மயிலும், குயிலும்

மயில் ஆடுவதற்கென்றே பிறந்தது,
மயில் அகவினாலோ கர்ண கடூரம்!
குயில் பாடுவதற்கென்றே பிறந்தது,
குயில் விரும்பினாலும் ஆட முடியாது!
இயற்கையின் நியதியை அறிவோம்;
இயல்பினை சற்றேனும் அறிந்தோமா?
நம் வாரிசுகளாக உதித்த குழந்தைகளின்
நல்ல திறமைகளை நாம் அறிந்தோமா?
விரும்பிய ஒன்றைச் செய்யும் போது
அரும்பிடும் ஒருவரின் தனித் திறமைகள்!
விரும்பாத ஒன்றைச் செய்ய மனம்
விரும்பாது போவது இயல்பல்லவா?
நாம் விரும்பியும் நமக்குக் கிட்டாததை,
நம் குழந்தைகள் மீது திணித்துவிடுவோம்!
நல்லது செய்வதாக நினைத்து அவர்க்கு
அல்லதை மட்டுமே செய்துவருவோம்!
மதிப்பெண் குறைவாக எடுத்தவனை, நன்கு
மிதித்தால் மதிப்பெண் கூடிடுமா? அவன்
தனித் திறமை எதுவென்று கண்டு, அதை
இனித்த முறையில் வளர்க்க வேண்டாமா?
ஒவ்வொருவருள்ளும் ஒரு சிறந்த திறமை
ஒளிந்து கொண்டு இருக்கின்றதே அதை
ஓங்கி வளரச் செய்து விட்டால், வாழ்வே
ஒளி மயம் ஆகிச் சுடர் விடும் அன்றோ?
கான மயிலிடம் பாடலையும், மற்றும்
கானக் குயிலிடம் ஆடலையும் தேடாதீர்!
பசுவிடம் கனிந்த பழங்களையும், மற்றும்
பாலை, மரங்களிடமும் என்றும் தேடாதீர்!
எது எது எங்கு எங்கு உள்ளதோ – நமக்கு
அது அது அங்கு அங்குதான் கிடைக்கும்!
இதுவரை நாம் செய்த தவறுகள் போதும்;
இனிமேல் நல்ல திறமைகளை வளர்ப்போம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/78-மயிலும்-குயிலும்/