[h=1]22. இறை பக்தி.[/h] 
கனவான் வீட்டில் பூஜை செய்தவர்,
காரியமாக வெளியூர் சென்றார்.
பூஜையை நிறுத்தக் கூடாது என்று
பூஜையை மகனிடம் ஒப்படைத்தார்.
தினமும் தவறாமல் இறைவனுக்குத்
திருஅமுது செய்விக்கச் சொன்னார்.
சிறுவன் திருஅமுதை வைத்துவிட்டு,
பொறுமையாக அங்கே காத்திருந்தான்.
இறைவன் இறங்கி வரவுமில்லை!
இறைவன் அதை உண்ணவுமில்லை!
எத்தனை நேரம் இருந்தாலும்,
எதுவுமே அங்கு நடக்கவில்லை.
“தந்தையார் அளித்தால் உண்கின்றீர்;
நான் செய்த பிழை என்ன கூறும்” என
விம்மி விம்மி அவன் அழுது புரளவே,
நிம்மதி இழந்தார் நம் இறைவனும்
மனித உருவில் இறங்கி வந்து,
மனிதக் குழந்தைக்காக உண்டார்.
“பிரசாதம் எங்கே?” என வீட்டார் கேட்க,
“பிரசாதம் இறைவன் புசித்துவிட்டார்!”
சிறுவனுக்கு இரங்கிய இறை பெரிதா?
இறை பக்தியால் சிறுவன் பெரியவனா?
விடையினை நீங்களே கூறுங்கள்!
விடை எனக்கு எட்டவேயில்லை!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.