அடவி ராமன் (காட்டு மனிதன்)
நன்றாகவே இருந்தது அன்றைய பிக்னிக்.
சென்ற இடம் ஒரு மிருகக் காட்சிசாலை.
குரங்குகளும், குருவிகளும் கொட்டமடித்தன;
புலிகள், சிங்கங்கள் கொஞ்சம் அச்சுறுத்தின!
அடவி ராமன் கொடுமை நிறைந்தவன் - ஆனால்
அறிய மாட்டாள் இதை அவன் புதிய மனைவி.
வெகு நெருக்கமாகச் சென்று விட்டான் அவன்
வெகு நேரமாக உலாத்திய வரிப் புலியிடம்.
அவனை முறைத்த புலி என்ன எண்ணியதோ
அவனை நோக்கிப் பாய்ந்து வெளியே வந்தது.
ஓடினார்கள் இருவரும் தம் உயிருக்கு அஞ்சி!
ஓடினார்கள இருவரும் குதிகால் பிடரியில் பட.
எண்ணினான் எண்ணக் கூடாத எண்ணத்தை!
பண்ணினான் பண்ணக் கூடாத ஒரு செயலை!
அழகிய, புது மனைவி காலை இடறி விட்டான்
அழுகுணி ஆட்டம் ஆடிவிட்டு ஓடி விட்டான்.
அச்சத்தில் உறைந்தாள் அந்த புது மணப்பெண்!
அச்சம் ஏன் நீங்கியது புலி நெருங்கியவுடன்?
இல்லை அதன் கண்களின் கொடுமை, கடுமை.
மெல்ல நோக்கியது புலி அவளைக் கனிவுடன்.
கணவன் கண்களை விடக் கனிவான கண்கள்;
கணவன் கண்களை விடக் காதலிக்கும் கண்கள்.
பக்தி நிறைந்த அவள் உளமார வேண்டினாள்
நித்தியம் தான் தொழும் முருகபெருமானை.
"அளித்தாய் இந்தப் புலிக்கு நல்ல மனம் - இன்று
அளிப்பாய் இதற்கு ஓர் அழகிய நல்ல வடிவம்!"
மாறி விட்டது புலி ஓர் அழகிய கந்தர்வனாக.
மாற்றி விட்டது அவனை முருகனின் அருள்.
சாப விமோசனம் பெற்ற கந்தர்வன் அவளிடம்
தாபத்தைத் தெரிவித்தான் பொங்கிய காதலுடன்.
காலை வாரி விடும் கயவன் கணவனை விடக்
காதல் கொண்ட கந்ததர்வனே மேல் அல்லவா?
என்றோ பிரிந்தவர் போல் இணைந்தனர் இருவரும்
இன்று எவரும் எண்ணிப் பார்க்க முடியாத வண்ணம்.
முச்சு இளைப்பாற அமர்ந்தான் அடவி ராமன் - ஒரு
மனிதனை விழுங்க வல்ல பாம்பின் மரத்தடியில்!
"கெடுவான் கேடு நினைப்பான்" உண்மை அல்லவா?
வெகு நாள் பட்டினி தீர்ந்தது அந்த மலைப் பாம்புக்கு!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி