[h=1]நாலு வகை பக்தர்[/h] 
பக்தி, இறைவன் அருள் வேண்டியே
பக்தர்களால் நன்கு அனுசரிக்கப்படும்;
பலன் எதிர்பாராமல் பக்தி செய்பவர்,
பல ஆயிரம் பேர்களில் ஒரே ஒருவரே!
கோவில்களில் ஜனக் கூட்டம் அலைமோதும்;
காவி உடைக்கும், பூஜைக்கும் பஞ்சமில்லை;
இத்தனை பக்தர்கள் இருந்த போதிலும்
இத்தனை மோசமான உலகம் எப்படி?
விசித்திரமான இந்த வினாவுக்கு
விடை அளிப்பவன் மாயக் கண்ணன்;
படைத்தவன் அறிவான் நம் மனத்துள்
அடைத்துக் கிடக்கும் ஆசைகள் எல்லாம்!
உலகின் போகங்கள் அனைத்தையும்
உல்லாசமாக அனுபவிக்க வேண்டியே
கடவுளிடம் நன்கு பக்தி செய்வார் பலர்;
கடை நிலை பக்தர்கள் ஆவர் இவரே!
செல்வம் சேரவேண்டும் தம் மனம் குளிர;
செல்லாதிருக்க வேண்டும் தம்மை விட்டு;
நில்லாமல் ஓடி ஓடிக் கும்பிடுவர் வேறு சிலர்
எல்லாக் கோவில்களுக்கும் சென்று சென்று!
மூன்றாம் நிலை பக்தர்கள் இவர்களின்
மூச்சு பேச்சு எல்லாம் சொத்துச் சேர்ப்பதே;
எதுவும் தருவான் இறைவன் ஆனால்
இது மட்டுமே இவர்களின் கோரிக்கை!
இறைவனிடம் இரண்டாம் நிலை பக்தர்
இறைஞ்சி வேண்டுவதோ பகுத்தறிவு.
இறைவனையும் மாயையும் வேறு வேறாக
அறிந்துகொள்ளும் சக்தியும், ஞானமுமே!
முதல் நிலை பக்தனோ முழு ஞானி!
மனத்தை அடக்கி, இறையில் திளைத்து,
மமகாரத்தையும், அகங்காரத்தையும்
முற்றிலுமாகத் தொலைத்தவன் அவன்!
தாயும் தந்தையும் ஆன நம் இறைவன்
தருவான் நாம் விரும்பி விழைவதை;
கோடீஸ்வரனிடம் கோடிகள் பெறாமல்
வாடி நிற்போமேயானால் அது யார் தவறு?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.