்தல காளிகாம்பாளை வணங்கி வரலாம்.

எஸ். புதூர்

ஒரு சமயம் குபேரன் நிலை தடுமாறி தவறு செய்தான். இதனாலேயே குபேரத்தன்மை அவனை விட்டு விலகியது. அஷ்ட ஐஸ்வரியங்களும் அவனை விட்டு நீங்கின. தன் தவறை உணர்ந்த குபேரன் சப்த ரிஷிகளிடமும் சென்று ஆலோசனை கேட்டான். அவர்கள் திருத்தண்டிகை எனும் (தற்போதைய தலமான எஸ். புதூர்) தலத்தில் அருளும் சனத்குமாரேஸ்வரரை வழிபடும்படி கூறினர். குபேரனும் இத்தலத்திலுள்ள சோம தீர்த்தத்தில் நீராடி சனத்குமாரேஸ்வரரையும், சௌந்தரிய நாயகியையும் இடைவிடாது பூஜித்து இழந்த பதவிகளையும் செல்வங்களையும் பெற்றான். இன்றும் இத்தலத்திற்கு பதவி உயர்வு பெறவும், இழந்த செல்வங்களை பெறவும் வந்து வணங்கிச் செல்கின்றனர். இத்தலம் கும்பகோணம் காரைக்கால் பாதையில் அமைந்துள்ளது.

சிவபுரம்

இத்தலத்தின் பூமிக்கடியில் சிவபெருமான் இருப்பதாக ஐதீகம். எனவேதான் திருஞான சம்பந்தர் இத்தலத்தை அங்கப் பிரதட்சண மாக சுற்றிச் சென்றார். தள்ளி நின்று பெருமானைப் பாடினார். அவர் அவ்வாறு பாடிய இடமே ‘சுவாமிகள் துறை’ என்றழைக்கப்படுகிறது. ஆதிசங்கரின் பெற்றோரான சிவகுருநாதரும், ஆர்யாம்பாளும் இங்கு வாழ்ந்ததாக கூறுவர். குபேரன் இத்தலத்திற்கு வந்து வெகுநாட்கள் தங்கியிருந்து வழிபட்டுச் சென்றான். குபேரன் வழிபட்டு பேறு பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. தளபதி எனும் பெயரை உடையவனுக்கு இத்தல ஈசன் குபேர ஸ்தானத்தை அளித்தார். குபேரபுரம் என்றே இத்தலத்திற்கு வேறொரு பெயர் உண்டு. கும்பகோணம் திருவாரூர் பாதையிலுள்ள சாக்கோட்டையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

விருத்தாசலம்

பெரியநாயகி உடனுறை விருத்தகிரீஸ்வரர் எனும் பெருந் தலத்தில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அதில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தத்திற்கு பெயராகும். விருத்தகிரீஸ்வர ரை குபேரன் வழிபட்டு பெரும் பேறு பெற்றான். அவனின் திருப்பெயரிலேயே தீர்த்தமும் அமைந்துள்ளது. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர் பேட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

1719724462456.png
 

Latest ads

Back
Top